Published:Updated:

பெண்களின் `பேரல்' இடை, நாப்கின் குமுறல், பெர்முடா... இவைதான் உங்கள் லட்சணமா கட்சிகளே? #VoiceOfAval

லியோனி

ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை உள்ளது. அந்தக் கொள்கைளின் மீது விமர்சனங்களும் உள்ளன. ஆனால், எல்லா கட்சிகளும் இணையும் ஒரு புள்ளி... பெண்களை பற்றிய ஆணாதிக்க வார்த்தைகள், சிந்தனைகளாகவே இருப்பதுதான் வேதனை.

பெண்களின் `பேரல்' இடை, நாப்கின் குமுறல், பெர்முடா... இவைதான் உங்கள் லட்சணமா கட்சிகளே? #VoiceOfAval

ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை உள்ளது. அந்தக் கொள்கைளின் மீது விமர்சனங்களும் உள்ளன. ஆனால், எல்லா கட்சிகளும் இணையும் ஒரு புள்ளி... பெண்களை பற்றிய ஆணாதிக்க வார்த்தைகள், சிந்தனைகளாகவே இருப்பதுதான் வேதனை.

Published:Updated:
லியோனி
`அவளின் குரலை' Podcast-டாகக் கேட்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும். தொடர்ந்து அவள் விகடனைப் பின்தொடர சப்ஸ்கிரைப் செய்யவும்

தமிழகத் தேர்தல் களத்தில் பிரசாரம் அனலாகியுள்ளது. ஆனால், பல கட்சிகளின் வேட்பாளர்கள், பேச்சாளர்களின் பேச்சிலும் பெண்கள் குறித்த விஷயங்கள் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையிலேயே உள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

`பெண்களின் இடுப்பு பேரலாகிவிட்டது’ என்றிருக்கிறார் தி.மு.கவின் கொள்கைப் பரப்புச் செயலாளர் திண்டுக்கல் ஐ. லியோனி. `பெண்களுக்கு இலவச நாப்கின் கொடுக்குறேன்னு நீ தேர்தல் அறிக்கையில சொல்லலாமா?’ என்கிறார் பேராவூரணி தொகுதியின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் க. திலீபன்.
ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை உள்ளது. அந்தக் கொள்கைளின் மீது விமர்சனங்களும் உள்ளன. ஆனால், எல்லா கட்சிகளும் இணையும் ஒரு புள்ளி... பெண்களை பற்றிய ஆணாதிக்க வார்த்தைகள், சிந்தனைகளாகவே இருப்பதுதான் வேதனை.

தமிழகத்தில் 6.2 கோடி வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்களைவிட, பெண் வாக்காளர்கள் சுமார் 10 லட்சம் பேர் அதிகம். அனைத்துக் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளிலும் பெண்கள் நலன், பெண்களுக்கான சலுகைகள் குறித்த அறிவிப்புகளே பிரதானம். எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே பெண்களின் ஓட்டுக்களை இலக்காக வைத்து செயலாற்றுவதுதான் இங்கே வாடிக்கை. ஓட்டுக்காக இந்த முறையும் பல கோடி ரூபாய் திட்டங்களை அறிவித்திருக்கின்றன அரசியல் கட்சிகள்.

திண்டுக்கல் லியோனி
திண்டுக்கல் லியோனி

உண்மையிலேயே அவற்றில் நல்ல பல திட்டங்களும் இருக்கத்தான் செய்கின்றன. அதாவது, பெண்களுக்கு நிச்சயமாக செய்துதரப்பட வேண்டிய விஷயங்களும் இடம்பெற்றுள்ளன. ஆனால் அவர்களின் வேட்பாளர்களும், பேச்சாளர்களும் பெண்களை இன்னும் பாலியல் பொருளாக, ஆண்களின் உடைமையாக, அடிமையாகத்தான் பார்க்கிறார்கள். எனில், இந்தக் கட்சிகளின் மூலம் நாம் எப்படி பெண் இனத்துக்கான முன்னேற்றத்தை எதிர்பார்ப்பது?

