Published:Updated:

``போட்டோவுக்கு போஸ் மட்டும் கொடுங்க, சாப்பிடக் கூடாது!''- கர்ப்பிணிகளுக்கு நேர்ந்த அவலம்

சாதமும் முட்டையும் மட்டுமே கொண்ட உணவுப் பார்சல்கள் அவர்கள் கைகளில் அளிக்கப்பட்டு, வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

கர்ப்பிணிகள்
கர்ப்பிணிகள்

`வயித்துப்புள்ளக்காரிய பார்க்கவெச்சுட்டு சாப்பிடக் கூடாது', `வயித்துப்புள்ளக்காரி ஏதாச்சும் சாப்பாட்டைப் பார்த்து ஏங்கினா புள்ளைக்கு காதுல சீழ் வடியும்' என்றெல்லாம் சொல்லக் கேட்டிருப்போம் கிராமப்புறங்களில். உண்மையில், அது அவர்களுக்கு நல்உணவும், நாவுக்கு ருசியான உணவும் கிடைக்கப்பெற வேண்டும் என்பதன் அடிப்படையில் சொல்லப்படும் சொற்கள். ஆனால், தட்டு நிறைய நளபாக உணவு வகைகளுடன் கர்ப்பிணிகளை நிற்கவைத்து புகைப்படம் மட்டும் எடுத்துவிட்டு, அவர்களை அதைத் தொடக்கூட அனுமதிக்காமல் அனுப்பியுள்ளனர் வங்காள அரசு அலுவலர்கள் என்று `டெலிகிராஃப்' தெரிவித்துள்ளது.

உணவு
உணவு

மேற்கு வங்க மாநிலம், நாடியா மாவட்டத்தின் சாந்திப்பூரில் அரசு சார்பாக ஊட்டச்சத்து தினம் கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக 20 கர்ப்பிணிகள் அழைத்துவரப்பட்டனர். கர்ப்பகாலத்தில் சத்துணவு எடுத்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த முனைந்த அலுவலர்கள், அறுசுவை உணவுகள் நிரம்பிய தட்டை ஏற்பாடு செய்திருந்தனர். சாதம், பருப்பு, நான்கு வகைக் காய்கறிகள், பயறு, முட்டை, இனிப்பு என அனைத்தும் அதில் இருந்தன. அதற்குப் பின் நடந்ததுதான் கொடுமை.

கர்ப்பிணிகளை வரிசையில் நிற்கவைத்து, ஒருவர் பின் ஒருவராக உணவு வகைகள் நிரம்பிய தட்டுடன் புகைப்படம் எடுக்கப்பட்டது. அந்தப் பெண்கள் தங்களுக்கு அந்த உணவு வழங்கப்படவிருக்கிறது என்று சாப்பிட எத்தனித்தபோது, அந்த தட்டை கர்ப்பிணிகள் தொடக் கூடாது என்றும், அது மாதிரிக்காக மட்டுமே வைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டனர். தொடர்ந்து, சாதமும் முட்டையும் மட்டுமே கொண்ட உணவுப் பார்சல்கள் அவர்கள் கைகளில் அளிக்கப்பட்டு, வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

ஊட்டச்சத்து
ஊட்டச்சத்து

கலந்துகொண்ட கர்ப்பிணிகளில் ஒருவரான மௌமிதாவின் கணவர், தன் மனைவியும் மற்ற பெண்களும் அரசு நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட மனிதாபிமானமற்ற விதம் குறித்து சாந்திப்பூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்க, அதன் பின்னரே இது பற்றி வெளியே தெரியவந்திருக்கிறது. `நான் இப்போது ஏழு மாத கர்ப்பிணி. அதிகாரிகள் எங்களை நடத்திய விதத்தைப் பார்த்து அதிர்ந்த நான், அவர்கள் அளித்த உணவுப் பொட்டலத்தை பெற்றுக்கொள்ளவில்லை' என்று கூறியிருக்கிறார் மௌமிதா. அவருடன் இணைந்து மற்ற கர்ப்பிணிகளும் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர்.

`ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத் திட்டம் (Integrated Child Development Services - ICDS)' என்ற திட்டத்தின் கீழ், அதே நாளில் மாநிலங்களின் பல பகுதிகளிலும் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளிடம் காணப்படும் ஊட்டச்சத்து பற்றாக்குறை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், அனைத்து அங்கன்வாடி நிலையங்களிலும் கர்ப்பிணிகளுக்கு அரசு சத்துணவு வழங்கும் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை நாளாகவும் அது அமைந்தது.

அந்தப் பெண்கள் அந்த உணவு தங்களுக்குதான் என்று சாப்பிட எத்தனித்தபோது, அந்தத் தட்டை கர்ப்பிணிகள் தொடக் கூடாது என்றும், அது மாதிரிக்காக மட்டுமே வைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்திருந்தனர்.

சாந்திப்பூரில் அது சம்பந்தப்பட்ட அலுவலர்களால் இப்படி கண்டிக்கத்தக்க வகையில் நடத்தப்பட, மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஷஷி பஞ்சா, `இது குறித்து விசாரிக்கப்படும்' என்று அறிவித்துள்ளார்.

வெளிச்சத்துக்கு வரும் குற்றங்கள் விசாரிக்கப்படும் என்று அறிவிக்கப்படுவது சம்பிரதாயம்தானே?