Published:Updated:

`பெண்களை நீதிபதியாக்குவது குறித்த ஆரவாரம் தேவையற்றது’ - உச்ச நீதிமன்ற ஓய்வு நீதிபதி இந்திரா பானர்ஜி

இந்திரா பானர்ஜி ( விகடன் )

பெண் நீதிபதிகள் தலைமை தாங்கும் அமர்வினை ஆண் நீதிபதிகளால் ஏற்க முடிகிறதா என்ற கேள்விக்கு பதிலளிக்க சங்கடப்படுவதாக தெரிவித்த அவர், `சில நீதிபதிகள் அமைதியாக இருப்பார்கள்; அந்த அமைதி பெண் நீதிபதி தலைமை தாங்குகிறார் என்பதை ஜீரணித்துக்கொள்ள முடியாத அமைதி' என்றார்.

`பெண்களை நீதிபதியாக்குவது குறித்த ஆரவாரம் தேவையற்றது’ - உச்ச நீதிமன்ற ஓய்வு நீதிபதி இந்திரா பானர்ஜி

பெண் நீதிபதிகள் தலைமை தாங்கும் அமர்வினை ஆண் நீதிபதிகளால் ஏற்க முடிகிறதா என்ற கேள்விக்கு பதிலளிக்க சங்கடப்படுவதாக தெரிவித்த அவர், `சில நீதிபதிகள் அமைதியாக இருப்பார்கள்; அந்த அமைதி பெண் நீதிபதி தலைமை தாங்குகிறார் என்பதை ஜீரணித்துக்கொள்ள முடியாத அமைதி' என்றார்.

Published:Updated:
இந்திரா பானர்ஜி ( விகடன் )

கடந்த 23.09.2022 அன்று உச்ச நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி, பணி ஓய்வு பெற்றார். உச்ச நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகள், பெண் வழக்கறிஞர்கள், மற்றும் பெண் பணியாளர்கள் எதிர்கொள்ளும் பாலின வேறுபாடு நிலை குறித்து, ஓய்வுபெற்ற நீதிபதி இந்திரா பானர்ஜி, பார் அண்ட் பென்ச் (Bar and Bench) இணையதளத்துக்கு, தான் அளித்த தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்த தகவல்கள், சட்டத்துறையில் பெண்களின் இன்றைய நிலையை எடுத்துச் சொல்கிறது. பெண்கள் தங்கள் தொழிலில் கவனம் செலுத்துகிறார்கள் என்றால், அவர்கள் தங்களது வீட்டைப் புறக்கணிக்கிறார்கள் என்று ஆண்களும் பெண்களும் ஒரே மாதிரியாக எண்ணுவதே, பெண் சமத்துவத்திற்கு தடையாக இருக்கிறது என, அப்பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் ஓய்வுபெற்ற நீதிபதி இந்திரா பானர்ஜி.

மேலும், வெளிநாடுகளில் உள்ள பெண் நீதிபதிகளும் பாலின பாகுபாட்டை எதிர்கொள்வதை, அவர்கள் தன்னிடம் பகிர்ந்துள்ளதாகவும் சொல்லியுள்ளார் இந்திரா பானர்ஜி. ரூத் பேடே கின்ஸ்பக் (Ruth Bader Ginsburg) என்பவர், அமெரிக்க நீதிபதியாக இருந்தபோது, `புதியதாக மற்றொரு பெண் நீதிபதி நியமிக்கப்பட்டது குறித்து நீங்கள் மகிழ்ச்சியாக உணர்கிறீர்களா?’ என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், `அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் அனைத்து நீதிபதிகளும் பெண்களாக நியமிக்கப்படும்போது தான் மகிழ்ச்சியடைவேன்’ என்று சொல்லியதுடன், அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் அனைத்து நீதிபதிகளும் ஆண்களாக இருந்தபோது யாரும் கண்ணிமைக்காத நிலையில், ஒரு பெண் நீதிபதி நியமிக்கப்படும்போது மட்டும் ஏன் புருவம் உயர்த்தவேண்டும் என்று கேட்டதை, ஓய்வு பெற்ற நீதிபதி இந்திரா பானர்ஜி சுட்டிக்காட்டி, ’பெண்களை நீதிபதியாக்குவது குறித்த ஆரவாரம் தேவையற்றது; பெண் நீதிபதியாக இருப்பதால் கிடைக்கும் பலன்கள் ஒன்றுமில்லை’ எனத் தெரிவித்துள்ளார்.

