Published:Updated:

கேரளா: தம்பதியின் திருமணத்தை ரத்து செய்த திருச்சபை... நடப்பது மனித உரிமை மீறலா?

Church (Representational Image)
Church (Representational Image)

தற்போது தம்பதியின் திருமணம் செல்லாது என்று அறிவித்திருப்பதால், திருச்சபை திருமண சான்றிதழையும் அளிக்காது. எனவே, அவர்களது திருமணத்தை சிறப்புத் திருமண சட்டத்தின்படி பதிவு செய்யமுடியாது.

திரிச்சூர் மாவட்டம் இரிஞ்சலக்குடாவைச் சேர்ந்த டாக்டர் மோனிகாவும், கொச்சியைச் சேர்ந்த டாக்டர் ஃபர்ஹானும் கடந்த நவம்பர் மாதம் கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில் திருமணம் செய்துகொண்டனர். இதில், டாக்டர் மோனிகா சிரிய-மலபார் கத்தோலிக்க கிறித்துவ மதத்தையும், டாக்டர் ஃபர்ஹான் இஸ்லாமிய மதத்தையும் சார்ந்தவர். இந்நிலையில், `கத்தோலிக்க திருமண முறைகள் சரியாகப் பின்பற்றப்படாததால் இவர்களின் திருமணம் செல்லாது' என்று டிசம்பர் 31-ம் தேதி திருச்சபை அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திருமணம் (Representational Image)
திருமணம் (Representational Image)

நவம்பர் மாதம் திருமணம் முடிந்தவுடன், அந்தத் தம்பதியின் திருமணப் புகைப்படம் செய்தித்தாள் ஒன்றில் வாழ்த்துச் செய்தியாக பகிரப்பட்டிருந்தது. மோனிகாவும் ஃபர்ஹானும் திருமண உடையில் தேவாலத்தில் நிற்கும்படியும், அவர்களது அருகில் பாதிரியார் மேத்யூ வனியகிலக்கல் மற்றும் மற்றொரு பாதிரியார் நிற்கும்படியாகவும் இருந்த புகைப்படத்தின் கீழ், தம்பதியின் பெயரோடு அவர்களது திருமணம் பற்றி செய்தி இருந்தது.

அந்த செய்தித்தாள் வாழ்த்து, வைரலானது. குறிப்பாக, மதமாற்று திருமணத்தை அது ஊக்குவிப்பதாக கிறித்துவ மதத்தைச் சேர்ந்த பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, ``மணப்பெண்ணின் குடும்பத்தாரோடு எனக்கு இருக்கும் தனிப்பட்ட நெருங்கிய தொடர்பின் காரணமாகவே அந்தக் கலப்பு திருமணத்தில் நான் கலந்துகொண்டேன். ஆனால், அந்தத் திருமணத்தில் கலந்துகொண்டதற்காக வருந்துகிறேன்” என்று பிஷப் தன் கடிதத்தில் தெரிவித்தார். பொதுவாக பிஷப்கள் மதமாற்றுத் திருமணங்களில் கலந்துகொள்வது இல்லை.

டாக்டர் மோனிகாவின் குடும்பம் செல்லும் தேவாலயத்தில் திருமணத்திற்கு எந்தவிதமான எதிர்ப்புகளும் வரவில்லை என்று அந்த தேவாலயத்தைச் சேர்ந்த பாதிரியாரும் தெரிவித்ததாகவும், திருமணத்தில் அனைத்து கத்தோலிக்க திருமண விதிமுறைகளும் பின்பற்றப்பட்டதாகவும் திருமணம் நடைபெற்ற கொச்சி கேதவந்திரா செயின்ட் ஜோசப் தேவாலத்தைச் சேர்ந்த பாதிரியார் கூறியிருந்தார்.

மேலும், இந்த சர்ச்சையைத் தொடர்ந்து சிரிய-மலபார் திருச்சபை, மதமாற்று திருமணச் சடங்குகளை நடத்தும்போது பாதிரியார்கள் கத்தோலிக்க Cannon Law-வை பின்பற்றுவதை உறுதிசெய்வதற்கான வழிமுறைகளை பிஷப்களுக்கு கொடுக்க முடிவு செய்தது.

