Published:Updated:

முயற்சி உடையாள் - 4 - நீங்களும் நல்லாசிரியர் ஆகலாம்... வழிகாட்டும் மகாலட்சுமி டீச்சர்

மாணவர்களுக்கு பாலினம் குறித்த தெளிவை ஏற்படுத்தும் கடமையும் ஆசிரி யருக்கு இருக்கிறது.

பிரீமியம் ஸ்டோரி

‘வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை’ என்றொரு பழமொழி உண்டு. உண்மையில் ‘வாக்கு (கல்வி) கற்றவனுக்கு வாத்தியார் வேலை' என்பதே அப்படி மருவியிருக்கிறது. வாழ்க்கையில் எத்தனையோ மனிதர்களைச் சந்திக்கிறோம். மறக்கிறோம். மறக்கவே முடியாத மனிதர்களின் பட்டியலில் ஒவ்வொருவருக்கும் ஓர் ஆசிரியர் முகம் நிச்சயம் நினைவிலிருக்கும். அப்படி நினைவில் நிற்கும் நல்லாசிரியராக இருக்க, அத்துறையில் தனித்த அடையாளம் பெற வழிகாட்டுகிறார் திருவண்ணாமலை, ஜவ்வாதுமலை ஜமுனா மரத்தூர் உண்டு உறைவிடப் பள்ளி ஆசிரியை மகாலட்சுமி.

அடி உணர்த்தாததை அன்பு உணர்த்தும்

`` ‘குழந்தைகளை அடிக்கக் கூடாது, திட்டக் கூடாதுன்னா அப்புறம் எப்படி சொல்பேச்சு கேட்பாங்க. இதுங்ககிட்ட கத்திக்கத்தி உசுரே போகுது' என்று பலர் புலம்புவார்கள். குழந் தைகளை அடித்துத் திருத்துவது சரியான அணுகுமுறை கிடையாது. மாணவர்களை உங்கள் அன்புக்குக் கட்டுப்பட வையுங்கள். குழந்தைகளை அடிக்கக் கூடாது என்பது என் கொள்கை. குழந்தைகள் தவறு செய் தால் அவர்களைத் திருத்தும் கடமை யும் பொறுப்பும் ஆசிரியர்களுக்கு உள்ளது. பள்ளியில் உள்ள மாணவர்களை உங்கள் குழந்தை களாகப் பார்க்கப் பழகினால் கோபம் எப்போதும் கன்ட் ரோலில் இருக்கும்.

மகாலட்சுமி
மகாலட்சுமி

இயல்பை மாற்றிக்கொள்ளுங்கள்

‘இந்த டீச்சர் சரியான சிடுமூஞ்சி, சந்தேகம் கேட்டாகூட, பாடம் நடத்தும்போது கவனிக் கலையான்னு அடிப்பாங்க’ என்றெல்லாம் மாணவர்களின் விமர்சனங்களுக்கு உள்ளானால், ஆசிரியர் வேலையில் நீங்கள் தோற்றுவிட்டதாக அர்த்தம். நீங்கள் இயல்பிலேயே அமைதியானவர் என்றாலும், மாணவர்கள் முன்னிலையில் எப்போதும் கலகலப்புடன் இருக்க வேண்டும். `வாயை மூடு, பேசாதே' என்று சொல்லாமல், `பேசு, கேள்வி கேளு' என்று சிரித்த முகத்துடன் சொல்லிக் கொடுக்கும்போது, குழந்தைகளின் உலகத்தில் நீங்கள் ஸ்டாராகத் தெரிவீர்கள். மாணவர்களிடம் கூடுமானவரை நட்புடன் இருங்கள். விடுப்பு எடுக்க வேண்டுமென்றால் குழந்தைகள் ஆசிரியர்களிடம் சொல்ல வேண்டும். அதேபோல் ஆசிரியர்களும்தான் விடுப்பு எடுப்பதை மாணவர்களிடம் தெரியப் படுத்த வேண்டும். இதை நான் என் வகுப்பில் கட்டாயமாக்கியுள்ளேன்.

தயக்கம் தகருங்கள்

ஆசிரியராக இருப்பவர்கள் முதலில் தயக்கத்தை உடைத்தெறிய வேண்டும். குழந்தைகள் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் அரசாங்கமே இனப் பெருக்கம், மாதவிடாய் தொடர்பான விஷயங்களை புத்தகத்தில் பாடமாக வைக்கிறார்கள். இவற்றைச் சொல்லிக் கொடுக்க ஆசிரியர் தயக்கம் காட்டும்போது, மாணவர் களிடம் அவை கிசுகிசுக்கப்படும் விஷயமாக மாறிவிடும். எனவே, ஆசிரியர்கள், தயக்கத்தை உடைத்து பாலியல் கல்வி பற்றியும், பாலியல் வன்முறை சார்ந்த விஷயங்கள் பற்றியும் பேச வேண்டும்.

