Published:Updated:

சமூக மாற்றத்தின் சாட்சியங்கள்!

ரியா
பிரீமியம் ஸ்டோரி
News
ரியா

பெங்களூரில் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் இணைத்துக்கொண்டேன்.

திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியத்தின் கவுன்சிலராகத் தமிழகத்திலேயே முதன்முறையாகத் திருநங்கை ரியா வெற்றி பெற்றிருக்கிறார். தமிழகமே பெருமைப்பட வேண்டிய இந்த வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு, அவரிடம் பேசினேன்.

“நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுகா, கருவேப்பம்பட்டி பஞ்சாயத்தின் சிறிய கிராமத்தில்தான் பிறந்து வளர்ந்தேன். அப்பா அன்பரசன், அம்மா சின்னப்பாப்பா. பத்தாம் வகுப்பு படிக்கும் வரை அம்மா அப்பாவுடன்தான் இருந்தேன். ஆனால் எனக்குள் ஏற்பட்ட மாற்றங்கள் வெளியே தெரியவந்த சமயங்களில் வீட்டில் என்னைக் கண்டித்தார்கள், அடித்தார்கள். அதனால் வீட்டை விட்டு வெளியேறிவிட்டேன். பிறகு, எங்கள் பகுதி திருநங்கைகளின் உதவி கிடைத்தது. பெங்களூரில் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் இணைத்துக்கொண்டேன். பிறகு சென்னையில் சகோதரன் என்கிற அமைப்புடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினேன். பொதுப்பிரச்னைகளில் தலையிட்டு வேலை செய்யத் தொடங்கியது அப்படித்தான்.”

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

நேரடி அரசியலுக்கு எப்படி வந்தீர்கள்?

“திராவிட முன்னேற்றக் கழகம் திருநங்கை களுக்காகப் பல விஷயங்களைச் செய்தார்கள். எங்களுக்கான நலவாரியம் அமைக்கப்பட்டது, `திருநங்கை’ என்று எங்களுக்குப் பெயர் வைத்து எங்களுக்கான சுயமரியாதையை நிலைநாட்டியது அந்தக் கட்சிதான். 2017-ல் உறுப்பினராகக் கழகத்தில் சேர முக்கியக் காரணம் அதுதான்.”

ரியா
ரியா

உங்களை வேட்பாளராக நிறுத்த ஏதேனும் எதிர்ப்புகள் இருந்ததா?

“என்னை வேட்பாளராக நிறுத்துவதற்கு மக்களிடையே வரவேற்பு இருந்தது. திருநங்கையை வெற்றிபெற வைக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள். இருந்தும் திருநங்கைகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள், கட்சியின் இந்த முடிவை எதிர்த்தார்கள். `ஒரு திருநங்கையை நம்பி சீட் கொடுத்தால் எப்படிச் செயல்படுவார்?’ என்று என் காதுபடவே கூறினார்கள். ஆனால் நான் அதையும் கடந்து நிறைய எதிர்ப்புகளைச் சந்தித்துதான் இந்தக் களத்துக்கு வந்திருக்கிறேன்.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உங்கள் ஒன்றியத்துக்காக என்ன திட்டமிட்டிருக்கிறீர்கள்?

“திருநங்கைகளால் சமூகத்துக்கு என்ன நன்மைகள் செய்யமுடியும் என்பதை எனது வெற்றியின் வழியாக நான் செய்துகாட்டுவேன். குடிநீர்ச் சிக்கல், கழிப்பிடப் பிரச்னை, வேலை வாய்ப்புப் பிரச்னை உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்துவேன். முக்கியமாகப் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளில் என்போன்ற பாலினச் சிக்கல்களைச் சந்திக்கும் பிள்ளைகளின் படிப்பு அதன் காரணமாகத் தடைப்படாமல் இருக்க ஒன்றிய அளவிலான நடவடிக்கைகளை ஏற்கெனவே மேற்கொண்டு வருகிறேன் அதனை இனி அதிகாரபூர்வமாகச் செயல்படுத்துவேன்”

ஜெயித்த பிறகு ஸ்டாலினைச் சந்தித்தீர்களா, என்ன சொன்னார்?

“தலைவரை இன்னும் சந்திக்கவில்லை. `பெருமையாக இருக்கிறது. இது கலைஞருக்குக் கிடைத்த வெற்றி’ எனக் கடிதம் எழுதியிருந்தார். அது உணர்ச்சிமிக்கதாக இருந்தது. கனிமொழி தொடர்பு கொண்டு பேசினார். வாழ்த்து தெரிவித்த தோடு, ஒன்றியத்துக்கான செயல்பாடுகளில் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் எந்நேரமும் தயங்காமல் அணுகச் சொல்லியிருக்கிறார்.”

தேர்தல் வெற்றிக்குப் பிறகு குடும்பத்தில் என்ன சொன்னார்கள்?

“மூன்று வருடங்களுக்கு முன்பே என்னை வீட்டில் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். நான் தற்போது அம்மா அப்பாவுடன்தான் வசித்துவருகிறேன். ஜெயித்ததும் அம்மாவை இறுகக் கட்டிக்கொண்டு அழுதேன். ஊருக்கு நல்லது செய்யச் சொன்னார்கள்.”

இன்னும் பல வெற்றிகள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன ரியா!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது கான்சாபுரம். 2000-க்கும் அதிகமான மக்கள் வாழும் இவ்வூரில், தூய்மைப்பணி செய்யும் பணியாளரில் ஒருவராக 25 வருடங்களாக உழைத்துவந்த சரஸ்வதி, இன்று இவ்வூராட்சியின் தலைவர்.

பெரும்பாலான ஊர்களில் ஊராட்சி வார்டு உறுப்பினராக வெற்றிபெற்றவர்களே நன்றி அறிவிப்பு போஸ்டர் ஒட்டி, மேளதாளத்துடன் தங்கள் செல்வாக்கைக் காட்டிக்கொண்டிருக்கும் நிலையில், கான்சாபுரம் ஊராட்சி அமைதியாகக் காட்சியளிக்கிறது. “புதுசா ஜெயிச்ச ஊராட்சித் தலைவர் வீடு எங்கிருக்கு?’’ என்று ஊர்க்காரர்களிடம் கேட்டால், நம்மை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, “அப்படியே கிழக்குப் பக்கத் தெருவுல நேரா போங்க, அங்க ஒரு வேப்ப மரம் பக்கத்துல இருக்கு வீடு” என்று வழி காட்டுகிறார்கள். ஊரின் கடைசிப் பகுதியில் பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த 12 குடும்பங்களில் ஒரு குடும்பம்தான் சரஸ்வதியின் குடும்பம்.

தலைகுனிந்து செல்லும் அளவுக்கே வாசலுள்ள சிறிய வீட்டில் வசித்து வரும் சரஸ்வதி மற்றும் அவரின் கணவர் குருசாமியிடம் நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு பேசினோம். `வாங்க, மரத்தடி கோயிலுக்குப் பக்கத்தில் அமர்ந்து பேசலாம்” என்று அழைத்துச் செல்லும்போதுதான், அவர் வீடு எவ்வளவு சிறியது என்பது நமக்குப் புரிகிறது.

சரஸ்வதி
சரஸ்வதி

“எங்க முன்னோர்கள் பல தலைமுறையாக இந்த ஊரில் தூய்மைப்பணி செஞ்சுட்டு வந்திருக்காங்க. நான் 20 வருசத்துக்கு மேல என் வீட்டுக்காரருடன் சேர்ந்து ஊரை சுத்தம் செய்றேன். மாசம் ஐயாயிரம் சம்பளம். அதை வெச்சிதான் எங்களோட மூணு புள்ளைய வளர்த்தோம். ஒரு பெண்ணைக் கட்டிக் கொடுத்துட்டோம். ஒரு பையன் வெளியூர்ல வேலை பாக்குறான். இன்னொரு பையன் இங்கதான் இருக்கான். அவங்களை இந்த வேலை செய்ய விடல. ஆனா, அவங்களுக்கு வேற வேலையும் கிடைக்கல” என்று யதார்த்தமாகப் பேசுகிறார் சரஸ்வதி.

“ஊராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டி போடணும்னு ஆர்வம் எப்படி வந்தது” என்றோம்.

“மூணு வருஷத்துக்கு முன்னால தேர்தல் வரப்போறதா சொன்ன உடனேயே, நம்ம ஊரை தாழ்த்தப்பட்ட சாதிக்காரங்களுக்கு அரசாங்கம் அறிவிச்சிடுச்சு. அப்ப, ஊருல உள்ள மத்த சாதிக்காரங்க, நீ போட்டி போடு, உன்னை எல்லோருக்கும் புடிக்கும், மக்களுக்கும் தெரியும்னு சொன்னாங்க. அதனால், பார்த்துக்கிட்டிருந்த வேலையிலிருந்து விலகுறதா ஊராட்சி அலுவலகத்துல எழுதிக் கொடுத்துட்டேன். ஆனா, அப்புறம் தேர்தல் தள்ளிப் போயிடுச்சு. வேலை போனதால ரொம்ப சிரமமாப்போச்சு. மறுபடி சேர முடியல. அவர் வருமானம் மட்டும்தான், அப்புறம் தினக்கூலியா துப்புரவுப் பணிக்குப் போக ஆரம்பிச்சேன்.”

“நீங்க துப்புரவுப் பணி செஞ்ச ஊருக்கே தலைவரா வந்திருக்கீங்க. அதை எப்படி உணர்கிறீங்க? ஊருக்கு என்னவெல்லாம் செய்யணும்னு திட்டம் வெச்சிருக்கீங்க?”

“அப்ப, ஊராட்சி மன்ற ஆபீஸுக்கு வெளியில நிப்பேன். அங்குள்ளவங்க ஏதாவது வேலை சொன்னா செய்வேன், இப்ப அங்க உட்காரப் போறேன். ஊர் மக்களுக்கு என்னவெல்லாம் கஷ்டம் இருக்குங்கிறது மத்தவங்களைவிட எனக்கு நல்லாத் தெரியும். முக்கியமான விஷயம், இவ்வளவு பெரிய ஊருக்கு ரொம்பக் குறைவாகதான் துப்புரவுப் பணியாளர்கள் இருக்காங்க. அதை அதிகப்படுத்தணும். அதைவிட துப்புரவு வேலை செய்றவங்கள நிரந்தரப்பணியாளர் ஆக்கணும். அவங்களுக்கும் நல்ல சம்பளம் வழங்க ஏற்பாடு செய்யணும்!”

“நீங்களே சுயமா முடிவெடுப்பீங்களா, இல்லே, ஊருல முக்கிய ஆளுங்க சொல்றதைச் செய்வீங்களா?’’

“எனக்குப் படிப்பறிவுதான் இல்லை, ஆனா, அனுபவ அறிவு அதிகம். ஊரிலுள்ள எல்லாத் தரப்பு மக்களிடமும் தேவைகளைக் கேட்பேன். நல்ல விஷயங்களைச் சொன்னால் அதைச் செயல்படுத்தப் பாடுபடுவேன். சுயநலத்துக்காகச் சொன்னால் அதைச் செய்ய மாட்டேன். ஏதாவது ஆலோசனை தேவைன்னா படிச்ச புள்ளைகளிடம் கேட்பேன். ஊரைத் தூய்மைப்படுத்திய எனக்கு நிர்வாகத்தையும் தூய்மைப்படுத்த முடியும். என்னை யாராவது இழிவுபடுத்தினாலோ, மிரட்டினாலோ கலெக்டர், முதலமைச்சர்னு புகார் அனுப்பி விடுவேன்” என்றார்.

தெளிவுள்ள தலைவர் நீங்கள்!