Published:Updated:

அடங்க மறு! - முலைவரிக்கு முடிவுகட்டிய நங்கேலி

அடங்க மறு
பிரீமியம் ஸ்டோரி
அடங்க மறு

வழக்கறிஞர் கே.சாந்தகுமாரி; ஓவியம்: ஜீவா

அடங்க மறு! - முலைவரிக்கு முடிவுகட்டிய நங்கேலி

வழக்கறிஞர் கே.சாந்தகுமாரி; ஓவியம்: ஜீவா

Published:Updated:
அடங்க மறு
பிரீமியம் ஸ்டோரி
அடங்க மறு

வருமானவரி, சொத்துவரி, தண்ணீர்வரி, வணிகவரி, ஜி.எஸ்.டி எல்லாம் கேள்விப் பட்டிருப்போம். கொழுப்புவரி, சிறுநீர்வரி, கோழைகள்வரி பற்றியெல்லாம் பெரும் பாலானவர்கள் கேள்விப்பட்டிருக்க மாட் டோம். ஆனால், அவையெல்லாம் உலகின் பல நாடுகளின் வரலாறுகளில் பதிந்திருக் கின்றன... கொடுமையின் உச்சமாக!

ஒரு காலத்தில் எகிப்து நாட்டில் சமையல் எண்ணெய் விற்பனை, அந்நாட்டின் மன்னர் வசமே இருந்திருக்கிறது. மக்கள், சமையல் எண்ணெய் உபயோகிப்பதைத் தடைசெய்த மன்னர், அப்படிப் பயன்படுத்துபவர்களுக்குக் கொழுப்புவரி என்பதை விதித்துக் கொடுமைப் படுத்தியிருக்கிறார்.

ரோமானியச் சக்கரவர்த்தி வஸ்பஸியன், சிறுநீருக்கு வரி விதித்திருக்கிறார். அக்காலத்தில் சிறுநீரை ரசாயன மாற்றங்களுக்கு உட்படுத்தி, பரிசோதனைச் சாலைகளில் பயன்படுத்தி யுள்ளனர். அதனால், சிறுநீருக்கு வரிவிதித்து வேதனை படைத்திருக்கிறார் அந்தச் சக்கர வர்த்தி.

இப்படி உலக அளவில் பல்வேறு விநோத வரிகள் இருந்திருக்கின்றன. ஆனால், அவை யெல்லாம் வெறும் தூசு என்று சொல்லும் அளவுக்கு, பெருங்கொடுமையான வரி ஒன்று இருந்திருக்கிறது இந்தியாவில். அதன் பெயர் ‘முலக்கரம்.' இது பெண்களின் மீது விதிக்கப் பட்ட வரி. அன்றைய திருவிதாங்கூர் சமஸ் தானத்தின் (இன்றைய கேரளப் பகுதி) மன்னர் தான், பெண்கள்மீது இப்படியொரு வரியை விதித்து, வரலாற்றில் தீராப் பழியை ஏற்படுத்திக்கொண்டவர்.

1800-ம் ஆண்டுகளில் ஆடை, அணிகலன்கள் செல்வச்செழிப்பின் அடையாளமாகவும் உயர் சாதிக்காரர்கள் என்று தங்களை அழைத் துக்கொண்டவர்களுக்கே உரித்தானவை யாகவும் இருந்தன. வறுமையில் வாழ்ந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, அவற்றை அணிய அனுமதி இல்லை. தாழ்ந்த சாதியினர் என்று சொல்லி பிறரால் ஒடுக்கப்பட்ட மக்களான சாணார் மற்றும் ஈழவ சமூகத்தைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் உயர்சாதிக்காரர்கள் என்று தங்களை அழைத்துக்கொண்டவர்கள் முன்னிலையில் தங்கள் மார்பை மறைக்கக் கூட அனுமதிக்கப்படவில்லை என்பது கொடுமையிலும் கொடுமைதானே.

அடங்க மறு! - முலைவரிக்கு முடிவுகட்டிய நங்கேலி

திருவிதாங்கூரின் ‘பூர்வீக வாழ்க்கை’ என்ற நூலில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப் பட்ட இதுபோன்ற இன்னல்கள் குறித்து விரிவாகவே எழுதியுள்ளார் எழுத் தாளர் சாமுவேல். அந்த மக்களின் மீது 110 விதமான வரிகள் விதிக்கப் பட்டிருந்தன என்றால்... அது எத்தகைய கொடுமை. வறுமையிலும் பசி, பட்டினியிலும் வாழ்ந்து கொண்டிருந்த அம்மக்களின் வாழ்க்தைத் தரத்தை உயர்த்துவதற்குப் பதிலாக, வரிகளை விதித்து கொடுங்கோன்மையை அரங்கேற்றி யிருக்கிறார் அந்த மன்னர். ஆடை களை அணியத் தடைவிதிக்கும் அளவுக்கு மதிகெட்டுப் போனவரை மன்னர் என்று சொல்வதற்கே மனது வரவில்லை.

சாமுவேல் எழுதியிருக்கும் புத்தகத் தில் மேலாடை ஏதுமின்றி, திறந்த மார்பகங்களோடு நின்றிருக்கும் அச்சமூக மக்களின் படங்களும் இடம்பெற்றிருக்கின்றன. அவற்றை யெல்லாம் பார்க்கும்போது நெஞ்சு கொதிக்கிறது.

அரசாங்கத்தின் ஆணையை மீறி ஆடை அணிந்த பெண்களுக்குத் தான் `முலக்கரம்' எனும் முலைவரி விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த வரியை விதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நபர்கள், சம்பந்தப் பட்ட பெண்ணின் மார்பைத் தொட்டு அளவிட்டு, அதற்கேற்ப வரி விதிக்கும் கொடுமைகளும் அரங்கேறி யிருக்கின்றன என்பதையெல்லாம் நினைக்கும்போது...

`கொலைவாளினை எடடா... மிகு கொடியோர் செயல் அறவே’ என்று புரட்சிக் கவி பாரதிதாசன்போல கொந்தளிக்கத்தான் தோன்றுகிறது, இப்போதும்கூட!

தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்லி ஒடுக்கப்பட்டவர்களை மட்டுமல்ல, உயர்சாதி என்று அழைக்கப்படும் நாயர் சாதியைச் சேர்ந்த பெண்களையும்கூட இத்தகைய கொடுமைக்கு ஆளாக்கியிருக்கிறார்கள் அக்காலத்தில். அதாவது, பிராமணர்கள் முன்பாக நாயர் சாதி பெண்கள் மார்பை மறைக்கக் கூடாது என்கிற கட்டுப்பாடு இருந்திருக்கிறது. மற்ற சமயங்களில் சல்லாத் துணி போன்ற முண்டுடுத்தி மார்பை மறைத்திருக்கிறார்கள், நாயர் இனப் பெண்கள். இவர்கள், வரி கட்டத் தேவையில்லை என்பது மட்டுமே, இவர்களுடைய `உயர்சாதி’க்காக வழங்கப்பட்ட சலுகை.

இந்தக் கொடுமைகளையெல்லாம் நூறாண்டு கடந்து கேள்விப்படும் போதே நமக்கெல்லாம் நரம்பு புடைக் கிறது. அப்படியிருக்க, அக்காலத்தில் இந்தக் கொடுமைகளுக்கு எதிராகக் குரல்கொடுக்க ஒரு பெண்கூட துணியவில்லையா?

உயிரையே கொடுத்திருக்கிறாள் ஒரு பெண். அவர்தான் நங்கேலி!

கேரளாவின் மத்தியப் பகுதியில் உள்ள சேர்தலாவில், இன்றும் பாடப் பட்டு வருகிறது ஒரு நாட்டுப் பாடல். அந்தப் பாடலின் நாயகி... நங்கேலி.

மார்பில் துணிகொண்டு மூடுவதற்குத் தடை விதிக்கப்பட் டிருந்ததை ஏற்க மறுத்தார் நங்கேலி. உயர்சாதிக்காரர்கள் என்று தங்களை அழைத்துக்கொண்ட கொடூரர்களின் கண்களுக்கு, தன்னுடைய மார்பைக் காட்ட முடியாது என்று கொந்தளித்த நங்கேலி, ஆடைகொண்டு மறைத்தார். இந்த விஷயம், வரிவிதிக்கும் பர்வதியர் என்ற அரசு ஊழியனின் கவனத்துக்குச் சென்றது. இதையடுத்து, சட்டத்துக்கு எதிராக நடப்பது சரியல்ல என்று நங்கேலியை எச்சரித் தான். அதையும் மீறி, மார்பை மறைத்துச்சென்றார் நங்கேலி.

வரி விதிப்பவரும், வரி வசூலிப்பவரும் நங்கேலியின் வீட்டுக்கே சென்று, முலை வரியைத் தீர்மானிப்பதற்காக, `உன் மார்பைத் திறந்துகாட்டு’ என்று நங்கேலிக்கு உத்தர விட்டார்கள். சட்டென்று வீட்டுக்குள் சென்ற நங்கேலி, ஒரு வாழையிலையைக் கொண்டு வந்து அவர்கள் முன் தரையில் விரித்து, விளக்கும் ஏற்றினார். உணவளிக்கப் போகிறாளோ என்று அந்த அதிகாரிகள் எண்ணியிருந்த வேளையில், கத்தியோடு வந்த நங்கேலி, சட்டென்று தன்னுடைய முலைகளை அறுத்து ரத்தம் சொட்டச்சொட்ட வாழை இலையில் வைத்தார். சற்றுநேரத்தில் அவருடைய உயிர் பறிபோனது. முலைக்கு வரி கட்டுவதைவிட, உயிர் துறப்பேன் என்று செயலால் உணர்த்தினார். அதிர்ந்துபோன அரசு ஊழியர்கள், பயந்தோடி பதுங்கினர்.

வீடு திரும்பிய கணவன் சிறுகண்டன், ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த மனைவி நங்கேலியைக் கண்டு அலறித் துடித்தார். மறுநாள், மனைவியின் சிதைக்குத் தீமூட்டி, அதில் பாய்ந்து தன்னையும் மாய்த்துக் கொண்டதாகத் தகவல்கள் கூறு கின்றன. ஓர் ஆண் உடன்கட்டை ஏறிய முதல் சம்பவம் இதுவென வரலாற்றுப் பதிவுகள் தெரிவிக் கின்றன.

ஈழவ சமூகத்தைச் சேர்ந்த நங்கேலியின் மரணம், தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் பெரும் கலவரமாக வெடித்தது. அநாகரிகமான இந்த வரிவிதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, அன்றைய சென்னை மாகாண கவர்னர், பிரிட்டிஷ் அரசிக்கு கடிதம் எழுதி, அந்த வரிக்கு தடைவிதிக்கக் கேட்டுக்கொண்டார். அதைத் தொடர்ந்தே திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் முலைவரி ரத்து செய்யப்பட்டு, மார்பை மறைக்கும் ஆடை அணிய அனுமதியும் வழங்கப் பட்டது.

அநாகரிகமானதும் ஒரு பெண் ணின் தனிப்பட்ட உரிமையை மறுப்பதுமான ஒரு வரியை, அரசும் ஆட்சியாளர்களும் சாதி மற்றும் சனாதனத்தின் துணையோடு தாழ்த்தப்பட்டவர்கள் மீது விதித்தார்கள். ஆதிக்க சக்தியின் இந்த அநியாயத்தை எதிர்த்து உயிரைக் கொடுத்து வெற்றிகண்ட வீரமிக்க போராட்டம் மறைக்க வியலா வரலாறாகும்.

`முலக்கரம்' வரியை எதிர்த்து நங்கேலி, தன் முலைகளை அறுத்து உயிர் துறந்த இடம், இன்றைக்கும் ‘முலச்சிப் பறம்பு’ என்றும் அழைக்கப்படுகிறது.

முலைவரி மற்றும் நங்கேலியின் தியாகம் ஆகியவற்றை சாதியம், மோதல் மற்றும் ஆடை மாற்றம் என்ற தலைப்பில் மத்திய பள்ளிக் கல்வி வாரியம், பள்ளிக்கூட பாடமாக வைத்தது. ஆனால், சமூகநீதிக்கான வழக்கறிஞர் அமைப்பு, சாணார்கள் என்னும் நாடார்களை இழிவுபடுத்தும் செயல்; திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பூர்வகுடிகள் நாயர்கள் என்று சொல்லப்பட்டிருப்பதும் தவறு; நாடார்களே பூர்வகுடிகள் என்று எதிர்ப்பு தெரிவித்தனர். நாடார் சமுதாயப் பெண்கள் மேலாடை அணிய தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து, கிறிஸ்துவ மத ஆலயங்கள் நடத்திய போராட்டங்கள் மட்டுமே முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன.

1836-ம் ஆண்டிலிருந்து அய்யா வைகுந்தர் நடத்திய போராட்டங்கள் பாடத்தில் சேர்க்கப்படவில்லை. இவற்றையெல்லாம் முன்வைத்து, முலைவரி தொடர்பான பள்ளிக்கூட பாடத்தைத் தடை செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இதை யடுத்து, நங்கேலியின் கதையை 2016-ம் ஆண்டு பாடத் திட்டத்திலிருந்து நீக்க உத்தரவிட்டது உயர் நீதிமன்றம்.

முலைவரி என்பது பெண்களுக்கு எதிரான ஒன்று என்று மட்டுமே பார்த்துவிட்டு, அதற்குள் புதைந்து கிடந்த சாதியத்தைப் பார்க்கத் தவறிவிட்டால், வரலாற்றுப் புனைவு களையே வரலாறாக நினைத்து நாம் வாழ்வதாகத்தான் அர்த்தம்.

புனைவுகளைப் புறந்தள்ளுவோம். அடங்க மறுத்து அடையாளமாகத் திகழும் வரலாற்று நாயகிகளைப் போற்றுவோம்... ஆதிக்க சக்திகளுக்கு, ஆணாதிக்கத்துக்கு அடங்க மறுப்போம்.

- போர் தொடரும்...

******

அடங்க மறு! - முலைவரிக்கு முடிவுகட்டிய நங்கேலி

வழக்கறிஞர் பணியில் 33 வருடங்கள். பணியிடங்களில் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறை தடுப்புச் சட்டத்தில் ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்ற சாந்தகுமாரி, தமிழ்நாடு பெண் வழக்கறிஞர் கூட்டமைப்பின் தலைவர். அகில இந்திய பெண் வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர். இந்தியாவிலிருந்து சர்வதேச பெண் வழக்கறிஞர்களின் கூட்டமைப்புக்கு துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் வழக்கறிஞர். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களையும், பாலியல் தொழிலாளிகளையும் புகைப்படம் எடுக்கக்கூடாது; அவற்றை பத்திரிகைகளில் வெளியிடவும் கூடாது என தடை உத்தரவு வாங்கியவர். `மீ டூ' தொடர்பான இந்தியாவின் முதல் புத்தகம் (தமிழில்) எழுதிய சாந்தகுமாரி ஓர் எழுத்தாளரும்கூட. இதுவரை 6 கவிதை நூல்கள் உள்பட 8 புத்தகங்கள் எழுதியிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism