தமிழகத்தின் இரு கொடூர குற்றங்கள்... இருந்தும் நீதிமன்றங்கள் தூக்குத் தண்டனையை ரத்து செய்தது ஏன்?

நீதிமன்றங்களின் சில தீர்ப்புகளை செய்திகளாக வாசிக்கும்போது நடு நெஞ்சில் திடுக்கென்று உணர்வோம். அப்படிப்பட்ட இரண்டு தீர்ப்புகளை நேற்றும் நேற்றுக்கு முந்தைய தினமும் வாசிக்க நேர்ந்தது.
நீதிமன்றங்களின் சில தீர்ப்புகளை செய்திகளாக வாசிக்கும்போது நடு நெஞ்சில் திடுக்கென்று உணர்வோம். அப்படிப்பட்ட இரண்டு தீர்ப்புகளை நேற்றும் நேற்றுக்கு முந்தைய தினமும் வாசிக்க நேர்ந்தது. முதல் செய்தி, நகைக்காக ஒரு பெண்ணை 8 எட்டுத் துண்டுகளாக வெட்டிக் கொலை செய்த ஓர் ஆணுக்கு கோவை நான்காவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் விதித்த தூக்குத்தண்டனையை, சென்னை உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனையாகக் குறைத்து தீர்ப்பளித்துள்ளது. இரண்டாவது செய்தி, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததோடு கழுத்தை அறுத்து கொலையும் செய்த நபருக்கு செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்றம் விதித்த மரணதண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது. 'ஏன் இப்படிப்பட்ட தீர்ப்புகள்' என்கிற கேள்வியை வழக்கறிஞர் ரமேஷ் அவர்களிடம் கேட்டோம்.

"நகைக்காக பெண்ணை வெட்டிக் கொலை செய்த நபருக்கு தூக்குத்தண்டனையை ரத்து செய்துவிட்டு ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம் அந்த ஆயுள் தண்டனை 25 வருடங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இது வழக்கமான ஆயுள் தண்டனையை விட மிக அதிகம். அதிலும் இந்த 25 வருடங்களில் அந்த நபருக்கு வழக்கமான ஆயுள் தண்டனைக்கு வழங்கப்படுவது போன்ற நன்னடத்தை உட்பட எந்தவித சலுகையும் வழங்கப்பட மாட்டாது. தவிர, தூக்குத்தண்டனை என்பது அரிதினும் அரிதான வழக்குகளில் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. அதாவது, சில குற்றங்களுக்கு தூக்குத்தண்டனை வழங்குவதைத் தவிர வேறு வழியே இல்லை என்கிற நிலையிருக்கும். இதற்கு உச்ச நீதிமன்றம் சில வழிகாட்டுதல்கள் தந்திருக்கிறது. அதன்படி தூக்குத்தண்டனை வழங்கலாம்.
இது நம்முடைய சட்டத்தில் இல்லையென்றாலும், நீதிமன்றத் தீர்ப்புகளின் வழியே சொல்லப்பட்டிருக்கிறது. விளக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், ஆத்திரத்தில் உணர்ச்சிவசப்பட்டு கொலை செய்பவர்களையும் திட்டமிட்டு குழந்தைகளைக் கொலை செய்பவர்களையும் பாலியல் வன்கொடுமை செய்பவர்களையும் தொடர் கொலைகள் செய்பவர்களையும், சட்டம் வழங்கும் தண்டனைகளின் முன்னால் சமமாக வைக்க முடியாது. இந்த வழக்கைப் பொறுத்தவரை, நகைக்கு ஆசைப்பட்டு சட்டென்று கொலை செய்திருக்கிறான். திட்டமிட்டு செய்யவில்லை. அவன் செய்தது குற்றம்தான். ஆனால், தூக்கு தண்டனை தரப்படுகிற அளவுக்கு அரிதினும் அரிதான குற்றம் கிடையாது.
இரண்டாவது தீர்ப்பை எடுத்துக்கொண்டால், குற்றம் சுமத்தப்பட்ட நபரை குற்றவாளி என்று தீர்ப்பு சொல்வதற்குப் போதுமான சாட்சியங்கள் இல்லை. சம்பவம் நடந்த இடத்திலிருந்து சேகரிக்கப்பட்ட ரத்தமும் குற்றம் சுமத்தப்பட்ட நபரின் ரத்தமும் மரபணு பரிசோதனையில் ஒத்துப்போகவில்லை. அதனால்தான் அந்த நபருக்கு வழங்கப்பட்ட தூக்குத்தண்டனையை உயர் நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. என்னுடைய அனுபவத்தில் சொல்கிறேன். கொலை வழக்குகளில், துணியில் கோழி ரத்தத்தைத் தெளித்து தடயவியல் துறைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினரையும் பார்த்திருக்கிறேன்.

மேலே நான் சொல்லியிருக்கிற காரணங்கள் ஒருபக்கம் என்றால், இன்னொரு பக்கம் உலகின் பல நாடுகளில் தூக்குத்தண்டனையை ரத்து செய்துவிட்டார்கள். நம் நாட்டிலும் தூக்குத்தண்டனைக்கு எதிரான குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. அதனாலும் நீதிமன்றம் அப்படித் தீர்ப்பளித்திருக்கலாம்" என்கிறார் வழக்கறிஞர் ரமேஷ்.