Published:Updated:

`எங்க ஊருக்கு ரோடு போட்டாதான் கல்யாணம் பண்ணிப்பேன்!' - வைரலான ஆசிரியை வீடியோ; கோரிக்கையை ஏற்ற அரசு

``எங்கள் கிராமத்திலிருந்து 5 முதல் 7 கிலோமீட்டர் தூரம் வரை பயணப்பட்டு நயகொண்டா என்கிற இடத்தை அடையவேண்டும். அங்கிருந்துதான் பேருந்தில் ஏறி நகரங்களுக்குப் பயணப்படுவோம்.''

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``தன் கிராமத்திற்கு முறையான சாலை வசதியும், பேருந்துச் சேவையும் கிடைத்தால் மட்டுமே தான் திருமணம் செய்துகொள்வேன்" என்று அறிவித்திருக்கிறார் கர்நாடகாவைச் சேர்ந்த இளம் ஆசிரியை.

கர்நாடகாவின் தேவனகிரி மாவட்டத்தில் உள்ளது ஹெச்.ராம்புர் என்கிற ஒரு கிராமம். நீண்ட நாள்களாக இந்த கிராமத்திற்கு ஒழுங்கான சாலை வசதி இல்லாமலேயே இருக்கிறது. சாலை வசதி சரியாக இல்லாததால் இக்கிராமத்திற்கு பேருந்து சேவையும் கிடையாது. இந்த ஒரு காரணத்துக்காகவே சுற்றி உள்ள கிராமங்களில் இருக்கும் மக்கள் ஹெச்.ராம்பூர் கிராமத்தில் உள்ள குடும்பங்களோடு திருமண சம்பந்தம் வைத்துக்கொள்ளத் தயங்குவதாகச் சொல்லப்படுகிறது.

Road (Representational Image)
Road (Representational Image)
`மாணவர்கள் வறுமையில் இருக்காங்க!' - விருது தொகையில் மாணவர்களுக்கு செல்போன் வழங்கிய ஆசிரியை

இதைக்கண்டு வருத்தமடைந்த இக்கிராமத்தைச் சேர்ந்த பிந்து என்கிற தனியார் பள்ளி ஆசிரியை ஒருவர் தன் கிராமத்தின் சாலை சீர்செய்யப்பட்டால் மட்டுமே தான் திருமணம் செய்துகொள்ளப் போவதாக அறிவித்துள்ளார்.

``எங்கள் கிராமத்தை மற்றொரு கிராமத்துடன் இணைக்கும் முறையான கட்டமைப்புடன் கூடிய சாலை எங்களுக்குக் கிடையாது. குறிப்பாக ஹெட்னே என்கிற கிராமத்திலிருந்து எங்கள் கிராமம் வரை 2 கிலோ மீட்டர் தூரம் நீளும் களிமண் சாலை இதுவரை புனரமைக்கப்படாமலேயே இருக்கிறது. குறிப்பாக எங்கள் கிராமத்தின் சாலை கடுமையாகச் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. அதிலும் மழைக்காலத்தில் இந்தக் களிமண் சாலையில் தண்ணீர் தேங்கிவிடுவதால் இதன் வழியாக இருசக்கர வாகனங்களில் பயணப்படுவோர் கீழே விழும் நிலை ஏற்படுகிறது.

எங்கள் கிராமத்திலிருந்து 5 முதல் 7 கிலோமீட்டர் தூரம் வரை பயணப்பட்டு நயகொண்டா என்கிற இடத்தை அடையவேண்டும். அங்கிருந்துதான் பேருந்தில் ஏறி நகரங்களுக்குப் பயணப்படுவோம். குறிப்பாக வேலை பார்ப்போர், பள்ளி, கல்லூரிகளில் படிப்பவர்கள் இப்படித்தான் செல்லவேண்டியிருக்கிறது'' என்று சொல்லும் ஆசிரியை பிந்து தங்கள் கிராமத்தின் நிலை குறித்த வீடியோவை கர்நாடக அரசுக்கு அனுப்பியுள்ளார். அதுமட்டுமல்லாமல் கர்நாடகாவின் முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு தங்களது பிரச்னை குறித்த விரிவான கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.

Marriage - Representational Image
Marriage - Representational Image
Photo: LVR சிவக்குமாா்
CA Final: தேசிய அளவில் தங்கை முதலிடம், அண்ணன் 18-வது இடம்; சாதனை படைத்த உடன்பிறப்புகள்!

ஆசிரியை பிந்து வெளியிட்ட வீடியோ வைரலானதோடு இது அரசின் கவனத்தையும் இவர்களது கிராமத்தின் பக்கம் திருப்பியிருக்கிறது. ஹெச்.ராம்பூர் கிராமத்திற்கான தார்ச்சாலை போடும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று கர்நாடக அரசின் தலைமைச் செயலாளர் உறுதி அளித்துள்ளார். ஆனால் இந்த பணிகள் அனைத்தும் நடந்து முடிவதற்கு ஆறு மாதங்கள் வரை ஆகும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே எப்போது தன் கிராமத்திற்கு முழுமையான சாலை வசதி கிடைக்குமோ அப்போதுதான் தான் திருமணம் செய்துகொள்ளப்போவதாக தீர்மானமாகச் சொல்லியிருக்கிறார் ஆசிரியை பிந்து. இது குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

நோக்கம் நிறைவேறட்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு