Published:Updated:

கொரோனா காலத்தில் அதிகரித்த பதின்பருவ கர்ப்பங்கள்; இந்திய சிறுமிகளின் துயரநிலை மாறுமா?

உலகிலேயே குழந்தைப் பருவத் திருமணங்கள் அதிகமாக நடப்பது வங்க தேசம், நேபாளம், இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

உலக அளவில் அடுத்த பத்தாண்டுகளில், ஒரு கோடிக்கும் அதிகமான குழந்தை திருமணங்கள் நடக்கக் கூடும்..!
யுனிசெஃப்

கர்ப்பகால மாதாந்தர பரிசோதனைக்காக, சென்ற மாதம் என்னிடம் வந்த அந்தப் பெண்ணின் வயது இருபதுகூட இருக்காது. ஏழு மாத கர்ப்பிணியான அந்தப் பெண்ணை அழைத்து வந்தவர்கள் அப்பெண்ணின் கணவரும் தாயாரும்..

சராசரி உயரம், அதிக எடை, ஆனால் முகத்திலும், குரலிலும் அவ்வளவு குழந்தைத்தனம்.

``என்ன படிச்சிருக்கேம்மா..?" என்ற எனது கேள்விக்கு, அம்மாவின் முகத்தைப் பார்த்தபடி, ``ப்ளஸ் டூ முடிச்சு ரெண்டு வருஷம் ஆச்சுங்க" என்றாள் அவள். நிச்சயம் பொய்யாகத்தான் இருக்கும்.

``ஏன் இவ்வளவு சீக்கிரமா ஒரு கல்யாணம்..? உடனே ஒரு கர்ப்பம் வேற..?" என்று அப்பெண்ணின் தாயாரிடம் நான் கேட்க,

``இவங்கப்பா எட்டு மாசம் முன்ன கொரோனா வந்து இறந்துட்டாரும்மா... இவளுக்குக் கீழே ஒரு பையன், இன்னொரு பொண்ணும் இருக்காங்க... எல்லாரையும் தனி ஆளா கரை சேர்க்க என்னால ஆகாது... அதான் என் தம்பிக்கே, அவனுக்கு 34 வயசாயிருந்தாலும் பரவால்லன்னு இவளைக் கட்டி வைச்சுட்டோம்... நல்லபடிக்கு பிரசவம் பண்ணிக் குடுங்கம்மா..." என்று சொல்லும்போது கண்கலங்கியிருந்தது அவருக்கு.

Woman (Representational Image)
Woman (Representational Image)

அந்த இளம் கர்ப்பிணியைப் பரிசோதித்தபோது, அவருக்கு கால்கள் வீங்கி பிபி கூடுதலாகவும் அதேசமயம் வயிற்றில் குழந்தை ஏழு மாதத்துக்கான வளர்ச்சியின்றி குறைவாகவும் இருந்தது தெரிய வந்தது.

PIH (Pregnancy Induced Hypertension) என்ற கர்ப்பகால ரத்த அழுத்தத்தால் அந்தப் பதின்பருவ கர்ப்பிணி பாதிக்கப்பட்டுள்ளதை மற்ற பரிசோதனைகளும் உறுதிசெய்ய, ரத்த அழுத்தம் குறைவதற்கான மருந்துகளுடன், உணவுமுறைகளையும் பரிந்துரைத்ததுடன், ரத்த அழுத்தம் அதிகமானால் ஏற்படும் பிரச்னைகளையும், அதன் `warning signs' என்ற அபாய அறிகுறிகளையும் விளக்கி அனுப்பினேன்.

ஆனால் பயந்தது போலவே, மூன்றே வாரங்களில், எட்டாவது மாதத் தொடக்கத்திலேயே வயிற்றுவலி, அதிக தலைவலி மற்றும் அதிக கால் வீக்கத்துடன் மருத்துவமனைக்கு வந்த அந்தப் பெண்ணின் பிபியோ மிகவும் எகிறி இருக்க, `Abruptio Placenta' என்ற கர்ப்ப கால ரத்தக்கசிவும் ஸ்கேனிங்கில் தெரிய, அவசர சிசேரியன் மூலம் 1.3 கிலோ எடையுடனான பெண் குழந்தையைப் பிரசவிக்கச் செய்தோம்.

