Election bannerElection banner
Published:Updated:

மாமியாரின் `நைட்டி' சண்டையும் பேத்திகளின் `லெகின்ஸ்' சுதந்திரமும்... நம் வீடுகள் மாறக் காரணம் என்ன?

Wardrobe
Wardrobe ( Photo by Priscilla Du Preez on Unsplash )

நைட்டியோடு ஒவ்வாமை இருந்த மாமியார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பாட்டியாக லெகின்ஸை அங்கீகரிக்கிறார். இது ஒரு தனிநபரின் மனமாற்றம் மட்டுமல்ல. ஒரு சமூகமாக நாம் முதிர்ந்து வருகிறோம். அப்படித்தான் நினைக்கிறேன்.

நான் அங்கம் வகிக்கும் வாட்ஸ்அப் குழு ஒன்றில், சில மாதங்களுக்கு முன் ஒரு நண்பர் பகிர்ந்த பதிவு இது:

`மருமகள் நைட்டி அணிந்ததால் சண்டை வந்த வீடுகளில் இப்போது பேத்திகள் சர்வ சுதந்திரமாக லெகின்ஸ் அணிகிறார்கள்!'

இந்தக் குழுவில், கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள் உறுப்பினர்களாக இருக்கிறோம். எல்லோரும் ஆண்கள். பலரும் 30 ஆண்டுகளுக்கு முன்பு மணமானவர்கள். எவரும், நண்பர் பகிர்ந்திருந்த பதிவை மறுக்கவில்லை. ஒரு நண்பரின் பின்னூட்டம் இப்படி இருந்தது:

`மாமியார் பாட்டி ஆனதும் பக்குவம் அடைந்துவிட்டார்.'

நான் அப்படி நினைக்கவில்லை.

நைட்டியோடு ஒவ்வாமை இருந்த மாமியார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பாட்டியாக லெகின்ஸை அங்கீகரிக்கிறார். இது ஒரு தனிநபரின் மனமாற்றம் மட்டுமல்ல. ஒரு சமூகமாக நாம் முதிர்ந்து வருகிறோம். அப்படித்தான் நினைக்கிறேன். என் அனுபவத்தில் இருந்து ஒன்றிரண்டு சம்பவங்களைச் சொல்வது இந்த இடத்தில் பொருத்தமாக அமையும்.

Woman (Representational Image)
Woman (Representational Image)
Photo by Abhijith S Nair on Unsplash

பெங்களூர் பெண்கள் பேன்ட், சட்டை அணிந்தபோது..!

1980-ல் தொடங்கலாம்.

அப்போது நான் கல்லூரி மாணவன். கோவை டவுன் ஹாலில் நடந்த ஒரு புத்தகக் காட்சியில் அவரை சந்தித்தேன். அவர் புதுமுக எழுத்தாளர். கோவைவாசி. பெங்களூரில் வேலைபார்த்தார். அவரது கதை ஒரு வாரப் பத்திரிகையில் வெளியாகியிருந்தது. அது பரவலாகக் கவனிக்கப்பட்டது. அவரைச் சுற்றி ஒரு சின்ன வட்டம் இருந்தது. வாசகர் வட்டம். அவர் தரையிலிருந்து சில அங்குலம் உயரத்தில் நின்றபடி பேசினார். மிதந்தபடியேதான் பெங்களூர் போயிருப்பார் என்று நினைக்கிறேன்.

அடுத்த வாரம் ஒரு கட்டுரை எழுதினார். பெங்களூரின் பிரிகேடியர் ரோடைப் பற்றி. அப்போது பெங்களூரில் ஐ.டி புயல் மையம் கொள்ளவில்லை. அதற்குப் பத்தாண்டுகள் ஆகும். அப்போது நகரில் அடுக்ககங்கள் இல்லை. பேரங்காடிகளும் இல்லை.

ஆனாலும், பிரிகேடியர் ரோட்டில் மக்கள் நிரம்பி வழிந்தார்கள். பெங்களூரின் இளம் பெண்கள் சட்டை, பேன்ட் அணியத் தொடங்கியிருந்தார்கள். புதுமுகம் எழுதினார்: `இந்த வீதியில் சுற்றுபவர்கள் ஆணா, பெண்ணா என்பதைத் தடவிப்பார்த்துதான் தெரிந்துகொள்ள வேண்டும்.'

