Published:Updated:

சுதந்திர இந்தியாவில் பெண்களுக்காக கொண்டுவரப்பட்ட சிறந்த சட்டங்கள்-ஒரு பார்வை| #IndependenceDay2022

சட்டம்

இந்திய அரசியல் சாசனம், ஒவ்வொருவரின் தனிப்பட்ட பிரச்னைகளும் அவரவர் மதச்சட்டங்களின் வழியே தீர்க்கப்படும் எனக் கூறியிருப்பதால் ஒவ்வொரு மதத்துக்கென சட்டங்கள் கொண்டு வரப்பட்டன.

சுதந்திர இந்தியாவில் பெண்களுக்காக கொண்டுவரப்பட்ட சிறந்த சட்டங்கள்-ஒரு பார்வை| #IndependenceDay2022

இந்திய அரசியல் சாசனம், ஒவ்வொருவரின் தனிப்பட்ட பிரச்னைகளும் அவரவர் மதச்சட்டங்களின் வழியே தீர்க்கப்படும் எனக் கூறியிருப்பதால் ஒவ்வொரு மதத்துக்கென சட்டங்கள் கொண்டு வரப்பட்டன.

Published:Updated:
சட்டம்

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே, இந்தியாவில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட சமூக அநீதிகளுக்கு எதிராக சட்டங்கள் இயற்றப் பட்டன. சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது, அதில் பெண்களுக்கான சமத்துவம், சம உரிமை தொடர்பாக பல சட்டங்கள் இயற்றப்பட்டதோடு தொடர்ந்து இயற்றப்பட்டுக் கொண்டும் இருக்கின்றன. இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு இயற்றப்பட்ட, பெண்களுக்கான சிறப்புமிக்க சட்டங்கள் என்னென்ன என்பது குறித்து சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் அருள்மொழியிடம் கேட்டோம்...

வழக்கறிஞர் அருள்மொழி
வழக்கறிஞர் அருள்மொழி

``ஆங்கிலேய ஆட்சியிலிருந்து இந்தியா விடுதலை பெற்றபோது நாட்டில் எத்தகைய குழப்பமான சூழல் நிலவியது என்பதை இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு தனது உரையிலேயே குறிப்பிட்டுள்ளார். தேசியவாதிகள், காங்கிரஸ் கட்சியினர், பொதுவுடைமை இயக்கங்கள் பெண்களுடைய கல்வி முன்னேற்றம் சார்ந்த கருத்துகளை முன் வைத்தனர். அதே நேரம், காங்கிரஸில் இருந்த பிற்போக்குவாதிகளும், மதவாதிகளும் நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்தனர். அவர்கள் நாட்டின் பொருளாதார ரீதியான முன்னேற்றத்தை மட்டுமே கருத்தில் கொண்டார்களே தவிர பாலின சமத்துவத்துக்கும், சாதி ரீதியான பாகுபாடுகளைக் களைவதற்கும் அவர்கள் தடையாகவே இருந்தார்கள்.

தென்னகத்தில் நீதிக்கட்சி தொடங்கி திராவிட இயக்கம் வளர்ந்த சூழலில் சாதி ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, மாநில சுயாட்சிக்கான குரல்கள் ஓங்கி ஒலித்தன. அது சார்ந்த சிந்தனையும் மக்களிடத்தில் பரவியிருந்தது. பெண்கள் மதத்தைக் காப்பாற்ற அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிற கருத்தை சனாதனவாதிகள் முன் வைத்தனர். அதற்கு எதிராக, சந்ததியை வளர்ப்பதற்கு பிள்ளை பெறுவதைவிட பெண்கள் தங்களது உடல், மனநலத்தைப் பேணுவதுதான் முக்கியம் என பெரியார் கூறினார். இத்தகைய முரண்பட்ட கருத்துகள் நிலவிய சூழலில் டாக்டர் அம்பேத்கர் தலைமை வகித்த இந்திய அரசியல் சாசனக் குழுவில் பெண்கள் மற்றும் சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களுக்கென சிறப்பு சட்டங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே இந்தியாவின் பிரதிநிதிகளாக இருந்த தேசியவாதிகள், பெண் குழந்தைகளின் திருமண வயதை உயர்த்த எதிர்ப்பு தெரிவித்தார்கள், தேவதாசி முறையை ஒழிக்க எதிர்ப்பு தெரிவித்தார்கள், சதி என்கிற உடன்கட்டை ஏறுதல் முறையை ஒழிக்க எதிர்ப்பு தெரிவித்தார்கள், இருதார மணத் தடைச்சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இவர்களுக்கு மத்தியில் முற்போக்கு சிந்தனையாளர்களின் சீர்திருத்தக் குரல்களும், அம்பேத்கரின் முயற்சிகளும் சமூக நீதிக்கான வலிமையான அடித்தளத்தை உருவாக்கின. அதன் விளைவாகவே பெண்கள் உரிமைகள் சார்ந்து பல முக்கிய சட்டங்கள் இயற்றப்பட்டன

1961-ம் ஆண்டு திருமணத்துக்கென வரதட்சணை கொடுப்பதோ, வாங்குவதோ தவறு என்று கொண்டு வரப்பட்ட வரதட்சணை தடுப்புச் சட்டம் பெண்களின் திருமண வாழ்க்கைக்கு ஆதரவாக இருந்தது. இந்திய தண்டனைச் சட்டம் 498-ல் கொடுமைப் படுத்துதல் பிரிவில் A என்கிற பிரிவு சேர்க்கப்பட்டது. அப்பிரிவின்படி கணவரோ, கணவரின் குடும்பத்தாரோ பெண்ணை உளரீதியாகவும், உடல்ரீதியாகவும் கொடுமைப் படுத்துவது குற்றம் என்று கூறப்பட்டது. இச்சட்டம் பெண்ணை அடிப்பது கணவனின் உரிமை என்கிற மதச்சட்டங்களுக்கு எதிரானதாகவும் பெண்ணின் உரிமை சார்ந்ததாகவும் அமைந்தது.

வரதட்சணை
வரதட்சணை

உயர்நடுத்தர மற்றும் பணக்கார குடும்பங்களிலும் சீர் வரிசைகளோடு பெண்ணைத் திருமணம் செய்வதும், பிறகு அந்தப் பெண்ணை கொலை செய்துவிட்டு வேறு திருமணம் செய்துகொள்வதும் 70 மற்றும் 80-களில் அதிக அளவில் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக, இந்திய தண்டனைச் சட்டத்தில் 304 பி பிரிவு திருத்தப்பட்டு திருமணமாகி 7 ஆண்டு களுக்குள் ஒரு பெண் சந்தேகத்துக்கிடமாக மரணமடைந்தால் அதைக் கொலையாக இருக்குமோ என்கிற நோக்கில் விசாரணை செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டது. எனவே, வருவாய் கோட்டாட்சியர் இதை விசாரிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.

Custodial rape அதாவது வனத்துறை அலுவலகங்கள் மற்றும் காவல் நிலையங்கள் என பாதுகாப்பு தர வேண்டிய இடங்களில் பெண்கள் வன்புணர்வு செய்யப்பட்டால், கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என 376 டி பிரிவில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது" என இந்திய தண்டனைச் சட்டத்தில் பெண்களுக்காகக் கொண்டு வரப்பட்ட முக்கியமான அம்சங்களை விவரித்தார்.

``இந்து வாரிசுரிமைச் சட்டத்தில் திருமணத்துக்குப் பிறகு, ஒரு பெண் இறந்துவிட்டால் அப்பெண்ணின் குடும்பத்தின் மூலமாக வந்த சொத்துகள் அனைத்தும் அப்பெண்ணின் குடும்பத்தையே சேரும் என்கிற பிரிவு சேர்க்கப்பட்டது. பெற்றோர் உயில் எழுதாமல் இறந்துவிட்டால் அச்சொத்தில் பெண்ணுக்கும் சம உரிமை உண்டு என்பதையும் இந்து வாரிசுரிமைச் சட்டம் உறுதிப்படுத்தியது.

இந்து மதத்தில் திருமணம், விவாகரத்து, ஜீவனாம்சம் குறித்த தெளிவான சட்டங்கள் ஏதும் இல்லாத நிலையில் இந்து திருமணச் சட்டம் 1955-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தின் மூலம் கணவன், மனைவி இருவருக்குமே விவாகரத்து கோரும் உரிமை வழங்கப்பட்டது. விவாகரத்து வாங்காமல் வேறு திருமணம் செய்யக் கூடாது என்பதும் உறுதிப்படுத்தப்பட்டது. அதற்கு முன்பு வரையிலும் இந்து சாஸ்திரப்படி பெண்ணுக்கு விவாகரத்து உரிமை இல்லை. ஆண் வேண்டுமானால் மனைவியை விலக்கி வைக்கலாம் என்றுதான் இருந்தது. இஸ்லாமிய, கிறிஸ்துவ மதங்களில் பெண்களுக்கு விவாகரத்து உரிமை இருந்தது. இந்து மதத்தில் நிலவிய அச்சூழலை இந்து திருமணச் சட்டம்தான் மாற்றியது. இந்து தத்தெடுக்கும் உரிமைச்சட்டத்துக்குப் பிறகுதான் பெண்களுக்கு தத்தெடுக்கும் உரிமை வழங்கப்பட்டது.

இஸ்லாமிய மதத்தில் நிலவிய முத்தலாக் முறை மூலம் விவாகரத்து செய்கிறவர்கள் ஜீவனாம்சம் எதுவும் தருவதில்லை. இது தொடர்பாக நடைபெற்ற ஷாபானு வழக்கில் வந்த தீர்ப்பில் இஸ்லாமிய பெண்கள் ஜீவனாம்சம் கேட்கலாம் என்று சொல்லப்பட்டது. அத்தீர்ப்பை முன் வைத்து இஸ்லாமிய பெண்கள் திருமண ரத்து மற்றும் ஜீவனாம்சம் சட்டம் கொண்டு வரப்பட்டது.

இந்திய அரசியல் சாசனம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட பிரச்னைகளும் அவரவர் மதச்சட்டங்களின் வழியே தீர்க்கப்படும் எனக் கூறியிருப்பதால் ஒவ்வொரு மதத்துக்கென சட்டங்கள் கொண்டு வரப்பட்டன.

க்ரைம்
க்ரைம்

பணியிடங்களில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக விசாகா பெண்கள் குழு தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் 1996-ம் ஆண்டு பணியிடங்களில் இதற்கான விசாரணைக்குழு அமைக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பணியிடங்களில் பெண்களுக்கான பாதுகாப்புச் சட்டம் வருவதற்கு இத்தீர்ப்பு வழிவகுத்தது. சமூக நீதிக்கான சட்டங்கள் இயற்றப்பட்டாலும், பிற்போக்கு சிந்தனை கொண்டவர்கள் மாறவில்லை.

பெண் சிசுக்கொலை நடைபெறுவதைத் தடுக்க, பெண் சிசுக்கொலைத் தடுப்புச்சட்டம் இயற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து கருவிலேயே கலைக்க ஆரம்பித்தார்கள். இதற்கு எதிராக முறையற்ற கருக்கலைப்பு தடைச்சட்டம் வந்தது. இச்சட்டத்தின்படி கருவுற்றிருக்கும்போதே அது ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என்று சொல்வது சட்ட விரோதமாகப்பட்டது. இதன் மூலம் பெண் சிசுக்கொலை மற்றும் கருக்கலைப்பு கட்டுப்படுத்தப்பட்டது. கணவராக இருந்தாலும் மனைவியை அடிப்பது, துன்புறுத்துவது சட்ட விரோதமானது என்பதை உறுதிப்படுத்தும் விதமாக 2005-ம் ஆண்டு குடும்ப வன்முறைத் தடுப்புச்சட்டம் கொண்டு வரப்பட்டது" என்றவர், தமிழ்நாடு மாநில அளவில் இயற்றப்பட்ட முக்கிய சட்டங்கள் குறித்துக் கூறுகிறார்.

``1970-களின் தொடக்கத்தில் கலைஞர் முதல்வராக இருந்தபோது அரசுப் பணியிடங்களில் பெண்களுக்கு 30 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்தினார். இதன் தொடர்ச்சியாகத்தான் பெண் கல்வி ஊக்கப்படுத்தப்பட்டு, அனைத்துப் பணியிடங்களிலும் பெண்கள் நியமிக்கப்பட்டார்கள். 1989-ம் ஆண்டில் பரம்பரைச் சொத்தில் பெண்களுக்கு சம உரிமை சட்டம் இயற்றப்பட்டது. தாயின் பெயரையும் இனிஷியலில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்கிற சட்டமும், தாய் தந்தை வெவ்வேறு சாதியினராக இருந்தாலும் தாயின் சாதியை சான்றிதழில் காட்டலாம் என்கிற சட்டமும் கொண்டு வரப்பட்டன.

1968-ம் ஆண்டு, அண்ணா முதலமைச்சரானதும் கொண்டு வரப்பட்ட சுய மரியாதைத் திருமணச் சட்டம் மிக முக்கியமானது. பெண்ணைத் தாரை வார்த்துக் கொடுத்தல் போன்ற சடங்குகளை மறுத்து, பெண்ணும் ஆணும் சமத்துவத்தோடு திருமணம் செய்து கொள்வதற்கு அச்சட்டம் வழி வகை செய்தது. தாலி கட்டாமல் மாலை மாற்றிக்கொண்டோ, மோதிரம் மாற்றிக்கொண்டோ திருமணம் செய்யலாம் என்று கூறியது. 1986-ம் ஆண்டு ராஜீவ்காந்தி ஆட்சிக்காலத்தில் பெண்கள் குறித்து அநாகரிகமான சித்திரிப்புகள் தடைச்சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் பெண்களை கொச்சைப்படுத்தும் விதமாக இரட்டை அர்த்தத்தில் பேசுதல், படம் வரைதல், திரைப்படத்தில் காட்சி அமைத்தல் ஆகியவை சட்ட விரோதமாக்கப்பட்டன.

போக்சோ
போக்சோ

குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமையைத் தடுக்கும் பொருட்டு 2012-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட போக்சோ (POCSO) சட்டம், ஆண் - பெண் இருபாலினத்தைச் சேர்ந்த குழந்தைகளின் நலனையும் பேணுகிறது. பெண் குழந்தைகள் அதிகம் பாதிப்புக்குள்ளாகும் குழந்தைத் திருமணத்துக்கெதிராக 2006-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குழந்தைத் திருமணத் தடைச்சட்டம் பெண்களின் உடல் நலம் மற்றும் சமூக முன்னேற்றத்தை ஊக்கப்படுத்தியது" என்கிறார் அருள்மொழி.