ஆணாதிக்கம் மிக்க சமுதாயத்தில் பெண்கள் பல சவால்களையும் சிக்கல்களையும் கடந்த பின்பே உயர் பதவிக்கு வர முடிகிறது. முட்டி மோதி உயர்பதவியை அடைந்த பின்னரும் அவர்கள் சந்திக்கும் பாலின பாகுபாடுகள் ஏராளம். அந்த வகையில், பெண் நீதிபதி ஒருவரை ஆணைக் குறிக்கும் சொல்லைப் பயன்படுத்தி வழக்கறிஞர் அழைத்த செயலும், அதற்கு அந்த நீதிபதியின் பதிலும் தற்போது பேசுபொருளாகியிருக்கிறது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
டெல்லி, உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றி வருபவர் ரேகா பள்ளி. உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஆஜரான ஆண் வழக்கறிஞர் ஒருவர், பெண் நீதிபதியான ரேகாவை தொடர்ந்து `சார்' என்று குறிப்பிட்டே வாதாடிக்கொண்டிருந்தார்.
ஒரு கட்டத்தில் ரேகா, ``நான் சார் இல்லை. அதை உங்களால் அறிந்துகொள்ள முடியும் என நம்புகிறேன்” என்றார். அதற்கு அந்த வழக்கறிஞர், ``மன்னிக்கவும். நீங்கள் அமர்ந்திருக்கும் (நீதிபதி) இருக்கை காரணமாகவே உங்களை `சார்’ என்று அழைக்கிறேன்” என்று தெரிவித்தார். தலைமை நீதிபதி போன்ற உயரிய பதவிகள் ஆண்களுக்கானவை எனப் பொருள்படும் விதமாக அமைந்தது வழக்கறிஞரின் பதில்.

இதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக நீதிபதி ரேகா, ``இத்துணை காலத்துக்குப் பிறகும்கூட ஜஸ்டிஸ் சேர் (நீதிபதி பதவி) `சார்’களுக்கானது என்ற மனநிலையே தொடர்வது வருந்தத்தக்கது. இன்றைய இளம் தலைமுறையினரே இப்படிப் பாகுபாடு காட்டும்போது, வருங்காலம் மீது என்ன நம்பிக்கை வைக்க முடியும்?” எனக் கேள்வி எழுப்பினார்.
அதிகாரப் பதவிகள் அனைத்தும் ஆண் பாலிலேயே உருவாக்கப்பட்டிருப்பதும், அந்த நாற்காலிகளுக்கு பெண்கள் வரும்போது நடக்கும் இதுபோன்ற பாலின வார்த்தை கேலிக்கூத்துகளும் வேதனையானது.
ஆணாதிக்கமிக்க சமூகத்தில் பெண்கள் செல்ல வேண்டிய தூரம், கடக்க வேண்டிய பாலினப் பாகுபாடுகள் இன்னும் குறையாமல்தான் இருக்கிறது என்பதற்கு இந்தச் சம்பவம் ஓர் எடுத்துக்காட்டு.