Published:Updated:

கொரோனா: `அன்பு மகனாக இருந்தான்!’ - பெற்றோர் சிகிச்சையால் குழந்தையைக் கவனித்த தாய் கண்ணீர்

கண்கலங்கிய மேரி அனிதா
கண்கலங்கிய மேரி அனிதா ( Twitter )

``இவ்வளவு நாளும் அவன் என் அன்பு மகனாக இருந்தான். அவனது புன்சிரிப்பைக் காணாமல் நான் எப்படி..." எனக் கூறியபோது வெடித்து அழுதார் கொரோனா பாதித்த பெற்றோரின் மகனைக் கவனித்த அனிதா.

கொரோனா நோய்த்தொற்று உலகை ஆட்டிப்படைக்கும் இந்த சமயத்தில் உணவு, உடை அளித்தல், கட்டடத்தை தனிமை வார்டுக்காக வழங்குவது எனப் பலரும் உதவி செய்து வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா பாதித்த தம்பதியின் ஆறு மாத கைக்குழந்தையைப் பராமரித்து தேவதையாக உயர்ந்து நிற்கிறார் கொல்லத்தைச் சேர்ந்த மேரி அனிதா. குழந்தையைக் கவனிக்க, சிகிச்சை முடிந்து வந்த பெற்றோரிடம் குழந்தையை ஒப்படைக்கும்போது வெடித்து அழுத அனிதாவின் புகைப்படம் இப்போது வைரலாகி வருகிறது.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த எல்தோஸ் என்பவர் ஹரியானாவில் நர்ஸாகப் பணிபுரிந்து வந்தார். எல்தோஸ், அவரின் மனைவி ஷீனா, இவர்களின் ஆறுமாத கைக்குழந்தை எல்வின் ஆகியோர் ஒரு மாதத்துக்கு முன்பு சொந்த ஊர் வந்தனர். கொச்சி களமசேரி மருத்துவக் கல்லூரியில் இவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது எல்தோஸ், அவரின் மனைவி ஷீனா ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதே சமயம் இவர்களின் ஆறுமாத கைக்குழந்தையான எல்வினுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என ரிசல்ட் வந்தது. எனவே, குழந்தையை தாயிடம் இருந்து பிரித்து தனியாக வைக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள். இதைத் தொடர்ந்து கைக்குழந்தையைத் தங்கள் உறவினர்கள் யாராவது வந்தால் அவர்களிடம் பாதுகாப்பாக ஒப்படைத்துவிட்டு, மருத்துவமனையில் சிகிச்சையை தொடரலாம் என நினைத்தனர் அந்த தாயும், தந்தையும். குழந்தையை கவனிக்க தாயின் உறவினர்களும் முன்வரவில்லை, தந்தையின் உறவினர்களும் முன்வரவில்லை.

குழந்தை
குழந்தை
Representational Image

இதனால் மனம் நொந்துபோனார் தாய் ஷீனா. அந்தச் சமயத்தில்தான் சமூக சேவகி மேரி அனிதா அந்தக் குழந்தையை கவனித்துக்கொள்ள முன்வந்தார். அவரது பிளாட்டுக்கு ஆறுமாத குழந்தையை அழைத்துச் சென்று கவனிக்கத்தொடங்கினார். ஒரு மாதம் சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்த எல்தோஸ் - ஷீனா தம்பதி மேரி அனிதாவின் பிளாட்டுக்கு நேற்று வந்து குழந்தையைப் பெற்றுக்கொண்டனர். குழந்தை விளையாடிய பொம்மைகள், ஆடை, மருந்து ஆகியவைகளுடன் குழந்தையை ஒப்படைக்கும்போது தேம்பித் தேமி அழுதார் மேரி அனிதா. ``இவ்வளவு நாளும் அவன் என் அன்பு மகனாக இருந்தான். அவனது புன்சிரிப்பைக் காணாமல் நான் எப்படி..." எனக் கூறியபோது வெடித்து அழுதார்.

``பிரணாயாமத்தால் இசிஜி-யில் ஏற்பட்ட முன்னேற்றம்!" - இயற்கை மருத்துவர் தீபாவின் கொரோனா வார்டு அனுபவம்

ஷீனாவிடம் சென்றதும் முகத்தை சிறிதுநேரம் பார்த்தக் குழந்தை அப்படியே தாயின் தோளில் சாய்ந்தது. வீட்டுக்குச் சென்றதும் ஷீனா குழந்தை அழுவதாக அனிதாவுக்கு போன் செய்தார். "வீடியோ கால் செய்யட்டுமா, உங்களைப் பார்த்தால் குழந்தை அழுவதை நிறுத்துவான்" எனக் கேட்டுள்ளார் ஷீனா. வேண்டாம் என மறுத்த அனிதா, "இப்போது அவன் என்னைப் பார்க்க வேண்டாம். நீங்கள் காட்டும் அன்பில் அவனது சங்கடம் கரைந்து போகட்டும்" என விம்மியபடியே கூறியிருக்கிறார்.

கண்கலங்கிய மேரி அனிதா
கண்கலங்கிய மேரி அனிதா

இதுபற்றி குழந்தையின் தாய் ஷீனா கூறுகையில், ``குழந்தையை என்னிடம் இருந்து பிரித்து வைக்க வேண்டும் என டாக்டர்கள் கூறினார்கள். அப்போது, குழந்தையைப் பார்த்துக்கொள்ள உறவினர்கள் முன்வராதபோது அழுதேவிட்டேன். கண்ணீருடன் நின்ற எனக்கு அப்போது தேவதை போன்று வந்து உதவினார் அனிதா. அனிதாவின் கனிவான மனது எங்கள் மகனை பாதுகாத்தது. இந்த ஜென்மம் முழுவதும் என் மகன் அனிதாவுக்கு கடமைப்பட்டுள்ளான்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு