ரகசியப் பேச்சு, அந்தரங்க பகிர்வு... ஆபத்தில் சிக்கும் பிள்ளைகள்... பெற்றோர்களே அலர்ட்!

இப்போதைய ஆன்லைன் வகுப்புச் சூழலில் குழந்தைகளிடமிருந்து போனை பறிக்க முடியாது. ஆனால், கண்காணிப்பை அதிகப்படுத்த வேண்டும்.
`சிறுமியின் அந்தரங்க புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட சென்னையைச் சேர்ந்த இளைஞர் தற்கொலை... இறப்புச் சான்றிதழோடு திரும்பிய காவல்துறையினர்' என்ற செய்தி சில தினங்களுக்கு முன்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னையில் தங்கி பத்தாம் வகுப்பு படித்துவந்த மயிலாடுதுறையைச் சேர்ந்த 15 வயதுச் சிறுமிக்கு, தன் தோழியின் உறவினரான மெல்வின் செல்வகுமார் என்ற 26 வயது இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. காலப்போக்கில் அது காதலாக மாற, இருவரும் அவ்வப்போது போனில் பேசிக்கொள்வது ஒன்றாகச் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்வது என `காதல்!' வளர்த்துள்ளனர்.

இந்நிலையில், பதினொன்றாம் வகுப்புக்கு மயிலாடுதுறைக்கே அழைத்துச் செல்லப்பட்டார் அந்தச் சிறுமி. சிறுமிக்கும் மெல்வினுக்குமான பழக்கம் துண்டிக்கப்பட்டது. அதைப் பொறுத்துக்கொள்ள முடியாத மெல்வின் ஒருநாள் கத்தியால் தன் கையைக் கிழித்துக்கொண்டு ரத்தம் சொட்டியபடி, ஏதோ பேசி சிறுமிக்கு ஒரு வீடியோ அனுப்பியிருக்கிறான். அதுதான் சிறுமி சறுக்கிய இடம்... அந்தச் சூழலை எவ்வாறு கையாள்வது என்று தெரியாமல், மேலாடை இல்லாமல் தன்னைத் தானே புகைப்படமெடுத்து மெல்வினுக்கு அனுப்பியுள்ளார் அந்தச் சிறுமி.
அடுத்த சில நாள்களிலேயே அந்தச் சிறுமியின் அந்தரங்க புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கிறது. அதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் உறவினர் ஒருவர் இந்தத் தகவலைச் சிறுமியின் வீட்டில் சொல்ல, அவர்கள் நிலைகுலைந்து போயினர். உடனடியாக மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் விசாரணையைத் தொடங்கிய மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல்துறையினர் மெல்வினைத் தேடி சென்னைக்கு வந்தனர். ஆனால், மெல்வின் அங்கே உயிரோடு இல்லை. அவர் தற்கொலை செய்துகொண்டு இறந்துவிட்டதாகச் சொல்லி அவரது இறப்புச் சான்றிதழோடு திரும்பியிருக்கிறது காவல்துறை.

இப்படி ஒன்றல்ல இரண்டல்ல ஏராளமான சம்பவங்கள் நாள்தோறும் நடந்துகொண்டே இருக்கின்றன. ஒரு பெண்ணைப் பழி வாங்க வேண்டுமென்றால் அந்தப் பெண்ணின் புகைப்படங்களை மார்ஃபிங் செய்து மிரட்டுவது, காதலின் பெயரில் பழகி பெண்களின் அந்தரங்கப் படங்களை வாங்கி வைத்துக்கொண்டு மிரட்டுவது, வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்வது, ஆபத்துகளைப் பற்றிய கவலை இல்லாமல் பெண்களே தங்களின் அந்தரங்கப் படங்களை மூன்றாம் நபருக்கு அனுப்புவது என வெவ்வேறு வடிவங்களில் இப்படியான பிரச்னை விஸ்வரூபமெடுத்துக் கொண்டிருக்கிறது. இதற்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள் குறித்து குழந்தைகள் மனநல மருத்துவர் ஜெயந்தினியிடம் பேசினோம்.
``ஐந்து வருடங்களுக்கு முன்பு என்னிடம் ஒரு பெண் வந்தாள். நன்கு படித்து வேலையிலிருந்த அந்தப் பெண்ணுக்கு 30 வயதாகியும் திருமணமாகவில்லை. அதனால் மன உளைச்சலுக்குள்ளாகி என்னிடம் ஆலோசனைக்கு வந்தாள். என்னிடம் வந்த சில நாள்களிலேயே அவளுக்குத் திருமணம் நிச்சயமாகிவிட்டது. இனி பிரச்னை இல்லை என அவள் நிம்மதிப் பெருமூச்சுவிட்டாள். ஆனால், அதற்குப் பிறகுதான் பெரிய பிரச்னையே வெடித்தது. அந்தப் பையன் திருமணத்துக்கு முன்பு, `உன்னோட நிர்வாண போட்டோவை அனுப்பு’ என வற்புறுத்தியிருக்கிறான். இவளுக்கோ என்ன செய்வதெனத் தெரியவில்லை. நீண்ட வருடக் காத்திருப்புக்குப் பின்பு திருமணம் நிச்சயமாகியிருக்கிறது. அவன் கேட்டு அனுப்பவில்லையென்றால் என்ன நினைப்பானோ என்ற பயத்தில் நிர்வாண நிலையில் போட்டோ எடுத்து அனுப்பியிருக்கிறாள். அதற்கு அவனோ, ``கேட்டதும் கொஞ்சம்கூட யோசிக்காம உன்னோட நிர்வாண போட்டோவை அனுப்புறியே... அப்டீன்னா இதுக்கு முன்னாடி எத்தனை பேருக்கு இப்படி அனுப்பியிருப்பியோ” என்று சொல்லி திருமணத்தையே நிறுத்திவிட்டான். அவள் மனதளவில் நொறுங்கிப் போய்விட்டாள். அவளை அதிலிருந்து மீட்டுக் கொண்டுவருவது பெரும் சிரமமாகிவிட்டது.

இதேபோன்ற ஒரு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண், ``தன்னுடைய முன்னாள் காதலன், `நாங்கள் காதலித்தபோது என்னை வற்புறுத்திப் பெற்ற என் அந்தரங்கப் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துவிட்டான். அந்தப் புகைப்படங்களை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’' என சில தினங்களுக்கு முன்பு டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். சிறுவயது பெண்களில் ஆரம்பித்து திருமணமான பெண்கள் வரை வயது வித்தியாசமின்றி பலர் தங்களின் அந்தரங்க புகைப்படங்கள் தொடர்பான பிரச்னைகளில் அதிகளவில் சிக்கிக்கொள்கின்றனர். இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் ஸ்மார்ட் போன்கள்தான். முன்பு லேண்ட் லைன் போன்தான் இருந்தது. பெரும்பாலும் அதில் ரகசியம் பேச முடியாது. அதற்கடுத்து இணைய வசதி இல்லாத பட்டன் போன்கள் வந்தன. அதில் அந்தரங்கப் படங்களை பகிர்ந்துகொள்ள முடியாது. ஆனால், இப்போது அப்படி அல்ல. ஸ்மார்ட் போன்களில் எல்லா வசதிகளும் விரல் நுனியில் வந்துவிட்டன. இப்போது பாத்ரூமுக்குள், தூங்கும்போது போர்வைக்குள் என எங்கு சென்றாலும் போனுடன்தான் செல்கின்றனர். போனில் அவர்கள் என்ன செய்கிறார்கள் என அவர் அருகில் உள்ளவர்களுக்குக்கூட தெரிய வாய்ப்பில்லை. ரகசியப் பேச்சும் அந்தரங்கப் பகிர்வும் அதிகமாகிவிட்டன.
சமூக வலைதளங்களில் நுழைந்தாலே ஏதோவொரு வகையில் `அடல்ட்’ விஷயங்கள் விடாப்பிடியாக வலைவிரிக்கின்றன. அதுபோன்ற விஷயங்களில் ஆர்வம் அதிகமுள்ள பதின்பருவ வயது பிள்ளைகள் எளிதில் அதில் சிக்கிக்கொள்கின்றனர். மிக மோசமான ஒரு சூழலில் நாம் இருக்கிறோம். ஆகையால், மிகவும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஆனால், நாம் அப்படி இருக்கிறோமா? குழந்தையாக இருக்கும்போதே இப்போது பிள்ளைகள் கையில் ஸ்மார்ட் போனைக் கொடுத்துவிடுகிறோம் நமக்குத் தெரியாத டெக்னாலஜி விஷயங்களைக் கூட சிறு வயதிலேயே நம் பிள்ளைகள் கற்றுக்கொள்கின்றனர் என்று நாம் பெருமை கொள்கிறோம். ஆனால், நமக்கே தெரியாமல் அவர்கள் தவறான பாதைக்கு இழுத்துச் செல்லப்படுகின்றனர் என்பதை அவர்கள் ஏதாவதொரு விபரீதத்தில் சிக்கிக்கொண்ட பிறகே உணர்கிறோம். இப்போதைய ஆன்லைன் வகுப்புச் சூழலில் குழந்தைகளிடமிருந்து போனை பறிக்க முடியாது. ஆனால், கண்காணிப்பை அதிகப்படுத்த வேண்டும்.

போனில் தேவை இல்லாத விஷயங்களைப் பார்க்க முடியாதபடி `லாக்’ செய்து வைக்க வேண்டும். எக்காரணத்தை முன்னிட்டும் தங்களை ஆடை இல்லாமல் புகைப்படம் எடுக்கக் கூடாது, வீடியோ கால் பேசக் கூடாது என்பதையும் அதில் உள்ள விபரீதங்களையும் அவர்களுக்குப் புரியும்படி உணர்த்துங்கள். பெண் பிள்ளைகளை மட்டும் கண்டிப்புடன் வளர்க்காமல் ஆண் பிள்ளைகளுக்கும் பெண் பிள்ளைகளை எப்படிப் பார்க்க வேண்டும் எனச் சொல்லிக் கொடுங்கள். குழந்தைகளுக்குக் கட்டளைகள் போடும் பெற்றோர்கள் நாம் அந்தக் கட்டளைகளைப் பின்பற்றுகிறோமா என்று பாருங்கள். குழந்தைகள் முன்பு கெட்ட வார்த்தை பேசுவது, வாழ்க்கைத்துணையைத் திட்டுவது, போனையே நோண்டிக்கொண்டிருப்பது போன்ற விஷயங்களைச் செய்யக் கூடாது. ஏனெனில், உங்களைப் பார்த்துதான் பிள்ளைகள் வளர்கிறார்கள். அவர்கள் நீங்கள் நல்வழிப்படுத்த வேண்டுமே தவிர அவர்களுக்குத் தவறான முன்னுதாரணமாக இருந்துவிடக் கூடாது.
பதின்பருவத்தில் உள்ளவர்கள் மட்டுமல்லாமல் திருமணமான பலரும் இதுபோன்ற அந்தரங்க புகைப்பட பிரச்னைக்கு ஆளாகின்றனர் என்று ஆரம்பத்திலேயே சொல்லியிருந்தேன். அவர்களுக்கு இறுதியாக நான் ஒன்றைச் சொல்லிக்கொள்கிறேன், நீங்கள் அனுப்பும் ஒரு புகைப்படம் உங்கள் வாழ்க்கையை அழித்துவிடும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்பதை எப்போதும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். அதேபோல ஊடகங்களும் பொறுப்புணர்வுடன் செய்தி வெளியிட வேண்டும்” என்றார் நிறைவாக.