Published:Updated:

`மனு இல்லைன்னா... அதான் சுப்பையா இருக்காரே!' - பா.ஜ.க உணர்த்துவது இதைத்தானா? #VoiceOfAval

சுப்பையா
சுப்பையா

`பெண்களிடம் இழிவாக நடந்துகொள்பவர்களுக்கு இங்கு பாதுகாப்பும் பதவியும் தரப்படும்!' - பா.ஜ.க இதைத்தான் பெண்களுக்கு சொல்ல விரும்புகிறதா?

``தோப்பூரில் அமையவுள்ள மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் உறுப்பினராக ABVP அமைப்பைச் சேர்ந்த சுப்பையா சண்முகத்தை நியமித்திருப்பது அவர் செய்த இழிவு செயலுக்காகக் கொடுக்கப்படும் பரிசா?''- மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசனின் கேள்வி இது. தமிழ்நாட்டுப் பெண்கள் பலரின் கொதிப்பான கேள்வியும் அதுவே.

கடந்த ஜூலை மாதம், சென்னை நங்கநல்லூர் அப்பார்ட்மென்ட்டில் தனியாக வசித்து வந்த பக்கத்து வீட்டுப் பெண்ணுடன் ஏற்பட்ட கார் பார்க்கிங் பிரச்னையில், அவர் வீட்டு வாசலில் சிறுநீர் கழித்தவர் சுப்பையா சண்முகம். அதற்கான சிசிடிவி காட்சிகள் ஆதரமாக இணைக்கப்பட்டு அவர்மீது காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவர் சிறுநீர் கழித்த வீடியோ சோஷியல் மீடியாவில் பரவி கண்டனங்கள் வலுத்த பிறகே, இரண்டு வாரங்கள் கழித்து அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. தாமதத்துக்குக் காரணம்..? சுப்பையா சண்முகத்தின் சமூக, அரசியல் அடையாளங்கள்.

டாக்டர் சுப்பையா சண்முகம், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை கல்லூரியில் புற்றுநோயியல் சிகிச்சை மருத்துவர். பா.ஜ.க-வின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி (ABVP - Akhil Bharatiya Vidyarthi Parishad (ABVP)-ன் தேசியத் தலைவர். ஆம்... இத்தனை கீழ்த்தரமாக நடந்துகொண்டவர் ஒரு மருத்துவர், ஒரு தேசியக் கட்சியின் மாணவர் அமைப்பின் தலைவர். என்ன படிப்பு, பதவி பெற்றாலும், பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் ஏற்பட்ட தகராறில் இந்தளவுக்கு அநாகரிகமாக நடந்துகொள்வது, அவர் மனவக்கிரத்தின் வெளிப்பாடு.

காலியாக இருந்த தன் பார்க்கிங் ஏரியாவை சுப்பையா சண்முகம் பயன்படுத்தியதை அடுத்து அவரிடம் வாடகையாக மாதம் 1,500 ரூபாய் கேட்டுள்ளார் சம்பந்தப்பட்ட பெண். அதில் ஆரம்பித்த பிரச்னையில், அந்தப் பெண்ணின் வாசலில் குப்பையைக் கொட்டியுள்ளார் சுப்பையா சண்முகம். அதைத் தொடர்ந்து தன் வீட்டு வாசலில் அந்தப் பெண் சிசிடிவி கேமராவை பொருத்த, சுப்பையா சண்முகம் அந்தப் பெண்ணின் வீட்டு வாசலில் சிறுநீர் கழித்த காட்சி சிசிடிவி கேமராவில் பதிவானது.

சிசிடிவியில் பதிவான காட்சி
சிசிடிவியில் பதிவான காட்சி

1,500 ரூபாய் பார்க்கிங் வாடகை கொடுப்பது ஒரு மருத்துவருக்குப் பெரிய பொருட்டா என்ன? ஆனால், ஒரு பெண் கேட்டு தான் கொடுப்பதா என்ற ஆணாதிக்கத் திமிர்தான், அந்தப் பெண்ணின் வாசலில் ஒரு மருத்துவரை குப்பைகொட்ட வைக்கிறது, சிறுநீர் கழிக்க வைக்கிறது. எத்தனை படித்தாலும், ஓர் ஆணின் மனதில் பெண் என்பவள் அவனை கேள்விகேட்கத் தகுதியற்ற அடிமை என்ற கேவலமான எண்ணம் அகலவில்லை எனில், அந்தப் படிப்பால் என்ன பயன்?

`சுப்பையா சண்முகத்தின் மீது தமிழக சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், பதவிநீக்கம் செய்ய வேண்டும்' என்று எழும்பிய குரல்களால், அரசியல் அடுக்குப் பாதுகாப்புத் தாண்டி அவரை நெருங்க இயலவில்லை. இதற்கிடையில், புகார் அளித்த பெண்ணுக்கு சமூக அழுத்தங்கள், மற்றும் அப்பார்ட்மென்ட் தரப்பிலிருந்தும் அழுத்தங்கள் வந்தன. சிலர் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த, இருதரப்பும் சமாதானமாகப் போய்விடுவது, பிரச்னையை பேசித் தீர்த்துக்கொள்வது என முடிவெடுக்கப்பட்டு, சுப்பையா சண்முகமும் அப்பெண்ணும் போலீஸில் எழுதியும் கொடுத்தனர்.

பாதிக்கப்பட்ட பெண் பல்வேறு அழுத்தங்களின் காரணமாக `சமாதானமாக' சென்றுவிட்டதால், சுப்பையா சண்முகத்தின் குற்றங்கள் கழுவப்பட்டு அவர் புனிதர் ஆகிவிட்டாரா?

Narendra Modi
Narendra Modi

ஒரு பெண்ணை அவமானப்படுத்த, நினைத்துப்பார்க்கவும் முடியாத கீழ்மையைச் செய்த ஓர் ஆணுக்கு, பாதுகாப்பும் பதவியும் கொடுக்கும் அவர் சார்ந்த கட்சிக்கு சில கேள்விகள். `பெண்களின் முன்னேற்றத்துக்காக எப்போதும் நிற்போம்' என்று மீண்டும் மீண்டும் பாடிக்கொண்டிருக்கிறது பாரதிய ஜனதா கட்சி. ஆனால், பெண்களை இழிவுபடுத்தும் விவகாரங்களுக்கு மீண்டும் மீண்டும் துணைபோவதும், இழிவுபடுத்துபவர்கள் மீது தூசு, துரும்பு படாமல் காத்து நிற்பதும், மேலும் அவர்களுக்குப் பதவிகள் கொடுத்து மனம் குளிர்விப்பதையும்தான் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறது.

சிசிடிவி காட்சிகள் வெளியானபோது, அதை முன்வைத்து சுப்பையா சண்முகம் மீதான குற்றச்சாட்டு பற்றி கேட்டபோது, `சிறுநீர் கழிக்கும் வீடியோவில் இருப்பது மருத்துவர் சுப்பையா அல்லர், அது போலியான வீடியோ' என ஏ.பி.வி.பி-யிடம் இருந்து விளக்கம் வந்தது. போலியான வீடியோவுக்கு பயந்துதான் சுப்பையா சண்முகம் சமாதானப் பேச்சுவார்த்தைக்குச் சென்றாரா? சுப்பையா சண்முகம் தலைவராக இருக்கும் மாணவர் அமைப்புக்கு, இப்படியான ஒரு தலைமையின் மூலம் நீங்கள் உணர்த்த விரும்புவது என்ன? `போலியான' வீடியோக்களை எப்படி `எதிர்கொள்வது' என்ற பயிற்சியைத்தான் அந்த அமைப்பில் உள்ள மாணவர்களுக்கும் அவர் தந்துகொண்டிருக்கிறாரா?

இந்த சர்ச்சை நடந்துமுடிந்து நான்கே மாதங்கள்தான் ஆகின்றன. அதற்குள் இப்போது, மதுரை, தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் உறுப்பினர் குழுவில் சுப்பையா சண்முகத்தை நியமித்துள்ளது மத்திய அரசு. எம்.ஜி.ஆர் மருத்துவக் கல்லூரியின் துணை வேந்தர், டாக்டர் சுதா சேஷய்யனும் இந்தக் குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர் உட்பட, இந்தப் பணியில் இவருடன் சேர்ந்து பணியாற்றவுள்ள பெண்கள், ஆண்கள் அனைவரும் சுப்பையா சண்முகத்தின் நியமனம் குறித்த தங்கள் எதிர்ப்பை, தமிழகப் பெண்களின் சார்பாக எடுத்துரைக்க வேண்டும்.

மருத்துவர் சுப்பையா
மருத்துவர் சுப்பையா
அதே அரசியல், அதே நாடகம்... உங்கள் மேல் பரிதாபம்தான் வருகிறது குஷ்பு! #VoiceOfAval

`எங்களைப் பொறுத்தவரை, பெண்களிடம் அநாகரிகமாக நடந்துகொள்வது பண்பிழுக்கு அல்ல. அப்படி நடந்துகொள்பவர்கள் பாராட்டுக்கு உரியவர்கள்; தலைமைத் தகுதி பெற்றவர்கள்.

மனு என்பது புத்தகமாக இல்லைதான்; ஆனால் அரசியல் நிர்ணயத்துக்குட்பட்ட அரசு நிர்வாக அடுக்குகளில் நிறைந்திருக்கிறது.

பெண்களை இழுவுபடுத்துபவர்களை நாங்கள் போற்றுவோம்.

எத்தனை கூச்சல் போடமுடியுமோ போட்டுக்கொள்ளுங்கள்.'

- எதிர்க் குரல்களுக்கு மத்திய அரசின் அதிகார மௌனத்தின் மொழிப்பெயர்ப்பு இதுவாகத்தானே இருக்க முடியும்?

ஒரு தனி நபருக்கு, இத்தனை எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் ஆதரவு பலப்படுத்தப்படுகிறது என்றால், நாளை, பெண்களை இழிவுபடுத்துதுவது ஒரு பொருட்டேயல்ல, அவ்வாறு செய்பவர்களுக்கும் இதே ஆதரவு தரப்படும் என்ற ஆணவம் பலப்படுத்தப்படுகிறதே என்றே அர்த்தம். அதை உடைக்க, குரல்கள் இன்னும் ஓங்கி ஒன்றிணைய வேண்டும்.

ஒலிப்போம்.

- அவள்

இது பெண்களின் வாதத்தை பொதுச்சமூகத்தின் முன் வைக்கும் `அவளின் குரல்'. பெண்கள் பிரச்னைகளின் பேசாபொருளை மக்கள் முன் எடுத்துவைப்பதற்கான அவள் விகடனின் புதிய முன்னெடுப்பு!
அடுத்த கட்டுரைக்கு