குறைந்த வயது கர்ப்பம் காரணமாகக் கர்ப்பப்பையின் உள்ளேயே ஏற்பட்ட அதிக ரத்தக்கசிவுக்கு இரண்டு யூனிட்கள் ரத்தம் அப்பெண்ணுக்குச் செலுத்த வேண்டியிருந்தது. குழந்தை குறைந்த எடையுடன் பிறந்ததால் அதற்கும் சிறப்பு சிகிச்சை தேவைப்பட்டது. குழந்தை சற்று தேறி வந்தவுடன் தாய்ப்பாலைத் தொடங்கலாம் என்றால், தாய்ப்பால் சுரப்பு சுத்தமாக இல்லாமல், ஃபார்முலா ஃபீட்ஸுக்குப் போக வேண்டியிருந்தது.

இத்தனை சிரமங்களும் தாண்டி கைக்குழந்தையுடன் அந்தப் பெரிய குழந்தை வீடு திரும்புவதற்கு கிட்டத்தட்ட பத்து நாள்களுக்கு மேலாகியிருந்தது.

இன்னும் மனதளவிலும் உடலளவிலும் முதிர்ச்சி அடையாத பெண், அவளது பதின்பருவ கர்ப்பம், இதில் ஏற்படக்கூடிய உடல் மற்றும் மனரீதியான பாதிப்புகள்... இவையனைத்தும் `டிப் ஆஃப் ஐஸ்பெர்க்' என்ற வெளித்தெரியும் சிறு நுனி மட்டுமே. உண்மையில் அவற்றின் பிரச்னைகள் இன்னமும் பெரியவை.

Girl (Representational Image)
Girl (Representational Image)
Pixabay
``10 ஆண்டுகள் தனியறையில் வசித்ததைவிட இப்போது கஷ்டமாக உள்ளது!'' - திருமணம் செய்த கேரள தம்பதி வருத்தம்

பதின்பருவ கர்ப்பம் என்பது காலங்காலமாக இருந்து வரும் நிகழ்வுதான். கிட்டத்தட்ட எல்லா நாடுகளின் புராணங்களிலும் இதைக் கதைகளாகக் காணலாம். ஏன்...

நடப்பு காலத்திலும், அமெரிக்காவின் பிரபலமான தொலைக்காட்சி வர்ணனையாளர் மற்றும் நடிகரான ஓப்ரா வின்ஃப்ரே, தனது பதினான்கு வயதிலேயே பாலியல் வன்கொடுமை காரணமாகக் கருத்தரித்து, பிரசவித்த ஆண் குழந்தையும் பிறந்தவுடன் இறந்தது.

பாலிவுட் நடிகையான டிம்பிள் கபாடியா தன் இரண்டு மகள்களையும் பதின்பருவத்திலேயே பிரசவித்தது, பாடகி ஆஷா போன்ஸ்லேவுக்கு திருமணமானபோது வயது பதினாறு, கருத்தரித்தபோது வயது பதினெட்டு... என உலகறிந்த முகங்களின் பதின்பருவ கர்ப்பங்களின் பட்டியலே இவ்வளவு நீளமாக இருக்கையில் சாதாரணர்கள் கணக்கைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா..?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆம்,

உலக மக்கள்தொகையில் பதின்பருவத்தினர் அதிகம் வாழும் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் மட்டும் கருத்தரிக்கும் பருவப் பெண்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஒரு கோடி என்றும், அதில் பாதியளவுக்கு கருச்சிதைவு ஏற்படுவதுடன் அதனால் ஏற்படும் பாதிப்புகளும் உயிரிழப்புகளும் அதிகரித்துக்கொண்டே வருகிறது என்ற உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரங்கள் உண்மையில் அச்சம் கொள்ளத்தான் செய்கின்றன.

பாதுகாப்பான உடலுறவு மற்றும் கருத்தடை குறித்த விழிப்புணர்வு இல்லாததால் திருமணமானவுடன் இந்தப் பதின்பருவப் பெண்கள் தாய்மை அடைவது மட்டுமல்லாமல், பக்குவமடையாத பருவத்தில் ஏற்படும் கருத்தரிப்பினால் அவர்கள் உடலளவிலும் மனதளவிலும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என்கின்றன தகவல்கள்.

கர்ப்பிணி (Representational Image)
கர்ப்பிணி (Representational Image)
உயிரையே பறிக்குமா கருக்கலைப்பு மாத்திரைகள்? சென்னை அதிர்ச்சி சம்பவமும் எச்சரிக்கையும்!

மேலும், இந்தச் சிறுவயதுப் பெண்களுக்கு கருச்சிதைவு, கர்ப்பகால ரத்த அழுத்தம், ரத்த சோகை ஆகிய கர்ப்ப காலத் தொல்லைகள் அதிகம் காணப்படுவது ஒருபுறமிருக்க, நீடித்த அல்லது இயல்பற்ற பிரசவவலியின் காரணமாக அதிகரிக்கும் சிசேரியன் அறுவை சிகிச்சைகள், பிரசவித்தவுடன் ஏற்படும் ரத்த இழப்பு (PPH) ஆகியவை மறுபக்கம் இவர்களை அதிகம் பாதிக்கின்றன. கூடவே, குழந்தைப்பேற்றுக்குப் பிறகான மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்புகளும் இவர்களுக்கு அதிகம் என்பதுடன் மகப்பேறு மரணங்களும் இவர்களிடையே அதிகம் நிகழ்கின்றன எனும் தகவல்கள், அதிகம் கவலை கொள்ளச் செய்கின்றன.

தாய்க்கு இப்படியென்றால் பிறக்கும் குழந்தைகளின் நிலை இன்னும் கடினம். இறந்து பிறக்கும் குழந்தைகள் அல்லது மூச்சுத்திணறல், குறைப்பிரசவம் (preterm), குறைந்த எடை பிரசவம் காரணமாகப் பிறந்த குழந்தைகள்... பிறகு, அதற்கான தீவிர கண்காணிப்பு சிகிச்சை, நோயெதிர்ப்பு குறைவுடன் குழந்தைகளின் உயிரிழப்புகளும் இதில் அதிகம் நிகழ்கின்றன என்கின்றன தகவல்கள்.

உலகிலேயே குழந்தைப் பருவத் திருமணங்கள் அதிகமாக நடப்பது வங்க தேசம், நேபாளம், இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அதிலும் பதினெட்டு வயதுக்குள் உள்ள மணமகள்களில் மூன்றில் ஒருவர் இந்தியப் பெண் என்று கூறும் UNICEF, பீகார், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், குஜராத், ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்கள் பதின்பருவத் திருமணங்களின் முன்னோடியாகத் திகழ்கின்றன என்கிறது.

திருமணமாகாத பெண்ணை வீட்டில் வைத்திருப்பது பாதுகாப்பில்லை என்றும், திருமணம் என்பது தங்களது முக்கியக் கடமை என்றும் பெற்றோர்கள் கருதுவதே இதற்கு முக்கிய காரணம் என்பதை உணர்ந்த நமது அரசாங்கம், இதை மாற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் வருகிறது. அத்துடன் பெண்ணின் சராசரி திருமண வயதை 18-லிருந்து 21 ஆக அதிகரிக்க தற்போது திட்டமிட்டும் வருகிறது.

இந்நிலையில்தான் சமீபத்தில், ``இந்த கோவிட் பெருந்தொற்று, ஏற்கெனவே இருக்கும் நிலையை இன்னமும் மோசமாக்கியுள்ளது" என்று கூறியுள்ள யுனிசெஃப்,

``உலக அளவில் அடுத்த பத்தாண்டுகளில், ஒரு கோடிக்கும் அதிகமான பதின்பருவத் திருமணங்கள் நடக்கக் கூடும்..." என்றும் கூறியுள்ளது.

டாக்டர் சசித்ரா தாமோதரன்
டாக்டர் சசித்ரா தாமோதரன்

இன்று அக்டோபர் 11

சர்வதேச பெண் குழந்தைகள் தினம். உலகம் முழுவதிலுமுள்ள பெண் குழந்தைகள் எதிர்கொள்ளும் சவால்களையும், ஏற்றத்தாழ்வுகளையும் சுட்டிக்காட்டி, அனைவரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இந்த தினத்தை 2012-ம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் அவை அனுசரித்து வருகிறது. அதில், இந்த ஆண்டின் கருப்பொருளாக,

`நமது தலைமுறை... டிஜிட்டல் தலைமுறை' என்று பிரகடனப்படுத்தியுள்ளதன் காரணமே, பெண்களுக்கு சரிசமமான தொழில்நுட்பங்கள் கிடைக்கப் பெற வேண்டும் என்பதற்காக..!

ஆம்,

பெண்களின் இளமைப் பருவத்தைத் திருமணத்தில் வீணாக்காமல் அவர்களை கல்வியில் செழிக்கச் செய்யும் அரசாங்கமும் சமுதாயமும்தான் இன்றைய தேவை.

அதிலும் பெண்களுக்கான அனைத்து உரிமைகளும், தேர்வுகளும் அவர்களுக்கு முழுமையாகக் கிடைக்கவும் அது வழிசெய்ய வேண்டும்; டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் உட்பட!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு