Published:Updated:

"உங்கள் நாட்டுக்குச் சென்றபின் அறிவுரை சொல்லுங்கள்"- மலாலாவை விமர்சித்த இந்திய வீராங்கனை ஹீனா!

இந்தியர்களின் பிரச்னைக்கு இந்தியர்களுக்குத் தீர்வு காணத் தெரியும்...

heena sidhu
heena sidhu

இந்தியா-பாகிஸ்தானின் எல்லை மாநிலமாக இருந்த ஜம்மு - காஷ்மீர், தற்போது மூன்றாகப் பிரிக்கப்பட்டு, அவற்றில் இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து, தீவிரவாதிகள் அச்சுறுத்தல் உள்ளிட்ட இயல்புக்கு மாறான சூழல் காஷ்மீரில் தொடர்ந்து நிலவி வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவரும், நோபல் பரிசு பெற்றவரும், ஐ.நா-வின் அமைதி தூதருமான மலாலா, காஷ்மீர் பிரச்னைகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றைப் பதிவிட்டிருந்தார்.

மலாலாவின் பதிவில், "காஷ்மீர் பிரச்னையில், அங்கு வாழும் பெண்களும் குழந்தைகளும்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். குழந்தைகள் சரிவர பள்ளிக்குச் செல்ல முடியாததால், அவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது.

காஷ்மீர் பெண்களின் நிலை மாறியிருக்கிறதா?

நாம் தொடர்ந்து துன்பப்படுவதற்கு, ஒருவரை ஒருவர் காயப்படுத்துவதை நிறுத்திக்கொள்வோம். தெற்கு ஆசியாவில் உள்ள சர்வதேச சமூக அமைப்புகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மக்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

heena sidhu
heena sidhu

ஹீனா சிந்துவின் ட்விட்டர் பதிவு :

மலாலாவின் இந்தப் பதிவுக்கு, இந்தியாவைச் சேர்ந்த ஹீனா சிந்து பதில் அளித்துள்ளார். இவர், சர்வதேச அளவில் துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் பல பதக்கங்களை வென்ற வீராங்கனை. அவரின் பதிவில், "சரி, பாகிஸ்தானியர்கள் விருப்பப்படுவது போன்று காஷ்மீரை உங்களுக்குக் கொடுக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். அப்போது, இந்தியப் பெண்களின் கல்வி நிலை தங்களைப்போன்று சிறப்பாக இருக்கும். ஆனால், சொந்த நாட்டிலே தனக்கான அடையாளத்தைத் தொலைத்து, வாழ்க்கையை இழந்த உங்களின் நிலைதான் எங்களுக்கும் வரும்.

சொந்த நாட்டில் வாழப் பயந்துகொண்டு இங்கிலாந்தில் வாழும் நீங்கள், ஏன் பாகிஸ்தானுக்கு மீண்டும் சென்று உங்கள் நாட்டில் பெண்களின் வளமான நிலையை நிரூபிக்கக்கூடாது. நீங்கள், முதலில் உங்கள் நாட்டுக்குச் சென்று, உங்களை நிரூபித்து, அதன்பின் இந்தியாவுக்கு அறிவுரை வழங்குங்கள்" என்று பதிவிட்டிருக்கிறார் .

வெளிநாடுகளில் இருந்து பலராலும் உற்றுநோக்கப்படும் இந்திய வீராங்கனை ஹீனா சிந்துவின் ட்விட்டர் பதிவை இந்தியர்கள் பலரும் ட்வீட் செய்து, மலாலாவை விமர்சித்துவருகிறார்கள்.