மாணவர்களுக்கு பாலினம் குறித்த தெளிவை ஏற்படுத்தும் கடமையும் ஆசிரி யருக்கு இருக்கிறது. எதிர்ப் பாலினத்தவரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைக் கற்றுக்கொடுப்பதுடன் நீங்கள் முன்மாதிரி ஆசிரியராக இருக்க வேண்டும். டிவி, சமூக ஊடகங்களில் பார்த்த சில விஷயங்களின் தாக்கத்தால், குழந்தைகள் சக மாணவியையோ, மாணவனையோ காதலிப்பதாகச் சொல்ல லாம். காதல் என்பது அன்பின் வெளிப்பாடு தான், உடல்கள் சேருவது அல்ல என்பதை கோபப்படாமல் அவர்களுக்குப் புரியவைக்க வேண்டும்.

அப்டேட்டும் டைம் மேனேஜ்மென்ட்டும்...

பாடப் புத்தகத்தில் இல்லாத தகவல்களைச் சொல்லும்போதுதான் மாணவர்கள் ஆசிரியர் களை வியப்பாகப் பார்ப்பார்கள். ஓர் ஆசிரியர் குழந்தைகளை விட ஆயிரம் மடங்கு அப்டேட் ஆக இருக்க வேண்டும். நீங்கள் தொடக்கக் கல்வி ஆசிரியராக கரியரைத் தொடங்குகிறீர்கள் என்றால், கடைசி வரை தொடக்கக்கல்வி ஆசிரியராகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அடுத்தடுத்த நிலைகளுக்கான தேர்வுகள் எழுதி அடுத்தகட்டங்களை நோக்கி உயரலாம்.

ஆசிரியர் பணியில் நேரந்தவறாமை மிக முக்கியம். ஆசிரியரான நீங்களே வகுப்பு ஆரம்பித்து அரை மணி நேரம் கழித்து வகுப் பறைக்குள் நுழைந்தால், மாணவர்கள் வகுப்பறையில் ஆட்டம்போடவே செய்வார் கள். அதனால் பக்கத்து வகுப்பறையில் பாடம் எடுக்கும் ஆசிரியரின் எதிர்ப்பையும், எரிச்சலையும் நீங்கள் சம்பாதிக்க வேண்டி யிருக்கும். நீங்கள் நேர நிர்வாகத்தைக் கடைப் பிடிப்பதன் மூலம், உங்கள் மாணவர்களுக்கும் ரோல் மாடலாக இருக்க முடியும்.

துணிவே துணை

ஆசிரியர் பணியைத் தேர்ந்தெடுப்பவர்கள், தலைமை ஆசிரியர், கல்வி அலுவலர்கள் அல்லது நிர்வாகத்தினர் என சிலரின் கட்டுப் பாட்டுக்குக்கீழ்தான் செயல்பட வேண்டும். தலைமை ஆசிரியர்கள் சிலர், தன்னை மீறி ஓர் ஆசிரியர் செயல்படுவதையோ புகழ் பெறுவதையோ விரும்ப மாட்டார்கள். உங்கள் முயற்சிகளுக்குத் தலைமை ஆசிரியர் முட்டுக்கட்டை போட வாய்ப்பிருக்கிறது. கூடுமானவரை அவர்களைச் சம்மதிக்க வைக்க முயலலாம். சம்மதிக்காத பட்சத்தில் உங்கள் முயற்சிகளில் தெளிவாக இருங்கள். தலைமை ஆசிரியர் மறுத்துவிட்டார்... இனி இதைச் செயல்படுத்த முடியாது என்றெல்லாம் சோர்ந்து போக வேண்டாம். அடுத்தகட்டமாக கல்வி அலுவலர் அல்லது நிர்வாகத்தை அணுகலாம். மாணவர்களின் நலனுக்காக எதிர்ப்புகளையும், பிரச்னைகளை சமாளிக்கும் பொறுப்பையும் கையில் எடுக்கும் துணிவு ஆசிரியர்களுக்கு இருக்க வேண்டும்.

தனியார் பள்ளிகளில் சிறப்பாகச் செயல் படும் ஆசிரியர்களுக்கு சலுகைகள் கொடுக்கப் படும். அதனால் அவர்கள் தங்களை நிரூபிக்க புதுப்புது திட்டங்களைச் செயல்படுத்து வார்கள். அரசுப் பள்ளியில் அந்த நிலைமை இல்லை. ஒரே வருடம் பணிக்குச் சேர்ந்த எல்லா ஆசிரியர்களுக்கும் ஒரே அகவிலைப்படி உயர்வுதான் இருக்கும். அதனால் வாங்கும் சம்பளத்துக்கு வேலை செய்தால் போதும் என்ற மனநிலைக்கு சில ஆசிரியர்கள் வந்து விடுவார்கள்.

