Published:Updated:

`விமானப்படை பெண் அதிகாரிக்கு இரு விரல் பரிசோதனை நடத்தவில்லை!' - விமானப்படைத் தலைமைத் தளபதி மறுப்பு

தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டேனா, இல்லையா என்பதைக் கண்டறிய தனக்கு விமானப்படை மருத்துவமனையில், கன்னித்தன்மை பரிசோதனையான `இரு விரல் பரிசோதனை' நடந்ததாக பாதிக்கப்பட்ட பெண் குறிப்பிட்டுள்ளது மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சக விமானப்படை அதிகாரியால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் அதிகாரிக்கு, தடை செய்யப்பட்ட இருவிரல் பரிசோதனை நடைபெறவில்லை என்று இந்திய விமானப்படைத் தலைமைத் தளபதி தெரிவித்துள்ளார்.

கோவை, விமானப்படை பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றுவரும் 28 வயதான டெல்லியைச் சேர்ந்த பெண் அதிகாரி ஒருவரை, அமித்தேஷ் என்கிற சக விமானப்படை அதிகாரி பாலியல் வன்கொடுமை செய்தது நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

Woman (Representational Image)
Woman (Representational Image)
Pixabay
பணியிடத்தில் பாலியல் கொடுமை: விமானப்படை அதிகாரிக்கே இதுதான் நிலை; நீங்கள் தேசத்துக்குப் பாதுகாப்பா?

தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டேனா, இல்லையா என்பதைக் கண்டறிய தனக்கு விமானப்படை மருத்துவமனையில், `கன்னித்தன்மை பரிசோதனை'யான இரு விரல் பரிசோதனை நடந்ததாக பாதிக்கப்பட்ட பெண், தனது முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக வெளியான செய்தி, மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

குறிப்பாக, பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நடத்தப்பட்ட இரு விரல் பரிசோதனைக்கு தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்த தேசிய மகளிர் ஆணையம், இப்பரிசோதனை அறிவியலுக்குப் புறம்பானது என்பதால் ஏழு ஆண்டுகளுக்கு முன்பே இச்சோதனையை இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் தடை செய்துவிட்டது என்றும், ஆனால் இத்தடையை மீறி பெண் அதிகாரிக்கு நடத்தப்பட்ட பரிசோதனை ஏற்புடையது அல்ல என்றும் இந்திய விமானப்படை தலைமைத் தளபதிக்கு நோட்டிஸ் அனுப்பியது.

பாலியல் வன்கொடுமை தந்த துயரம் ஒருபுறம் என்றால், மறுபுறம் விமானப்படை அதிகாரிகளாலேயே தான் மன உளைச்சலைச் சந்தித்தகாவும் பெண் அதிகாரி புகார் கூறியிருந்தார். தனக்கு நிகழ்ந்த இந்தச் சம்பவம் தொடர்பாக புகார் எதுவும் அளிக்கக்கூடாது என்று உயரதிகாரிகள் தனக்கு நெருக்கடி அளித்ததாகவும், மிரட்டியதாகவும் அவர் கூறியிருந்தார்.

ஆனால் இந்தச் சம்பவத்தில் திடீர் திருப்பமாக, சக அதிகாரியால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண் அதிகாரிக்கு விமானப்படை மருத்துவமனையில் இரு விரல் பரிசோதனை நடைபெற்றதாக வந்த தகவலை இந்திய விமானப்படைத் தளபதி விவேக் ராம் சவுத்ரி மறுத்துள்ளார்.

விமானப்படை (மாதிரி படம்)
விமானப்படை (மாதிரி படம்)

`பெண் அதிகாரிக்கு நடந்தது போன்ற குற்றங்களுக்கு இந்திய விமானப்படையின் சட்டங்கள் மிகக் கடுமையானவை. அதேபோல பெண் அதிகாரிக்கு இரு விரல் பரிசோதனை நடத்தப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் உண்மைக்குப் புறம்பானது. எனவே இந்தச் சம்பவம் குறித்த விசாரணை அறிக்கை கிடைத்தவுடனேயே தேவையான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என்று விமானப்படைத் தளபதி தெரிவித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு