Published:Updated:

அரசியல் + மதம்; கர்நாடகா ஹிஜாப் சர்ச்சையின் பின்னணி என்ன?

Representational Image
News
Representational Image

உடுப்பியில் உள்ள ஒரு அரசுப்பள்ளியில், 8 மாணவிகளை வைத்து தொடங்கப்பட்ட இந்தப் பிரச்னை, இன்று கர்நாடகாவின் பல மாவட்டங்களில் இந்து மாணவர்கள் vs இஸ்லாமிய மாணவர்கள் என்பது வரை நீண்டிருக்கிறது.

Published:Updated:

அரசியல் + மதம்; கர்நாடகா ஹிஜாப் சர்ச்சையின் பின்னணி என்ன?

உடுப்பியில் உள்ள ஒரு அரசுப்பள்ளியில், 8 மாணவிகளை வைத்து தொடங்கப்பட்ட இந்தப் பிரச்னை, இன்று கர்நாடகாவின் பல மாவட்டங்களில் இந்து மாணவர்கள் vs இஸ்லாமிய மாணவர்கள் என்பது வரை நீண்டிருக்கிறது.

Representational Image
News
Representational Image
Note: The Subject Line நியூஸ்லெட்டரின் Explainer கட்டுரை இது. தமிழின் முதல் Daily Curated நியூஸ்லெட்டரின், மிகச்சிறந்த செய்தி அனுபவத்தைப் பெற கீழே உங்கள் மெயில் ஐடி-யைக் கொடுத்து சப்ஸ்கிரைப் செய்யுங்கள். தினமும் காலை 7 மணிக்கு உங்கள் இன்பாக்ஸிற்கே வந்துசேரும்!

- ஹிஜாப் அணிந்து வரும் மாணவிகளை பள்ளிக்குள் அனுமதிக்கலாமா?

- சீருடை விதிகள் அதற்கு இடம் தரலாமா?

- சீருடை விதிகள் அனுமதி மறுத்தாலும், அதைத் தாண்டி ஹிஜாப் அணிய மாணவிகளுக்கு சட்டப்படி உரிமை உண்டா?

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கர்நாடகாவில் விவாதமாகியிருக்கும் கேள்விகள் இவை. உடுப்பியில் உள்ள ஒரு அரசுப்பள்ளியில், 8 மாணவிகளை வைத்து தொடங்கப்பட்ட இந்தப் பிரச்னை, இன்று கர்நாடகாவின் பல மாவட்டங்களில் இந்து மாணவர்கள் vs இஸ்லாமிய மாணவர்கள் என்பது வரை நீண்டிருக்கிறது.

எங்கே தொடங்கியது பிரச்னை?

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27-ம் தேதி தொடங்கியது இந்தப் பிரச்னை.

கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசின் PU கல்லூரியில் (Pre-university College) 11 மற்றும் 12-ம் வகுப்பைச் சேர்ந்த 8 மாணவிகளுக்கு, ஹிஜாப் அணிந்து வந்ததால் வகுப்புகளில் பங்கேற்க அனுமதி (கல்லூரிக்குள் நுழையலாம்) மறுக்கப்பட்டது. வருகைப்பதிவேடுகளிலும் ஆப்சென்ட் என மார்க் செய்யப்பட்டது.

  • இந்த மாணவிகள் பள்ளியின் சீருடை அணிந்து, அதற்கு மேல் ஹிஜாப் அணிந்திருந்தனர். டிசம்பர் 27 அன்றுதான் முதன்முதலில் அணியத் தொடங்கியிருந்தனர். அதற்கு முன் இல்லை.

இதற்காக அவர்கள் சொன்ன காரணம், ``கல்லூரியில் அதிகமான ஆண் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். வெளியிலிருந்தும் நிறைய ஆண்கள் வருகின்றனர். எனவேதான் ஹிஜாப் அணிகிறோம். இதுகுறித்து ஏற்கெனவே எங்கள் பெற்றோர் மூலம் பள்ளி தலைமையாசிரியரிடம் கோரிக்கை வைத்தோம். ஆனால், எந்த பதிலும் இல்லை. அதனால்தான் நாங்களே அணிந்துகொண்டோம். 76 முஸ்லிம் மாணவிகள் படிக்கும் இந்தக் கல்லூரியில் நாங்கள் 8 பேர் மட்டும்தான் ஹிஜாப் அணிகிறோம். நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை; இதைத் தடைசெய்ய கல்லூரிகளில் எந்த விதிமுறையும் இல்லாதபோது எங்களை உரிமையை ஏன் தடைசெய்கிறீர்கள்?”இதற்கு அந்தக் கல்லூரியின் தலைமையாசிரியர் சொன்ன பதில், ``இந்தப் பள்ளியின் 37 ஆண்டுகால வரலாற்றில் யாரும் வகுப்பறைக்குள் ஹிஜாப் அணிந்ததில்லை. இதை அனுமதிப்பது மாணவர்களிடையேயான சமச்சீர் தன்மையை பாதிக்கும் என்பதால் நாங்கள் தடைசெய்தோம்.”

