Published:Updated:

பெண் விமானப் படை அதிகாரிக்கு இரு விரல் பரிசோதனை, உயர் அதிகாரிகளின் அலட்சியம்; வெளிவந்த அதிர்ச்சிகள்!

கோவையில் உள்ள இந்திய விமானப்படை பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றுவரும் 28 வயதான டெல்லியைச் சேர்ந்த பெண் அதிகாரி ஒருவரை அமித்தேஷ் என்கிற சக விமானப்படை அதிகாரி பாலியல் வன்கொடுமை செய்திருப்பது நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் உள்ள விமானப்படை பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றுவரும் 28 வயதான டெல்லியைச் சேர்ந்த பெண் அதிகாரி ஒருவரை அமித்தேஷ் என்கிற சக விமானப்படை அதிகாரி பாலியல் வன்கொடுமை செய்திருப்பது நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் பாதுகாப்புக்குத் துணை நிற்க வேண்டிய தார்மிகப் பொறுப்பும் கடமையும் உள்ள அதிகாரியே, சக பெண் அதிகாரியிடம் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டிருப்பதும், இந்த அத்துமீறலைத் தட்டிக் கேட்காமல் பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவப் பரிசோதனை என்கிற பெயரில் உளவியல் ரீதியாகத் துன்புறுத்திய சம்பந்தப்பட்ட விமானப்படை பயிற்சி மையத்தின் அணுகுமுறையும், இன்னும் எத்தனை காலம்தான் பெண்ணுக்குக் கிடைக்க வேண்டிய நீதி இப்படித் தடுக்கப்பட்டுக்கொண்டே இருக்கும் என்கிற மிகப்பெரும் கேள்வியை எழுப்புகிறது.

இந்திய விமானப்படை பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றுவரும் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் அதிகாரி கடந்த, 9-ம் தேதி கூடைப்பந்து பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது காலில் காயம் ஏற்பட அதற்காக வலி நிவாரணி மருந்தையும் உட்கொண்டிருக்கிறார்.

விமானப்படை - மாதிரி படம்
விமானப்படை - மாதிரி படம்

அன்று இரவு தன்னுடன் பயிற்சி பெறும் அமித்தேஷ் உட்பட சக அதிகாரிகளுடன் சேர்ந்து விமானப்படை பயிற்சி மையத்தில் உள்ள ஆபீஸர்ஸ் மெஸ் பாரில் மது அருந்தியிருக்கிறார். பிறகு அந்தப் பெண் அதிகாரிக்குத் தலை சுற்றலும் வாந்தியும் ஏற்பட்டிருக்கிறது. அப்போது அவருடன் வந்திருந்த இரண்டு நண்பர்கள் அவரை அழைத்துச் சென்று அவரது அறையில் விட்டுவிட்டுச் சென்றிருக்கின்றனர்.

இதையடுத்து அந்தப் பெண் அதிகாரியின் அறைக்குள் நுழைந்த அமித்தேஷ் அவரைத் தட்டி எழுப்பியிருக்கிறார். ஆனால், தான் உறங்க விரும்புவதாகவும் அதனால் அந்த அறையை விட்டு வெளியேறுமாறும் அந்தப் பெண் அதிகாரி அமித்தேஷிடம் சொல்லியிருக்கிறார்.

முதல்நாள் இரவு அறைக்குள் கொண்டுவந்துவிட்ட அந்தப் பெண் அதிகாரியின் நண்பர்களில் ஒருவர், மறுநாள் காலையில் அவரது அறைக்கு வந்து அப்பெண்ணை எழுப்பியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் முதல்நாள் இரவு அமித்தேஷ் அப்பெண்ணுடன் அந்த அறையில் இருந்ததாகவும் சொல்லியிருக்கிறார். அப்போதுதான் சூழ்நிலையின் தீவிரம் அந்தப் பெண்ணுக்கு விளங்கியிருக்கிறது. கூடவே அந்தப் பெண் அதிகாரியின் உடலில் இருந்த மற்ற அறிகுறிகள் அமித்தேஷால் அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆகியிருப்பதையும் உணர்த்தியிருக்கின்றன.

இதனால் கடும் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் அதிகாரி அமித்தேஷை சந்தித்து தனக்கு ஏற்பட்ட அநீதி குறித்துக் கேட்டிருக்கிறார். ஆனால், அமித்தேஷிடமிருந்து அலட்சியமான பதிலே வந்திருக்கிறது.

இந்நிலையில் தன் நண்பருடன் சேர்ந்து தங்களது உயர் அதிகாரிகளைச் சந்தித்து தனக்கு ஏற்பட்ட அநீதி குறித்துப் புகார் அளித்திருக்கிறார் அந்தப் பெண் அதிகாரி. ஆனால், `புகாரைக் கொடுப்பதற்கு முன்பாக உன் குடும்பத்தையும், உன் குடும்ப மரியாதையையும் கொஞ்சம் யோசித்துப் பார்’ என்று அந்த உயரதிகாரிகளில் ஒருவரான பெண் விங் கமாண்டர் பேசியது அதிர்ச்சியின் உச்சம்.

Sexual Harassment (representational image)
Sexual Harassment (representational image)
கோவை:பெண் அதிகாரி பாலியல் புகார்; லெப்டினன்ட் கைது!-விமானப்படைப் பயிற்சிக் கல்லூரியில் நடந்தது என்ன?

இதன் அடுத்தகட்டமாக உயரதிகாரிகளில் இருவர், பாதிக்கப்பட்ட அந்தப் பெண் அதிகாரியை மீண்டும் அழைத்திருக்கின்றனர். ஒன்று, இது குறித்து தங்களிடம் அவர் புகார் அளிக்கலாம், அப்படியில்லையென்றால் பரஸ்பரம் இருவரின் சம்மதத்துடன் இந்த உறவு நடந்தது என்று எழுத்து மூலம் தெரிவிக்கலாம் என்று உயரதிகாரிகள் அப்பெண் அதிகாரியிடம் சொல்லியிருக் கின்றனர்.

இதையடுத்து அப்பெண் அதிகாரி, அமித்தேஷ் மீது புகார் கொடுத்திருக்கிறார். இந்தப் புகாரை அடிப்படையாகக்கொண்டு பெண் அதிகாரிக்கு விமானப்படை மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனையும் நடந்திருக்கிறது. அந்த மருத்துவப் பரிசோதனையின்போது அவரது பிறப்புறுப்பிலிருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் அப்பெண் அதிகாரி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாரா என்பதைக் கண்டறிய அவருக்கு, சட்டத்தால் தடை செய்யப்பட்ட, கன்னித்தன்மையைக் கண்டறிய உதவுவதாக நம்பப்படும், `இருவிரல் பரிசோதனை'யும் நடந்திருக்கிறது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக அப்பெண் அதிகாரியின் கடந்தகால பாலியல் வரலாறு குறித்தும் மருத்துவர்கள் அநாகரிமாகக் கேள்வி கேட்டிருக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஏற்கெனவே, தனக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமையால் கடும் அதிர்ச்சியைச் சந்தித்திருந்த அந்தப் பெண் அதிகாரி, விமானப்படை உயர் அதிகாரிகள் கொடுத்த நெருக்கடி மற்றும் விமானப்படை மருத்துவர்களின் சட்டத்துக்கு எதிரான மருத்துவ அணுகுமுறை போன்றவற்றால் மேலும் உடைந்துபோனார். இனியும் இப்படியே விட்டால் தனக்கான நீதி கிடைக்காது என்று முடிவுசெய்த அவர் கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் தனக்கு ஏற்பட்ட அநீதி குறித்துப் புகார் செய்ய, இதையடுத்தே விமானப்படை அதிகாரி அமித்தேஷ் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.

இது ஒருபுறமிருக்க விமானப்படை மருத்துவமனையில் பெண் அதிகாரிக்கு நடத்தப்பட்ட இருவிரல் பரிசோதனைக்கு தேசிய மகளிர் ஆணையம் தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.

sexual harassment (representational image)
sexual harassment (representational image)
பணியிடத்தில் பாலியல் கொடுமை: விமானப்படை அதிகாரிக்கே இதுதான் நிலை; நீங்கள் தேசத்துக்குப் பாதுகாப்பா?

`ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா என்பதைக் கண்டறியச் செய்யப்படும் இருவிரல் பரிசோதனை அறிவியலுக்குப் புறம்பானது என்பதால் இதை இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் 2014-ம் ஆண்டிலேயே தடை செய்துவிட்டது. அப்படியிருக்க பெண் விமானப்படை அதிகாரிக்கு இந்தச் சோதனையை நடத்தியிருப்பது உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மீறும் ஒரு செயல்' என்று கண்டித்திருக்கும் தேசிய மகளிர் ஆணையம் இந்திய விமானப்படை தலைமைத் தளபதிக்கு இது குறித்த நோட்டீஸ் ஒன்றையும் அனுப்பியுள்ளது.

இதற்கிடையில் முப்படைகளில் ஒன்றான விமானப்படையைச் சேர்ந்த அதிகாரியின் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் காவல்துறைக்கு இல்லை என்றும், எனவே இவ்வழக்கை விமானப்படைக்கு மாற்ற வேண்டும் என்றும் அமித்தேஷ் தரப்பு வழக்கறிஞர் வாதிட இதையடுத்து கோவை கூடுதல் மகளிர் நீதிமன்றத்தின் பொறுப்பு நீதிபதி இவ்வழக்கு விசாரணையை இந்திய விமானப்படைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.

பெண்கள் அளிக்கும் பாலியல் புகார்கள் ஆண்மைய அதிகாரத்தால் அலட்சியப்படுத்தப்படும் விதம், சட்டமே தடை செய்த கன்னித்தன்மையை பரிசோதனை இந்திய விமானப்படை மருத்துவமனையிலேயே மேற்கொள்ளப்பட்டிருப்பது, பாலியல் குற்றம் சாட்டப்பட்டவரை பாதுகாப்பது போல, விசாரணையை இந்திய விமானப்படைக்கு மாற்றியிருப்பது என, இவ்வழக்கின் ஒவ்வொரு நிலையும் கண்டனத்துக்கு உரியது. சாமானிய பெண்கள் மட்டுமல்ல, உயரதிகாரத்தில் இருக்கும் பெண்களும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளுக்கு நீதி கேட்டு நெடிய போராட்டமே நடத்த வேண்டியிருக்கிறது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு