Published:Updated:

பணி இடங்களில் மாதவிடாய் கால விடுமுறை தேவையா… உங்கள் கருத்து என்ன? #PeriodLeave

Representational Image
Representational Image

இதன்மீதான விவாதமும் #PeriodLeave என்கிற ஹேஷ்டேக்கில் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

மகளிர் தினக் கொண்டாட்டங்கள் முடிந்துவிட்டன. இருந்தும் பெண்களுக்கான உரிமைகள், பெண்களுக்கான சமஉரிமைகள் குறித்துப் பேசுவதற்கு அடுத்த மகளிர் தினம் வரைக்கும் காத்திருக்க வேண்டும் என்பதில்லை. பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் விடுமுறை தேவை என்பதை ஆதரித்து, சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் தொழில் வல்லுநர்கள் பிரிவு, ஒரு Change Org வலைதளத்தில் சர்வே ஒன்றைத் தொடங்கியது.

shashi tharoor tweet
shashi tharoor tweet

இதன்மீதான விவாதமும் #PeriodLeave என்கிற ஹேஷ்டேக்கில் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. கடைகளில் சானிட்டரி நாப்கின்கள் வாங்கினால், இன்னமும் கறுப்பு நிற கவரில் மூடி மறைத்து எடுத்துவரும் பழக்கம் நம் பெண்களிடம் இருக்கிறது. நாப்கின்கள் வாங்குவதை ஏதோ குற்றம்போல பார்க்கும் கண்களுக்கு நடுவே, பெண்கள் அப்படி மறைத்துதான் எடுத்துச் செல்ல வேண்டியிருக்கிறது.

திடீர் எதிர்பாராத உதிரப் போக்கு, பணி இடத்தில் சகபெண்களிடம் நாப்கின் கேட்க வேண்டும் என்றாலும் அதைக் கவரில் சுற்றி பர்ஸில் சுற்றி எவர் கண்களிலும் படாமல் ஒளித்துமறைத்துதான் எடுத்துச்செல்ல வேண்டும். மாதவிடாய் காலத்து வயிற்றுவலி, உதிரப்போக்கு, கைகால் வலி, தலைவலி, குமட்டல் என இன்னும் எத்தனையோ பிரச்னைகளுக்கு நடுவே இதுபோன்ற பிரச்னைகள் கூடுதல் திருகுவலி. இத்தனை திருகுவலிகள்தான் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு விடுமுறை தேவையா என்கிற கேள்வியையும் முன்வைக்கிறது.

பணி இடங்களைப் பெண்களுக்கான மாதவிடாய் காலத்துக்கு உகந்ததாக மாற்ற வேண்டும்.
ஓவியா (செயற்பாட்டாளர்)

இதுகுறித்து நம்மிடம் கருத்து பகிர்ந்துகொண்ட செயற்பாட்டாளர் ஓவியா, ``சமீபத்தில், ராணுவத்தில் பெண் கமாண்டோக்கள் தேவையில்லை என ராணுவ வீரர்கள் எழுப்பிய கருத்து தொடர்பாக, ஒரு வழக்கு உச்ச நீதிமன்றம் வரை வந்தது. அதில், பெண்களின் உடல் இயல்பு ஆண்களின் உடல் இயல்பு போல இல்லை என்பதால், அவர்கள் ராணுவத்தில் இருப்பது சிக்கலாக இருக்கிறது என்கிற ரீதியில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. ஏற்கெனவே, பெண்களை எப்படி பணி இடங்களிலிருந்து ஓரங்கட்டலாம் எனத் திட்டம்தீட்டிக்கொண்டிருக்கும் இதுபோன்ற மக்களுக்கிடையே, மாதவிடாய் கால விடுமுறை என்பது இன்னும் அவர்களின் திட்டங்களை எளிதாக்கும். அதனால், மாதவிடாய் கால விடுமுறையை நான் ஆதரிக்கப் போவதில்லை. அதற்குப் பதில், பணி இடங்களைப் பெண்களுக்கான மாதவிடாய் காலத்துக்கு உகந்ததாக மாற்ற வேண்டும். பெண்களுக்கான ஓய்வறைகள் பணியிடங்களில் அவசியம்."

Representational Image
Representational Image

``சக பெண் ஊழியருக்கு மாதவிடாய் என்றால், அதைப் புரிந்துகொண்டு செயல்படும் நட்புறவைப் பணியிடங்களில் உருவாக்க வேண்டும். மேலும், ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு வகையான உடல் இயல்பு இருக்கிறது. அதனால் அத்தனை பெண்களுக்கும் மாதவிடாய் காலத்தில் விடுமுறை தேவைப்படாது. விடுமுறை எடுத்துக்கொண்டு வீட்டில் இருந்தால், வீட்டு வேலைகள் அலுவலக வேலைகளைவிட இன்னும் அதிகமாக இருக்கும். வீட்டில் இருக்கும் அல்லது யாரும் அந்தப் பெண்ணிடம் பேசாமல் மூன்று நாள்கள் தீட்டென்கிற பெயரில் ஒதுக்கி வைக்கும் அவலம் நடக்கும். ஏற்கெனவே உதிரப்போக்கால் மன அழுத்தத்தில் இருக்கும் அவளுக்கு, இது இன்னும் கூடுதல் அழுத்தமாகவே இருக்கும். அவளை மாதவிடாய் காலத்தில் ஒதுக்காமல் அரவணைக்கும் சூழல் வீட்டிலும் தேவை. அதனால் மாதவிடாய் கால விடுமுறைக்கு திட்டவட்டமாக `நோ’ ” என்கிறார்.

ஒரு சுழற்சியில், அதாவது அந்த மூன்று முதல் ஏழு நாள்களில் அதிகபட்சமாக நமது உடலிலிருந்து 50 மில்லி வரையிலான ரத்தம் வெளியேறும்.
மருத்துவர் அனுரத்னா

மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவரும், பொன்னேரி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவருமான அனுரத்னா கூறுகையில், ``நானும் பீரியட்ஸ் லீவு வேண்டாம் என்றுதான் சொல்லுவேன். ஒரு சுழற்சியில், அதாவது அந்த மூன்று முதல் ஏழு நாள்களில் அதிகபட்சமாக நமது உடலிலிருந்து 50 மில்லி வரையிலான ரத்தம் வெளியேறும். அந்த வேலைகளில் தேவையான அளவு தண்ணீர் குடித்தாலே நமது உடலுக்குப் போதுமானது. மாதவிடாய் கால விடுமுறை என்பது ஏற்கெனவே நம்மை ஒதுக்கிவைப்பவர்களுக்கு இன்னும் அவற்றை எளிதாக்கிவிடும்” என்கிறார்.

மாதவிடாய்... அறிந்ததும் அறியாததும்! A to Z தகவல்கள் #HappyPeriods #AllAboutMenstruation

பெண்களே! வாருங்கள் விவாதிப்போம். உங்களது மாதவிடாய் காலங்கள் உங்களுக்கு எப்படி இருக்கும்? அந்தச் சமயங்களில் என்ன மாதிரியான பிரச்னைகளை எதிர்கொண்டீர்கள்? பணி இடங்களில் மாதவிடாய் கால விடுமுறை தேவையா? உங்கள் கருத்து என்ன? கீழே கமென்ட்டில் பதிவிடுங்கள்.

அடுத்த கட்டுரைக்கு