தோனி, கோலிக்கு மட்டும் பாராட்டுகள் ஏன்... பேட்டர்னிட்டி என்பது ஆண்களுக்கு மட்டும் சாய்ஸா? #VoiceOfAval

தோனியையும் கொண்டாடினீர்கள், கோலியையும் கொண்டாடுகிறீர்கள்... பேட்டர்னிட்டி என்பது ஆண்களுக்கு மட்டும் சாய்ஸா?! #VoiceOfAval
சமீபத்தில், தன் டெலிவரி முடித்து சீரியலுக்கு மீண்டும் நடிக்க வந்திருந்தார் அந்த நடிகை. சீரியல் பார்வையாளர்கள் சிலர், அவரை ஏதோ ஒரு குற்றவாளிபோல பார்த்தார்கள். `புள்ளைய விட்டுட்டு அதுக்குள்ள நடிக்க வந்துட்டா', `எல்லாம் காசுதான் வேறென்ன' என்றெல்லாம் பேசினார்கள். நடிகைக்கு மட்டுமல்ல... எந்த வேலைக்குச் செல்லும் பெண்ணும் பிரசவத்துக்குப் பின் மீண்டும் தன் வேலையைத் தொடரும்போது இதுபோன்ற விமர்சனங்களை சந்தித்தே வருகிறாள்.
நம் சமூகம் குழந்தை என்பதை முழுக்க முழுக்க அம்மாவின் பொறுப்பாகவே பார்க்கிறது. அதனால்தான், பிரசவத்துக்குப் பின் வேலைக்குச் செல்லும் பெண்களை அது மனதால் துன்புறுத்துகிறது, அவர்களுக்குக் குற்றவுணர்வை தருகிறது. நடுத்தர வயதில் தன் பணியில் முன்னேறிக்கொண்டிருக்கும் அவளை, `புள்ள முக்கியமா வேலை முக்கியமா?' என்ற கேள்வியைக் கேட்டு காலை முடக்கி வீட்டில் போடப்பார்க்கிறது.

இன்னொரு பக்கம், பல பணியிடங்களிலும் பிரசவித்த பெண்கள் மீதான இரக்கம் இருப்பதில்லை. ஆண்களால், ஆண்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த ஆண் மைய சமூகத்தில், இப்போது பெண்களின் உழைப்பும் நாட்டின் பொருளாதாரத்துக்குக் கைகொடுக்கும் அளவுக்கு முக்கியத்துவம் பெறத் தொடங்கிவிட்டது. என்றாலும், நேரம் காலம் பார்க்காமல் உழைக்க வேண்டி திருமணமாகாத பெண்களை வேலைக்கு எடுக்கவே முன்னுரிமை கொடுப்பது, ஐ.டி துறையில் கருவுறுவதற்கான வாய்ப்பு இருக்கும் புது மணப்பெண், இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்திருக்கும் தாய் என, இவர்களுக்கெல்லாம் புராஜெக்ட் தராமல் தவிர்த்துவிடுவது என்று, பெண்களின் கர்ப்பமும் பேறுகாலமும் நிறுவனங்களுக்குக் கெட்ட செய்தியாகவே இருக்கிறது.
தமிழகத்தில் அரசுத்துறையில் பணிபுரியும் பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை 2016-ம் ஆண்டு 9 மாதங்களாக உயர்த்தப்பட்டது. மத்திய அரசாங்க நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் மற்றும் நாட்டில் உள்ள அனைத்து முறைசார் பிரிவுகளிலும் உள்ள நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு, 6 மாதங்கள் வரை சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை 2017 முதல் அளிக்கப்படுகிறது.

`புதிய மகப்பேறு விடுப்புக் கொள்கையால் 18 லட்சம் பெண்களுக்கு வேலை கிடைக்காது’ என்று 2018-ல் எச்சரித்தது பிரபல வேலைவாய்ப்பு ஆலோசனை நிறுவனமான டீம்லீஸ் (TeamLease). இது தொடர்பாக விகடன் வலைதளத்தில் அப்போது மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கேட்பில், `மத்திய அரசின் புதிய மகப்பேறு சட்டத்தின் காரணமாக, பெண்களை பணிக்கு அமர்த்துவதை அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தவிர்க்கும் நிலை உருவாகுமா?' என்ற கேள்விக்கு, 73.5% பேர் `ஆம்' என்று பதிலளித்திருந்தனர்.
இதுதான் இங்கு நிலைமை. நிறுவனங்களுக்குப் பெண்களின் உழைப்பு வேண்டும். குடும்பங்களுக்குப் பெண் மூலம் குழந்தை வேண்டும். நிறுவனத்தைப் பொறுத்தவரை வேலைக்குச் செல்லும் பெண் குழந்தை பெற்றுக்கொள்ளக் கூடாது. குடும்பத்தை பொறுத்தவரை குழந்தை பெற்றுக்கொண்ட பெண் வேலைக்குச் செல்லக்கூடாது. இதில் பெண்ணைப் பொறுத்தவரை, தன்னைப் பொறுத்தவரை அவள் என்னதான் முடிவெடுப்பாள்?
இதில் இப்போது, அதிமுக்கியமான இன்னொரு கேள்வியை வைப்போம். குழந்தை என்பது அம்மாக்களின் பொறுப்பு மட்டுமா? அப்பாக்களுக்கு இதில் பங்கில்லையா? கிரிக்கெட் வீரர் விராட் கோலி, பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா தம்பதி, தங்கள் முதல் குழந்தையின் வருகை பற்றி கடந்த ஆகஸ்ட்டில் அறிவித்தனர். அப்போது, `Virat Kohli and Anushka Pregnant' என்று அந்தச் செய்திக்குத் தலைப்பு வைத்தவர்களை, `என்ன, கோலி கர்ப்பமா?' என்று கேலிசெய்து சிரித்தது நம் சமூகம். குழந்தைப் பொறுப்புகளில் ஆண்களின் பங்கை உணர்வதில் எந்தளவுக்கு நாம் பின்தங்கியிருக்கிறோம் என்பதற்கான சமீபத்திய உதாரணம் அது. தங்கள் குழந்தையின் வரவை `We are pregnant' என்று தம்பதிகள் அறிவிப்பதை வரவேற்கிறார்கள் குடும்பநல ஆலோசகர்கள். ஆனால், சிரிக்கிறார்கள் மக்கள்.