Marriage (Representational Image)
Marriage (Representational Image)

கத்தோலிக்க கிறித்துவர்களுக்கான சட்டம் Canon Law என்ற பெயரில் வரையறுக்கப்பட்டிருக்கிறது. இது மதமாற்று திருமணங்கள் எப்படி நடைபெற வேண்டும் என்ற வரைமுறைகளையும் வழங்குகிறது. இதன்படி, வேறு மதத்தைச் சேர்ந்தவரை கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர், கத்தோலிக்க முறைப்படி திருமணம் செய்யவேண்டுமானால், அந்தத் திருமணத்தில் வேறு மதத்தைச் சேர்ந்தவருடைய எந்த சடங்குகளும் பின்பற்றப்படக் கூடாது. அந்தத் தம்பதிக்குப் பிறக்க இருக்கும் குழந்தைகளும் கத்தோலிக்க கிறித்துவ முறைப்படிதான் வளர்க்கப்பட வேண்டும்.

தற்போது, இந்தத் திருமணம் குறித்து திருமணம் நடைபெற்ற தேவாலயத்தைச் சேர்ந்த பாதிரியார்களிடம் விசாரணை நடத்தியதாகவும், விசாரணையில் கத்தோலிக்க திருமண விதிமுறைகள் பாதிரியார்களால் பின்பற்றப்படவில்லை என்று தெரியவந்ததால், திருமணம் செல்லாது என்றும் திருச்சபை அறிவித்திருக்கிறது.

இதைப் பற்றி கோவை, அனைத்து இந்திய நீதிக்கான வழக்கறிஞர்கள் சங்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் லூயிஸ் கே. தாமஸ் அவர்களிடம் பேசினோம். ``பிஷப், பாதிரிமார்கள் கலந்துகொண்ட திருமணத்தில், கேனன் விதிகள் சரியாகப் பின்பற்றப்படவில்லை என்று சொல்வதை நம்பமுடியவில்லை. மேலும், அந்தப் பெண்ணின் தேவாலயத்தைச் சேர்ந்த பாதிரியார் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார். திருமணத்தைப் பற்றிய அறிவிப்புக்கு எந்தவிதமான எதிர்ப்பும் அவர்களது தேவாலயத்தில் வரவில்லை. இப்படியிருக்கும்போது, இந்த திடீர் அறிவிப்பினை, அரசியல் சூழ்நிலையின் நிர்பந்தத்தின் காரணமாகவே நான் பார்க்கிறேன்.

`லவ் ஜிஹாத்’ என்று கூறி தொடர்ந்து பல்வேறு காதல் திருமணங்களில் பிரச்னைகள் செய்யப்பட்டு, விசாரணையில் கடைசியாக எந்த திருமணத்திலும் `லவ் ஜிஹாத்’ இல்லை என்ற முடிவுக்குத்தான் இதுவரை வந்திருக்கிறார்கள். உத்தரப்பிரதேசத்தில் `லவ் ஜிஹாத்’ சட்டம் கொண்டுவரப்படுகிறது. இப்படியான அரசியல் சூழ்நிலையின் பின்னணியில், இதேபோன்ற போலியான பொதுப் பிரசாரம் கிறித்துவ சமூகத்திலும் எதிரொலித்திருக்கிறது என்பதையே இச்சம்பவம் காட்டுகிறது.

லூயிஸ் கே. தாமஸ்
லூயிஸ் கே. தாமஸ்

தற்போது சம்பந்தப்பட்ட தம்பதியின் திருமணம் செல்லாது என்று அறிவித்திருப்பதால், திருச்சபை திருமண சான்றிதழையும் அளிக்காது. எனவே, அவர்களது திருமணத்தை சிறப்புத் திருமண சட்டத்தின்படி பதிவு செய்யமுடியாது. இனி திருமணத்தைப் பதிவு செய்யவேண்டுமானால், மீண்டும் சிறப்புத் திருமண சட்டத்தின் விதிகளைப் பின்பற்ற வேண்டும். அதற்கு ஒரு மாதம் நோட்டீஸ் என்று நீண்டகாலம் பிடிக்கும் நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

எனவே, இது நிச்சயமாகக் கண்டிக்கப்பட வேண்டியது. தன் விருப்பப்படி இணையரை தேர்ந்தெடுக்கக்கூடிய உரிமை அரசியலமைப்புச் சட்டத்தின் கீழான அடிப்படை உரிமை. ஆகையால், இப்படியான அறிவிப்பானது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. மேலும், இது 1948-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட Universal Declaration of Human Rights-ல் வழங்கப்பட்டிருக்கும் உரிமையும்கூட. இதில் இந்தியா கையெழுத்திட்டிருக்கிறது. எனவே, திருச்சபையின் இந்த அறிவிப்பு கண்டிக்கத்தக்கது. மேலும், சிறப்புத் திருமணச் சட்டத்தின் விதிமுறைகள் இந்து திருமணச் சட்டத்தினைப்போல் எளிமையாக்கப்பட வேண்டும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு