Election bannerElection banner
Published:Updated:

அனுக்ரீத்தி வாஸ் முதல் ஐரின் வரை... ஜட்ஜ்மென்ட்களை உடைத்து சாதித்தது எப்படி? #StopJudgingWomen

அனுக்ரீத்தி வாஸ்
அனுக்ரீத்தி வாஸ்

சுதந்திரம் என்பது ஒரு முறை கிடைத்த காற்றாக இல்லாமல், நினைத்த நேரத்தில் பறக்க உதவும் சிறகாக இருக்க வேண்டும் என்பதே பெண்களின் எதிர்பார்ப்பு.

இந்தக் கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்பதற்கான Podcast இதோ...

ஆசைகள், கனவுகள், தேவைகள் என எல்லாவற்றையும் குடும்பம் என்னும் அன்புக்கூட்டுக்குள் அடக்கி, தானும் அடங்கி, சின்னச் சின்ன விஷயங்களுக்கும் சந்தோஷப்பட்டு, பெரிய கஷ்டங்களையும் எளிமையாகக் கடந்து போகும் பெண், மனதிடத்தில் நூறு ஆண்களுக்கு இணையானவள். அப்படிப்பட்டவர்களை வெளியில் சென்று தேட வேண்டாம். உங்கள் மனைவியாக, தோழியாக, அம்மாவாக, அக்காவாக உங்களின் நிழலாக நிற்பார்கள். வெளியுலகம் தெரியாதவள், நாட்டு நடப்பு தெரியாதவள் போன்ற உங்களின் பிற்போக்கான ஜட்ஜ்மென்ட்களையெல்லாம் புன்னகையில் கடந்து செல்வார்கள்.

பெண்
பெண்
இந்த மகளிர் தினத்தில் உரக்கச் சொல்ல வேண்டிய விஷயம் இதுதான்! #StopJudgingWomen #DontJudgeMe

எதற்கெடுத்தாலும் அழுகிறார்கள் என்பது பொதுவாக பெண்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு. ஆனால், அந்தக் கண்ணீர் இயலாமையின் வெளிப்பாடல்ல. மாற்றத்துக்கான ஏக்கம். மற்றவர்களின் விமர்சனங்களிலிருந்தும், ஜட்ஜ்மென்ட்களிலிருந்தும் மீண்டுவிட வேண்டும் என்ற எண்ணத்தில் சில நேரத்தில் தனக்குப் பிடிக்காத ஒன்றைக்கூட செய்து கொண்டிருப்பார்கள். விமர்சனங்களுக்கு பயந்து தன் கனவுகளை உரமாக்கி, உணர்ச்சியற்ற மரமாக மாறியிருக்கலாம். அதுவும் விமர்சனத்துக்கு உள்ளாகலாம். அப்படிப்பட்ட பெண்ணினத்தின் உணர்வுகளும், உண்மையான தேவைகளும் தெரியாத யாரும், பெண்ணியம் பற்றியும் பெண் சுதந்திரம் பற்றியும் பேச வேண்டாம்.

பெண்கள் யாரும், தங்களைத் தேவதைகளாகக் கொண்டாட வேண்டும் என்றோ, தங்களுக்கென வருடம் ஒரு நாளை கொண்டாட வேண்டும் என்றோ நினைப்பதில்லை. இந்த ஒரு நாள் மதிப்பளிப்பது, சமூகத்தில் எந்த மாற்றத்தையும் கொண்டு வராது என்பது இங்கு இருக்கும் ஒவ்வொரு பெண்ணும் உணர்ந்ததே. பெண்கள் உலகம் மாறிவிட்டது, பெண்கள் சுதந்திரமாக இயங்க இங்கு எந்தத் தடையும் இல்லை என்று பெருமையாகச் சொல்லிக் கொள்ளலாம். உண்மைதான். நீ வேலைக்குப் போக வேண்டாம் என்றோ, படிக்க வேண்டாம் என்றோ யாரும் பெண்களைத் தடை செய்வதில்லைதான். அடக்குமுறை என்னும் குகையிலிருந்து விடுபட்டு, விமர்சனக் கூட்டுக்குள் சிக்குண்ட கிளிகளாக மாறியவர்கள் இங்கு ஏராளம். அப்படிப்பட்ட பெண் இனத்துக்கு தேவை சுதந்திரமும் அல்ல. சுதந்திரம் என்பது ஒரு முறை கிடைத்த காற்றாக இல்லாமல், நினைத்த நேரத்தில் பறக்க உதவும் சிறகாக இருக்க வேண்டும் என்பதே பெண்களின் எதிர்பார்ப்பு. அக்கறை என்ற பெயரில் பிற்போக்குத்தனமாக ஜட்ஜ்மென்ட்களுக்கும் விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அந்த முற்றுப்புள்ளி அவர்களைச் சுற்றியிருக்கும் கூண்டை உடைத்து அவர்களுக்கான கோட்டையை நிச்சயம் உருவாக்கும்.

மகேஸ்வரி
மகேஸ்வரி

மனதில் நினைப்பதைப் பேசுபவள் திமிர் பிடித்தவள், குழந்தை பிறந்த பின்னும் வேலை முக்கியம் என்று செல்பவள் நல்ல அம்மா இல்லை, #MeToo கதைகள் சொல்பவளின் மீதும் தவறு இருக்கும், அலங்காரத்தில் அக்கறை கொண்டவள் குடும்பத்துக்கு ஏற்ற பெண் இல்லை... இப்படி பெண்கள் தங்களுக்காகச் செய்து கொள்ளும் ஒவ்வொன்றுமே ஜட்ஜ்மென்ட் செய்யப்படும்போது, அவர்களை அறியாமலேயே அவர்களின் எல்லை சுருங்குகிறது. இவையெல்லாம் தடைகள் இல்லை, கண்ணுக்குத் தெரியாத அநியாயங்கள். `வீக்கர் செக்ஸ்' பட்டத்தை உடைத்து, ஆண்களுக்கு இணையாகப் பயணிக்கத் தொடங்கியவர்களை, ஜட்ஜ்மென்ட் என்ற வட்டத்துக்குள் மீண்டும் அடைக்கிறது சமூகம்.

இன்று எழுத்தில் உங்களிடம் இதைப் பற்றி பேசும் பத்திரிகைத் துறை பெண்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல. பெரும்பாலும் பத்திரிகை துறை சார்ந்து இயங்கும் பெரும்பாலான பெண்களிடம் வைக்கப்படும் முதல் கேள்வி, பார்க்க பத்திரிகையாளர் மாதிரியான தோற்றத்தில் இல்லையே, நாங்கள் கொடுக்கும் தகவல்களைச் சரியாக எழுதி விடுவீர்களா என்பதுதான். திறமைக்கும் தோற்றத்துக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? லிப்ஸ்டிக் பூசி, ஃப்ரீ ஹேர், ஜீன்ஸ் டி-ஷர்ட் அணிபவர்கள்தாம் பத்திரிகையாளராக இருக்க வேண்டும் என்று என்ன அவசியம் இருக்கிறது? வசதி கருதி இந்தத் தோற்றத்தில் இயங்கும் பெண்களும் இருக்கிறார்கள், மறுப்பதற்கில்லை. ஆனால், எண்ணெய்யில் படிந்த தலை, துப்பட்டா, நெற்றியில் குங்குமம் வைத்திருப்பவள் பத்திரிகைத் துறையிலோ, எழுத்துத் துறையிலோ பயணிக்கக் கூடாதா? அப்படி மாடர்ன் டிரெஸ்ஸில் இருப்பவர்களையும் `பத்திரிகைத் துறையில் இருந்துகிட்டு எப்படி டிரெஸ் பண்றாங்க?' என ஜட்ஜ் செய்கிறார்கள். திறமையை விட வெளித் தோற்றத்துக்கு முக்கியத்துவம் தரப்படுவதுதான் உண்மையில் வேதனைக்குரியது.

அனுக்ரீத்தி வாஸ்
அனுக்ரீத்தி வாஸ்

`மிஸ் இந்தியா' பட்டம் பெற்று தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்தவர் அனுக்ரீத்தி வாஸ். அவரிடம் பேசிய போது,

``நான் ஷார்ட் டிரெஸ் போடுறேன். பசங்க கூட பேசுறேன்னு சொல்லி, என் கேரக்டரை நிறைய இடங்களில் ஜட்ஜ்மென்ட் பண்ணிருக்காங்க. ஷார்ட் டிரெஸ்க்கும் கேரக்டருக்கும் என்ன சம்பந்தம்" என்று பகிர்ந்துகொண்டார்.

ஒரு பெண் அணியும் ஒவ்வோர் ஆடையும் எங்கோ ஒரு விதத்தில் ஜட்ஜ்மென்ட் செய்யப்படுகிறது. பாலியல் குற்றங்களுக்குக்கூட சம்பந்தப்பட்ட ஆண்களைக் குறை சொல்லாமல், பெண்களின் ஆடையைக் காரணம் சொல்வது சமூகத்தின் சாபக்கேடு மட்டுமல்ல, அடுத்தடுத்த குற்றங்களுக்கான காரணமும் அதுதான்.

பொதுவாக நகரத்தில் இருக்கும் பெண்கள்தாம் தைரியமாக இருப்பார்கள் என்று ஒரு கருத்து இருக்கிறது. அதை உடைக்கும் விதமாகச் செயல்படுபவர் அடிமுறைக் கலைஞர் ஐரின் செல்வராஜ். பட்டாசு படத்தில் சினேகாவுக்கு அடிமுறைக்கலை பயிற்சி வழங்கிய ஐரினை பாடி ஷேமிங் செய்தவர்கள் அதிகம். அதை உடைத்த விதம் பற்றி ஐரின் பேசியபோது, ``20 வருஷத்துக்கு முன்னாடி வெயிட் லிஃப்டிங்னா என்னனு கூட சாதரண மக்களுக்குத் தெரியாது. வெயிட் தூக்குனா குழந்தை பொறக்காது, ஆம்பளை மாதிரி மாறிருவனு ஏகப்பட்ட விமர்சனங்கள் என் மீது வைக்கப்பட்டுச்சு.

#stopjudgingwomen
#stopjudgingwomen

திறமை இருந்தும், பிடிச்ச விஷயத்தைச் செய்ய அத்தனை தடைகள். ஆனால், நான் சாதிச்சுருவேன்னு நம்பிக்கை மட்டும் எனக்குள் ஆழமாகப் பதிஞ்சுருந்துச்சு." ஐரின் செல்வராஜின் அந்த நம்பிக்கை இந்தியாவுக்கான பதக்கங்களைக் குவித்ததுடன், பல்வேறு பெண் அடிமுறைக் கலைஞர்கள் உருவாதற்கான காரணமாகவும் மாறியிருக்கிறது.

அடையாளத்துக்காகத் திருமணத்தை தள்ளிவைத்த சித்ரா ஐ.ஆர். ஏ.எஸ் பகிர்ந்தவை. ``என்னோட 21 வயசுலதான் சிவில் சர்வீஸ் தேர்வுக்குப் படிக்க ஆரம்பிச்சேன். 30 வயசு வரை திருமணம் பண்ணிக்கல. அதுக்காக என் மீது ஆயிரம் ஜட்ஜ்மென்ட்கள் வைக்கப்பட்டன. சிவில் தேர்வு பாஸ் பண்ணியதுக்கு அப்புறம் 30 வயதில் திருமணம் முடிஞ்சுது. லேட் மேரேஜ் பத்தி நான் கவலைப்படல. இன்னொருத்தரோட மனைவி, மகள்னு அடுத்தவரோட பெயரில் வாழாமல் எனக்குனு ஓர் அடையாளத்தை உருவாக்கியிருக்கேன். எண்ணங்களே ஏணியாக மாறும்" என்றார் சித்ரா.

#stopjudgingwomen
#stopjudgingwomen

இப்படி ஒவ்வொரு பெண்ணும் தன்னுடைய வெற்றிக்காக ஏதோ ஓரிடத்தில் ஜட்ஜ்மென்களை உடைத்தெறிய வேண்டியது அவசியமாகிறது. ஜட்ஜ்மென்ட்களுக்கு பயந்து கனவைத் தொலைத்த பெண்களும் இருக்கிறார்கள். போராடி களம் கண்டவர்களும் இருக்கிறார்கள். ஆனால், இது போன்ற வீண் விமர்சனங்கள் பெண்களைச் சோர்வடையச் செய்கின்றன என்பதே மறுக்க முடியாத உண்மை. மகளிர் தினத்தைக் கொண்டாடும் ஒவ்வொருவரும் ஜட்ஜ்மென்ட்களுக்கு முற்றுப் புள்ளி வையுங்கள். அதுவே பெண் உலகத்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு.

Vikatan

இவையெல்லாம் ஒரே நாளில் நிகழ்ந்துவிடும் மாற்றம் அல்ல. பெண்களும் விமர்சனங்களையும் ஜட்ஜ்மென்ட்களையும் புறக்கணிக்க வேண்டும். உங்களுக்காக ஓட ஆரம்பிக்கும்போது, விமர்சனங்கள் காணாமல் போகும். அடக்குமுறைகளை அழித்த நம்மால், விமர்சனங்களுக்கு நிச்சயம் முற்றுப் புள்ளி வைக்க முடியும். கை நீட்டி கேலி செய்த கரங்கள், உங்கள் வெற்றியில் கைகள் இணைத்து கரகோஷங்கள் கொடுக்கும். விமர்சனங்கள் வெற்றி முழக்கமாக நிச்சயம் மாறும். ஜட்ஜ்மென்ட்களை புறந்தள்ளி வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் உங்களுக்குப் பிடித்த மாதிரி வாழ ஆரம்பியுங்கள்.

தலை நிமிர்வோம். வானம் தலைகுனிந்து வாழ்த்தட்டும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு