ஓய்வெடுங்கள் அம்மா... பெண்ணுக்காக, இயற்கைக்காக குரல் கொடுத்த சுகதகுமாரி!

பேசவியலா இயற்கைக்காகவும் வாயிருந்தும் பேச முடியாத பெண்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்க ஆரம்பித்தார்.
கேரள மக்களால் 'சுகந்தா டீச்சர்' என்று மரியாதையுடன் அழைக்கப்பட்ட கவிஞர் சுகதகுமாரி தற்போது நம்முடன் இல்லை. 86 வயதான அவருக்கு கடந்த ஒரு வாரமாக நிமோனியா பிரச்னை தீவிரமாக இருந்ததால், வென்டிலேட்டர் உதவியுடன் மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சையளித்து வந்தனர். உடன் கொரோனா பாதிப்பும் சேர்ந்துகொள்ள திருவனந்தபுரத்தில் மருத்துவமனை ஒன்றில் நேற்று மறைந்துவிட்டார். கவிஞர் சுகதகுமாரியை 'பத்மஶ்ரீ விருது பெற்றவர்' என்கிற ஒற்றை வரியுடன் கடந்துவிட முடியாது. இயற்கை ஆர்வலர், சமூக ஆர்வலர், பெண்ணுரிமைகளுக்காகக் குரல் கொடுத்தவர் என்று அவருக்கு பல முகங்கள், பல அடையாளங்கள்.

சுகதகுமாரி 1934 ஜனவரி 22-ம் தேதி பிறந்தார். அப்பா கேசவப்பிள்ளை சுதந்திரப் போராட்ட வீரர். அம்மா கார்த்தியாயினி சம்ஸ்கிருத அறிஞர். கேரளத்திலும் திருவனந்தபுரத்திலும் கல்வி பயின்ற சுகதகுமாரி உளவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். அப்பாவின் காந்திய சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டவர் சமூக செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள ஆரம்பித்தார். குறிப்பாக, பேசவியலா இயற்கைக்காகவும் வாயிருந்தும் பேச முடியாத பெண்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்க ஆரம்பித்தார்.
அதே நேரம் அம்மாவின் அறிவால் ஈர்க்கப்பட்டவர், மலையாளத்தில் கவிதைகள் எழுத ஆரம்பித்தார். தன்னுடைய ஆரம்பகால கவிதைகளில் தன்னுணர்வுகளைக் கவிதை களாக்கியவர். பிறகு, பெண் உணர்வுகளை எழுத ஆரம்பித்தார். 'முத்துச்சிப்பிகள்', 'பத்திரப்பூக்கள்', 'கிருஷ்ண கவிதைகள்', 'ஸ்வப்னபூமி' என்று இவருடைய கவிதைத் தொகுப்புகளைப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். அதேபோல் 'கேரள சாகித்ய அகாடமி விருது', 'கேந்திர சாகித்ய அகாடமி விருது', 'ஒடக்குழல் விருது', 'எழுத்தச்சன் விருது' என்று இவருக்குக் கிடைத்த விருதுகளும் ஏராளம். மலையாள இலக்கிய உலகில் பெரும் வரவேற்பும் மரியாதையும் பெற்ற சுகதகுமாரியின் கணவர் டாக்டர் வேலாயுதன் நாயரும் ஓர் எழுத்தாளர்தான். இலக்கிய விமர்சகரும்கூட.
சுற்றுச்சூழலுக்காகப் பல போராட்டங்களை முன்னெடுத்தவர் சுகதகுமாரி. அதற்காக 'பிரக்ருதி சமரக்ஷனா' என்கிற அமைப்பையும் ஏற்படுத்தினார்.1980-களில் ஹைட்ரோ எலெக்ட்ரிக் புராஜெக்ட்டுக்காக அரசாங்கம் பாலக்காட்டில் இருந்த வனத்தை அழிக்க முற்பட, இதற்கு எதிராக 'அமைதியான பள்ளத்தாக்கு' (silent valley) என்ற கவிதையை எழுதியதோடு மக்களுடன் இணைந்து போராட்டத்திலும் ஈடுபட்டார். இயற்கையைப் பாதுகாப்பதில் சுகந்தாவின் பங்களிப்பைப் பாராட்டி மத்திய அரசு 'இந்திரா பிரியதர்ஷினி விருக்ஷமித்ரா' விருதை வழங்கி கெளரவித்தது.

குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களையும் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு குடும்பத்தால் கைவிடப்பட்ட பெண்களையும் பாதுகாக்க 'அபயா' என்கிற இல்லத்தை நிறுவியவர். கேரளாவின் பெண்கள் ஆணையத் தலைவராகவும் இருந்திருக்கிறார். வெகு பொருத்தமான பதவி. கிட்டத்தட்ட 60 வருடங்களாக இயற்கைக்காகவும் பெண்களுக்காகவும் எழுதியவர், போராடியவர் நேற்று முதல் நீண்ட உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டார்.
ஓய்வெடுங்கள் அம்மா. நீங்கள் விட்ட இடத்திலிருந்து நாங்கள் தொடர்கிறோம்!