Published:Updated:

கர்ப்பிணிப் பெண்ணைக் காப்பாற்றிய காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி... யார் இவர்? ஆச்சர்ய பின்னணி!

காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி
காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி

ஓர் உதவி... ஒரு புது ஜீவனையும், ஓர் உயிரையும் காப்பாற்றித் தந்த உயர்ந்த நிலைக்குச் சென்றிருக்கிறார் சென்னையைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி.

நள்ளிரவில் இரண்டு மணிக்குப் பனிக்குடம் உடைந்து பிரசவ வலியில் துடித்துக்கொண்டிருந்த கர்ப்பிணிப் பெண்ணை தன்னுடைய காவல்துறை ரோந்து வாகனத்தில் ஏற்றிச்சென்று தாயையும் சேயையும் தக்க சமயத்தில் காப்பாற்றி இருக்கிறார் சென்னை தலைமைச் செயலக காவல் துறை ஆய்வாளர் ராஜேஸ்வரி.

காவல் ஆய்வாளர்
காவல் ஆய்வாளர்

'சினிமா பாணியில் கர்ப்பிணையைக் காப்பாற்றிய காவல் துறை அதிகாரி' என மக்கள் பலரின் பாராட்டையும் பெற்ற காவல் துறை ஆய்வாளர் ராஜேஸ்வரியைத் தொடர்பு கொண்டோம்."நான் என் கடமையைத் தானே செய்தேன் எதுக்கு பேட்டியெல்லாம்?" என்று தயக்கத்துடன் பேச ஆரம்பித்தார் ராஜேஸ்வரி.

"மக்கள் எல்லோரும் பாராட்டுறது சந்தோஷமாக இருந்தாலும், நான் என் கடமையைத்தான் செய்திருக்கேன். அந்த இடத்தில் வேறு எந்தக் காவல் துறை அதிகாரி இருந்தாலும் இதைத்தான் செய்திருப்பாங்க. குற்றங்களைக் கண்டுபிடிக்கிறது மட்டும் காவல் துறையோட வேலை இல்லை. மக்களைப் பாதுகாப்பதும்தான். அதைத்தான் நானும் செய்திருக்கேன். இப்ப மட்டுமல்ல எப்போதும் செய்வேன்" என்றவர் தொடர்ந்தார்.

ராஜேஸ்வரி
ராஜேஸ்வரி

"காவல்துறையில் வேலைக்குச் சேர்ந்து 20 வருஷம் ஆகிருச்சு. எத்தனையோ சவால்களையும் கடந்தாச்சு. காவல் துறையை காதலிச்சுதான் இந்த யூனிஃபார்ம்மை போட்டுக்கிட்டேன். உண்மையைச் சொல்லணும்னா, காவல் துறையில் சேரும் போதே என்னுடைய உடம்பையும், மனசையும் நான் காவல் துறைக்கு அர்ப்பணிச்சுட்டேன். நான் பணி ஓய்வு பெறும் கடைசி நிமிஷம் வரை என்னோட யூனிஃபார்ம்க்கு நான் நேர்மையாக இருக்கணுங்கிறது மட்டும்தான் என்னோட ஆசை. இத்தனை வருஷமாக அதைத்தான் பண்ணிட்டும் இருக்கேன். என்னோட யூனிஃபார்ம்க்கு கலங்கத்தைத் தரும் எந்த விஷயத்தையும் நான் எப்போதும் எதற்காகவும் பண்ணமாட்டேன். இது என் யூனிஃபார்ம், என் துறை மீதான காதல்னு கூட சொல்லலாம்.

எனக்குச் சொந்த ஊரு தேனி மாவட்டம் பெரிய குளம். எம்.ஏ வரலாறு படிச்சுருக்கேன்.1999ம் ஆண்டு நடந்த காவல் துறை தேர்வில் தேர்ச்சி பெற்று நேரடி எஸ்.ஐயாக பணிக்குச்சேர்ந்தேன். என்னோட வேலை தான் எனக்கு உயிர். அதுக்கு அப்புறம்தான் குடும்பம், குழந்தையெல்லாம். எங்களோட இந்த போலீஸ் உடைக்கு ஆண், பெண் என எந்த வித்தியாசமும் கிடையாது. பாலினம் கடந்த வீரத்தை இந்த யூனிஃபார்ம் தான் கொடுக்குது. யூனிஃபார்மை அணியும் அடுத்த நிமிஷமே செருக்கும், தெம்பும் வந்துரும். இது காவல் துறையில் வேலை செய்பவர்களுக்கு மட்டுமேயான உணர்வு.

ஒருத்தர் மேல தப்பு இருக்குனு தெரிஞ்சதும், அவங்கள தூக்கி போட்டு அடிக்கிறது, கொடுமை பண்றதுயெல்லாம் டிவியில வர்ற காவல்துறை மட்டும்தான் பண்ணுவாங்க.
காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி.

உண்மையில் எந்தக் காவல்துறை அதிகாரிகளும் அப்படிப் பண்றது இல்ல. குறிப்பா நான் அப்படிப் பண்றது கிடையாது. காவல்துறைங்கிறது மக்களோட பாதுகாப்புக்கான ஒரு துறை. குற்றம் செய்பவர்களும் மனுசங்கதான். தப்பு செய்தவர்கள் பக்கமும் ஒரு நியாயம் இருக்கும். அடிச்சு, உதைச்சு காரணம் கேட்டால் அவங்க மனசுல இன்னும்தான் வெறி அதிகமாகும். உண்மை தெரியவும் நேரம் ஆகும். அதனால் ரொம்ப பொறுமையா தான் டீல் பண்ணுவேன். அதுக்காகக் குற்றவாளிகளை ஃப்ரீயா விடுவேன்னு நினைச்சுறாதீங்க. குற்றவாளிகளோட மனநிலை தெரிஞ்சு அதுக்கேற்ப நடந்துப்பேன். அதுதான் என்னோட பாணி!" என்றவர் கர்ப்பிணி ஷீலாவைக் காப்பாற்றியது பற்றிப் பேச ஆரம்பித்தார்.

"இது சினிமா பாணியில் நடந்துச்சுனு நிறைய பேர் சொல்லுறாங்க. ஆனால், நிஜத்தில் இப்படி நடப்பதைத்தான் சினிமாவில் காட்டுறாங்க என்பதுதான் எதார்த்தம். வழக்கமாக இரவு நேர ரோந்துப் பணிக்குப் போகும் போது பெண்கள் யாராவது தனியா நின்னுட்டு இருந்தா, நின்று அவங்ககிட்ட விசாரிக்கிறது என்னுடைய வழக்கம். சனிக்கிழமை ஓட்டேரியில் உள்ள கே.ஹெச் சாலையில் ரோந்துக்குப் போயிருந்த போது வயதான பெண்மணி ஒருவர் கண்ணீருடன் அங்கும் இங்கும் நடந்துட்டு இருந்தார்.

கர்ப்பிணி
கர்ப்பிணி

வண்டியை நிறுத்தி அவரிடம் விசாரிச்சப்ப, அவருடைய மகள் ஷீலாவிற்குப் பனிக்குடம் உடைந்து பிரசவ வலி வந்தது தெரிஞ்சது. ஷீலாவை மருத்துவமனையில் சேர்க்க உதவிக்கு ஆள் தேடிக்கொண்டிருந்தார். தகவல் தெரிஞ்ச அடுத்த நிமிஷமே நான் அங்க போயி பார்த்தேன். ரொம்பவே குறுகலான தெரு. மாடி வீட்டில அந்தப் பெண் பிரசவ வலியில் துடிக்கிறதை நேர்ல பார்த்ததும், ஒரு நிமிஷம் கூட யோசிக்கலை. என்னுடைய டிரைவர்கிட்ட சொல்லி ஜீப்பை ரிவர்ஸ்லேயே வரச்சொன்னேன். தெரு முழுக்க வண்டிகள் நின்னுட்டு இருந்துச்சு. அதையெல்லாம் அப்புறப்படுத்தி ஜீப்பை அந்தப் பெண்ணின் வீட்டின் வாசலில் நிறுத்தினேன். மாடியில் இருந்த கர்ப்பிணியை கைதாங்கலாக கூட்டிட்டு வந்து ஜீப்பில் ஏற்றினேன்.

தாமதிக்கக் கூடாதுன்னு ஆம்புலன்ஸ்க்கும் போன் செய்திருந்தோம். ஆம்புலன்ஸ் வர காலதாமதம் ஆனதால் ஜீப்பில் ஏற்றி ஒரு கிலோ மீட்டர் பயணம் செய்ய ஆரம்பிச்சோம். ஒரு கிலோ மீட்டர் பயணம் செய்த பின் ஆம்புலன்ஸ் வந்துச்சு. அந்தப் பெண்ணை ஆம்புலன்ஸில் ஏற்றி கே.எம்.சி மருத்துவமனைக்கு அனுப்பி வெச்சுட்டு, அடுத்த வேலைக்கு நகர்ந்தேன்.

காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி
காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி

ஒரு அரை மணிநேரத்துக்குப் பின் ஷீலா அம்மாவிற்கு போன் செய்து விசாரிச்ச போது, ''கப்பிரசவம் மூலமாகப் பெண் குழந்தை பிறந்துருக்குமா"னு சொன்னாங்க. சந்தோஷமாவும், பெருமையாகவும் இருந்துச்சு. தகவல் தெரிஞ்ச உடனே காவல் ஆணையர் என்னைக் கூப்பிட்டு பாராட்டுனாங்க. 'மக்களுக்கு நல்லதுனா அதை எப்படி வேண்டுமானாலும் செய்யலாம்'னு எங்கள் ஆணையர் அடிக்கடி சொல்லுவாங்க. அந்தச் சுதந்திரம், பதற்றமான சூழலில்கூட மக்கள் பக்கம் நிக்க வெச்சுது.

மக்கள் எல்லோரும் பாராட்டுறது சந்தோஷமாக இருந்தாலும். நான் என் கடமையைத்தான் செய்திருக்கேன். வேறு எந்தக் காவல் துறை அதிகாரி இந்த இடத்தில் இருந்தாலும் இதைத்தான் செய்திருப்பாங்க.

`என் கடைமையைத்தானே செய்தேன்!’ - நள்ளிரவில் தவித்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு உதவிய இன்ஸ்பெக்டர்

இன்னும் கூட மக்களுக்கு காவல் துறை மீது நிறையவே பயம் இருக்கு. அது ஏன்னு தெரியல. எல்லாவற்றிருக்கும் மேல் அவங்களுக்கு உதவத்தான் நாங்க இருக்கோம்னு புரிஞ்சுக்கிட்டு ஒத்துழைப்பு கொடுத்த போதும்'' என்றார் நிறைவாக.

அடுத்த கட்டுரைக்கு