இந்தப் பிரச்னையில் கர்நாடக அரசு என்ன சொல்கிறது?

பள்ளி மாணவர்களின் சீருடை குறித்து ஒட்டுமொத்த மாநிலத்திற்கும் என எந்தவொரு விதிமுறையும் அங்கு இல்லை. மாறாக, அதை அந்தந்தப் பள்ளிகளோ அல்லது மாவட்ட கல்லூரி வளர்ச்சி குழுக்களோ அதை முடிவு செய்யலாம் என்பதுதான் இந்தப் பிரச்னைக்கு முன்புவரை அரசின் நிலைப்பாடு.

  • மேலும், இந்த 8 மாணவிகளும் பள்ளி சீருடையை அணிந்து அதற்கு மேல்தான் ஹிஜாப் அணிகிறார்கள் என்பதால் அதை விதிமீறல் என்றுகூடச் சொல்லமுடியாது எனவும் மாணவிகளுக்கு ஆதரவாக குரல்கள் எழுந்தன. ஆனால், பிரச்னை இந்த 8 பேரோடு மட்டும் நிற்கவில்லை.

பிறகு என்ன நடந்தது?

உடுப்பியில் இந்தப் பிரச்னை நடந்துகொண்டிருக்கும்போதே, கர்நாடாவின் சிக்மக்ளூர் மற்றும் மங்களூரில் வேறு இரண்டு கல்லூரிகளில் ABVP அமைப்பைச் (பா.ஜ.க-வின் மாணவர்கள் அணி) சேர்ந்த இந்து மாணவர்கள் சிலர், காவித்துண்டுகளுடன் வகுப்புகளுக்கு வந்தனர். இதையடுத்து, அந்தக் கல்லூரிகள் காவித்துண்டு மற்றும் ஹிஜாப் இரண்டையும் ஒரு சேரத் தடை செய்தன.

  • இப்படி முதலில் ஒரு பள்ளியில் தொடங்கிய பிரச்னை, பிற கல்லூரிகளுக்குப் பரவவும், அவை மாநிலம் முழுவதும் விவாதங்களைக் கிளப்பவும் கர்நாடகா அரசு உடனே செயலாற்றவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டது.

  • ஹிஜாப்பை வகுப்புகளுக்குள் அனுமதிப்பது குறித்து ஆராயவும், விதிமுறைகள் வகுக்கவும் ஒரு நிபுணர் குழுவை அமைத்தது. அந்தக் குழு அறிக்கை அளிக்கும் வரையில், இதற்கு முன் இருந்த நிலையே தொடரவேண்டும் என்றது.

இந்த நடவடிக்கை பிரச்னையைத் தணிக்கும் எனக் கருதப்பட்டது. ஆனால், அடுத்த சில நாள்களில் இன்னும் தீவிரமானது.

எப்படி?

இதுவரைக்கும் உடுப்பி கல்லூரியில் புதிதாக ஹிஜாப் அணிந்த மாணவிகளைத் தடை செய்ததை மட்டும் பார்த்தோம் அல்லவா? இது அப்படியே வேறு கதை.

  • அதே உடுப்பி மாவட்டத்தில், குந்தாபூர் நகரில் உள்ள மற்றொரு கல்லூரியில் ABVP அமைப்பைச் சேர்ந்த சில மாணவர்கள், பிப்ரவரி 2-ம் தேதி காவித்துண்டுகளுடன் வகுப்புகளுக்கு வந்தனர். இதைத்தொடர்ந்து, முன்பு பார்த்தைப் போலவே இங்கேயும் காவித்துண்டுகள் மற்றும் ஹிஜாப் ஆகிய இரண்டும் தடைசெய்யப்பட்டன.

  • ஆனால், இங்கு பாதிக்கப்பட்டது புதிதாக ஹிஜாப் அணிந்துவந்த மாணவிகள் அல்ல; ஏற்கெனவே பல ஆண்டுகளாக ஹிஜாப் அணிந்துகொண்டு பள்ளிகளுக்கு வந்தவர்கள். இங்கு ஹிஜாப் அணிந்துகொள்ள கல்லூரி விதிமுறைகளும் அனுமதிக்கின்றன.

  • இவர்களில் சுமார் 20 மாணவிகள் பிப்ரவரி 3-ம் தேதி பள்ளிக்குள் நுழைவதை தலைமையாசிரியர் தடை செய்ததும், அதையடுத்து மாணவிகள் அவர்களிடம் கெஞ்சுவதுமான வீடியோதான் அண்மையில் சமூக வலைதளங்களில் வைரலானது.

இதேபோல உடுப்பி மாவட்டத்தின் இன்னும் சில கல்லூரிகளுக்கும் காவித்துண்டு போராட்டங்கள் பரவின.

``ஹிஜாப் என்பது எங்கள் மதக்கோட்பாட்டில் உள்ள ஒரு விஷயம். ஆனால், காவித்துண்டு இந்துக்களுக்கு அப்படி இல்லையே? ஏன் இரண்டையும் ஒப்பிடுகிறார்கள்?” என்பதே.

சட்டம் சொல்வது என்ன?

முதலில் 8 மாணவிகள் தடைசெய்யப்பட்டதைப் பார்த்தோம் அல்லவா? அந்த மாணவி ஹிஜாப் தடையை எதிர்த்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

  • இஸ்லாமின் அடிப்படை கூறுகளில் ஒன்றாக ஹிஜாப் இருப்பதால், அரசியலமைப்புச் சட்டத்தின்படி (சட்டப்பிரிவு 14 & 25) அதை அணிய தனக்கு உரிமை இருப்பதாக அந்த மனுவில் தெரிவித்திருக்கிறார். இந்த வழக்கு இன்னும் விசாரணைக்கு வரவில்லை. சரி, இதுவரையிலுமான சட்டம் என்ன?

மாணவியின் மனு குறிப்பிடுவதுபோலவே, சட்டப்பிரிவு 25 அனைத்து மதத்தினரும் தங்கள் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவதை அனுமதிக்கிறது. அதேசமயம், சில இடங்களில் கட்டுப்பாடுகளையும் விதிக்க அரசை அனுமதிக்கிறது.

  • தற்போது இந்த ஹிஜாப் சர்ச்சையைப் பொறுத்தவரை, இரண்டு கேரள உயர்நீதிமன்ற தீர்ப்புகள் நம் முன் இருக்கின்றன. ஒன்று, 2016-ம் ஆண்டு மருத்துவ நுழைவுத்தேர்வின் போது, முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதைத் தடைசெய்தது குறித்த வழக்கு.

  • இந்த வழக்கில் தீர்ப்பளித்த கேரள உயர்நீதிமன்றம், மாணவிகள் முஸ்லிம் முறைப்படி ஆடை அணிவதற்கு தடை இல்லை எனவும், ஒருவேளை இது தேர்வு முறைகேடுகளில் ஈடுபட உதவலாம் என CBSE நினைத்தால், மாணவிகளை சோதனையிட்டுக்கொள்ள வழிசெய்யலாம் எனவும் தீர்ப்பளித்தது.

  • இதேபோல 2018-ம் ஆண்டு பள்ளிகளில் ஹிஜாப் அணிவதைத் தடைசெய்வது குறித்த வழக்கில் (வேறு நீதிபதி), தனிநபர்களின் உரிமையைவிடவும், பள்ளியின் விதிமுறைகளே முதன்மையாகப் பின்பற்றப்படவேண்டும் எனத் தீர்ப்பளித்தது. எனவே இந்த விவகாரத்தில் இன்னும் தெளிவான நிலைப்பாடு இல்லை.

  • ஆனால், அதேசமயம் ஹிஜாபை காரணம் காட்டி, கல்வி மறுக்கப்படுவது என்பது சட்டப்பிரிவு 21-A-க்கு (கல்வி பெறும் உரிமை) எதிரானது என்கின்றனர் நிபுணர்கள்.

ஹிஜாப் விவகாரம் ஏன் இவ்வளவு பெரிதானது?

இதைப் புரிந்துகொள்ள கர்நாடகாவின் கடலோரப் பிரதேசத்தின் (Coastel Karnataka) அரசியலையும் (தக்‌ஷிண கன்னடா, உத்தர கன்னடா, உடுப்பி ஆகிய மூன்று மாவட்டங்கள்) புரிந்துகொள்ளவேண்டும். இந்துத்துவ இயக்கங்கள் வலுவாக காலூன்றியிருக்கும் மாவட்டமான உடுப்பியில் மொத்தம் 5 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவற்றில் 2013-ம் ஆண்டு காங்கிரஸ் 4 இடங்களையும், பா.ஜ.க 1 இடத்தையும் வென்றிருந்தன.

  • இதுவே 2018-ல் 5 இடங்களையும் பா.ஜ.க வென்றது. இதற்கு காரணமாக அப்போது குறிப்பிடப்பட்டது இந்த 3 மாவட்டங்களிலும் பா.ஜ.க மேற்கொண்ட மத அரசியல்தான். (அது பெரிய கதை என்பதால் இத்துடன் இங்கே நிறுத்திக்கொள்ளலாம்)

  • இந்நிலையில் அண்மையில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் Popular Front of India (PFI) (இஸ்லாமிய அமைப்பு) மொத்தம் 3 இடங்களைக் கைப்பற்றியிருந்தது. இவை காங்கிரஸ் ஆதிக்கம் செலுத்திய இடங்கள். எப்படி பா.ஜ.க மத அரசியல் மூலம் இந்தப் பகுதியில் ஆதிக்கம் செலுத்தியதோ அதேபோல தற்போது PFI-யும் செய்கிறது என்பது இந்தப் பிரச்னையில் வைக்கப்படும் குற்றச்சாட்டு. இதற்கு எதிராக ஹிஜாப் விவகாரத்தை இன்னும் பெரிதாக்க பா.ஜ.க முயற்சி செய்கிறது என்பது இன்னொரு குற்றச்சாட்டு.

  • ஆனால், ``முதன்முதலில் உடுப்பி கல்லூரியில் பிரச்னை வந்தபோது பள்ளி நிர்வாகத்திடம் மட்டுமே முறையிட்டோம்; அவர்கள் வகுப்பில் நுழைய தடைவிதித்ததும்தான் CFI (PFI-ன் மாணவர் அணி)-யிடம் முறையிட்டோம் என்கின்றனர்” மாணவிகள்.

  • மேலும், ``அந்த ஒரு கல்லூரியைத் தாண்டி, பிற கல்லூரிகளுக்கும் காவித்துண்டு vs ஹிஜாப் என பிரச்னையைக் கொண்டு சென்றது வலதுசாரி இயக்கங்களே. இதற்கு முன்பே பலமுறை ஹிஜாப், புர்கா ஆகியவற்றிற்கு எதிராக வலதுசாரி இயக்கங்கள் போராடிய வரலாறும் இந்தப் பிரதேசத்தில் உண்டு” என்கின்றனர் இன்னொரு சாரார்.

சரி, அடுத்து என்ன?

பிரச்னை உச்சத்தில் இருக்கும் இந்த சமயத்தில் கடந்த சனிக்கிழமையன்று புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்திருக்கிறது கர்நாடக அரசு. அதில், கல்லூரிகள் நிர்ணயித்திருக்கும் சீருடை அல்லது கல்லூரி வளர்ச்சிக் குழுக்கள் நிர்ணயிக்கும் சீருடையைக் கட்டாயம் அணியும்படி மாணவர்களுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. (இன்னும் நிபுணர்குழுவின் அறிக்கை வெளியாகவில்லை).

  • மேலும், சமத்துவத்தை, பொது அமைதியைக் குலைக்கும் உடைகள் வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது. இது ஹிஜாப் பிரச்னையில் மேலும் குழப்பத்தையே விளைவித்திருக்கிறது. காரணம், கல்லூரி வளர்ச்சிக் குழுவில் பெரும்பாலும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-க்களே தலைவராக இருப்பார்கள். அவர்களும் இந்த ஹிஜாப் பிரச்னைக்கு காரணம்.

  • இன்னொன்று, சீருடைக்கு மேலே ஹிஜாப் அணிய தடையா இல்லையா என்பதை இது தெளிவுபடுத்தவில்லை.

எனவே இனி நீதிமன்ற உத்தரவுகள் வரும் வரையோ அல்லது அரசு தலையிட்டு பிரச்னையை முடித்துவைக்கும் வரையிலோ, இந்த விவகாரம் கர்நாடகாவில் ஓயப்போவதில்லை.

தற்காலிகமாக உடுப்பி குந்தாபூர் கல்லூரியில் மட்டும் மாணவிகள் கல்லூரிக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், தனி அறையில் மட்டுமே அவர்கள் அமரவைக்கப்படுவர் எனவும், வகுப்புகள் அவர்களுக்கு நடைபெறாது எனவும் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Note: The Subject Line நியூஸ்லெட்டரின் Explainer கட்டுரை இது. தமிழின் முதல் Daily Curated நியூஸ்லெட்டரின், மிகச்சிறந்த செய்தி அனுபவத்தைப் பெற கீழே உங்கள் மெயில் ஐடி-யைக் கொடுத்து சப்ஸ்கிரைப் செய்யுங்கள். தினமும் காலை 7 மணிக்கு உங்கள் இன்பாக்ஸிற்கே வந்துசேரும்!