இப்படி, கர்ப்பகாலம், பேறுகாலம் என்பதையெல்லாம் பெண்ணின் ஒற்றை பொறுப்பாக அவள் தலையில் சுமத்தும் சமூகம்தான், அவள் பெற்றெடுக்கும் குழந்தைக்குத் தந்தையின் இனிஷியலை தூக்கிக்கொண்டு வருகிறது. கர்ப்பகாலத்திலும் பிரசவ நேரத்திலும் குழந்தையின் நலனுக்குத் துரும்பையும் கிள்ளிப்போடாத ஆண்கள் இங்கு கேள்விகேட்கப்படுவதே இல்லை. குழந்தை எடைகுறைந்து பிறந்தால், தாய்ப்பால் போதாமல் போனால், பச்சிளம் குழந்தைக்கு வயிற்றுக்கு சரியில்லாமல் போனால்... எல்லாவற்றுக்கும் தாயே குற்றவாளி.
இன்னொரு பக்கம், வேலை நிமித்தம் கணவன் பிரசவத்தின்போது மனைவியுடன் இருக்க முடியவில்லை என்றால், அவருடைய புரொஃபஷனலிசம் புகழப்படும். அவர் செலிபிரிட்டியாக இருந்தால், அவரின் `அர்ப்பணிப்பு' தலைப்புச் செய்தியாகக் கொண்டாடப்படும். 2015-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் உலகக் கோப்பை தொடங்குவதற்கு ஒரு வாரம் முன், கிரிக்கெட் வீரர் தோனிக்குப் பெண் குழந்தை பிறந்தது. அப்போது ஆஸ்திரேலியாவில் விளையாட்டுப் பயிற்சியில் இருந்த அவர், `இப்போது நான் தேசியக் கடமையில் இருக்கிறேன், எனவே மற்ற அனைத்தும் காத்திருக்கலாம்' என்று அளித்த பேட்டியால் ரசிகர்கள் மெய்சிலிர்த்தனர்.

இப்போது, ஜனவரியில் பிறக்கவிருக்கும் தன் குழந்தைக்காக, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து பேட்டர்னிட்டி (Paternity) விடுப்பு எடுத்து விராட் கோலி இந்தியா திரும்புகிறார். ஒரு தந்தையாகத் தன் சராசரி கடமையைச் செய்ய வரும் அவர், `வாட் எ மேன்' என்று கொண்டாடப்படுகிறார்.
ஆக, ஆண்கள் தங்கள் குழந்தை மகப்பேறின்போது உடன் இல்லையென்றாலும் கொண்டாடப்படுகிறார்கள், உடன் இருந்தாலும் போற்றப்படுகிறார்கள். அது அவர்களுக்கு ஒரு சாய்ஸாக இருக்கிறது. பெண்களுக்கு இறக்கி வைக்க முடியாத சுமையாக இருக்கும் குழந்தை கடமைகளில் கிடைப்பதெல்லாம் மனஉளைச்சலும் குற்றவுணர்வும்தான்.
`இப்படியெல்லாம் தியாக உருவாக இருப்பவள்தான் சிறந்த அம்மா, அது தன்னிகரில்லாத ஓர் உன்னத உணர்வு' என்று தாய்மையை ரொமான்ட்டிசைஸ் செய்வதை நிறுத்தி, அப்பாக்களின் கைகளும் குழந்தைகளின் டயப்பரை சுத்தம் செய்யலாம் என்று தந்தைமையை செயலுக்குக் கொண்டுவருவது எப்போது?
- அவள்
#VoiceOfAval Podcast வடிவிலும் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இந்தக் கட்டுரையை Podcast-டாக கேட்கவும், சேனலை சப்ஸ்கிரைப் செய்யவும் கீழே உள்ள பட்டனை க்ளிக் செய்யவும்.
இது பெண்களின் வாதத்தை பொதுச்சமூகத்தின் முன் வைக்கும் `அவளின் குரல்'. பெண்கள் பிரச்னைகளின் பேசாபொருளை மக்கள் முன் எடுத்துவைப்பதற்கான அவள் விகடனின் புதிய முன்னெடுப்பு!