Published:Updated:

`வீட்டுல கழிப்பறையில்ல; காட்டுக்குத் தூக்கிட்டுப் போகணும்!' - மாற்றுத்திறனாளி மகளின் அம்மா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மாற்றுத்திறனாளி மகளுடன் காளியம்மாள்
மாற்றுத்திறனாளி மகளுடன் காளியம்மாள்

``வயசாகிப்போனதால, இப்பவெல்லாம் அவளை என்னால இடுப்புல தூக்கி வெச்சிக்கிட்டுப் போக முடியலை. அவளா தவழ்ந்துகிட்டே பக்கத்துல இருக்குற காட்டுக்குக் கஷ்டப்பட்டு போயிட்டு வந்துடுறா. ரொம்ப முடியலைன்னா, உறவுக்காரங்க உதவியோட தூக்கிட்டுப் போவோம்.''

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே வலங்கொண்டான் விடுதியிலிருக்கிறது மாற்றுத்திறனாளி பாக்கியத்தின் குடிசை வீடு. பாக்கியம் போலியோவால் பாதிக்கப்பட்டவர். இடது கையும் இரண்டு காலும் முடங்கிப் போய்விட்டது. தன் வலது கையைத் தரையில் ஊன்றி தவழ்ந்துகொண்டே ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குச் சென்று வருகிறார்.

இயற்கை உபாதை காரணங்களுக்காக, தினமும் பாக்கியத்தை இடுப்பில் தூக்கி வைத்து, திறந்தவெளிக்குக் கூட்டிச் சென்று வந்தார் அவரின் அம்மா காளியம்மாள். இப்போது, தன் வயோதிகத்தின் காரணமாக அவரால் பாக்கியத்தை இடுப்பில் தூக்கிச் சுமக்க முடியாத நிலை. வீட்டில் கழிப்பறை வசதி இல்லாததால் தினமும் திறந்த வெளிக்குச் சென்று வர பெரும் போராட்டத்தைச் சந்தித்து வருகிறார் பாக்கியம்.

மாற்றுத்திறனாளி மகளுடன் காளியம்மாள்
மாற்றுத்திறனாளி மகளுடன் காளியம்மாள்

பாக்கியத்துக்கு வயது அதிகரிக்க அதிகரிக்க, காளியம்மாளுக்குத் தன் மகளின் எதிர்காலம் குறித்த பயமும் கூடுகிறது. கணவரை இழந்த காளியம்மாள், மாற்றுத்திறனாளி மகளை எப்படிக் கரை சேர்க்கப் போகிறோம் என்பது தெரியாமல் தவித்துவருகிறார்.

காளியம்மாளிடம் பேசினோம். ''பொறந்த கொஞ்ச நாள்லேயே போலியோ எம்புள்ளைய முடக்கிப்போட்டிருச்சு. நடக்கக்கூட முடியாம முடங்கிக்கிடக்கிறாள்.

அவளோட சேர்ந்து நானும் கஷ்டப்பட்டுக்கிட்டு கெடக்குறேன். காட்டுக்குப் போகணும்னா, இடுப்புல தூக்கி வெச்சிக்கிட்டுதான் கூட்டிக்கிட்டு போயிட்டு வரணும். வெளிய எங்க கூட்டிக்கிட்டு போகணும்னாலும் இதே நிலைமைதான். பள்ளிக்கூடம் எல்லாம் படிக்க வைக்கணும்னு ரொம்ப ஆசைதான். ஆனா, அது முடியாமலே போயிருச்சு. தினமும் இடுப்புல தூக்கி வெச்சிக்கிட்டு கொண்டு போய் விட்டுட்டு, மறுபடியும் கூட்டிக்கிட்டு வர என்னால முடியாதே.

நாமளே அன்னாடங்காச்சிக, தெனமும் கூலி வேலைக்குப் போனாதான் சாப்பிடவே முடியும். அதனால படிக்க வைக்க முடியாமலே போயிருச்சு. அடிக்கடி பாக்கியத்துக்கு உடம்பு முடியாம வந்திடும். வைத்தியச் செலவுக்கு கையில கொஞ்சம் காசு எப்பவும் சேர்த்து வெச்சிக்கிடணும்.

வீட்டுக்காரர் இறந்து பத்து வருஷம் ஆச்சு. வீட்டுக்காரர் இருந்த வரைக்கும் எனக்குப் பெருசா கஷ்டம் இல்லை. மகளைத் தூக்கப் பிடிக்கக்கொள்ள ரொம்பவே உதவி பண்ணுவாரு. அவரு இறந்ததுக்கு அப்புறம் எல்லாம் தலைகீழா மாறிருச்சு. கஷ்டத்துக்குப் பஞ்சமில்லாமப் போயிருச்சு. பாக்கியத்தை வெச்சிக்கிட்டு எல்லாத்துக்கும் ரொம்பவே கஷ்டப்பட்டேன். அப்பதான், வீட்டுக்கு முன்னால சின்னதா ஒரு டீக்கடை வெச்சேன். கூலி வேலைக்குப் போயிட்டு வந்து தினமும் 5 லிட்டர் பால் வாங்கி, டீ போட்டு ஓட்டுவேன். பெருசா இல்லாட்டியும் ஏதோ செலவுக்கு உதவும்.

பாக்கியம்
பாக்கியம்

இப்போ எனக்கும் வயசாகிப்போச்சு, கூலி வேலை எல்லாம் பெருசா பார்க்க முடியல. கடையிலயும் பெருசா வியாபாரம் இல்ல. 2 லிட்டர் பால் ஓடுறதே பெரும்பாடா இருக்கு.

இப்ப எல்லாம் அவளை என்னால இடுப்புல தூக்கி வெச்சிக்கிட்டுப் போக முடியல. அவளா தவழ்ந்துகிட்டே பக்கத்துல இருக்குற காட்டுக்குக் கஷ்டப்பட்டுப் போயிட்டு வந்திடுறா. ரொம்ப முடியலைன்னா, உறவுக்காரங்க உதவியோட தூக்கிட்டுப் போவோம். ரெண்டு பேர், மூணு பேரா சேர்ந்து தூக்கிக்கிட்டுப் போய் கூட்டிக்கிட்டு வருவோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பாக்கியம் கஷ்டப்படுறதை பார்த்துட்டு எப்படியாவது கழிப்பறையக் கட்டிப்புடுவோம்னு பல வருஷமா போராடுறேன். இதுவரைக்கும் முடியல. ஒரு லிட்டர் பால் ஓடுனாலும், இந்த டீக்கடைதான் இப்போ சோறு போட்டுக்கிட்டு இருக்கு. இந்த டீக்கடையை சீரமைச்சு, அதோட சேர்த்து சின்னதா ஒரு பெட்டிக்கடை ஆரம்பிக்கணும்.

பாக்கியத்துக்கும் 30 வயசாகிப்போச்சு. அவளுக்கு ஒரு வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு. அவ ஒருத்திக்காகத்தான் உசுர கையில புடிச்சிக்கிட்டு வாழ்ந்துக்கிட்டு இருக்கேன். இப்பவும், எனக்கு அப்புறம் அவ வாழ்க்கை என்னாகுமோன்னு நெனச்சு பயம் மனசுக்குள்ள இருந்துக்கிட்டேதான் இருக்கு. என் உசுரு போறதுக்குள்ள அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுத்திடணும்ங்கிற வைராக்கியத்தோட வாழ்ந்துக்கிட்டு இருக்கேன்" என்கிறார் அந்த அம்மா தவிப்புடன்.

மாற்றுத்திறனாளி மகளுடன் காளியம்மாள்
மாற்றுத்திறனாளி மகளுடன் காளியம்மாள்

மாற்றுத்திறனாளி பாக்கியத்தின் நிலை குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். உடனே, அரசு அதிகாரிகளைப் பாக்கியத்தின் வீட்டிற்கு அனுப்பி வைத்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தனர். தற்போது பாக்கியத்திற்கு மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்று சக்கர சைக்கிள் கிடைத்துள்ளது. அதோடு, SBM phase ll மூலம் உடனே பாக்கியத்திற்குக் கழிப்பறை கட்டிக்கொடுப்பதாக உறுதியளித்திருக்கின்றனர். ''மகளோட கஷ்டத்துக்கு விடிவு காலம் கிடைக்கப் போகிறதுங்கிறது மனசுக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு. அதோட சின்னதா ஒரு பெட்டிக்கடை வச்சிட்டா போதும் ரெண்டு பேரும் உழைச்சு பிழைச்சுக்குவோம்" என்கிறார் தன்னம்பிக்கையுடன் காளியம்மாள்.

இந்த இரு பெண்களின் இன்னல்களுக்கும் வெளிச்சம் கிடைக்கட்டும் விரைவில்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு