பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

துணையாய் நின்றது சமூகம். துயர் கடந்தேன்!

துணையாய் நின்றது சமூகம். துயர் கடந்தேன்!
பிரீமியம் ஸ்டோரி
News
துணையாய் நின்றது சமூகம். துயர் கடந்தேன்!

எங்களைச் சுத்தி ஆளுங்க இருந்தாலும் ஏதோ தனிமையில் இருக்குற உணர்வு இருந்துட்டே இருக்கும்.

“இந்த டாக்டர் உடைக்குப் பின்னால இருக்குறது முழுக்க வலிகள்தான். என்னோட கஷ்டங்களையெல்லாம் துடைச்சு எறிய என்கிட்ட இருந்த ஒரே ஆயுதம் படிப்பு மட்டும்தான். வறுமைக்கும் கனவுக்கும் இடையில நடந்த போராட்டத்துலதான் என்னுடைய சின்ன வயசு நாள்கள் கழிஞ்சுது. நான் டாக்டர் ஆகணுங்கிறது என்னோட கனவுன்னு சொல்றதைவிட, என் அண்ணனோட லட்சியம்னுதான் சொல்லணும்” உணர்ச்சிபொங்கப் பேசுகிறார் கிருஷ்ணவேணி.

கிருஷ்ணவேணி
கிருஷ்ணவேணி

முகத்தில் அப்படியொரு உற்சாகம், வார்த்தைகளுக்கு உணர்ச்சியூட்டும் உடல்மொழி, மனதில் தேங்கி நிற்கும் வலியையும் கோபத்தையும் நிதானமாய் விளக்கும் பக்குவம். 12 வயதில் பெற்றோர்களை ஹெச்.ஐ.வி-க்குப் பறிகொடுத்தவர் கிருஷ்ணவேணி. சிறுவயதிலிருந்து பல்வேறு போராட்டங்கள். அவ்வளவையும் சமாளித்து, மருத்துவப் படிப்பை முடித்தார். தற்போது இந்திய ராணுவத்தில் கேப்டன் அந்தஸ்தில் பணியாற்றும் 26 வயதுப் பெண் மருத்துவர். தன் போராட்ட நிமிடங்களை வார்த்தைகளில் கடத்தினார் கிருஷ்ணவேணி.

“கரூர் மாவட்டம் சமத்துவபுரத்தில் பிறந்தேன். அப்பா வெத்தல வியாபாரம் பண்ணிட்டிருந்தாரு. எனக்கு ஒரு அண்ணன் இருக்காரு. என்னோட 12 வயசுல எங்க அம்மா அப்பா ரெண்டு பேரையும் இழந்துட்டோம். பாட்டிதான் எங்களை வளர்த்தாங்க. விவரம் புரியாத வயசு. அப்பா, அம்மா இறந்த காரணம் கூடத் தெரியாது.

மெடிக்கல் டெஸ்ட்
மெடிக்கல் டெஸ்ட்

பிறகு, பாட்டிக்கு வயசாகிருச்சு. வருமானம் இல்ல. வேற வழியில்லாம 14 வயசுல புத்தகப் பையைக் கீழ வெச்சுட்டு, வெத்தலக் கூடையைப் பிடிச்சு வியாபாரம் பார்த்துச்சு எங்க அண்ணன். ‘நான் படிக்கலைன்னா என்ன? தங்கச்சி படிக்குதுல்ல’ன்னு சொல்லும். வீட்டுல இருந்தா சரியா படிக்க மாட்டேன்னு ஹாஸ்டல்ல சேர்த்து விட்டாங்க. லீவ் நாள்ல எல்லோர் வீட்டுல இருந்தும் பசங்களப் பார்க்க அம்மா, அப்பா வருவாங்க. ஆனா, என்னைப் பார்க்க யாரும் வரமாட்டாங்க. இது தெரிஞ்சும் என் கண்ணும் மனசும் ஹாஸ்டல் கதவையே பார்த்துட்டு இருக்கும். ஏமாற்றம் நிறைஞ்ச நிமிஷங்க அது. எப்பவாவது அண்ணன் பார்க்க வரும். அது வேர்வை சிந்தி சம்பாதிச்ச காசை என் செலவுக்குக் கொடுத்துட்டுப் போகும். ‘எனக்காக நீ கஷ்டப்படுறியே’ன்னு கேட்பேன். ‘என் தங்கச்சிக்காக நான் சம்பாதிக்கிறேன்’னு பெருமையாச் சொல்லும்.

எங்களைச் சுத்தி ஆளுங்க இருந்தாலும் ஏதோ தனிமையில் இருக்குற உணர்வு இருந்துட்டே இருக்கும். ஊருலயும் சின்னச் சின்ன பிரச்னைகள் இருந்துச்சு. அதனாலயே எங்க அண்ணன், எங்க ஊரை விட்டு எங்க அம்மாவழி ஆச்சி ஊருக்குப் போயிருச்சு. நானாவது ஹாஸ்டல்ல ஃபிரெண்ட்ஸுங்க கூட இருந்தேன். ஆனா அண்ணணுக்கு அந்த வாய்ப்புகூடக் கிடைக்கல.எப்பவும் வறுமையும் தனிமையும்தான். நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போதுதான் எங்க அம்மா அப்பாவோட மெடிக்கல் ரிப்போர்ட்டைப் பார்த்து, அவங்க எப்படி இறந்தாங்கன்னு தெரிஞ்சுக்கிட்டேன்” சில நிமிடங்கள் அமைதியாக இருந்தவர், மீண்டும் தொடர்ந்தார்.

ஃபிட்னஸ் டெஸ்ட்
ஃபிட்னஸ் டெஸ்ட்

“ஹெச்.ஐ.வி இருந்தாக்கூட ஒழுங்கா சிகிச்சை எடுத்துக்கிட்டா வாழ்நாளை அதிகரிக்க முடியும். ஆனா எங்க அம்மா அப்பாக்கு அந்த விழிப்புணர்வுகூட இல்ல. அதைச் சொல்லவும் ஆளுங்க இல்ல. இந்த நிலை வேற யாருக்கும் வரக்கூடாதுன்னா நான் டாக்டர் ஆகணும்னு மனசுக்குள்ள ஒரு வேகம் உருவாச்சு. கையில பத்துக்காசுகூட இல்லாம இருந்த எனக்கு, என் படிப்பு மட்டும்தான் என் கனவுக்கான சின்ன வெளிச்சமா இருந்துச்சு. வெறித்தனமாப் படிக்க ஆரம்பிச்சேன். பத்தாம் வகுப்புல ஸ்கூல் அளவுல ரெண்டாவது ரேங்க் எடுத்தேன். ஊரே ஆச்சர்யமாப் பார்த்துச்சு. ஆனா நாங்க பட்ட கஷ்டங்களுக்கு இந்தப் பதிலடி போதாது. இன்னும் ஓடணும்னு நினைச்சேன்.

அரசுப்பள்ளியில படிச்சுட்டிருந்த என்னை, என் ஆசிரியர் ஒருத்தர், தனியார் பள்ளியில சேர்த்து விட்டார். 12-ம் வகுப்புல 1,144 மார்க் எடுத்தேன். மெடிக்கலுக்கு கட் ஆஃப் 197 எடுத்திருந்தேன். ஆனா 0.5 மார்க்குல அரசுக் கல்லூரியில் சீட் கிடைக்கல. டாக்டர் கனவே கலைஞ்ச மாதிரி இருந்துச்சு. அப்போதான் சூர்யா சார் நடத்துற ‘அகரம் ஃபவுண்டேஷன்’ பத்தித் தெரியவந்துச்சு. கடிதம் எழுதிப் போட்டேன். எங்க குடும்பத்தை நேர்ல வந்து பார்த்துட்டு, உதவி பண்ண ஆரம்பிச்சாங்க.

துணையாய் நின்றது சமூகம். துயர் கடந்தேன்!

கூடப் படிச்ச நண்பர்கள், முகம் தெரியாத மனிதர்கள்னு யார் யாரோ செஞ்ச உதவியிலதான் இந்த டாக்டர் உடையை உடுத்தினேன். எங்க ஊருலயே முதல் டாக்டர் நான்தான். ஊரே எங்களைக் கொண்டாடுச்சு. மனசு முழுக்க வலியைத் தேக்கி வெச்சிருந்த நாங்க, அன்னைக்கு எங்க ஊருல தலைநிமிர்ந்து நடந்து போனோம். பத்து வருஷமா எந்த சந்தோஷத்தையும் அனுபவிக்காம, மனசைக் கல்லா வெச்சிருந்த எங்க அண்ணன் முகத்துல சந்தோஷத்தைப் பார்த்தேன். அந்த நிமிஷம்தான் என் வாழ்க்கையோட முக்கியமான நிமிஷம்.

இந்திய ராணுவத்தில மருத்துவர் வேலைக்கு விண்ணப்பிச்சேன். மெடிக்கல் டெஸ்ட், எல்லாம் முடிச்சு செலக்ட் ஆன பிறகுதான் அண்ணன்கிட்ட சொன்னேன். அண்ணணுக்கு நான் அவரு கூடவே இருக்கணும்னு ஆசை. அதனால, ‘ஆர்மியெல்லாம் வேண்டாம்’னு பிடிவாதம் பிடிச்சாரு.

மெடிக்கல் டெஸ்ட்
மெடிக்கல் டெஸ்ட்

அவருகிட்ட பேசிப் புரியவெச்சு, ராணுவத்தில மருத்துவராகச் சேர்ந்துட்டேன். எனக்குக் கிடைச்ச உதவிகளை, என்னை மாதிரியே உதவி தேவைப்படுறவங் களுக்குப் பண்ணணும்னு நான் படிக்கும்போதே முடிவெடுத்துட்டேன். அதனால என்னோட முதல் மாச சம்பளத்தையே படிப்புக்கு உதவி தேவைப்படும் குழந்தைகளுக்காகச் செலவு செய்ய ஆரம்பிச்சேன். கிராமங்கள்ல விழிப்புணர்வு முகாம், இலவச மருத்துவ சிகிச்சைன்னு என்னால் முடிஞ்ச அளவுக்குச் சமுதாயத்துக்கு நன்றிக்கடனைச் செலுத்திட்டு இருக்கேன்.

ராணுவத்தில வேலைக்குச் சேர்ந்து ரெண்டரை வருஷமாச்சு. என்னோட சம்பாத்தியத்துல, அம்மா ஸ்தானத்தில இருந்து அண்ணனுக்குக் கல்யாணம் பண்ணி வெச்சுட்டேன். இப்போ ராணுவத்தில மருத்துவத்துறையில கேப்டன் அந்தஸ்துல வேலை பார்த்துட்டிருக்கேன். உயிருக்குப் போராடிட்டிருக்கிற எத்தனையோ வீரர்களுடைய உயிரைக் காப்பாத்துற வாய்ப்பு கிடைச்சிருக்கு. இப்போ ஒரு குழந்தையையும் தத்தெடுக்க முடிவெடுத்திருக்கேன்.

சமூகத்தால் ஒதுக்கப்படுபவர்கள் எல்லோருக்கும் கல்வி மட்டும்தான் வெளிச்சமாய் அமையும். அந்த மாற்றத்துக்கான பணியைத் தொடங்குவோம்.”

கனவும் உறுதியும் கலந்த குரலில் சொல்கிறார் கிருஷ்ணவேணி.