Published:Updated:

21 வயது பூர்த்தியான அடுத்தநாள் வேட்பு மனுத்தாக்கல்... இப்போது வெற்றி... கவனம் ஈர்த்த கேரள இளம்பெண்!

ரேஸ்மா மரியம் றோய்
ரேஸ்மா மரியம் றோய்

தேர்தலில் போட்டியிட 21 வயது பூர்த்தியாக வேண்டும். நவம்பர் 18-ம் தேதி 21 வயது பூர்த்தி ஆனதும் அதற்கு மறுநாளான நவம்பர் 19-ம் தேதி நாமினேஷன் தாக்கல் செய்தார் ரேஸ்மா மரியம் றோய்.

கேரள மாநில உள்ளாட்சித் தேர்தல் கடந்த 8, 10 மற்றும் 14-ம் தேதிகளில் நடந்தது. இந்தத் தேர்தலில் அதிக அளவில் இளம் பெண்கள் போட்டியிட்டனர். கல்லூரி மாணவிகளும் அதிகளவு களம் கண்டனர். சி.பி.எம், காங்கிரஸ், பா.ஜ.க என அனைத்துக் கட்சிகளிலும் இளம் பெண்கள் அதிக அளவில் வேட்பாளர்களாகப் போட்டியிட்டனர். இதனால் தேர்தல் களம் களைகட்டியது.

வாக்குப்பதிவு முடிந்து நேற்று ஓட்டுகள் எண்ணப்பட்டன. அதில், மிகவும் வயது குறைந்த உள்ளாட்சிப் பிரதிநிதியாக சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த ரேஸ்மா மரியம் றோய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பத்தணம்திட்டா மாவட்டம் அருவாப்புலம் பஞ்சாயத்தில் 11-வது வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ரேஸ்மா மரியம் றோய்க்கு 21 வயது ஆகிறது. ரேஸ்மா மரியம் 450 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அருவாப்பலம் பஞ்சாயத்தில் 11-வது வார்டில் கடந்தமுறை வெற்றிபெற்ற காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் சுஜாதா மோகன் 380 வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவினார்.

கேரள உள்ளாட்சியின் இளம் மக்கள் பிரதிநிதி ரேஸ்மா மரியம் றோய்
கேரள உள்ளாட்சியின் இளம் மக்கள் பிரதிநிதி ரேஸ்மா மரியம் றோய்

தேர்தலில் போட்டியிட 21 வயது பூர்த்தியாக வேண்டும். 2020 நவம்பர் 18-ம் தேதி ரேஸ்மா மரியம் றோய்க்கு 21 வயது பூர்த்தியானது. கேரளத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலுக்குக் கடந்த நவம்பர் 19-ம் தேதி நாமினேஷனுக்குக் கடைசிநாள். நவம்பர் 18-ம் தேதி 21 வயது பூர்த்தி ஆனதும் அதற்கு மறுநாளான நவம்பர் 18-ம் தேதி நாமினேஷன் தாக்கல் செய்தார். இப்போது வெற்றிபெற்று கேரளத்தின் 'இளம் மக்கள் பிரதிநிதி'யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் ரேஸ்மா மரியம் றோய்.

கோனி வி.என்.எஸ் கல்லூரியில் பி.பி.ஏ பட்டம் பெற்று வந்த கையோடு உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டார் ரேஸ்மா. தேர்தலில் போட்டியிட்ட முதல் முறையே வெற்றி மகுடம் சூடியிருக்கிறார். இவரின் தந்தை றோய் பி.மாத்யூ மரக்கட்டை விற்பனை தொழிலில் இருக்கிறார். தாய் மினி றோய் கல்லூரி ஊழியராக உள்ளார். ரேஸ்மாவின் குடும்ப உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள்.

ரேஸ்மா மரியம் றோய்
ரேஸ்மா மரியம் றோய்

ஆனால், ரேஸ்மா கல்லூரியில் படிக்கும்போது எஸ்.எஃப்.ஐ உறுப்பினராகச் சேர்ந்தார். இப்போது எஸ்.எஃப்.ஐ மாவட்டச் செயலக உறுப்பினராக உள்ளார். டி.ஒய்.எஃப்.ஐ மாவட்டக் குழு உறுப்பினராகவும் உள்ளார். ரேஸ்மா தேர்தல் பிரசாரத்தின்போது, "ஒவ்வோர் இடத்துக்கும் நான் வந்து மக்கள் பிரச்னைகளைக் கேட்டு, அதை டைரியில் குறித்து வைத்துக்கொள்வேன். பின்னர் ஒவ்வொரு பிரச்னையாகத் தீர்க்கப் பாடுபடுவேன்" எனக்கூறி ஓட்டுகேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது மக்கள் அவருக்கு வெற்றியைப் பரிசளித்துள்ளனர்!

அடுத்த கட்டுரைக்கு