Published:Updated:

புதுக்கோட்டை: ஒதுக்கப்பட்ட பெண் ஒன்றிய பெருந்தலைவர்... கண்டித்து உத்தரவிட்ட உயர் நீதிமன்றம்!

பெண் ஒன்றிய பெருந்தலைவர் மாலா
பெண் ஒன்றிய பெருந்தலைவர் மாலா

''பதவியேற்ற நாள் முதல், கறம்பக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் என்னை மதிப்பதில்லை, அரசு நிகழ்வுகளுக்கு அழைப்பதில்லை.''

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஒன்றியக்குழு தலைவர் மாலா ரஜேந்திரதுரை தி.மு.க வேட்பாளாரகப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இந்நிலையில், தான் பெண் என்பதாலும், எதிர்கட்சியைச் சேர்ந்தவர் என்பதாலும் அதிகாரிகள் உதாசீனப்படுத்தி, புறக்கணிப்பதாக மதுரை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதிகள், "இனிவரும் காலங்களில் அரசாணையின் அடிப்படையில் அரசு விழாவின்போது பஞ்சாயத்து யூனியன் சேர்மனை முறையாக அழைப்பிதழ் வழங்கி அழைத்து அரசு விழா நடத்த வேண்டும்" என உத்தரவிட்டுள்ளனர்.

மாலா ராஜேந்திரன்
மாலா ராஜேந்திரன்

இது குறித்து யூனியன் சேர்மன் மாலாவை தொடர்புகொண்டு பேசினோம். "கறம்பக்குடி ஒன்றிய பஞ்சாயத்தில் 2019-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில், கறம்பக்குடி ஒன்றிய பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிபெற்று 2020-ம் ஆண்டு பதவி ஏற்றுக்கொண்டேன். 2020 ஜூன் 7-ம் தேதி கறம்பக்குடி ஒன்றிய பஞ்சாயத்து கவுன்சிலர் கூட்டம் நடைபெற்றது. இதில் 80 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், கறம்பக்குடி ஒன்றிய பஞ்சாயத்து வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் கிராம வட்டார வளர்ச்சி அலுவலராகப் பணியாற்றுபவர்கள் எனக்குத் தகவல் தெரிவிக்காமல் 78, 79, 80 ஆகிய தீர்மானங்களை மாற்றி புதிய தீர்மானங்களை வைத்துள்ளார். மேலும், பஞ்சாயத்துக்கு உட்பட்டு நடைபெறும் நிகழ்ச்சிகளில் எனக்கு அழைப்பு விடுப்பதில்லை. ரெகுலர் பி.டி.ஓ ரவி மற்றும் ஸ்கீம் பி.டி.ஓ காமராஜ் ஆகியோர் எனக்கு எந்தத் தகவலும் அளிப்பதில்லை. அரசு நிகழ்ச்சிகளில் அவர்களே ரிப்பன் வெட்டி திறப்பு விழா செய்துகொள்கின்றனர்.

நான் மக்கள் பிரதிநிதி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டேன். ஆனால், என்னை வேண்டும் என்றே அதிகாரிகள் புறக்கணிக்கின்றனர். நான் ஒரு பெண் என்பதாலும், எதிர்கட்சியைச் சேர்ந்த நபர் என்பதாலும்தான் இவ்வாறு என்னை அவமானப்படுத்துகின்றனர். நான் உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளேன் என்றால் எனக்கு எந்த அளவுக்கு நெருக்கடி கொடுத்திருப்பார்கள் என யோசித்துப் பாருங்கள்.

தற்போது உள்ளாட்சித் துறையில் கடும் ஊழல் உள்ளது. பிளீச்சிங் பவுடர், சானிடைசர் என எல்லாவற்றிலும் ஊழல் நடக்கிறது. ஓட்டு போட்ட மக்கள் முறையான குடிநீர், சாலை வசதி, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதியைத்தான் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், அதைக்கூட என்னை செய்துகொடுக்க விடாமல் அதிகாரிகள் தடுக்கின்றனர்" என வேதனை தெரிவித்தார்.

ஒதுக்கப்பட்ட ஒன்றியக் குழு  பெண் தலைவர் மாலா
ஒதுக்கப்பட்ட ஒன்றியக் குழு பெண் தலைவர் மாலா

நீதிமன்றத்தில் இவர் அளித்திருந்த மனு நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இனிவரும் காலங்களில் அரசாணையின் அடிப்படையில் அரசு விழாவின்போது பஞ்சாயத்து யூனியன் சேர்மனை முறையாக அழைப்பிதழ் வழங்கி அழைத்து அரசு விழா நடத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

ஒடுக்கப்படும் பெண்கள் சட்ட நடவடிக்கை மூலம் நீதி பெற, மாலாவின் முயற்சி முன் உதாரணமாக அமையட்டும்.

அடுத்த கட்டுரைக்கு