Published:Updated:

காவல் நிலையங்களே பெண்களுக்கு பாதுகாப்பானதில்லையா... திருப்பூர் சம்பவம் சொல்வது என்ன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நவீனா, அம்பிகா (இருவரின் பெயரும் மாற்றப்பட்டுள்ளது)
நவீனா, அம்பிகா (இருவரின் பெயரும் மாற்றப்பட்டுள்ளது) ( என்.ஜி.மணிகண்டன் )

மதுரை, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஆட்சியரிடம் மனு கொடுக்கத் தன் தோழி நவீனாவுடன் வந்த அம்பிகாவின் வாக்குமூலம், மாநிலத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

``பெண்கள் தங்களைத் தற்காக்கும் முனைப்பில் கொலையே செய்திருந்தாலும்கூட, சட்டப்படி அது தற்காப்பு செயலாகவே கருத்தப்படும்... குற்றமாகாது. மதுரையைச் சேர்ந்த பெண்களுக்கு பதில் சொல்ல காவல்துறையும் சட்டமும் கடமைப்பட்டிருக்கிறது'' என்கிறார், நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர் சீதா.

மதுரை, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஆட்சியரிடம் மனு கொடுக்கத் தன் தோழி நவீனாவுடன் வந்த அம்பிகாவின் (இருவரின் பெயரும் மாற்றப்பட்டுள்ளது) வாக்குமூலம், மாநிலத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

``பெற்றோர் பிரிந்து சென்றதால் திருப்பரங்குன்றத்தில் என் பாட்டியுடன் வசித்து வந்தேன். ப்ளஸ் டூ முடித்தவுடன், பல்லடத்திலுள்ள கார்மென்ட்ஸில் வேலைக்குச் சேர்ந்தேன். வேலைபார்த்துக்கொண்டே அஞ்சல் வழியில் டிகிரி படித்தேன். வேலை செய்யுமிடத்தில் மேனேஜர் சிவகுமார் எனக்கு பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்தார். என் படங்களை மார்ஃபிங் செய்து, `நான் சொல்லும் இடத்துக்கு வர வேண்டும், இல்லாவிட்டால் அந்தப் படங்களை சமூக ஊடகத்தில் வெளியிட்டு விடுவேன்' என்று மிரட்டினார்.

இதற்கு முடிவு கட்ட, என் தோழி நவீனாவுடன் அவர் வரச்சொன்ன இடத்துக்குச் சென்றேன். எங்களிடம் தவறாக நடக்க முயன்ற சிவகுமாரின் கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவி, கயிற்றால் கட்டிப்போட்டோம். பின்பு போலீஸுக்குத் தகவல் கொடுத்தோம்.

காவல் நிலையத்துக்குச் சென்ற பின்பு, பல்லடம் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ ஆகியோர் சிவகுமாருடன் சேர்ந்துகொண்டு எங்களிடம் வெற்றுத்தாளில் மிரட்டி கையெழுத்து வாங்கி, நீதிமன்றத்துக்குக் கொண்டு சென்றனர். அங்கு எதுவும் பேசக் கூடாது என்று எங்களை மிரட்டினர். எங்களைச் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டபோது அதிர்ந்துபோனோம்.

எங்களைத் தற்காத்துக்கொண்டதைத் தவிர வேறு எந்தத் தவறும் செய்யாத நாங்கள் சிறையில் இருந்துவிட்டு, தற்போது ஜாமீனில் வெளியில் வந்துள்ளோம். நிபந்தனை ஜாமீனில் கையெழுத்துப் போடச் சென்றபோது, மேனேஜர் சிவகுமார் அடியாட்களுடன் வந்து தாக்கி, எங்களைக் காவல் நிலையத்துக்குச் செல்ல முடியாத வகையில் தொந்தரவு செய்தார். வெளியில் எங்கும் செல்ல முடியாத வகையில் மிரட்டினார். பலவகையிலும் எங்களை டார்ச்சர் செய்து, பொய் வழக்கு பதிவு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காகத்தான் கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம்'' என்றார் அம்பிகா பத்திரிகையாளர்களிடம்.

இந்தச் சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய வழக்கறிஞர் சீதா, ``இந்தியாவில் அனைத்து அரசுத் துறைகளை கண்காணிக்கவும் அதிகாரிகள் இருக்கிறார்கள். அந்தத் துறைகளில் எல்லாம், பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய செயல்படுபவர்கள் மிகக்குறைவே என்பது வேதனை. மதுரை பெண்கள் சம்பவத்தில் அது உறுதியாகியுள்ளது.

மதுரையைச் சேர்ந்த, பாதிக்கப்பட்ட பெண்கள் இருவரும், தங்களைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்க நினைத்த மேனேஜருக்கு எதிராகப் போராடினார்களே தவிர, குற்றம் எதுவும் செய்யவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில் பெண்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் முனைப்பின்போது கொலைசெய்ய நேர்ந்தாலும்கூட அது தற்காப்புக்கான செயலாகவே கருதப்படும். ஆனால், அவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

அம்பிகா
அம்பிகா

இந்திய தண்டனைச் சட்டத்தில் பிரிவுகள் 96 - 106, தற்காப்பு உரிமைகள் பற்றிய விளக்கங்களை அளிக்கின்றன. ஆணோ, பெண்ணோ... தற்காப்புக்காக எதிராளியைக் கொலைசெய்வது குற்றமல்ல என இந்தப் பிரிவுகள் குறிப்பிடுகின்றன. இதில், பிரிவு 100 ஆண்கள் பெண்களைக் கொலை செய்யும் நோக்கில் தாக்கும்போது, பாலியல் ரீதியாகத் தாக்கும்போது, கடத்திச் செல்ல முற்படும்போது, உதவிகளற்றுப்போன நிலையில் பெண்கள் தங்கள் தற்காப்பு உரிமைகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம். அந்தத் தற்காப்பு முயற்சியில் எதிராளி ஆண் உயிரிழந்தாலும் அது குற்றமாகாது என்று கூறப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சட்டத்தின் வரையறை இப்படியிருக்க, தங்கள் பாதுகாப்புக்காகத் தற்காப்பில் ஈடுபட்ட பெண்களின் மீது காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது கண்டனத்துக்கு உரியது. காவல் நிலையம் பெண்களுக்கான இடமாக இல்லை என்பதற்கு, இந்தச் சம்பவம் சமீபத்திய உதாரணமாகியிருக்கிறது. அதிலும் ஒரு பெண் காவல் அதிகாரியே இரண்டு அப்பாவிப் பெண்களின் மீது பொய் வழக்கு சோடித்திருப்பது, அதிர்ச்சி, அநீதி. அந்தப் பெண் ஆய்வாளர், அப்பாவிப் பெண்களை சிறைக்கு அனுப்பும் அளவுக்கான கூட்டுச் சதியை, அந்தப் பெண்கள் குற்றம் சுமத்தும் நபருடன் சேர்ந்துகொண்டு செய்திருக்கிறார்.

காவல் நிலையங்களே பெண்களுக்கு பாதுகாப்பானதில்லையா... திருப்பூர் சம்பவம் சொல்வது என்ன?

காவல் நிலையங்களில் உண்மையை புறந்தள்ளிவிட்டு, எந்தத் தரப்பினரிடம் எவ்வளவு பணம் கிடைக்கும் என்று கணக்குப்போடும் காக்கிகளால், எளியவர்களுக்கு சட்டம் எட்டாக் கனியாகிவிடுகிறது. மேலும், பாதிக்கப்பட்டு புகார் அளித்த பெண்களின் மீதே எதிர்விளைவு செலுத்தப்பட்ட இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பெண்கள் மீதான புகார்களில், உண்மைத் தன்மை ஆராயப்பட வேண்டும்.

`பெப்பர் ஸ்பிரே வெச்சுக்கோ', `தைரியமா குரல் கொடு', `ஸ்பீக் அப்', `தேவைப்பட்டால் தாக்கு' என்றெல்லாம் இதுவரை பெண் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுத்து வந்தோம். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, `நீங்கள் கற்றுக்கொடுத்த தைரியத்துக்குப் பரிசு இதுதானா?' என்று திருப்பிக் கேட்கும் பெண்களின் அறச்சீற்றத்துக்கு காவல்துறையும் நீதித்துறையும் பதிலளிக்க வேண்டும்'' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு