மூவலூர் இராமாமிர்தம் நினைவு திருமண நிதித்திட்டத்தின் கீழ் நிதி, தங்கம் பெறுவது எப்படி? #DoubtOfCommonMan

குடும்பத்தில் ஒரு பெண் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும்.
விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில், "தாலிக்குத் தங்கம் வழங்கும் 'மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதித் திட்ட'த்தின் கீழ் பயனடைய எவ்வாறு விண்ணப்பிப்பது? தேவைப்படும் ஆவணங்கள் என்னென்ன?" என்ற கேள்வியை எழுப்பியிருந்தார் வாசகர் மணி. அந்தக் கேள்வியின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை இது.

பெண்களின் திருமணத்தை சிறப்பாக நடத்த அரசு பல்வேறு திருமண உதவித் திட்டங்களை அறிவித்துள்ளது. அவற்றில் திருமண நிதியுதவியோடு தாலி செய்ய தங்கமும் வழங்கும் திட்டமான 'மூவலூர் இராமாமிர்தம் நினைவு திருமண நிதித்திட்டம்' முக்கியமானது. இந்தத் திட்டத்தில் நிதியுதவி பெறுவதற்கான வழிக்காட்டுதல் உங்களுக்காக.
நிதியுதவி
மூவலூர் இராமாமிர்தம் நினைவு திருமண நிதித்திட்டம், மணப்பெண்ணின் கல்வித்தகுதியை அடிப்படையாகக்கொண்டு, 25,000 ரூபாய் நிதியுதவி; தாலி செய்ய நாலு கிராம் தங்கம், 50,000 ரூபாய் நிதியுதவி; தாலி செய்ய எட்டு கிராம் தங்கம் என இரண்டு வகையாக வழங்கப்படுகிறது.

25,000 ரூபாய் நிதியுதவியும், தாலிக்கு 4 கிராம் தங்கமும் பெறும் திட்டத்தில் பயனடைய, மணப்பெண் தொலைதூரக் கல்விமூலம் படித்தவர் எனில், பத்தாம் வகுப்பு தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும். நேரடியாகப் பள்ளியில் சென்று படித்தவர் எனில், பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்திருந்தாலும் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறமுடியும். பழங்குடியின பெண் எனில், ஐந்தாம் வகுப்பு தேர்ச்சிபெற்றிருந்தால் போதுமானது.
50,000 ரூபாய் மற்றும் தாலி செய்ய எட்டு கிராம் வழங்கும் திட்டத்தில் பயன்பெற, மணப்பெண் பட்டப்படிப்பு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் பட்டயப் படிப்பு படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பம்
உங்கள் பகுதியில் உள்ள மாவட்ட சமூக நலத்துறையில் கிடைக்கும் மூவலூர் இராமாமிர்தம் நினைவு திருமண நிதித்திட்டத்திற்கான விண்ணப்பத்தை நிரப்பி, உரிய ஆவணங்களுடன் உங்கள் அருகில் இருக்கும் இ-சேவை மையத்தை அணுக வேண்டும்.

அவர்கள், உங்கள் விண்ணப்பத்தை உங்கள் பகுதியில் இருக்கும், ஊராட்சி என்றால் ஒன்றிய அலுவலகத்திலும், நகராட்சி என்றால் நகராட்சி ஆணையத்திலும், மாநகராட்சி என்றால் மாநகராட்சி ஆணையத்திலும் இணையம் மூலம் சமர்ப்பிப்பார்கள்.
உங்களின் விண்ணப்பம் 15 நாள்களில் மாவட்ட சமூக அலுவலரால் பரிசீலிக்கப்படும். அதன்பின், திருமணம் செய்து கொள்ளப்போகும் தம்பதிகளை நேரில் வரச்சொல்லி ஆய்வு செய்த பின், வங்கிக்கணக்கில் தொகை வரவு வைக்கப்படும். தாலிக்கான தங்கம் மட்டும் மணப்பெண்ணின் கையில் நேரடியாகக் கொடுக்கப்படும். திருமணத்திற்கு 45 நாள்களுக்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டும் என்பது அவசியம். அவசர அல்லது எதிர்பாராத வகையில் நடைபெறும் திருமணம் எனில், மாவட்ட சமூக அலுவலரின் கவனத்திற்குக் கொண்டுசென்று, தாமதமாகவும் விண்ணப்பிக்கலாம்.

நிபந்தனைகள்
திருமணத்தன்று மணப்பெண்ணுக்கு 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு மட்டுமே நிதியுதவி வழங்கப்படும்.
குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
சமர்பிக்கவேண்டிய ஆவணங்கள்
வருமானச் சான்றிதழ்
மாற்றுச் சான்றிதழ் நகல் (மணமகள், மணமகன் இருவருடையதும்)
பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் /பட்டப் படிப்பு அல்லது பட்டயப் படிப்பு தேர்ச்சி சான்றிதழ் நகல்
குடும்ப அட்டை
மணமகள், மணமகன் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் - 2
மணமக்களின் தாய் அல்லது தந்தை புகைப்படம்
வங்கிக் கணக்கு புத்தகம்
மணமக்களின் தாய் தந்தையுடைய ஆதார் எண்கள்

இதுகுறித்து மேலும் தகவல் அறிய, உங்கள் பகுதியில் உள்ள மாவட்ட சமூக நலத்துறையைத் தொடர்புகொள்ளவும்.
இதேபோல விகடனின் #DoubtOfCommonman பக்கத்தில் கேட்க உங்களிடம் கேள்விகள் இருந்தால், இந்தப் படிவத்தில் பதிவுசெய்யவும்.
