Published:Updated:

"1 குற்றவாளி...11 வழக்குகள்.. 25 குற்றச்சாட்டுகள்..!" - ஹாலிவுட்டை உலுக்கிய மீ-டூ வழக்கில் தீர்ப்பு

Harvey Weinstein #MeToo
Harvey Weinstein #MeToo ( AP / Mary Altaffer )

தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜேம்ஸ் புரூக், ஹார்வியை `தொடர் பாலியல் வேட்டையாடும் தீய மனிதன்’ எனக் காட்டமாக விமர்சித்துள்ளார்.

நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை 2017 அக்டோபரில் ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமான மிராமாக்ஸின் தலைவர் ஹார்வி வெயின்ஸ்டின் குறித்த கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் ஆஷ்லே ஜுட் உள்ளிட்ட ஹாலிவுட் நடிகர்கள் சிலர் ஹார்வி தங்களைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம்சாட்டியிருந்தார்கள்.

ஹார்வியின் மீதான இந்தக் குற்றச்சாட்டுதான் பெண்கள் மீதான பாலியல் வன்குற்றங்கள் தொடர்பாகப் பாதிக்கப்பட்டவர்களே துணிந்து மனம் திறக்கும் `மீ-டூ’ (#MeToo) ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் டிரெண்டாகத் தொடங்க காரணம். சர்வதேசத்தின் தாக்கம் தமிழகம் வரை நீட்சியானது. திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து, இயக்குநர் சுசி கணேசன் உட்படத் தமிழகத் திரைத்துறையில் பலர் மீதும் மீ டூ குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. இதற்கிடையே ஹார்வி வெயின்ஸ்டின் மீதான வழக்கில் `அவர் குற்றவாளி' என இரண்டு வருடங்களுக்குப் பிறகுத் தீர்ப்பு வழங்கியுள்ளது நியூயார்க் நீதிமன்றம்.

2017-ம் ஆண்டில் ஹார்வி தொடர்பான குற்றச்சாட்டுகள் வெளியான பிறகு, அவர் அடுத்தடுத்துப் பல சரிவுகளை எதிர்கொண்டார். அவரது மிராமாக்ஸ் நிறுவனத்தின் உயர்மட்டக்குழு ஒட்டுமொத்தமாக அவரை நிறுவனத்திலிருந்து விலக்குவதாக அறிவித்தது. அவரின் மனைவியும் தன் பிள்ளைகளின் நலன் கருதி, ஹார்வியிடமிருந்து விவாகரத்து பெறுவதாக அறிவித்தார்.

Harvey Weinstein
Harvey Weinstein
AP

ஹார்வி தரப்பில் வெளியிடப்பட்ட மன்னிப்பு விளக்கத்திலும், ``நான் பலதரப்பினருக்கும் பிரச்னை ஏற்படுத்தியதற்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். ஆனால், நிறுவனத்தின் பெண் ஊழியர்களை நான் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதில்லை. மேலும், என் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் இருவருக்குள்ளும் சம்மதத்துடனே நிகழ்ந்தன (Consensual) அதில் ஒன்று காதல் உறவாகவும் இருந்தது” என்று விளக்கியிருந்தார். ஆனால், அவரின் விளக்கம் எடுபடவில்லை. அவர்மீது மேலும் சில நடிகர்கள் புகார்தெரிவித்தார்கள். 1985-கள் தொடங்கி அவர் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டுவந்ததாகச் சிலர் குற்றம் சாட்டினார்கள். ஆஸ்கார் விருதுகளுக்கான தேர்வுக்குழுவிலிருந்தும் அவர் முற்றிலுமாக விலக்கி வைக்கப்படுவதாக அறிவிப்புகள் வெளியாகின.

மிராமாக்ஸ் நிறுவனத்தின் `தி ரீடர்’ படத்தில் நடித்ததற்காக 2009-ம் ஆண்டின் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் வென்றிருந்த நடிகர் கேட் வின்ஸ்லட் அண்மையில் ஹார்வியைப் பற்றிக் குறிப்பிடுகையில் `நான் ஆஸ்கர் வென்றதற்கு ஹார்விக்கு நான் நன்றி தெரிவிக்க வேண்டும் என எல்லோரும் சொன்னார்கள். ஆனால், ஹார்விக்கு என்னால் நன்றி தெரிவிக்க முடியாது எனத் தீர்க்கமாகச் சொன்னேன். காரணம் இதுதான்” எனக் குறிப்பிட்டார்.