நான் பணியாற்றுவது மலைக்கிராமத்தில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளி. அங்கு குழந் தைகள் பள்ளிக்கு வருவதே பெரிய விஷயம். குளித்து சுத்தமாக வர வேண்டும் என்று சொன்னால் பள்ளிக்கே வர மாட்டார்கள். அதனால் பள்ளி முடிந்ததும் நானே அவர் களுக்கு முடி வெட்டிவிடுவேன், குளிப்பாட்டிவிடுவேன், ஆடைகளைத் துவைத்துக் கொடுப்பேன். இந்தத் தகவல் வெளியில் தெரிய ஆரம்பித்து, மற்றவர்கள் என்னைப் பாராட்டியபோது என் பள்ளியில் பணியாற்றும் சக ஆசிரியர்களின் எதிர்ப்பை நான் சம்பாதிக்க வேண்டியிருந்தது. சில ஆசிரியர்கள் என்னுடன் துணை நின்றார்கள். என் பயணத்தைத் தொடர்ந்தேன். குழந்தைகளின் எதிர்காலத்தை மட்டும் நினைவில் கொண்டு அடுத்தடுத்து பாதையில் பயணிக்க உங்களை மனதளவில் தயார்செய்து கொள்ளுங்கள்.

முயற்சி உடையாள் - 4 - நீங்களும் நல்லாசிரியர் ஆகலாம்... வழிகாட்டும் மகாலட்சுமி டீச்சர்

பெயரைக் கெடுத்துக்கொள்ளாதீர்கள்...

பள்ளியில் பாடம் நடத்துவதையும், டியூஷன் எடுப்பதையும் குழப்பிக் கொள்வது பெரும்பாலான ஆசிரியர்கள் செய்யும் தவறு. நீங்கள் தனியாக டியூஷன் எடுப்பதால் டியூஷனில் மட்டும் பாடத்தை மாணவர்களுக்கு விளக்கமாகச் சொல்லிக்கொடுப்பது, வினாத்தாளை முன்பே சொல்வது போன்ற தவறுகளைச் செய்யாதீர்கள். காசு இருக்கும் பெற்றோர் அல்லது வீட்டில் குழந்தைகளுடன் நேரம் செலவிட முடியாத பெற்றோர், குழந்தை களை டியூஷனுக்கு அனுப்புகிறார்கள். எனவே, எல்லா மாணவர்களையும் டியூஷன் சேர வேண்டும் என்றும் வற்புறுத்தாதீர்கள். அப்படிச் செய்யும்பட்சத்தில், பாடம் சொல்லித்தருபவர் என்பதை மறந்து, காசுக்காக வேலை செய்பவர் என நீங்களே உங்கள் பெயரைக் கெடுத்துக் கொள்ள நேரிடும்.

சாதிகள் இல்லையடி பாப்பா...

குறிப்பிட்ட சாதிக்காரர் களை ஆசிரியர் அடிக்கிறார், திட்டுகிறார் என்ற செய்தியை அடிக்கடி கேள்விப்படு கிறோம். ஆசிரியராக இருப் பவர்களின் சாதி பெயர் வெளியில் தெரியும்போதும், ஒரு மாணவரிடம், நீ என்ன சாதி என்ற கேள்வியை நீங்கள் கேட்கும்போதும், குறிப்பிட்ட சாதி மாணவர்களைத் தாழ்வாக நடத்தும்போதும்தான் இதுபோன்ற சிக்கல்கள் வரும்.

சாதியை மறந்தால் மட்டுமே நீங்கள் சிறந்த ஆசிரியராக உருவாக முடியும். நீங்கள் எல்லா குழந்தைகளையும் சமமாக நடத்தி, அன்புகாட்டும் போது, நீங்கள் கண்டித்தாலும், கோபப்பட்டாலும் அது தங்கள் நலனுக்குத்தான் என்பதை குழந்தைகளே புரிந்துகொள்வார்கள். நான் மலைக்கிராமத்தில் வேலைக்குச் சேர்ந்த புதிதில், கல்வியில் இருந்து இடைநின்ற குழந்தைகளைத் தேடி பல கிலோமீட்டர் நடந்து பெற்றோர் களிடம் போராடி, பிள்ளைகளைப் பள்ளிக்கு அழைத்து வந்தேன். அப்போது, நீங்கள் என்ன சாதி என்ற கேள்வியை எத்தனையோ பேர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு புன்னகையை மட்டுமே பதிலாகக் கொடுத்து கடந்து வந்திருக்கிறேன். ஆசிரியர்கள் அன்பு சாதியினர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.''

- சாதிப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு