`நாஜிக்களை உளவு பார்த்த இந்திய வம்சாவளி உளவாளி; பிரிட்டனின் கௌரவம்!' - யார் இந்த நூர் இனயத் கான்?

``நூர் போராடிய காலத்தில் எல்லோருமே அவரை இந்தியராகத்தான் பார்த்தார்கள். மதம் அப்போது ஒரு பொருட்டாகவே இல்லை."
பிரிட்டன் அரசாங்கத்தால் வழங்கப்படும் உயரிய விருதுதான் 'ப்ளூ பிளேக்.' வரலாற்றின் ஏதாவதொரு சமயத்தில் பிரிட்டனில் குடியிருந்த உலகத்தின் முக்கியமான மனிதர்களைக் கௌரவிக்கும் விதமாக அவர்கள் தங்கியிருந்த இடத்தில் ஒரு நீல வண்ணத் தகடு பதிக்கப்படும். இந்தியர்களில் இதுவரை மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு மற்றும் அம்பேத்கருக்கு மட்டும்தான் 'ப்ளூ ப்ளேக்' அமைக்கப்பட்டிருக்கிறது. இந்திய வம்சாவளியை சேர்ந்த நூர் இனயத் கான் இந்தப் பெருமை கிடைக்கப்போகிறது, யார் இந்த நூர் இனயத் கான்?

1914-ம் ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த இனயத் கானுக்கும், திப்பு சுல்தானின் வம்சாவளியைச் சேர்ந்த பிரானி அமீன் பேகத்துக்கும் மகளாகப் பிறந்தவர்தான் நூர். ரஷ்யாவில் பிறந்த நூர் முதலாம் உலகப்போர் மூண்டதால் பிரிட்டனின் புளூம்ஸ்பெர்ரி மாகாணத்துக்கு குடிபெயர்ந்தார். தன்னுடைய 6 வயதில் பாரிஸில் குடிபெயர்ந்து அங்கேயே வளரத் தொடங்கினார். சிறு வயதில் இருந்தே இசையோடும் சுஃபியிச கொள்கைகளோடும் வளர்க்கப்பட்டவர் நூர்.
இளம் வயதிலேயே குழந்தைகளுக்கான கதை எழுதும் எழுத்தாளராக உருவெடுத்தார். 1940-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் புகுந்த ஜெர்மன் படைகளிடமிருந்து தப்பிப்பதற்காக மீண்டும் பிரிட்டனுக்கு வந்தார் நூர். இரண்டாம் உலகப்போர் மூண்டபோது தன் சகோதரன் விளாயத்தோடு பிரிட்டன் படைகளில் சேர முடிவெடுத்தார் நூர்.

அகிம்சை கொள்கைகளில் உடன்பட்டாலும், நாஜி சாம்ராஜ்யத்தையும் அவர்களின் பாசிச கொள்கைகளையும் தகர்க்க வேண்டும் என்பதற்காகப் போரில் பிரிட்டனோடு கைகோத்தார். மேலும், பிரிட்டன் படைகளில் இந்தியர்கள் சிறப்பாகப் பணியாற்றினால் அதுவே இந்தியர்களுக்கும் பிரிட்டனுக்கும் இடையே ஒரு நல்லுறவை உண்டாக்கும் என நினைத்தார் நூர். 1940-ல் பெண்களுக்கான விமானப்படையில் ரேடியோ ஆப்ரேட்டராகப் பணியில் சேர்ந்த நூர், மூன்று வருடங்கள் கழித்து "Special Operations Executive" என்றழைக்கப்படும் பிரிட்டன் உளவுத்துறையில் தன்னை இணைத்துக்கொண்டார்.
பிரெஞ்சு மொழியில் சரளமாக பேசக்கூடிய வல்லமை பெற்றவராக இருந்த நூரை, மேடலின் என்ற புனைப்பெயரில் நாஜிப்படைகளின் ஆக்கிரமிப்பில் இருந்த பிரான்ஸுக்கு உளவுபார்க்க அனுப்பியது பிரிட்டன். பல மாதங்களாக உளவு வேலையில் ஈடுப்பட்டு வந்த நூர். பிரிட்டன் திரும்புவதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பு எதிர்பாராத விதமாக நாஜிப்படைகளால் உளவாளி எனக் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டார். ஜெர்மானிய அதிகாரிகளால் தொடர்ந்து சித்ரவதை அனுபவித்தும் அவர்களுக்கு எந்தத் தகவலையும் நூர் தரவில்லை. இதையடுத்து 1943-ம் ஆண்டு செப்டம்பர் 13-ம் தேதி நாஜி வதை முகாமில் கொல்லப்பட்டார் நூர் இனயத் கான்.

1949-ம் ஆண்டு நூரின் உயிர்தியாகத்துக்கு மரியாதை செலுத்தும் விதமாகப் பிரிட்டனின் அரசாங்கத்தால் போர்வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான "ஜார்ஜ் கிராஸ்" அவருக்கு வழங்கப்பட்டது. இதுமட்டுமல்லாது தென்கிழக்கு பிரிட்டனின் சர்ரே மாகாணத்தில் இருக்கும் ரன்னிமேட் விமானப்படை நினைவகத்தில் நூரை பற்றிய டிஜிட்டல் கண்காட்சி பெண்கள் தினத்தையொட்டி கடந்த 8-ம் தேதி தொடங்கப்பட்டது.
வரலாற்று ஆய்வாளரான குசும் வட்கமா தான், நூரின் சாதனைகளை பற்றி முதன்முதலில் இந்த உலகிற்கு சொன்னவர். தற்போது ஒரு முஸ்லிம் பெண்ணாக மட்டுமே நூரை சித்தரிப்பதில் அவருக்கு விருப்பமில்லை.
``நூர் போராடிய காலத்தில் எல்லோருமே அவரை இந்தியராகத்தான் பார்த்தார்கள். மதம் அப்போது ஒரு பொருட்டாகவே இல்லை" என தன் ஆதங்கத்தைத் தெரிவித்திருக்கிறார் குசும்.