லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
Published:Updated:

உணர்வுகளுக்கு உயிர்கொடுக்கும் சென்னை சகோதரிகள்!

சந்தியா, லலிதா சாந்தகுமார், சாந்தகுமார், ஜோதி
பிரீமியம் ஸ்டோரி
News
சந்தியா, லலிதா சாந்தகுமார், சாந்தகுமார், ஜோதி

அவசர ஆம்புலன்ஸ், இறுதி ஊர்வலங்கள், லைவ் ஸ்ட்ரீமிங்...

``நாற்பது வருஷங்களுக்கு மேல எங்க அப்பா இந்த ஃபீல்டுல இருக்கார். நாங்க வந்து பதினஞ்சு வருஷங்களுக்கு மேல ஆகுது. எங்களோட இத்தனை வருஷ அனுபவத்துல இப்படியான ஒரு சூழலை நாங்க எதிர் கொண்டதே கிடையாது. ஒருகட்டத்துக்கு மேல, `நாம உயிரோட இருப்போமா’ங்கிற அளவுக்கு பயம் வர ஆரம்பிச்சுருச்சு...” கொரோனா தாக்கம் குறைய ஆரம்பித்தாலும் சந்தியா, ஜோதி குரலில் இன்னும் பதற்றம் குறையவில்லை.

சகோதரிகளான இவர்கள் இருவரும் சென்னையில் பிரபலமான ‘ஃப்ளையிங் ஸ்குவாடு ஆம்புலன்ஸ் சர்வீஸ்’ நிறுவனத்தை நிர்வகிக்கின்றனர். 36 ஆம்புலன்ஸ்கள், 6 இறுதி ஊர்வல வாகனங்களுடன் செயல்படும் இந்த நிறுவனத்தில், மொத்தம் 75 பேர் பணியாற்று கின்றனர். ஆம்புலன்ஸ் கேட்டு வரும் அழைப்பு களை ஏற்பதும் அதற்கேற்ப பணியாளர்களை ஒருங்கிணைப்பதும்தான் சந்தியா மற்றும் ஜோதியின் பணி. இவர்களுக்கு வரும் ஒவ்வோர் அழைப்பும் பரிதவிப்பு நிறைந்தது. துயரம் தோய்ந்தது. இந்தத் துறைக்கு வந்தது முதல் கொரோனா கால அனுபவங்கள்வரை பகிர் கிறார்கள் அவர்கள்...

உணர்வுகளுக்கு உயிர்கொடுக்கும் சென்னை சகோதரிகள்!

``எங்க அப்பா சாந்தகுமார்தான் இந்த நிறு வனத்தை ஆரம்பிச்சவர். நான் எம்.சி.ஏ-வும் என் தங்கச்சி இன்ஜினீயரிங்கும் படிச்சிருக் கோம். சின்ன வயசுல இருந்தே அப்பாவோட வேலையைப் பார்த்ததால எங்களுக்கு வேற வேலைக்குப் போகணும்னு தோணலை.

நடிகர் சிவாஜி சார்ல ஆரம்பிச்சு விவேக் சார் வரை ஏராளமான பிரபலங்களுக்கும் எங்க நிறுவனத்தோட ஆம்புலன்ஸ் மூலமா இறுதி மரியாதை செஞ்சிருக்காங்க எங்க அப்பா. அதுமட்டுமல்லாம, ஊர் பேர் தெரியாத, முகவரியே இல்லாத சாதாரண மனிதர்களுக்கும் அதே மரியாதையை செய்திருக் காங்க. ‘ஓர் ஆத்மாவை நல்ல படியா அனுப்பி வைக் கிறதைவிட புண்ணியம் வேற எதுவும் இல்லை’ன்னு அப்பா அடிக்கடி சொல்லுவாங்க.

நான் காலேஜ் முடிச்ச சமயத்துல ஆபீஸுக்கு ஒரு கால் வந்தது. நான்தான் பேசினேன். வயசான ஒருத்தர் பேசினார். `ஒருத்தருக்கு இறுதி ஊர்வலம் செய்யணும். சாந்தகுமார்தான் செய்யணும். எவ்வளவு ஆகும்'னு விசாரிச்சார். `பண்ணிட லாம்ங்கய்யா யாருக்கு’ன்னு நான் கேட்க, `எனக்குதாம்மா’ன்னு சொன்னார். அதை உள்வாங்கிக்கவே எனக்கு கொஞ்ச நேரம் தேவைப்பட்டுச்சு. ஷாக் ஆகி, `என்ன சார் சொல்றீங்கன்னு கேட்டதுக்கு, ஆமாம்மா எனக்குத்தான். சாந்தகுமாரைப் பத்தி நான் நிறைய கேள்விப்பட்டிருக்கேன். நான் செத்தா, என்னை சாந்தகுமார்தான் அடக்கம் செய்யணும். வேணும்னா அட்வான்ஸ் பண்ணி டுறேன்’னு சொன்னார். இப்படி ஒருத்தர் பேசினதை அப்போதான் முதன்முறையா கேட்டேன். இது வெறுமனே பணம் சம்பந்தப் பட்ட விஷயம் இல்லை. உணர்வு சம்பந்தப் பட்டதுன்னு ஆழமா உணர்ந்த அந்த நொடி தான் எங்களையும் இந்த ஃபீல்டுக்குள்ளயே அழைச்சுட்டு வந்தது.

உணர்வுகளுக்கு உயிர்கொடுக்கும் சென்னை சகோதரிகள்!

இறுதி ஊர்வலத்துக்கு வாகனம் கேட்டு போன் பண்ற பலர், எங்க குரலைக் கேட்டுட்டு ஆம்பளைங்க யாருமில்லையாம்மான்னு கேட்பாங்க. இடுகாட்டுக்குப் போறதுக்கு மட்டுமல்ல இறுதி மரியாதை தொடர்பான விஷயங்களைப் பேசறதுக்குக்கூட பெண்களுக்கு தகுதியில்லைன்னு நினைக்கிற சிலர் இன்னும் இருக்காங்க.

`உங்களுக்கு என்ன வேணும்… என்ன மாதிரியான சடங்கு செய்யணும்'னு நாங்க பேசினாலும், `ஆம்பளைங்க யாராச்சும் இருந்தா கொடுங்க… அவங்ககிட்டதான் சொல்ல முடியும்'னு அடம்பிடிக்கிறவங்களும் இருக்காங்க. ஆம்புலன்ஸ் சர்வீஸையும் இறுதி ஊர்வல வாகனங்களையும் நாங்க கவனிச்சுக் கிறோம். சடலங்களுக்கான ஃப்ரீஸர் பாக்ஸ் தயாரிப்புகளை அப்பா கவனிச்சுக்கிறார்...” சந்தியா நிறுத்த, ஜோதி தொடர்கிறார்…

“எங்களோட சேவையில ஆம்புலன்ஸுக்கும் முக்கிய இடமுண்டு. அதனால நாங்க ரெண்டு பேரும் 24 மணி நேரமும் போனும் கையுமாத்தான் இருப்போம். உயிர்போற அவசரத்துலதான் கூப்பிடுவாங்க. எந்நேரமும் அலர்ட்டாவே இருக்கணும். எதிர்முனையில பேசறவங்க பெரும் பதற்றத்தோடதான் பேசுவாங்க. அவங்ககிட்ட நிதானமா பேசவெல்லாம் நேரமிருக்காது. ஒரு நொடி தாமதிச்சாகூட பேஷன்ட்டோட உயிர் போக வாய்ப்பிருக்கு. அதுக்குள்ள பேஷன்டோட நிலைமையைத் தெரிஞ்சுக்கணும். ஐ.சி.யு ஆம்புலன்ஸ் அனுப் புறதா, சாதாரணமானது அனுப்புறதான்னு முடிவெடுக்கணும். வேற என்ன கருவிகள் தேவைன்னு கணிக்கணும். ஒரு பேஷன்ட் ஹாஸ்பிட்டல் போய் சேர்ற வரைக்கும் படபடப்பு நிறைஞ்சது எங்க வேலை. இதுக் கெல்லாம் பழக்கப்பட்ட எங்களாலயே இந்தக் கொரோனா காலத்தை அவ்வளவு சுலபமா எதிர்கொள்ள முடியலை.

மகாராஷ்டிராவுல இருந்து இங்க வேலைக் காக வந்த 26 வயசு பொண்ணு ஆம்புலன்ஸுக் காக எங்ககிட்ட பேசினாங்க. நல்லா தான் பேசினாங்க. குணமாயிடுவாங்கனு நினைச்சோம். ஆனா, பத்தே நாள்ல இறந்துட்டாங்க. லாக்டெளன்ங் கிறதால அந்தப் பொண்ணோட சொந்தகாரங்க யாரும் அவங்க உடலை நேரா பார்க்க முடியலை. எங்களையே அடக்கம் பண்ண சொல்லிட்டாங்க. வீடியோ வழியா காட்டினோம்.

ஒருத்தருக்கு மூச்சுத்திணறல் அதிகமாயிருக்குன்னு போன் வருது. எங்க ஆம்புலன்ஸ் டிரைவர் ஸ்பாட்டுக் குப் போயிட்டார். பேஷன்ட் மூணாவது மாடியில இருந்தார். உடம்பு ஓவர் வெயிட். டிரைவரால தனியா தூக்க முடியலை. கொரோனா பயத்தால யாருமே ஹெல்ப்புக்கு வரலை. எங்க டிரைவர் போராடி ஆம்புலன்ஸ் வரைக்கும் கொண்டு வந்தார். ஆனா, ஆம்புலன்ஸ்ல தூக்கி வைக்கிறதுக்குள்ள அவர் உயிர் போயிருச்சு. இப்படி நிறைய அனுபவங்கள்...” - கலங்குகிறார் ஜோதி.

உணர்வுகளுக்கு உயிர்கொடுக்கும் சென்னை சகோதரிகள்!

அதை ஆமோதித்துப் பேசும் சந்தியா, “வெளிநாட்டுல இருந்து இங்கே வர முடியாத வங்களுக்காக கேமராக்கள் பொருத்தப்பட்ட இறுதி ஊர்வல வாகனங்களை பிரத்யேகமா ரெடி பண்ணியிருந்தோம். அதன் வழியா அவங்களுக்கு லைவ் ஸ்ட்ரீமிங் பண்ணினா அங்கிருந்தபடியே இறுதி ஊர்வலத்தைப் பார்த்துப்பாங்க. எதேச்சையான இந்த ஏற்பாடு, கொரோனாவால் மரணடைஞ்சவங்க குடும்பங் களுக்கு பெரிய சப்போர்ட்டா மாறிடுச்சு.

குணமாகி வந்திருவேன்கிற நம்பிக்கையோட ஹாஸ்பிட்டலுக்குப் போன பலரை ஈவு இரக்கமில்லாமல் சாகடிச்சது கொரோனா. அவங்க உடலைக்கூட வீட்டுக்குக் கொண்டு போக முடியாத சூழல்ல, ‘கடைசியா அந்த முகத்தைப் பார்த்தா போதும்’னு சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் தவிப்பாங்க… அப்படியான சூழல்ல, ஹாஸ்பிட்டல்ல இருந்து மயானம் வரைக்கும் நாங்க கொடுத்த லைவ் ஸ்ட்ரீமிங் பல குடும்பங்களுக்கு பெரிய ஆறுதலைக் கொடுத்துருக்கு. இனிமேல் இப்படி ஒரு நிலைமை வரக் கூடாது” என்று முடிக்கும்போது அவரையும் அறியாமல் பொங்குகிறது கண்ணீர்.