Published:Updated:

ஆபாசமாகப் பேசுவது, போட்டோ மார்ஃபிங், அச்சுறுத்துவது... இப்படி உங்கள் மகளுக்கு நேர்ந்தால் இதைச் செய்யுங்கள்!

சைபர் ஸ்டாக்கிங்?

காதலின் பேரில் பெண்களை மிரட்டுவது தொடங்கி அமிலவீச்சு வரை அண்மைக்கால ஸ்டாக்கிங் குற்றங்கள், சமூகத்தில் ஏற்படுத்திய அதிர்வுகள் மிக அதிகம். தற்போது #CyberStalking-ம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்துவருகிறது. இதிலிருந்து நம் பிள்ளைகளைக் காப்பது எப்படி?

ஆபாசமாகப் பேசுவது, போட்டோ மார்ஃபிங், அச்சுறுத்துவது... இப்படி உங்கள் மகளுக்கு நேர்ந்தால் இதைச் செய்யுங்கள்!

காதலின் பேரில் பெண்களை மிரட்டுவது தொடங்கி அமிலவீச்சு வரை அண்மைக்கால ஸ்டாக்கிங் குற்றங்கள், சமூகத்தில் ஏற்படுத்திய அதிர்வுகள் மிக அதிகம். தற்போது #CyberStalking-ம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்துவருகிறது. இதிலிருந்து நம் பிள்ளைகளைக் காப்பது எப்படி?

Published:Updated:
சைபர் ஸ்டாக்கிங்?

வழக்கம்போல அன்றைக்கும் ஃபேஸ்புக் பார்த்துக்கொண்டிருக்கிறார் ஷீலா. திடீரென ஒரு மெசேஜ் வருகிறது; அதுவும் அறிமுகமற்ற ஒரு நபரிடமிருந்து. தயக்கத்துடன் இன்பாக்ஸ் திறக்கிறார். கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. அந்த மெசேஜில் வந்தது அவரின் நிர்வாணப் படம். அது தன்னுடையதல்ல என்றும், வெறுமனே கணினியில் மார்ஃபிங் செய்யப்பட்டது என்பதும் ஷீலாவுக்கு நன்றாகவே தெரியும். அவரின் குழப்பமெல்லாம், 'யார் இதை அனுப்பியது, எதற்காக இவர் எனக்கு அனுப்புகிறார்?' என்பதே. அடுத்த சில நிமிடங்களில் அதற்கும் விடை கிடைக்கிறது. அதை அனுப்பிய நபரே மேற்கொண்டு பேசுகிறார். "நான் சொல்வதையெல்லாம் நீ கேட்கவில்லையென்றால், இந்தப் படத்தை ஃபேஸ்புக்கில் பரப்பிவிடுவேன்" என மிரட்டுகிறார். 17 வயதில் இப்படி ஒரு விஷயம் நடந்தால் அந்தப் பெண்ணின் மனம் எந்த அளவுக்குப் பதறும்... ஷீலாவுக்கும் அப்படித்தான் இருந்தது.

Cyber Stalking
Cyber Stalking

ஃபேஸ்புக்கில் அந்த நபரை பிளாக் செய்யலாமா, ஃபேஸ்புக் அக்கவுன்ட்டை டிஆக்டிவேட் செய்துவிடலாமா என்றெல்லாம் உள்ளுக்குள் சிந்தனைகள் ஓடுகின்றன. தாமதிக்காமல் இந்த விஷயத்தையெல்லாம் தன் அப்பாவிடமும் விவரிக்கிறார். விபரீதம் புரிந்த அவர், உடனடியாக விவகாரத்தை காவல்துறையிடம் கொண்டுசெல்கிறார். ராஜஸ்தான் மாநிலத்தின் உதய்பூர் காவல் நிலையத்துக்கு புகார் செல்கிறது. ஆனால், அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, ஷீலாவின் மீதே பழி சுமத்துகிறார் காவல்துறை அதிகாரி.

"உங்களை யார் சொந்த போட்டோக்களை சோஷியல் மீடியாவில் ஷேர் செய்யச்சொன்னது? அதையெல்லாம் உடனே டெலிட் செய்யுங்கள். பிள்ளைகளுக்கு அதிகமான சுதந்திரம் கொடுத்தால் இப்படித்தான் நடக்கும்!" என்பது அன்றைக்கு அவர் கொடுத்த எக்ஸ்ட்ரா அட்வைஸ். சரி, இங்குதான் இப்படியென சைபர் கிரைமுக்கு சென்றால், "இதுகுறித்து நாங்கள் துப்புதுலங்கவே 25 நாள்கள் ஆகும்" எனச் சொல்லிவிட்டார்கள். இப்படி ஒவ்வொரு இடத்திலும் பாதிக்கப்பட்ட ஷீலாதான் இங்கு மீண்டும் மீண்டும் துன்பப்படுகிறார். இதையடுத்து இந்த விவகாரத்தை சமூக வலைதளத்தில் விரிவாகப் பதிவு செய்கிறார் ஷீலாவின் சகோதரி. விஷயம் வைரலாகவே, உடனே மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் உதவ முன்வருகிறது. இதில் ஷீலா என்ற பெயரைத் தவிர மற்ற அனைத்து சம்பவங்களுமே உண்மை.

சேலத்தில் ஒரு பெண்ணின் படத்தை ஆபாசமாக சித்திரித்து வெளியிட்டு, இறுதியில் அந்தப் பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகத்தையே அதிரச்செய்தது.

அந்தப் புகாரில் தமிழக காவல்துறை நடந்துகொண்ட விதமும் அனைவரும் அறிந்ததே. இதேபோல் யாரோ முகம் தெரியாதவர்களால் பெண்கள் இணையத்தில் மிரட்டப்பட்ட எத்தனையோ சம்பவங்களை இங்கே உதாரணமாகக் கூறமுடியும். சில ஆண்டுகள் முன்புவரைக்கும் பெண்களை நேரடியாகத் தொந்தரவு செய்தவர்கள், இன்று இணையத்தின் பின்னால் ஒளிந்துகொண்டு மறைமுகமாக மிரட்டிக்கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் ஆண்டுதோறும் ஸ்டாக்கிங் தொடர்பான புகார்கள் அதிகரித்தவண்ணமே உள்ளன.

உதாரணமாக, 2014-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டுவரைக்கும் மட்டும் இந்தியாவில் பதிவுசெய்யப்பட்ட ஸ்டாக்கிங் தொடர்பான வழக்குகள் 18,097.

2014 - 4,699

2015 - 6,266

2016 - 7,132

Source: Ministry of Home Affairs.

Legal Issues in Stalking C
Legal Issues in Stalking C

இதில் விசாரணை பெற்று தண்டனை பெற்றவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. இதற்கு காரணம், நம்முடைய விசாரணை மற்றும் சட்ட அமைப்பில் உள்ள குறைகள்தான்.

தொடரும் சட்ட சிக்கல்கள்

2013-ம் ஆண்டு வரைக்கும் இந்தியாவில் 'ஸ்டாக்கிங்' என்ற வார்த்தைக்கு சட்ட வடிவமே கிடையாது. அது சட்டத்தில் இடம்பெற்றதே பெரிய கதை. ஆரம்பத்தில், பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தில் உருவாக்கப்பட்ட இந்திய தண்டனைச் சட்டத்தில், ஸ்டாக்கிங் தொடர்பான எந்தவொரு விஷயமும் இடம்பெறவில்லை. மாறாக, பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் அவர்களுக்குக் களங்கம் ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கும் வகையிலான பிரிவு 354 மற்றும் பிரிவு 509 ஆகியவை மட்டுமே இருந்தன. அதன்பிறகு, 2000-ம் ஆண்டு உருவான இந்தியத் தகவல்தொழில்நுட்ப சட்டத்திலும் ஸ்டாக்கிங் தொடர்பான அம்சங்கள் ஏதுமில்லை.

2013-ல்தான் குற்றவியல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டு, 'ஸ்டாக்கிங்' முதன்முதலாக, பிரிவு 354D-யின் கீழ் குற்றமாக அறிவிக்கப்பட்டது.

பதிலாக, இணையம் மூலம் தகவல்களைத் திருடுவது, ஆள்மாறாட்டம் செய்வது, ஆபாசத் தகவல்களை அனுப்புவது, தனிநபர் அந்தரங்கத்தைப் படம்பிடிப்பது போன்ற விவரங்கள் மட்டுமே இடம்பெற்றன. 2013-க்கு முன்னர் வரை ஸ்டாக்கிங் தொடர்பான குற்றங்களுக்கு இந்திய தண்டனைச் சட்டம் 354, 509, இந்தியத் தகவல் தொழில்நுட்ப சட்டம் 66E, 67 போன்ற பிரிவுகளில்தான் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. பின்னர், ஸ்டாக்கிங் தொடர்பான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, 2013-ல்தான் குற்றவியல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டு, 'ஸ்டாக்கிங்' முதன்முதலாக, பிரிவு 354D-யின் கீழ் குற்றமாக அறிவிக்கப்பட்டது.

இப்போது வரை இருக்கும் நடைமுறை இதுதான். ஆனால், இதிலும் சிக்கல் என்னவெனில், இந்தப் பிரிவு 354D என்பது ஜாமீனில் வரக்கூடிய பிரிவு. இதுவும் 'ஸ்டாக்கிங்' தொடர்பாகப் புகார் அளிப்பதற்கு பெரும் சிக்கலாகத் தொடர்கிறது. எனவே, ஸ்டாக்கிங்கில் ஈடுபடுபவர்கள், ஜாமீனில் வெளிவரமுடியாதபடி சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கை. ஆனால் மத்திய அரசு, இதுவரைக்கும் செவிசாய்க்கவில்லை. இதனை வலியுறுத்துவதற்காக, 2018-ம் ஆண்டு அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி மாநில அரசு, சட்டசபையிலேயே தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியது. அதில் இந்த ஜாமீன் விஷயம் தாண்டி மேலும் சில விஷயங்களையும் குறிப்பிட்டிருந்தது டெல்லி அரசு. அதில் முக்கியமானவை இரண்டு.

சைபர் ஸ்டாக்கிங்
சைபர் ஸ்டாக்கிங்

முதலாவது, இதுவரை சட்டத்தில் பெண்களுக்கெதிரான ஸ்டாக்கிங் குற்றங்களுக்கு மட்டுமே தண்டனை வழங்கும்படி இருக்கிறது; அதில் ஆண்களையும் திருநங்கைகளையும் சேர்க்க வேண்டும். இரண்டாவது, சட்டத்தில் இணையம்மூலம் நடக்கும் ஸ்டாக்கிங் மீது நடவடிக்கை எடுப்பதற்கு வழியில்லை. அதற்கும் சேர்த்து திருத்தம் செய்ய வேண்டும். இப்படியாக, சைபர் ஸ்டாக்கிங்கிற்கு எதிராகவும் தெளிவாகக் குரல் கொடுத்திருக்கிறது டெல்லி அரசு. சரி, சட்டத்தில் இவ்வளவு சிக்கல்கள் இருப்பதெல்லாம் இருக்கட்டும். ஸ்டாக்கிங்கை பெற்றோர்கள் எப்படிக் கையாள்கின்றனர்... இந்த ஸ்டாக்கிங்கை எப்படிப் புரிந்துகொள்வது?

ஒரு பெண்ணின் விருப்பமின்றி ஒரு ஆண் அவரைத் தொடர்ந்து பின்தொடர்வதோ, அவருக்கு அச்சுறுத்தல் ஏற்படும்படியான நடவடிக்கைகளில் ஈடுபடுவதோ, அவரை எதற்கேனும் கட்டாயப்படுத்துவதோ, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்ச்சியாக அவருக்கு தொல்லைகள் கொடுப்பதோ சட்டப்படி குற்றமாகும். இந்த செயல்கள்தான் ஸ்டாக்கிங் என அழைக்கப்படுகிறது. சட்டத்தின் வார்த்தைகளைவிடவும், நேரடி உதாரணங்கள் மூலம் சொன்னால் இன்னும் எளிதாகப் புரியும். உதாரணமாக ஒரு ஆண், ஒரு பெண்ணைத் தொடர்ந்து தன்னைக் காதலிக்கச் சொல்லி வற்புறுத்தினால், பணம் கேட்டு மிரட்டினால், அதற்காக தொடர்ந்து மிரட்டல் விடுத்தால், செல்லும் இடமெல்லாம் நின்று பிரச்னை செய்தால், வெவ்வேறு வழிகளில் உளவுபார்த்தால் அதெல்லாம் ஸ்டாக்கிங்தான்.

இதுவே ஃபேஸ்புக் மூலம் தொடர்ந்து அந்தப் பெண்ணின் விருப்பமின்றியும் அவரோடு பேசிக்கொண்டே இருந்தால், பேசச்சொல்லி கட்டாயப்படுத்தினால், அந்தப் பெண்ணின் புகைப்படங்களை மார்ஃபிங் செய்து மிரட்டினால், ஆபாசமாகத் திட்டினால், போலி அக்கவுன்டகள் மூலம் தொந்தரவு செய்தால், அவையெல்லாம் ஸ்டாக்கிங்கிற்கு கீழ்வரும்.

இந்த ஃபேஸ்புக் ஒரு சிறு உதாரணம்தான். இன்றைய தொழில்நுட்ப உலகில் ஒருவருக்கு சைபர் ஸ்டாக்கிங் செய்ய எத்தனையோ வழிகள் இருக்கின்றன. இந்த ஸ்டாக்கிங் குற்றங்களில் இருக்கும் பெரிய பிரச்னை, முதலில் அதன் ஆபத்தை உணராமல் இருப்பது. பலரது வீடுகளிலும் இதுபோல இணையம் மூலம், போன் மூலம் தொந்தரவு வந்தால் அவற்றை அலட்சியமாகக் கடந்துவிடுவதும் அல்லது சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும்தான் குற்றவாளிகளுக்கு சாதகமாகிறது. அடுத்தது, இந்தக் குற்றங்களைப் புரிந்துகொள்ளும் தன்மை.

குடும்பத்தில் ஒரு பெண் ஸ்டாக்கிங் தொடர்பாக பாதிக்கப்பட்டிருப்பதாகப் பெற்றோர்களிடமும் சொன்னால் அவர்களிடமிருந்து ஆறுதலுக்குப் பதில், அரவணைப்புக்குப் பதில் ஏமாற்றமே கிடைக்கிறது. குற்றஞ்சாட்டும் பெண்கள் மீதே பெற்றோர் குற்றம்சாட்டும் சிக்கலும் இருக்கிறது. குறிப்பாக பள்ளி படிக்கும் பெண்கள் பல இடங்களில் இதனால் கல்வியை இடைநிறுத்தம் செய்யும் அவலமும் நிகழ்கிறது. இதுவே அந்தப் பெற்றோர் சொந்த மகளையே குறைசொல்லாமல், அவர்களோடு உதவிக்கு நின்றால் அதன் விளைவே வேறுமாதியிருக்கும்.

Cyber Stalking
Cyber Stalking

இதற்கடுத்த பிரச்னை, காவல்துறை போன்ற விசாரணை அமைப்புகள் ஸ்டாக்கிங் குறித்த புகார்களைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அலட்சியம் செய்வது. சேலம் மாணவி சம்பவத்தில் இதுதானே நடந்தது? இப்படி அரசிடமும், பெற்றோரிடமும் என இரண்டு தரப்பிலும் சிக்கல்கள் இருக்கின்றன. இதில் ஒரு பெற்றோராக நீங்கள் என்ன செய்யவேண்டும்?

இந்த ஸ்டாக்கிங் பிரச்னை, இன்று பெண்களுக்கு மட்டுமில்லை. ஆண்களுக்குமே இருக்கிறது. ஆனால், அது எவ்வளவு என்பதற்கான சரியான புள்ளிவிவரங்கள் நம்மிடம் இல்லை. இதுவே பெண்களுக்கு எதிரான ஸ்டாக்கிங் குற்றம் எனும்போது, ஆண்களே அதற்கு காரணமாக இருக்கின்றனர். எனவே இங்கே ஸ்டாக்கிங்கை எப்படி கையாள்வது என்ற பயிற்சி பெண் பிள்ளைகளுக்கு மட்டுமல்ல; எதெல்லாம் ஸ்டாக்கிங், எதெல்லாம் செய்யக்கூடாது எனத் தெரிந்துகொள்வதற்கான பயிற்சி ஆண் பிள்ளைகளுக்கும் தேவைப்படுகிறது. அவர்கள்தானே நாளைய சமுதாயத்தில் இங்கே நடமாடப்போகிறார்கள்?!

பெற்றோர்களின் ஆதரவு
பெற்றோர்களின் ஆதரவு

ஸ்மார்ட்போனும், இணையமும் தவிர்க்கவே முடியாத இந்தக் காலகட்டத்தில் நம்மிடம் இருக்கும் ஒரே வழி, அவற்றை சரியாகப் புரிந்துகொள்வதுதான். எனவே இணையத்தின் அத்தனை சிக்கல்களையும் அவர்களிடம் உரிய நேரத்தில் சொல்லி வளர்ப்பதுதான், அதிலிருந்து வரும் பிரச்னைகளிலிருந்து தப்பித்துக்கொள்ள தீர்வாக இருக்கும். இதற்காக தனியாகவெல்லாம் பாடம் எடுக்கவேண்டாம். இணைய குற்றங்கள் தொடர்பான செய்திகள் வரும்போதெல்லாம், அவைகுறித்து பிள்ளைகளிடம் அவ்வப்போது உரையாடினாலே போதும். இதெல்லாம் குற்றங்கள், எப்படியெல்லாம் ஏமாற்றப்படுகிறார்கள், பாதிக்கப்படுகிறார்கள் போன்றவற்றைப் புரிந்துகொள்வர். அதுபோன்ற சம்பவங்கள் தங்கள் வாழ்வில் நடக்கும்போது என்ன செய்யவேண்டும் என்பதையும் அவர்களே கற்றுக்கொள்வர்.

அடுத்தது, பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இருக்கும் இடைவெளி. என்ன பிரச்னை வந்தாலும், நம் பெற்றோர்கள் நம்மோடு இருப்பார்கள், நமக்காகத்தான் பேசுவார்கள் என்ற நம்பிக்கை பிள்ளைகளிடம் வரவேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு பிரச்னைகள் வரும்போது தைரியமாக அவர்கள் உங்களிடம் அதை எடுத்துவருவார்கள். கூடி ஆலோசித்து தீர்வுகாணமுடியும். ஸ்டாக்கிங் போன்ற தொல்லைகளின்போது குடும்பம் அளிக்கும் ஆதரவுதான், அவர்களுக்கான அருமருந்து. அதை எந்த சூழ்நிலையிலும் மறந்துவிட வேண்டாம்.

அடுத்தது, சட்டரீதியாக கையாள்வது. உங்களின் பிள்ளைகள் யாரேனும் சைபர் ஸ்டாக்கிங்கால் பாதிக்கப்படுகிறார் எனில், தயங்காமல் காவல்துறையிடம் எடுத்துச்சென்றுவிடுங்கள். இதற்காக காவல்நிலையம்கூட செல்லவேண்டாம். தகுந்த ஆதாரங்களுடன் இணையம் மூலமாக, சைபர் கிரைமில் புகார் பதிவுசெய்துவிடலாம். அந்தப் புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என நீங்கள் கருதினால், தேசிய மகளிர் ஆணையத்திடமும் புகார் அளிக்கலாம். எனவே, உங்கள் பிள்ளைகள் என்றேனும், இப்படிப்பட்ட பிரச்னையை எதிர்கொள்ள நேர்ந்தால் அந்த அன்பையும், அரவணைப்பையும் மட்டும் அளிக்காமல் இருந்துவிடாதீர்கள்!