பாலின பாகுபாடு
பாலின பாகுபாடு

மேலும், பெண் வழக்கறிஞர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்தும் அவர் பேசியுள்ளார். ’சட்டத்துறையில் இன்று பெண்கள் பெருமளவில் உள்ளனர். இது உறுதியான மாற்றத்தை மனநிலையில் ஏற்படுத்தியுள்ளது. இந்த மனநிலை மாற்றம், ஆண் - பெண்ணுக்கு இடையிலான வேற்றுமையை இல்லாமல் செய்யும். குடும்பக் கடமைகளுக்காக பெண்கள் ஒதுக்கும் நேரமே, அவர்கள் இத்தொழிலில் எதிர்கொள்ளும் சிரமம் ஆகும். உதாரணத்திற்கு ஒரு பெண் குழந்தையை பெற்றுள்ளார் என்றால், குழந்தைக்காக நேரம் ஒதுக்கி, அன்பு செலுத்த வேண்டியுள்ளது. குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமா, வேண்டாமா என்பது எந்த கட்டாயமுமின்றி, அவரவர்களது தனிப்பட்ட முடிவு. ஆனால் குழந்தை பெற்றுக்கொண்டால், தொழிலில் இருந்து சிறிது காலம் விலகியிருக்க வேண்டியுள்ளது. பொதுவாக பெண்தான் அப்படியான தியாகத்தைச் செய்கிறாள். குழந்தை வளர்ப்பில், பெற்றோர்கள் சேர்ந்து குழந்தையை வளர்க்க வேண்டும் எனப் பேசினாலும், அதில் தாய்க்கு தான் அதிக பங்கு உள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

ஓய்வுபெற்ற நீதிபதி இந்திரா பானர்ஜி, தன் இளவல் பெண் வழக்கறிஞர் இரண்டு குழந்தைகள் பெற்று இடைவெளி விட்டதையும், அதில் ஒரு குழந்தைக்கு அடிபட்டபோது மீண்டும் நேர்ந்த இடைவெளி குறித்தும் குறிப்பிட்டு, ’இப்பொழுது அந்தப் பெண் வழக்கறிஞர் தொழிலில் சிறப்புடன் இருக்கிறார்; ஆனால், அவர் தொழிலில் இழந்த வருடங்கள்?’ என்று கேள்வி எழுப்புகிறார்.

‘வழக்கறிஞர் தொழில் என்பது சேவை சார்ந்த தொழில். எவ்வளவு வேலை கிடைக்கிறது என்பது செய்யும் தொழிலின் வேகத்தைப் பொறுத்தே அமைகிறது. அதில் தடைகளோ, இடைவெளிகளோ ஏற்படும்போது, வழக்காடிகள் வேறு வழக்கறிஞரை நாடத் துவங்குவர். இந்த இடமே, பெண்கள் பின்வாங்கும் இடம்’ என்கிறார் ஓய்பெற்ற நீதிபதி இந்திரா பானர்ஜி.

மேலும் அவர் பேசும்போது, ’பெண்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கான சுதந்திரம் இருக்க வேண்டும் எனப் பேசிவிடுவது சுலபம்; ஆனால், 65 வயதில் கூட நான் தெருவில் தனியாகச் செல்வது பாதுகாப்பானதாக இருக்குமா என்பது கேள்விக்குறியே’ என்று தெரிவித்துள்ள கருத்து மிகவும் முக்கியமானது. ’அதுமட்டுமல்லாமல் நீதிமன்றத்தில் பணிபுரிபவர்கள், முக்கியமாக நீதிபதிகளுடன் இணைந்து பணிபுரிபவர்கள் பெரும்பாலும், நீதிபதிகள் தீர்ப்பினை எழுதச் செலவிடும் இரவு நேரத்திலும் உடனிருக்க வேண்டியுள்ளது. ஆண்களால், அப்படி வெகுநேரம் வேலை செய்ய முடிகிறது. குடும்பத்தை பார்த்துக்கொள்ள வேண்டிய நிலையும், இரவில் பாதுகாப்பற்ற பயணமும் சேர்ந்து, பெண்களால் அப்படி வேலை நேரம் தாண்டி உழைக்க முடிவதில்லை’ என்று கூறியுள்ளார்.

பெண் நீதிபதிகள் தலைமை தாங்கும் அமர்வினை ஆண் நீதிபதிகளால் ஏற்றுக்கொள்ள முடிகிறதா என்னும் கேள்விக்கு பதில் அளிக்க சங்கடப்படுவதாக தெரிவித்த இந்திரா பானர்ஜி, ’சில நீதிபதிகள் அமைதியாக இருப்பார்கள்; அந்த அமைதி பெண் நீதிபதி தலைமை தாங்குகிறார் என்பதை ஜீரணித்துக்கொள்ள முடியாத அமைதி என்னும் உணர்வு மேலெழும். இது ஒருவகையான மனநிலையும் கூட’ என்றிருக்கிறார்.

சட்டம்
சட்டம்

தான் தலைமை நீதிபதி ஆனபோது பாலின வேறுபாட்டை உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார் இந்திரா பானர்னி. நீதிமன்றப் பணியாளர்களுடன் அமர்ந்து விடிய விடிய எழுதிய ஐந்து தீர்ப்புகளை, அவருடன் இருந்த இளைய நீதிபதி படிக்காததால், அந்த வழக்குகளைப் பட்டியலிட வேண்டாம் என அலுவலகத்திற்குத் தகவல் சொல்ல நேர்ந்ததாகப் பகிர்ந்துள்ளார்.

’மீக நீண்ட தீர்ப்பு ஒன்றுடன், மற்ற நான்கு தீர்ப்புகளும் ஐந்து பக்கங்களில் அடங்குபவை. பத்து நாள்களாக விசாரித்த வழக்குகளில் தீர்ப்பினை வழங்கும் முன்பு, நான் ஓய்வு பெற்றுவிட்டதால், மீண்டும் அதே வழக்கினை விசாரித்து தீர்ப்பெழுத வேண்டும்’ என்பது குறித்த வருத்தத்தையும் பகிர்ந்துள்ள அவர், ’அந்த இளைய நீதிபதி, நான் எழுதிய தீர்ப்புகளுடன் ஒத்துப்போகிறாரா அல்லது வேறுபடுகிறாரா எனச் சொல்லியிருக்கலாம். ஒருவேளை மூத்த நீதிபதியாக வொய். டி. சந்திரசூத் போன்றவர்கள் அமர்வில் தலைமை ஏற்று தீர்ப்பு எழுதி இருந்தால் இப்படி ஒரு செயலை செய்யத் துணிந்திருப்பாரா அந்த இளைய நீதிபதி?’ என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார் இந்திரா பானர்ஜி.

நீதிமன்றத்தில் பெண்களின் நிலை குறித்த ஓய்வு பெற்ற நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ள இக்கருத்துகளை குறித்து, சென்னை உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர் மீனாட்சியிடம் கேட்டோம்.

“பெண் வழக்கறிஞர்கள் தொழில் செய்யும்போது, திருமணத்திற்குப் பிறகு, குடும்பத்தைப் பார்த்துக்கொள்ளும் இரட்டைச் சுமை அவர்கள் மீது விழுவதால், தொழிலில் முழுவதுமாக கவனம் செலுத்த முடியவில்லை. குழந்தைப் பிறப்பு, குடும்பத்தை பேணுதல் போன்றவை குறிப்பிட்ட முறையிலான இடைவெளியைத் தொழிலில் கோருகிறது. இது பெண் வழக்கறிஞர்கள் தொழிலில் மேற்கொண்டு சிறப்புடன் பணிபுரிய ஒரு தடங்கலைக் கொடுக்கிறது.

இந்திரா பானர்ஜி
இந்திரா பானர்ஜி

மேலும், சக வழக்குரைஞர்களைச் சந்தித்து அறிவுப்பரிமாற்றம் செய்வது, நேரம் செலவிட்டு படிப்பது போன்றவற்றை பெண்கள் செய்வது சிரமமான காரியமாகிவிடுகிறது. பெண் வழக்குரைஞர்களுக்கான சங்கங்களும் கூட இதை சரிவரக் கையாள்வதில் சிரமப்படுன்கிறன. ஆனால், இத்தனை சிக்கல்களைக் கடந்து பெண்கள் வழக்கறிஞர் துறையில் சிறக்கும்போது, சமூகத்தில் அவர்களுக்கான மரியாதை கிடைக்கிறது. அடுத்த தலைமுறைப் பெண்கள் அதிகமாக சட்டத்துறையை தேர்ந்தெடுப்பதால், இனி வரும் காலங்களில் பெண்கள் இத்துறையில் சிறப்பான இடத்துக்கு நகர்வாரக்ள் என எதிர்பார்ப்போம்” என்றார்.

- வழக்கறிஞர் நிலவுமொழி செந்தாமரை