இயக்குநர் வூடி ஆலன், லேட் நைட் ஷோ நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஜேம்ஸ் கோர்டான் உள்ளிட்ட பலரும் ஹார்வியைக் கடுமையாக விமர்சனம் செய்தார்கள். மிராமாக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தொடர்பாக ஆவணப்படம் எடுத்துவந்த நடிகர் ச்சானிங் டாட்டம் தனது படத்தை இனி, ஹார்வியின் நிறுவனம் தயாரிக்காது என அறிவித்தார். அமெரிக்கத் தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பு ஹார்வியை வாழ்நாளுக்கும் விலக்கி வைப்பதாக அறிவித்தது. கனடாவைச் சேர்ந்த அடையாளம் வெளியிட விரும்பாத நடிகை ஒருவர் ஹார்வியிடம் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தார்.

இதையடுத்து 2017-ம் வருடம் நவம்பர் மாதம் ஹார்வியின் மீது அடையாளம் வெளியிட விரும்பாத பெண் ஒருவர் வழக்கு பதிவு செய்துள்ளதாக நியூயார்க் நகரக் காவல்துறை அறிவித்தது. பிரிட்டனின் உயர் நீதிமன்றம் ஒன்றிலும் அடையாளம் வெளியிட விரும்பாத பெண் ஒருவர் ஹார்வியின் மீது வழக்கு பதிவு செய்தார்.

இதற்கடுத்தும் அவர்மீது குவிந்த தொடர் புகார்களை அடுத்து, 2018 மே மாதம் ஹார்வி நியூயார்க் நகரக் காவல்துறையிடம் சரணடைந்தார். அதற்கு அடுத்த நாளே அவர் ஜாமீனில் வெளியே வந்தார். அவர் ஜாமீனாகச் செலுத்திய தொகை ஒரு மில்லியன் அமெரிக்க டாலர். தொடர் புகார்கள் மற்றும் விசாரணைகளுக்கிடையே முதுகு அறுவைசிகிச்சை செய்துகொண்டார் ஹார்வி.

Harvey Weinstein
Harvey Weinstein
AP / Mark Lennihan

மொத்தம் 11 பெண்கள் வழக்கு தொடர்ந்த நிலையில் நியூயார்க் நகர நீதிமன்றம் ஒவ்வொரு வழக்காக விசாரித்தது. கடந்த ஜனவரி 6, 2020 அன்று வழக்குகளின் இறுதிக்கட்ட விசாரணை நடைபெற்றது. வழக்குகளின் மீதான இறுதி வாதம் 13 பிப்ரவரி 2020 அன்று முடிந்த நிலையில், தீர்ப்பு 24 பிப்ரவரி 2020 அன்று வழங்கப்பட்டது. தீர்ப்பின்படி 67 வயதான ஹார்வி குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜேம்ஸ் புரூக் ஹார்வியை `தொடர் பாலியல் வேட்டையாடும் தீய மனிதன்’ எனக் காட்டமாக விமர்சித்துள்ளார். மார்ச் மாதம் ஹார்விக்கான தண்டனை விவரம் வெளியாக இருக்கும் நிலையில் அவர் 25 ஆண்டுகள் வரை சிறையிடப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹார்விக்கு தண்டனை வாங்கித் தரத் துணிந்து முன்வந்த பெண்களைச் சர்வதேச ஊடகங்களும் ஹாலிவுட் வட்டாரங்களும் பாராட்டிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, பாதிக்கப்பட்டவர்களின் விவரம் இறுதிவரை ரகசியமாகப் பாதுகாக்கப்பட்டது சட்டத்தின்மீது நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளதாக நடிகர்கள் ட்வீட் செய்து வருகின்றனர். பல விஷயங்களில் ஹாலிவுட் பாணியை ஃபாலோ செய்யும் கோலிவுட் சினிமா ’மீ-டூ’வுக்கு எதிரான அவர்களின் இந்த ஒற்றுமையை எப்போது கற்றுக்கொள்ளும்?

அடுத்த கட்டுரைக்கு