Published:Updated:

`இதுதான் என் அம்மாவின் உயிருக்கான விலை!'- நெகிழ்ந்த ஹாரிபாட்டர் ஆசிரியர் ஜே.கே.ரெளலிங்

சு.சூர்யா கோமதி

என் அம்மா போன்று ஆயிரக்கணக்கானவர்களை நான் காப்பாற்றியுள்ளேன்.

மருத்துவமனை
மருத்துவமனை

இளம் வயதில் தனது தாயை இழந்தது, கணவரால் கைவிடப்பட்டது, என நிறைய சிக்கல்களை எதிர்கொண்டவர் `ஹாரிபாட்டர்' புத்தகத்தின் ஆசிரியர் ஜே.கே ரெளலிங். அவரின் அம்மா, மரபு சார்ந்த நரம்பியல் பிரச்னைக்கு ஆளான போது சிகிச்சைக்குப் போதிய வசதியின்றி தன் தாயை இழந்தவர். வறுமை ஒருபுறம் தாயின் இழப்பு ஒருபுறம், சிங்கிள் மதராக குழந்தைகளை வளர்க்க வேண்டிய பொறுப்பு எனப் பல்வேறு சிக்கல்களைக் கடந்தவர்.

ஜே.கே ரெளலிங்
ஜே.கே ரெளலிங்

தனது மனதில் உதித்த கற்பனையை, கதைகளாக உருவாக்கிய ரெளலிங்கின் படைப்புகள் ஆரம்பத்தில் பல்வேறு பதிப்பகங்களால் நிராகரிக்கப்பட்டன. எனினும் ஹாரிபாட்டர் புத்தகம் வெளிவந்த பின், ரெளலிங்கின் நிலையே மாறிப்போனது. ஹாரிபாட்டர் கதைகளை மக்கள் கொண்டாடினர். ஹாரிபாட்டரின் கடைசிப் பகுதி விற்பனைக்கு வந்தபோது, ஒரு மணிநேரத்தில் ஒரு கோடி புத்தகங்கள் விற்பனையாகி சாதனை படைத்தது. சாப்பாட்டிற்கே சிரமப்பட்டு வந்த ரெளலிங் உலகப் பணக்காரர்களின் பட்டியலில் இடம் பிடித்தார்.  

மருத்துவமனைக்கான நிதியுதவி:

ஹாரிபாட்டர் புத்தகங்கள் நல்ல வரவேற்பு பெற்ற அடுத்த சில தினங்களிலேயே தன்னுடைய தாயின் நினைவாக `ஆன் ரெளலிங் நரம்பியல் மருத்துவமனை' என்ற மரபு சார்ந்த பிரச்னைகளுக்குத் தீர்வுகாணும் மருத்துவமனை ஒன்றை எடின்பரோ பல்கலைக்கழகத்தில் உருவாக்கினார். அதற்காக 2010-ம் ஆண்டு 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் எடின்பரோ பல்கலைக்கழகத்திற்கு நிதியுதவியாக வழங்கினார்.

சரியான வழிகாட்டுதல், போதிய நிதியுதவி இல்லாததால் 45 வயதில் என் அம்மா இறந்தார்.
ஜே.கே.ரெளலிங்
Vikatan

கடந்த ஒன்பது ஆண்டுகளில் `ஆன் ரெளலிங்  நரம்பியல் மருத்துவமனை, எடின்பரோ பல்கலைக்கழகத்தில் நல்ல வளர்ச்சி அடைந்துள்ள நிலையில் தற்போது மீண்டும் 15 மில்லியன் அமெரிக்க டாலர்களை எடின்பரோ பல்கலைக்கழகத்திற்குக் கொடுத்து ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளார் ரெளலிங். இது குறித்து ரெளலிங் வழங்கியுள்ள பேட்டியில், ``என் அம்மாவிற்கு மரபு சார்ந்த நரம்பியல் நோய் தாக்கியபோது, அது என்னவென்று கண்டுபிடிக்கவே பல நாள்கள் தேவைப்பட்டது. நோய் பாதிப்பு அதிகமான பின்தான் அதற்கான மருந்துகளை என் அம்மா எடுத்துக்கொள்ள ஆரம்பித்தார். சரியான வழிகாட்டுதல், போதிய நிதியுதவி இல்லாததால் 45 வயதில் என் அம்மா இறந்தார். அதுபோன்ற நிலை வேறு யாருக்கும் வரக்கூடாது என்பதற்காகத்தான் இந்த மருத்துவமனையை உருவாக்க நிதியுதவி வழங்கினேன்.

பல்கலைக்கழகத்தில் மருத்துவமனை தொடங்கப்பட்ட போது இந்த அளவு வளர்ச்சியிருக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவே இல்லை. மருத்துவமனையின் வளர்ச்சி என்னைப் பெருமைப்படுத்தியுள்ளது. பல மாணவர்களுக்கும் உதவியாக இருந்துள்ளது. போதிய பணமும், விழிப்புணர்வும் இல்லாததால் அன்று என் அம்மாவைக் காப்பாற்ற முடியவில்லை. ஆனால், இன்று என் அம்மா போன்ற ஆயிரக்கணக்கானவர்களைக் காப்பாற்ற உதவி உள்ளேன்.

harry potter
harry potter

இப்போது நான் ஒதுக்கியுள்ள 15 மில்லியன் அமெரிக்க டாலரில் நரம்பியல் சார்ந்த ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றை எடின்பரோ பல்கலைக்கழகத்தில் தொடங்க உள்ளோம். இதன்மூலம் இன்னும் லட்சக்கணக்கான மாணவர்கள் பயனடைவார்கள். நரம்பியல் நோய் சார்ந்த அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வும் கிடைக்கும். மேலும், புது ஆராய்ச்சிகள் மேற்கொள்ளவும் பேராசிரியர்கள் திட்டமிட்டுள்ளார்கள். எந்தநிலையில் நோயாளி வந்தாலும் அவர்களுக்கான சிகிச்சை வழங்கப்பட வேண்டும். அவர்களின் உயிர் காப்பாற்றப்பட வேண்டும். ஆயிரக்கணக்கான மாணவர்கள் பலனடைய வேண்டும் என்பதுதான் என்னுடைய லட்சியம். பணம் இல்லாததால் என் அம்மாவைக் காப்பாற்ற முடியவில்லை. ஆனால், நான் செய்யும் சேவைதான் என் அம்மாவின் உயிருக்கான விலை" என்று கண்கலங்கியுள்ளார் ரெளலிங்.