கோயம்புத்தூர் மாவட்டம், தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதியை ஆதரித்து சமீபத்தில் பிரசாரம் செய்த லியோனி, ``ஃபாரின் மாட்டு பாலக் குடிச்சுட்டுதான் நம்ம பொம்பளைக, புள்ளைக எல்லாம் பலூன் மாதிரி இத்தந்தண்டி ஊதிக்கெடக்கு. ஒரு காலத்துல பொம்பளைக இடுப்பு எட்டு மாதிரி இருந்துச்சு, புள்ளைய தூக்கி இடுப்புல வெச்சா அவன் பாட்டுக்கு உட்காந்திருப்பான். இப்போ பெண்களோட இடுப்பு பேரல் மாதிரி ஆகிடுச்சு. புள்ளைய வெச்சா வழுக்கி ஓடிடுறான்’’ என்று பேசியிருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பொதுவாகவே, பெண்களை பாலியல் பொருள்களாகப் பேசும் நகைச்சுவைக்கு இந்தச் சமூகம் அதிகமாகக் குலுங்கிச் சிரிக்கும். லியோனி உட்பட பல மேடை பேச்சாளர்களும், அந்த மலினமான நகைச்சுவை மூலமாகக் கைதட்டல் வாங்கும் மலினமான கன்டன்ட்களை நம்பியிருப்பார்கள். ஆனால், தி.மு.கவின் முக்கியப் பேச்சாளர்களில் ஒருவரான லியோனி, கட்சி சார்பான நிகழ்ச்சிகளிலும் பெண்களை மலினமாகப் பேசுகிறார் என்றால், அதற்குக் கட்சியின் பதில் என்ன? அவர் பட்டிமன்ற, மற்ற மேடைகளில் பெண்களை இழிவுபடுத்திப் பேசுவதையே ஏற்றுக்கொள்ள முடியாது எனும்போது, அரசியல் களத்திலும் அதையே செய்தால், எதிர்க்க வேண்டியதன் அவசியம் அதிகமாகிறது.

வெளிநாட்டு மாடுகளின் ஆபத்து பற்றி மக்களுக்குச் சொல்ல நினைத்தீர்களா லியோனி? எனில், கலப்பின மாடுகள் அதிகரிப்பு, தமிழ்நாடு கால்நடை இனப்பெருக்கச் சட்டம், ஜல்லிக்கட்டு மாடுகள் அழிக்கப்படும் ஆபத்து, சினை ஊசிகளின் விலை, நாட்டு மாடுகளின் அழிவு என்று பேச வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ இருக்கின்றன. இவற்றையெல்லாம் பற்றி மக்களிடம் பேசினால் அவர்களும் விழிப்புணர்வு பெறுவார்கள். உண்மையில், ஓர் அரசியல் கட்சி பேச்சாளரின் பொறுப்பு அதுவே. ஆனால் உங்களுக்கு வெளிநாட்டு மாடுகளின் ஆபத்தை புரியவைக்க `பெண்கள் இடுப்பு பேரல்போல ஆகிவிட்டது’ என்றுதான் பேச வருகிறது எனில், எத்தனை தூரம் அறிவுகெட்டுக் கிடக்கிறீர்கள் நீங்கள்?

லியோனி
லியோனி
உ.பாண்டி

`மக்களுக்கு இப்படி பேசினால்தான் புடிக்கும், புரியும்‘ என்று சில அரசியல் பேச்சாளர்கள் சப்பைக்கட்டு கட்டலாம். உண்மையில், வீரியமான அரசியல் உரைகளை மக்கள் உள்வாங்கியதன் சாட்சியை நம் தமிழகத் தேர்தல் முடிவு வரலாறுகள் நமக்குச் சொல்கின்றன. லியோனி சார்ந்திருக்கும் திராவிடக் கட்சியிலேயே, மக்களிடம் சமூகக் கேள்விகளை எழுப்பி அவர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டிய பேச்சாளர்கள் பலர். இன்றோ, கட்சியின் உயர்மட்ட தலைவர்களுக்கே அரசியல் உரைகள் கைவரவில்லை. அதைவிட கொடுமையாக, லியோனி போன்றவர்களும் இப்படி சமூக முன்னேற்றத்துக்கு எதிர் திசையில் மக்களை இழுக்கிறார்கள்.

லியோனி பெண்களின் இடுப்பு பற்றி பேசியது சர்ச்சையான பின்னரும்கூட, தி.மு.க தலைமை அது குறித்த வருத்த அறிக்கை வெளியிடவில்லை. கண்டும் காணாமல் இருக்கும் அந்த மௌனத்துக்குப் பெயர் என்ன? இத்தனைக்கும் அந்தக் கட்சியில் மகளிர் அணி என்ற ஒன்று இருக்கிறது. கருணாநிதியின் மகள்தான் அதற்கு தலைமை. அவரும்கூட ஒரு வார்த்தை கண்டித்து பேசவில்லை.

கட்சியின் இத்தகைய போக்கை, இதுபோன்ற பேச்சுகளுக்கான தலைமையின் அனுமதி என்று எடுத்துக்கொள்ளலாமா? கட்சித் தலைமையால் ஒரு லியோனி கண்டிக்கப்பட்டால், தி.மு.கவில் பல லியோனிகளுக்கு அது ஓர் எச்சரிக்கையாக அமையும். அவர்களின் வார்த்தைகளில் பெண்கள் குறித்த கவனம் திணிக்கப்படும். ஆனால், லியோனி கேள்வியற்று இருக்கும்போது, பெண்களை இழிவாகப் பேசும் மற்ற பேச்சாளர்களுக்கும், `அதெல்லாம் தலைமை எதுவும் சொல்லாது’ என்ற மெத்தனம்தானே வரும்?

`எங்கள் தேர்தல் அறிக்கையில் அரசுப் பணிகளில் 40% இட ஒதுக்கீடு முதல் சைபர் குற்றங்களுக்கான காவல் நிலையம்வரை பெண்களுக்காக அறிவிப்போம். ஆனால், பொதுவெளியில் பெண்களின் இடுப்பை பேரல் என்போம்‘ என்கிறதா தி.மு.க? எத்தனை திட்டங்களைக் கொண்டுவந்தாலும், சமூகத்தின் ஆணாதிக்க மனநிலை மாறாதவரை பெண்களின் முன்னேற்றம் எந்தளவுக்குச் சாத்தியம் ஆகும்?

நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் கட்சி

அடுத்ததாக, நாம் தமிழர் கட்சியின் பேராவூரணி தொகுதி வேட்பாளர் திலீபன், `தமிழ்ப் பிள்ளைகளுக்கு மாதம் மாதம் நாப்கின் இலவசமாகக் கொடுப்பேன் என்கிறது தி.மு.க தேர்தல் அறிக்கை. இதைவிட ஒரு கேவலம் உண்டா?’ எனக் கேட்கிறார். `இது எவ்ளோ கேவலம்? எவ்ளோ அயோக்கியத்தனம்? எங்கள் மண்ணிலிருக்கிற தமிழ்ப் பிள்ளைகளுக்கு, எம் பெற்றோர்களுக்கு, எம் உடன்பிறந்தாளுக்கு, என் அக்காவுக்கு, தங்கைக்கு (தி.மு.க தேர்தல் அறிக்கையில் அரசுப் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு இலவச நாப்கின் என்றுதான் இருக்கிறது. எக்ஸ்ட்ராவாக பெற்றோர், அக்கா என்றெல்லாம் உணர்ச்சிவசப்பட்டுவிட்டார்) ஒரு நாப்கின் வாங்கிக்கொடுக்கத் துப்பற்றவனாடா இந்த மண்ணில் இருக்கிற தமிழன்?’’ என்று தொடங்கி முட்டாள்தனமாகவும், எதிர்க்கட்சியின் குடும்பப் பெண்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அநாகரிகமாகவும் பேசுகிறார்.

