Published:Updated:

கொரோனா யுத்தத்தில் வெற்றி... உலகையே அசர வைத்த 7 பெண் ஆட்சியாளர்கள்!

பெண் பிரதமர்கள்
பெண் பிரதமர்கள்

இந்தநாடுகள் அனைத்தும் சிறப்பாகச் செயல்பட்டிருப்பதன் பின்னணியில் இருப்பது பெண்கள். பெண்கள் எந்தத் துறையிலும் மிகச் சிறப்பாகச் செயல்படுவார்கள் என்று மீண்டும் மீண்டும் உலகுக்கு உணர்த்திக்கொண்டே இருக்கிறார்கள்.

பெண்களுக்கும் அரசியலுக்கும் வெகுதூரம் என்று கூறுபவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்திருக்கிறார்கள் ஜெர்மனி, பின்லாந்து, ஐஸ்லாந்து, நியூசிலாந்து, தைவான், நார்வே மற்றும் டென்மார்க் ஆகிய ஏழு நாடுகளின் பெண் ஆட்சியாளர்கள்.

உலகமே கொரோனா நோய்த்தொற்று பரவுவதை எவ்வாறு தடுப்பது என்று திகைத்துபோய் இருக்க, மேற்கண்ட ஏழு நாடுகளும் மிகக் குறைந்த இறப்புகளுடன் கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றிப்பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறன. சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கையாண்டிருப்பதே அதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. இந்த ஏழு நாடுகளில் மிகச் சிறப்பாக இந்த நோய்த் தொற்று பரவுவதைத் தடுத்திருப்பது ஜெர்மனி. இதற்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுவது, அதிகப்படியான பொதுமக்களை பரிசோதனைக்கு உட்படுத்தியதுதான். அதற்கு இந்த நாடு எடுத்திருக்கும் நடவடிக்கை வித்தியாசமானது. கொரோனா டாக்சி, எனப்படும் டாக்சிகளில் மருத்துவர்கள் பாதுகாப்பு கவசங்களுடன், நகரங்களின் தெருக்களில் உலா வருகிறார்கள். ஆரம்பக்கட்டத்தில் பாதிக்கப்பட்டிருப்போர் வீடுகளுக்குச் சென்று பரிசோதிக்கின்றனர். அதன் பின்னர் நிலைமையைக் கருத்தில் கொண்டு மருத்துவமனையில் சேர்க்க வேண்டுமா இல்லையா என்பதைக் கூறுகிறார்கள்.

கொரோனா பாதிப்பு
கொரோனா பாதிப்பு

ஜெர்மனியில் இதுவரை 1,295 பேர் இறந்திருந்தாலும், இறப்பு சதவிகிதம் மிகவும் குறைவு. இத்தாலியில் இறப்பு சதவிகிதம் 12, ஸ்பெயின், பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளில் இறப்பு சதவிகிதம் 10, சீனாவின் இறப்பு சதவிகிதம் 4 என்று இருக்கையில் ஜெர்மனியில் மட்டும் 1.4 சதவிகிதம் என்ற அளவில் உள்ளது. இந்தக் குறைவான இறப்பு சதவிகிதத்துக்குக் காரணமாகச் சொல்லப்பட்டது முன்னெச்சரிக்கையாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதன நடவடிக்கைகள்தான். அதேபோல, மற்ற நாடுகளில் பாதிக்கப்படுவர்களின் சராசரி வயது 60 - 62 என்று இருக்கும் நிலையில் ஜெர்மனியில், பாதிக்கப்படுவோரின் சராசரி வயது 49 ஆக இருப்பதும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. வயதானவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதில்லை என்பதாலும் இறப்பு விகிதம் அதிகம் இல்லை என்று கூறப்படுகிறது.

ஒரு வாரத்தில் மட்டும் ஜெர்மனியில் சுமார் 3,50,000 மக்கள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். ''இது போன்று ஆரம்ப நிலையிலே நோய்த்தொற்று கண்டறியப்படுவதால் சீக்கிரமே அதைக் குணப்படுத்தவும் முடிகிறது. இது தென் கொரியாவிடமிருந்து கற்றுக்கொண்ட பாடம்'' என்று கூறுகிறார்கள் ஜெர்மனியைச் சேர்ந்த சுகாதார அதிகாரிகள்.

ஏஞ்செலா மெர்கல்
ஏஞ்செலா மெர்கல்

இந்த எல்லா முடிவுகளுக்கும் நடவடிக்கைகளுக்கும் பின்னால் இருப்பது, ஜெர்மனியின் அதிபர் ஏஞ்செலா மெர்கல்தான் (Angela Merkel). உடனடியாக ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியதில் தொடங்கி, சமூக இடைவெளியைப் பின்பற்ற மக்களை வலியுறுத்தியதுவரை இவரின் அதிரடி நடவடிக்கைகளும் மக்கள் இவர்மீது வைத்திருக்கும் நம்பிக்கையும்தான் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

அடுத்தபடியாக பின்லாந்து. இந்தநாடு கொரோனா தொற்றில் இருந்து, தங்களைத் தற்காத்துக்கொள்வதற்கு அதிக அளவிலான மருத்துவ சாதனங்களுடன் தயாராக இருக்கிறது. நாடுகள் பல, பாதுகாப்புக் கவசங்கள் மற்றும் மருத்துவ சாதனங்கள் இன்றி தவிக்கும் நிலையில் பின்லாந்து இவை எல்லாவற்றையும் தேவைக்கு அதிகமாகவே வைத்திருக்கிறது. 'கோல்டு வார்' முடிந்த பின்னர் மருத்துவ சாதனங்களை பெரும் அளவில் சேகரித்து வைக்க ஆரம்பித்தது பின்லாந்து. இரண்டாம் உலகப்போருக்கு அடுத்து இப்போதுதான் இந்தக் கையிருப்பில் இருந்து சாதனங்களைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது. இந்தக் கையிருப்புகள் எங்கு இருக்கிறது என்பது குறித்து ரகசியம் காக்கப்படுகிறது.

சன்னா மரின்
சன்னா மரின்

இப்போது வரை 59 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மிகத் தீவிரமான பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது பின்லாந்து. இந்தநாட்டின் பிரதமர் சன்னா மரின் (Sanna Marin), சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்ததால் பின்லாந்தின் நோய் பரவுவதை வெற்றிகரமாகக் குறைத்துள்ளார்.

உலகின் மகிழ்ச்சியான நாடான இது, பேரிடர் காலத்திலும் தகுந்த தற்பாதுகாப்புடன் இருந்து நிலைமையைக் கூலாகக் கையாள்கிறது. இள வயது பிரதமரான சன்னா, கொரோனா தொடர்பான விழிப்புணர்வை சமூக வலைதளங்களில் மிகத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். அவர் மட்டுமல்லாமல், சமூக வலைதள பிரபலங்களின் மூலமாகவும் மக்களுக்குச் செய்தியைக் கொண்டு சேர்க்கிறார். தவறான செய்திகளைப் படித்து மக்கள் அச்சம் கொள்ளாமல் இருக்கவும் இது பயன்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

இதுபோலவே நார்வே பிரதமர், எர்னா சோல்பெர்க்கின் (Erna Solberg) நடவடிக்கைகளும் உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. இவர் தொலைக்காட்சி மூலம் அந்நாட்டு குழந்தைகளுடன் ஒரு கலந்துரையாடல் நடத்தியுள்ளார். முற்றிலுமாகப் பெரியவர்கள் இல்லாத இடத்தில் சிறுவர், சிறுமியர்களைக் கொண்ட ஒரு சந்திப்பாக அது இருந்தது. அவர்களின் கேள்விகளுக்குப் பொறுமையாகப் பதிலளித்த எர்னா, பயப்படாமல் இருக்கவும் அறிவுரை வழங்கி வருகிறார். நாட்டில் என்ன நடக்கிறது என்பதே மக்கள் விழி பிதுங்கியிருக்கும் நிலையில் பல நாடுகள் இருக்கையில் இவரின் இந்த முயற்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

எர்னா சோல்பெர்க்
எர்னா சோல்பெர்க்

தைவானின் ஜனாதிபதியான சாய் இங்-வென் (Tsai Ing-Wen) நடவடிக்கைகள் முற்றிலும் வேறுபட்டவையாக இருந்தன. ஊரடங்கு உத்தரவு ஏதுவும் இன்றி ஜனவரி மாதத்திலேயே நோய் பரவலைத் தடுப்பதற்கு 124 விதிமுறைகளை வலியுறுத்தினார். இந்த 124 விதிமுறைகளில் பயணத் தடை, சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், பாதிக்கப்பட்டவர்களை வீட்டில் தனிமைப்படுத்துதல் போன்ற பல விஷயங்கள் இருந்தன. அதனால் இன்று வரை வெறும் 6 பேர் மட்டுமே உயிரிழந்திருக்கின்றனர். நோய் பாதிப்பும் வெகுவாகக் கட்டுக்குள் இருக்கிறது.

சாய் இங்-வென்
சாய் இங்-வென்

இது மட்டுமன்றி, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு 10 மில்லியன் முகக் கவசங்களை அனுப்பியிருக்கிறார் சாய் இங்-வென். தைவானின் மக்கள் தொகை ஆஸ்திரேலியாவைப் போலவே 24 மில்லியன் கொண்டது. ஆனால், ஆஸ்திரேலியாவில் 56 பேர் இறந்திருக்க, தைவானில் வெறும் 6 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். மற்ற நாடுகளுக்கு 'தைவான்' கூறும் அறிவுரை யாதெனில், ``வேகமாகச் செயல்படவில்லை என்றால் அதன் விலை, மக்களின் உயிராகவே இருக்கும்“ என்பதுதான்.

`அவங்க கடையில பொருள் வாங்கினால் கொரோனா வரும்..?!’ -இஸ்லாமியர்களுக்கு எதிராக வதந்தி பரப்பியவர் கைது

பெண் பிரதமர்களில் மேலும் சிறப்பாகச் செயல்பட்டு வருபவர், நியூசிலாந்து பிரதமர், ஜெசிந்தா ஆர்டர்ன் (Jacinda Ardern). இந்தநாட்டில் 6 பேர் பாதிக்கப்பட்டபோதே ஊரடங்கைப் பிறப்பித்து, 'அது ஏன் பிறப்பிக்கப்பட்டது, அதற்கான கட்டாயம் என்ன' என்பதை மக்களுக்கு எடுத்துரைத்து சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். இதையடுத்து, வெளிநாட்டவர்கள் நியூசிலாந்து வருவதற்கு முற்றிலுமாகத் தடை விதித்தார். ஊரடங்கு செயல்பாட்டுக்கு வருவதற்கு முன்னர் மக்கள் தயாராக, 48 மணி நேரம் கால அவகாசம் கொடுத்துள்ளார். அப்போதைய நிலையில் 102 பேர் பாதிக்கப்பட்டிருந்தார்கள் என்றாலும் வேகமாகச் செயல்படுவது அவசியம் என்று இம்முடிவை எடுத்துள்ளார் ஆர்டர்ன். நியூசிலாந்தில் இன்று வரை 4 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெசிந்தா ஆர்டர்ன்
ஜெசிந்தா ஆர்டர்ன்

சிறப்பாகச் செயல்பட்ட மற்றொரு நாடு ஐஸ்லாந்து. இந்நாட்டின் பிரதமர், கட்ரீன் ஜேகப்ஸ்டோட்டிர் (Katrín Jakobsdóttir), நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக வைரஸ் தொற்றுப் பரிசோதனை செய்துள்ளார். பல நாடுகள், அறிகுறி இருப்பவர்களுக்கு மட்டுமே பரிசோதனை செய்து வரும் நிலையில் ஐஸ்லாந்தின் இந்த முயற்சி, வெற்றிக்கு வழிவகுத்திருக்கிறது. இதுவரை தன் மக்கள் தொகையில் 10% மக்களுக்கு பரிசோதனை செய்துள்ளது ஐஸ்லாந்து. இது எந்த நாடுகளும் செய்யாத ஒன்றாகும். அமெரிக்கா ஒரு மில்லியன் மக்களில் 7,600 மக்களைப் பரிசோதித்திருக்க, ஐஸ்லாந்து 1,00,000 பேரைப் பரிசோதித்திருக்கிறது. மேலும் ஐஸ்லாந்து இந்த வைரஸ் குறித்த ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

கட்ரீன் ஜேகப்ஸ்டோட்டிர்
கட்ரீன் ஜேகப்ஸ்டோட்டிர்

டென்மார்க், கொரோனா உடனான போரில் வெற்றியை ருசித்திருக்கும் மற்றொரு நாடு. டென்மார்க் தற்போது ஊரடங்கில் இருந்து மெதுவாக வெளிவந்துகொண்டிருப்பதற்குக் காரணம் அந்நாட்டின் பிரதமர் மெட் பிரெட்ரிக்சனின் (Mette Frederiksen) தெளிவான நிர்வாகத் திறனே. இந்த நிலையில் இருந்து வெளிவருவது கயிற்றில் நடப்பது போல என்று கூறிய இவர், படிப்படியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த 15-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன.

மெட் பிரெட்ரிக்சன்
மெட் பிரெட்ரிக்சன்
www.indepthnews.net

இந்தநாடுகள் அனைத்தும் சிறப்பாகச் செயல்பட்டிருப்பதன் பின்னணியில் இருப்பது, பெண்கள். பெண்கள் எந்தத் துறையிலும் மிகச் சிறப்பாகச் செயல்படுவார்கள் என்று மீண்டும் மீண்டும் உலகுக்கு உணர்த்திக்கொண்டே இருக்கிறார்கள். இதில் அரசியல் எனும் துறையும் விதிவிலக்கல்ல என்பது தெளிவாகிறது. பல நாடுகள் நிலைமையைக் கையாளத் தெரியாமல் திணறிக்கொண்டு இருக்கும் வேளையில், பெண் பிரதமர்கள் உலகுக்கே வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நாடுகளில் மக்கள் தொகை அதிகம் இல்லை என்று கூறி இந்த வெற்றியை சாதாரணமாகப் புறக்கணித்து விட முடியாது. எந்த நாடும் எடுக்காத முயற்சிகளையும் நடவடிக்கைகளையும் இவர்கள் எடுத்துள்ளார்கள். தங்களது ஆளுமைத் திறனால் வேகத்துடன் செயல்பட்டு நிலைமை தீவிரமாகாமல் தடுத்திருக்கிறார்கள் இப்பெண் தலைவர்கள்.

அடுத்த கட்டுரைக்கு