வாசகர்கள் முகம் சுளித்தார்கள். பத்திரிகை ஆசிரியர் வருத்தம் தெரிவித்தார். அடுத்த வாரம் புதுமுக எழுத்தாளரை மீண்டும் சந்தித்தேன். தமிழ் வாசகர்கள் பத்தாம்பசலிகள் என்று குறைபட்டுக்கொண்டார்.

`பெண்கள் இப்படித்தான் உடையணிய வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். பிரிகேடியர் தெருவில் நீங்கள் பார்த்த பெண்கள் அதை மீறுகிறார்கள். அதனால்தான் கேலி செய்கிறீர்கள்.'

இப்படி நினைத்தேன். ஆனால் அவரிடம் சொல்லவில்லை.

Kerala
Kerala
Photo: Vikatan / Kumaresan.S

எர்ணாகுளத்தில் தாவணியை எதிர்பார்க்கலாமா?!

இப்படித்தான் பெண்கள் அணிய வேண்டும் என்ற பிடிவாதத்தை நம் கண்களுக்கு நாம்தான் கற்றுக்கொடுக்கிறோம். அது எனக்கு அடுத்த ஐந்தாண்டுகளில் விளங்கியது. 1985-ல் எனக்கு எர்ணாகுளத்தில் ஒரு வேலை கிடைத்தது. எனது விடுதியிலிருந்து பணித்தலத்துக்குப் போகிற வழியில் ஒரு கல்லூரி இருந்தது. பேருந்தில் நிறைய மாணவிகளும் ஏறுவார்கள்.

அப்போது மதுரையில் பணியாற்றிக்கொண்டிருந்த என் நண்பனுக்கு, என் புதிய வேலையைப் பற்றியும், இந்தப் புதிய ஊரைப் பற்றியும் ஒரு கடிதம் எழுதினேன். அதில், `இங்கே காலேஜ் குமரிகள் தாவணிகளைப் புறக்கணிக்கிறார்கள்' என்று ஒரு வரி எழுதியிருந்தேன். அதை மறக்க முடியாது. காரணம், நண்பரின் மனைவி அதற்கு எனக்களித்த பதில்.

அடுத்த முறை நண்பரைச் சந்திக்க அவர் வீட்டுக்குப் போயிருந்தபோது, நண்பரின் மனைவி என்னிடம் சொன்னார்:

``அந்தப் பெண்கள் தாவணியைப் புறக்கணிக்கவில்லை. அங்கு அதை அவர்கள் அணிவதில்லை. பழக்கமில்லாத ஒன்றை எப்படிப் புறக்கணிக்க முடியும்? நீங்கள் தமிழ்நாட்டுக் கண்களோடு கேரளப் பெண்களைப் பார்க்கிறீர்கள்."

நான் கொஞ்சம் அசடு வழிந்ததாக ஞாபகம். அவர் சொன்னது புரிந்தது மாதிரித்தான் இருந்தது. என்றாலும் முழுவதுமாகப் புரிய மேலும் பத்தாண்டுகள் வேண்டியிருந்தது.

ஹாங்காங் ஸ்கர்ட்டும் குனிந்த தலையும்!

1995-ல் நான் ஹாங்காங்குக்குப் புலம் பெயர்ந்தேன். ஹாங்காங் மாதர் திறம்புவதில்லை. இளம் பெண்கள் எல்லோரும் படித்திருந்தார்கள். வேலைபார்த்தார்கள். அவர்களது விகிதம் ஆண்களைவிடக் குறைவாக இருந்தது. அப்போது 100 ஆண்களுக்கு 97 பெண்கள்; இப்போது 87 பெண்கள். பெண்கள்தாம் துணையைத் தேர்ந்தெடுப்பார்கள். எல்லாத் திருமணங்களும் காதல் திருமணங்கள். மாலை நேரங்களில் பெண் பிள்ளைகளின் பின்னால் அவர்களது பைகளையும் பர்ஸ்களையும் சுமந்து கொண்டு ஓடும் பையன்களைப் பார்க்கலாம். வீட்டு வேலைகளை ஆண்களும் பகிர்ந்து கொள்வார்கள். குழந்தை வளர்ப்பு ஏனோ பெண்களிடமே தங்கிவிட்டது. கணிசமான பெண்கள் திருமணம் செய்துகொள்வதில்லை.

HongKong
HongKong
Image by Jason Lam from Pixabay

பெண்கள் பெரிய பொறுப்புகளில் இருக்கிறார்கள். தற்போதைய செயலாட்சித் தலைவர் கேரி லாம், உள்கட்டுமானத்துறையின் அரசுச் செயலராக இருந்தவர். ஆன்சன் சான் தலைமைச் செயலராக இருந்தார். தெரசா செங் இப்போதைய சட்ட அமைச்சர். இவருக்கு முன்பு எல்சி லியுங் எட்டாண்டுகள் சட்ட அமைச்சராக இருந்தார். அரசியலிலும் பெண்கள் முன்வரிசையில் இருந்தார்கள். ரெஜினா இப் அரசுக்கு ஆதரவானவர், எமிலி லா எதிர்க்கட்சிக்காரர். ஆன் ஹூய் சர்வதேசப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர். மார்கிரட் சான் உலக சுகாதார அமைப்பின் இயக்குநராக இருந்தவர். இவையெல்லாம் எனக்குப் படிப்படியாகத் தெரியவந்தவை. போன புதிதில் என் கவனமெல்லாம் அவர்கள் உடையில்தான் இருந்தது.

1949-ல் சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. அப்போது பாரம்பர்ய சீன உடைகளுக்குப் பதிலாக, மேற்கத்திய ஆடைகளில், மோஸ்தர் நீக்கப்பட்ட ஒரு வடிவம் அறிமுகமானது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான உடை புழக்கத்துக்கு வந்தது. இறுக்கிப் பிடிக்காத முழுக்கைச் சட்டைகளும், கால் சராய்களும் (pants). இப்போதும் ஹாங்காங்கில் முதிய பெண்கள், இதன் சற்றே நவீனப்படுத்தப்பட்ட, பெண்மையின் அம்சங்கள் சேர்க்கப்பட்ட உடையை அணிகிறார்கள்.

இளம் பெண்கள் பலவிதமான உடைகளை அணிவார்கள். பெண்களுக்காக வடிவமைக்கப்பட்ட சட்டைகளும், கால் சராய்களும் ஒரு பிரதான வகை. லெகின்ஸ், ஜீன்ஸ், டி-ஷர்ட் முதலானவற்றை இந்த வகையில் அடக்கலாம். கழுத்தில் தொடங்கி முழங்கால் வரை நீளும் ஆடை கவுன். ஆனால், அது அவ்வளவு பிரபலமில்லை. மேல் சட்டையும் ஸ்கர்ட்டும் `பாஃர்மல்' உடைகளின் கீழ் வரும். அலுவலகங்களுக்கும் கூட்டங்களுக்கும், விருந்துகளுக்கும் அணிவார்கள். இந்த ஸ்கர்ட்கள் இடுப்பில் இருந்து முழங்கால்வரை இருக்கும்; கணுக்கால் வரையும் நீளும்; இரண்டுக்கும் இடையிலும் நிற்கும். முதல் வகைதான் அதிகம். குளிர்காலத்தில் ஸ்கர்ட்டுடன் நீண்ட ஸ்டாக்கின்ஸ் அணிவார்கள்.

நான் ஒரு குளிர் காலத்தில்தான் ஹாங்காங் போய்ச் சேர்ந்தேன். ஆரம்ப வாரங்களில் குனிந்த தலையோடு நடந்தேன். ஆனால், ஹாங்காங் ஆண்கள் நிமிர்ந்து நடந்தார்கள். ஏனெனில் அவர்களுக்கு இந்த ஸ்கர்ட் புதியதன்று. எனக்கும் சில காலத்தில் பழக்கமாயிற்று. பிறகு நானும் தலை நிமிர்ந்து நடக்கலானேன்.

Woman
Woman
Photo by Milad B. Fakurian on Unsplash

ரியாத் பெண்களின் புர்கா!

2016-ம் ஆண்டில் வேலை நிமித்தம் சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்துக்குப் போனேன். ஒரு வருடம் வசித்தேன். அங்கே எல்லா சமூகத்துப் பெண்களும் புர்கா அணிய வேண்டும். இது தெரிந்ததுதான். தெரியாத பல செய்திகளும் இருந்தன.

அங்கே பல உணவகங்களில் ஆண்கள் மட்டுமே உணவருந்தலாம். பெண்கள் தனியாக உணவகங்களுக்கு வந்து நான் பார்த்ததில்லை. குடும்பத்துடன் வரலாம். எல்லா உணவகங்களுக்கும் வர முடியாது. அவர்கள் வரக்கூடிய உணவகங்களில் குடும்பத்தினருக்கான பிரத்யேக இடம் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். இதற்கு `பேமிலி ரூம்' என்று பெயர். இந்தக் குடும்ப அறைக்கு கார் தரிப்பிடத்திலிருந்து நேராகச் செல்வதற்கு வகை செய்யப்பட்டிருக்க வேண்டும். பெண்களுக்குத் தனியான பேசின்களும், ஒப்பனை அறைகளும் குடும்ப அறைப் பகுதிக்குள்ளேயே இருக்க வேண்டும்.

இப்படியான குடும்ப அறைகள் இப்போது தமிழகத்தின் சிறு நகரங்களில்கூட இராது என்று நினைக்கிறேன். 80-களுக்கு முன்னாள் இருந்தன. அவற்றையெல்லாம் கடந்துதான் நாம் இந்த இடத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறோம். இப்படியான மாற்றங்கள் உடையிலும் நிகழ்ந்திருக்கின்றன.

தாவணியும் முந்தானையும்!

இப்போது தமிழகத்துக் குமரிகள் தாவணியைப் புறக்கணித்துவிட்டார்கள். அவர்கள் சுடிதாருக்கு மாறிவிட்டார்கள். பள்ளிச் சீருடைகள் சுடிதாராகி ஆண்டுகள் பலவாகிவிட்டன. துப்பட்டாவை V வடிவத்தில் போட்டு `பின்' குத்திக்கொள்ள வேண்டும். இப்போது துப்பட்டாவுக்குப் பதிலாக கோட் வந்துகொண்டிருக்கிறது. தாவணி புறக்கணிக்கப்பட்டாலும் அதற்கான பதிலீடு இருந்து வருகிறது.

வீட்டில் நைட்டி அணிந்திருக்கும் பெண்கள் வீதிக்கு வரும்போது `ஊர்க்கண்ணு'க்குப் பயந்து ஒரு துண்டைப் போர்த்திக்கொள்கிறார்கள். தாவணிக்கும் முந்தானைக்கும் பழகிய தமிழர்களை அது இல்லாமல் பழக்கப்படுத்துவதற்கு கொஞ்ச காலம் வேண்டிவரும். அப்படிப் பழக்கப்பட்ட பிறகு அது அவர்கள் கண்களை உறுத்தாது. பிறகு தமிழர்கள் தலை நிமிர்ந்து நடப்பார்கள்.

HongKong
HongKong
Image by Andy Leung from Pixabay
ஆண் பிள்ளைகளோடு பழகாத பெண்கள் லெஸ்பியன் ஆவார்களா... `பாவக்கதைகள்' சொல்வது சரியா?

உடை என்பது நாகரிகத்தின் சின்னம். அது சமூகத்தில் மதிப்பையும் மரியாதையையும் ஈட்டித் தருகிறது. அது வசதியாகவும் அவரவர் செய்யும் பணிக்கு உகந்ததாகவும் இருக்க வேண்டும். அந்த உடையைத் தேர்ந்தெடுக்கிற சுதந்திரம் அணிகிறவர்களுக்கு இருக்க வேண்டும். தம்மைத் தாமே கலாசாரக் காவலர்களாக நியமித்துக்கொண்டவர்கள் இதில் தலையிடக் கூடாது.

நமது சமூகம் ஆண்களின் ஆதிக்கத்தில் இருக்கிறது. பெண்களின் சிந்தனையையும் இந்தச் சமூகமே கட்டமைக்கிறது. ஆகவேதான் முன்னெல்லாம் மருமகள்கள் நைட்டி அணிவது மாமியார்களுக்கு உவப்பாயில்லை. அந்த மருமகள்கள் இப்போது மாமியார்களாகி வருகிறார்கள். மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், இன்னும் கடக்க வேண்டிய மனத்தடைகள், புறத்தடைகள் பல இருக்கின்றன. அதைக் கடப்பதற்குப் பெண்கள் அனைவரும் படிக்க வேண்டும். உற்பத்தியில் ஈடுபட வேண்டும். பொருளீட்ட வேண்டும். அப்போது பெண்கள் அவர்களது உடையை அவர்களே முடிவு செய்வார்கள். ஆண்கள் பெண்களை வெறிப்பதை விடுத்து அவரவர் வேலையைப் பார்ப்பார்கள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு