Published:Updated:

பிராமண அர்ச்சகரை திருமணம் செய்தால் 3 லட்சம்... கர்நாடக அரசின் புதிய திட்டத்தின் நோக்கம்தான் என்ன?

Marriage
Marriage

பெண்களுக்காக உருவாக்கப்படும் திட்டங்களின் நோக்கம், பெண் நலனாக இருக்க வேண்டும். இந்தத் திட்டங்களின் நோக்கம் என்ன?

கர்நாடக மாநில பிராமண முன்னேற்ற வாரியம், சுய சாதியில் திருமணம் செய்துகொள்ளும் மணப்பெண்களுக்காக அறிவித்திருக்கும் இரண்டு புதிய திட்டங்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றன.

கர்நாடக பிராமண முன்னேற்ற வாரியம் எடியூரப்பா அரசால் கடந்த வருடம் ஜூலை மாதம் நிறுவப்பட்டது. குறிப்பாக, பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதி ஏழைகளுக்காக பிரதமர் மோடியால் EWS (Economically Weaker Section) இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்ட பிறகு தொடங்கப்பட்டது. இந்த வாரியத்தினை பிஜேபியின் எடியூரப்பா அரசு தொடங்கிவைத்தாலும், வாரியம் தொடங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்தது 2018-19ம் ஆண்டு ஆட்சியில் இருந்த குமாரசாமி அரசு. இந்த வாரியத்திற்காக கிட்டத்தட்ட 25 கோடி ரூபாய் குமாரசாமி அரசால் ஒதுக்கப்பட்டது.

எடியூரப்பா
எடியூரப்பா

தற்போது கர்நாடக பிராமண முன்னேற்ற வாரியத்தின் அறிவிப்பின்படி, பிராமண சமூகத்தைச் சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழைப் பெண்கள், அதே சமூகத்தைச் சேர்ந்த ஆண்களை திருமணம் செய்தால் புதிய திட்டங்களான `அருந்ததி’ அல்லது `மைத்திரேயி’ திட்டங்களின் கீழ் உதவித்தொகை பெறலாம். `அருந்ததி' திட்டத்தின் மூலம் பிராமணப் பெண்களுக்கு 25,000 ரூபாயும், `மைத்திரேயி' திட்டத்தின் மூலம் அர்ச்சகராக இருக்கும் பிராமணரை திருமணம் செய்துகொள்ளும் பிராமணப் பெண்களுக்கு மூன்று லட்சம் ரூபாயும் வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கு சில நிபந்தனைகள் உள்ளன. விண்ணப்பிக்கும் பெண் பிராமண சமூகத்தில் பிறந்த ஏழையாக இருக்க வேண்டும். பிராமணரையே திருமணம் செய்துகொள்ள வேண்டும். மேலும், திருமணமானது அந்த மணப்பெண்ணின் முதல் திருமணமாக இருக்க வேண்டும். திருமணமான தம்பதி, குறிப்பிட்ட சில காலம் வரை திருமணத்திலிருந்து விலக மாட்டோம் என்கிற உறுதிமொழியை மேற்கொள்ள வேண்டும்.

முதற்கட்டமாக, திருமணம் ஆகும் வயதில் இருக்கும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த 500 பெண்கள் `அருந்ததி’ திட்டத்திற்காக வந்த விண்ணப்பங்களிலிருந்து வாரியத்தால் அடையாளம் காணப்பட்டுள்ளனர். `மைத்திரேயி’ திட்டத்திற்காக 25 பெண்கள் விண்ணப்பங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

குமாரசாமி
குமாரசாமி

கர்நாடகாவில் பிராமணர்களின் வாக்கு விகிதம் 5%. தற்போது பிஜேபி அரசால் அறிவிக்கப்பட்டிருக்கும் இந்தத் திட்டங்கள் அவர்களது வாக்கை பெறவே என்று விமர்சிக்கப்படுகிறது. ஏற்கெனவே கர்நாடக அரசு, மாலை நேர பூஜை நடத்த பயிற்சி எடுக்க விரும்பும் 8 முதல் 80 வயதுக்கு உட்பட்ட 4,000 பிராமணர்களுக்கு 500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை அறிவித்திருந்தது.

கடந்த சில மாதங்களில் மட்டும் கர்நாடகாவில் பாஜக அரசு சாதியை அடிப்படையாகக் கொண்ட மூன்று முக்கிய வாரியங்கள்/குழுக்களை அறிவித்திருக்கிறது. இதில், எடியூரப்பா சார்ந்த லிங்காயத்து சாதிக்கான குழுவும் அடங்கும். அதாவது, அரசே உயர் சாதியினைச் சேர்ந்தவர்களை அதிகாரத்துடன் கூடிய குழுக்களாக மாற்றிவருகிறது.

மேலும், வாரியத்தினால் வழங்கப்படும் இந்த அரசு நிதியானது சுயசாதி திருமணங்களை ஊக்குவிப்பதாக இருக்கிறது என்று கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

கர்நாடக அரசின் இந்தத் திட்டங்கள் பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் மற்றும் அகில இந்திய ஜனநாயக பெண்கள் சங்கத்தின் தேசிய துணைத் தலைவர் உ. வாசுகி அவர்களிடம் கேட்டோம்.

வாசுகி
வாசுகி

``பொதுவாக சமூக நலத் திட்டங்கள் பொருளாதார வரம்பு வைத்து உருவாக்கப்பட்டால் அனைத்து சாதி, மதங்களில் உள்ள ஏழைக் குடும்பங்களுக்கும் பயன்படும். சமூக நீதியை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படும்போது, ஒடுக்கப்பட்ட சமூகப் பகுதியினரின் முன்னேற்றத்துக்கு பங்களிப்பு செய்யும். இந்த இரண்டு அம்சங்களுக்கும் அப்பாற்பட்டு நலத் திட்டங்கள் உருவாக்கப்படும்போது, அதற்குரிய களத் தேவை நிலவ வேண்டும். இல்லையென்றால், வாக்கு வங்கிகளை உருவாக்கவும், சாதிய அணி திரட்டலை ஏற்படுத்தவுமே அது உதவும். குறுகிய அரசியல் ஆதாயம்தான் முன்னுக்கு வரும்.

இந்தத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள `குறிப்பிட்ட காலம் திருமணம் நீடிக்க வேண்டும்' என்கிற நிபந்தனை, குடும்ப வன்முறை நிகழ்ந்தாலும் பெண் சகித்துக்கொள்ள வேண்டும் என்ற நிலையை உருவாக்கும். மேலும், இந்த நிபந்தனை மனுஸ்மிருதியின் விதிகளை அடிப்படையாகக் கொண்டு அதனை நியாயப்படுத்துகிறது” என்றார்.

பெண்களுக்காக உருவாக்கப்படும் திட்டங்களின் நோக்கம், பெண் நலனாக இருக்க வேண்டும். இந்தத் திட்டங்களின் நோக்கம் என்ன? `அருந்ததி'யும் `மைத்திரேயி'யும் யாரின் நலனுக்காக வருகிறார்கள்?

அடுத்த கட்டுரைக்கு