Published:Updated:

இரவு 11.30 மணி... அடைமழையில் பதறிய இளம்பெண்! - வியக்கவைத்த கேரள கண்டக்டர், டிரைவர்

அந்த நள்ளிரவு நேரத்தில் அடைமழை பொழிய மின்சாரமும் இல்லாமல் இருந்துள்ளது. எல்சினா தன் உறவினருக்கு போன் செய்து விரைந்து வரச் சொல்லியுள்ளார்.

எல்சினா
எல்சினா

கேரள மாநிலம் கண்ணூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் எல்சினா. பெங்களூருவில் உள்ள கல்லூரி ஒன்றில் எம்.பில் படித்துவரும் இவர் தனது படிப்புக்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக கல்லூரியிலிருந்து தனது மாநிலத்துக்கு வந்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டுவந்தவர், அதனொருபகுதியாகக் கோட்டயம் அருகே தனது உறவினரின் ஊரான பொடிமட்டம் என்கிற பகுதிக்குச் செல்ல நினைத்து அதற்காக எர்ணாகுளத்திலிருந்து மதுரைக்குச் செல்லும் பேருந்தில் செவ்வாய்க்கிழமை ஏறியுள்ளார்.

கண்டக்டர் ஷாஜுதீன், டிரைவர் டென்னிஸ் சேவியர்
கண்டக்டர் ஷாஜுதீன், டிரைவர் டென்னிஸ் சேவியர்

எல்சினா இறங்க வேண்டிய காஞ்சிரப்பள்ளி அருகே உள்ள கல்லூரி நிறுத்தத்துக்கு பேருந்து வரும்போது இரவு 11.30 மணி ஆகிவிட்டது. அன்று ஸ்டிரைக் என்பதால் கடைகள் அனைத்தும் வெகுசீக்கிரமாகவே அடைக்கப்பட்டு இருக்க, அந்த நள்ளிரவு நேரத்தில் அடைமழையும் பொழிய மின்சாரமும் இல்லாமல் இருந்துள்ளது. எல்சினா தன் உறவினருக்கு போன் செய்து விரைந்து வரச் சொல்லியுள்ளார்.

`எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை!’ - வைரலான வீடியோ குறித்து பேட்டியளித்த கேரளப் பெண்

ஆனால், கனமழை காரணமாக அவர்களால் வீட்டில் இருந்து நகர முடியாமல் இருக்க எல்சினாவை அழைத்துச் செல்ல தாமதமாகும் எனக் கூறியுள்ளார்கள். இதனால் பதறியபடியே அங்கு நின்றிருந்த எல்சினாவை கவனித்த பேருந்தின் நடத்துநரும் ஓட்டுநரும் அவரிடம் நடந்த விவரத்தைக் கேட்டுள்ளனர். நிலைமையை உணர்ந்த நடத்துநரும் ஓட்டுநரும் எல்சினாவை தனியாக விட்டுச் செல்லக் கூடாது எனத் தீர்மானித்து அவருக்காகக் காத்திருக்க முடிவு செய்துள்ளனர்.

எல்சினா
எல்சினா

உடனடியாக இருவரும் பேருந்தில் உள்ள பயணிகளிடம் சென்று எல்சினாவின் நிலைமையை எடுத்துச் சொல்லி அவர்களிடம் பேருந்து காத்திருக்க அனுமதி வாங்கியுள்ளனர். பின்னர், அரைமணி நேரம் கழித்து உறவினர் வர அவரிடம் எல்சினாவை பத்திரமாக ஒப்படைத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவத்தை அங்கிருந்த பயணி மூலம் அந்தப் பகுதி எம்.எல்.ஏ-வுக்கு தெரியவர அவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவையடுத்து மாணவியின் பாதுகாப்புக்காகக் காத்திருந்த பஸ் கண்டக்டர் ஷாஜுதீன், டிரைவர் டென்னிஸ் சேவியர் ஆகியோருக்கு நெட்டிசன்களும் பலதரப்பட்ட மக்களும் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.

Vikatan