பெண்களின் மாதவிடாயை பேசாப் பொருளாக வைத்திருப்பதை மாற்றி, மாதவிடாயை இயல்பாக எதிர்கொள்ள பெண்களையும், ஆண்களையும், குடும்பத்தையும், சமூகத்தையும் தயார் செய்துகொண்டிருக்கும் ஆரோக்கிய மாற்றங்கள் நடந்துகொண்டிருக்கும் காலம் இது. ஆனால், நாம் தமிழர் கட்சி வேட்பாளரோ 10, 20 வருடங்கள் பின்னால் சென்று நின்றுகொண்டு, குய்யோ முறையோ என்று கதறுகிறார்.

`நாப்கின் வாங்கிக் கொடுக்கக் துப்பற்றவனா..?’ என்று கேட்கும் அந்தத் தமிழ்த் தம்பிக்கு, சுருக்கமாகப் பதில் அளிப்போம். இந்தியாவில் 20% பெண்களுக்கே நாப்கின் பயன்படுத்தும் பொருளாதார சூழல் வாய்த்துள்ளது. 80% பெண்களுக்கு அந்த வாய்ப்பு இன்னும் கிடைக்கவில்லை. துணி மட்டுமல்லாது சாக்கு, வைக்கோல், மண் என்று மாதவிடாயைக் கையாள பெண்கள் உள்ளாகும் துயரங்கள் நினைத்துப்பார்க்க முடியாதவை. மாதவிடாய் சுகாதாரமின்மையால் அவர்களுக்கு ஏற்படும் உடல்நலப் பிரச்னைகள் ஏராளம்.

பெண்களின் இந்த முக்கியப் பிரச்னைக்கான தீர்வை நோக்கித்தான் மத்திய அரசு ஒரு ரூபாய்க்கு நாப்கின் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்தியாவில் பல மாநிலக் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளிலும் இலவச நாப்கின் திட்டம் இடம்பெற்றிருக்கிறது. பெண்களுக்கு இலவச நாப்கின் திட்டத்தை உலகின் முதல் நாடாக ஸ்காட்லாந்து சென்ற வருடம் அறிவித்துள்ளது.

நாப்கின்
நாப்கின்

இது எதைப் பற்றியுமே அறியாத, மாதவிடாய் நாள்களில் `பெண்கள் கோயிலுக்குச் செல்லக் கூடாது என்பதைத் தவிர(!), அது பற்றிய எந்த அறிவும், விழிப்புணர்வும் இல்லாத அந்தத் தமிழ்த் தம்பி, `என் வீட்டுப் பெண்களுக்கு நீ எப்படி நாப்கின் கொடுக்கலாம்?’ என்று கூப்பாடு போடுகிறார். பெண்களின் அரசியல் பகிர்வுக்காக 50% பெண் வேட்பாளர்களை நிறுத்தும் நாம் தமிழர் கட்சியின் ஆண் வேட்பாளர், எதிர்க்கட்சியைச் சேர்ந்த குடும்பப் பெண்களை கீழ்மைப்படுத்தும் நோக்கோடு குறிப்பிட்டுப் பேசுகிறார். இதுதான் உங்கள் கட்சியின் பெண்கள் நீதியா? இதைப் பற்றியெல்லாம் `செந்தமிழன்' சீமான் தட்டிக் கேட்கவே மாட்டார் எனில், அந்தக் கட்சி பெண்களின் மீது வைத்திருக்கும் மரியாதை என்ன?

ஒரு நிறுவனம் தன் ஊழியர்களை அடுத்த நிலைக்கு அப்டேட் செய்ய அதற்கான வொர்க்‌ஷாப்களை நடத்துகிறது. பள்ளிகளுக்கு இடையேயான, கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகளில் கலந்துகொள்ளச் செல்லும் மாணவர்களுக்கு, அதற்கான அறிவுரைகளை சொல்லி அழைத்துச் செல்கிறார்கள் ஆசிரியர்கள். இவ்வளவு ஏன்... பக்கத்து வீட்டுக்கு விளையாடச் செல்லும் குழந்தைகளிடம்கூட, `அங்க சேட்டை செய்யக்கூடாது, எதையும் தொடக் கூடாது, யாரையும் மரியாதை இல்லாம பேசக் கூடாது’ என்று சொல்லி அனுப்புகிறோம்.

எனில், அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களையும் பேச்சாளர்களையும் தேர்தல் களத்துக்கு அனுப்பும் முன் குறைந்தபட்சம் தங்கள் கட்சியின் கொள்கைகளையாவது அவர்களுக்கு விளக்கிப் பயிற்றுவிக்க வேண்டாமா?
அதைச் செய்யாததால்தானே பெண்களின் முன்னேற்றத்துக்கான கட்சியாக தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் தி.மு.கவின் பேச்சாளர் பெண்களின் இடுப்பு பற்றி நகைச்சுவை சொல்கிறார்; பெண்களுக்கு 50% அரசியல் பகிர்வு தரும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர், பெண்களுக்கு எப்படி நீங்கள் இலவச நாப்கின் கொடுக்கலாம் என்று குதிக்கிறார். இன்னும் ஒவ்வோர் ஊரிலும் களைகட்டிவரும் மற்ற மற்ற கட்சிகளின் அரசியல் மேடைகளை கவனித்தாலே தெரியும் அவர்களின் அறியாமை.

தமிழகத்தில் இந்தக் காட்சிகள் என்றால், மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் அடிபட்ட காலுடன் சக்கர நாற்காலியில் அமர்ந்து கலந்துகொண்டு வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தாவை, பெர்முடா போடச் சொல்லியிருகிறார் மாநில பி.ஜே.பி தலைவர் திலிப் கோஷ். `அவர் காலில் ப்ளாஸ்டரை அகற்றிவிட்டு, மெலிதான பேண்டேஜ் போட்டிருக்கிறார். ஒரு காலை மூடியபடியும், ஒரு காலை காட்டியபடியும் புடவை அணிந்திருக்கிறார். இப்படி ஒரு ஃபேஷனில் புடவை அணிந்து நாம் யாரையும் பார்த்ததில்லை. அவர் தன் காலை காட்ட எண்ணினால், புடவைக்கு பதிலாக பெர்முடா அணிந்துகொள்ளட்டும். அப்போது காலை பார்ப்பதற்கு ஏதுவாக இருக்கும்‘ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Mamata Banerjee
Mamata Banerjee

மேற்கு வங்க மாநிலத்தில் வரலாற்று வெற்றியைப் பெற்ற அரசியல் தலைவராக இருந்தாலும், முன்னாள் மத்திய அமைச்சர், முன்னாள் முதல்வராக இருந்தாலும், சட்டமன்றத் தேர்தலில் உங்களுக்குக் கடுமையான போட்டி கொடுத்துக்கொண்டிருக்கும் அரசியல் கட்சித் தலைவராக இருந்தாலும்... மம்தாவை ஒரு பெண்ணாகவே சுருக்கி, சிறுமைப்படுத்திப் பார்க்கிறார் திலிப் கோஷ். அவரை பெர்முடா அணியச் சொன்னதன் மூலமாக தன் ஆணாதிக்கத்தை நிறைவுசெய்து கொள்கிறார், சமூகத்தின் ஆணாதிக்கத்துக்குத் தீனி போடுகிறார்.

ஆக, வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என்று எல்லா திக்கிலும், அறிவு போதாமையுடன் அரசியல் களத்தில் தள்ளாடும் ஆண்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். தேர்தலில் உங்கள் கட்சி ஜெயிக்கலாம், தோற்கலாம்... ஆனால் நீங்கள் ஏற்கெனவே தோற்றுவிட்டீர்கள்!

- அவள்
#VoiceOfAval: இது பெண்களின் வாதத்தை பொதுச்சமூகத்தின் முன் வைக்கும் `அவளின் குரல்'. பெண்கள் பிரச்னைகளின் பேசாபொருளை மக்கள் முன் எடுத்துவைப்பதற்கான அவள் விகடனின் முன்னெடுப்பு!