Published:Updated:

மகளிர் ஆணையத் தலைவியே இப்படிச் செய்யலாமா? - ஸ்வாதி மலிவாலால் ஏற்பட்ட சர்ச்சை!

ஆ.சாந்தி கணேஷ்

உணர்ச்சிவசப்பட்டு இந்த வீடியோவை வெளியிடுகிற அளவுக்கு ஸ்வாதி ஒரு சராசரிப் பெண்ணும் கிடையாது.

ஸ்வாதி மலிவால்
ஸ்வாதி மலிவால்

சமீபகாலமாக, பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் வன்முறைகள் பெருகிக்கொண்டே இருக்கின்றன. பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் வன்கொடுமைகள் ஒருபக்கம் என்றால், இன்னொரு பக்கம் 'பொள்ளாச்சி பாலியல் குற்றச் சம்பவ'த்தில் அரசு உத்தரவில் புகார் கொடுத்த பெண்ணின் பெயரையே வெளியிட்டது, பாதிக்கப்பட்டப் பெண்கள், அதைப் பற்றி புகார் அளிக்கக்கூடாது என்று மிரட்டுவதாக இருந்தது என மொத்த சமூகமும் கொந்தளித்தது.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை

இந்த நிலையில், டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவரான ஸ்வாதி மலிவால், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில், ஒரு சின்னஞ்சிறு சிறுமியை ஒரு வயதான ஆண் பாலியல் வன்கொடுமை செய்கிறான். அந்த வீடியோவை டெல்லி காவல்துறைக்கு டேக் செய்த ஸ்வாதி மலிவால், ''இந்த வீடியோவைப் பார்த்தால் பயத்தில் எலும்புகள் ஜில்லிடுகின்றன. டெல்லி காவல்துறையினர் உடனடியாக இந்த வக்கிரம் பிடித்தவனைக் கைதுசெய்து, அவன்மீது வழக்குப்பதிவு செய்யுங்கள். அந்த ஆணுக்கு, அந்தச் சிறுமியின் தாத்தா வயதிருக்கும். பொதுமக்கள் இந்தக் கயவனைக் கண்டுபிடிக்க காவல்துறைக்கு உதவுங்கள். இவன் தண்டிக்கப்பட வேண்டியவன்'' என்று கோபப்பட்டிருந்தார்.

ஸ்வாதியின் ட்வீட்டுக்கு கருத்துத் தெரிவிக்கும் வகையில் `` 'இந்த வீடியோவில் இருக்கிற நபரை ஏற்கெனவே கைது செய்துவிட்டார்கள்' என சில கமென்ட்டுகளும் இருந்தன. அதிகரித்துவிட்ட பாலியல் குற்றங்களில் ஒரு மகளிர் ஆணயத்தின் தலைவிக்கு , எந்தக் குற்றவாளி கைது செய்யப்பட்டான், எந்தக் குற்றவாளி தண்டிக்கப்பட்டான் என்பதில் வேண்டுமானால் குழப்பம் வரலாம். ஆனால், பாதிக்கப்பட்ட அந்தக் குழந்தையின் முகம் தெரிகிற (அது முழுமையாகத் தெரிந்தாலும் சரி, மங்கலாகத் தெரிந்தாலும் சரி) வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிடுவது எந்த வகையில் சரி ? உணர்ச்சிவசப்பட்டு இந்த வீடியோவை வெளியிடுகிற அளவுக்கு ஸ்வாதி ஒரு சராசரிப் பெண் கிடையாது. பொள்ளாச்சி சம்பவத்தில் புகார் தந்த பெண்ணின் பெயரை வெளியிட்டவர்களுக்கும் டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவி ஸ்வாதி மலிவாலுக்கும் என்ன வித்தியாசம்?'' என சிலர் கோபமாகக் கேள்விகளை அடுக்கினர்.

ஸ்வாதி மலிவால்
ஸ்வாதி மலிவால்

இதனால் சர்ச்சை ஏற்பட, சிறிது நேரத்துக்கு முன் அந்த வீடியோவை டெலிட் செய்தார் ஸ்வாதி. மேலும், ``அந்தக் குற்றவாளி கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்றும், அவர் யார் என அடையாளம் காணப்பட வேண்டும் என்றே அந்த வீடியோவை வெளியிட்டேன். ஆனால், இப்போது அதை நீக்கிவிட்டேன். நான் செய்தது யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய நோக்கம் அந்தக் குழந்தைக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே" என்று கூறியுள்ளார் ஸ்வாதி.