கட்டுரைகள்
Published:Updated:

திரும்பிவந்த கணவரின் மகன், கைவிடப்படும் நான் மனஉளைச்சலில் இருந்து மீள என்ன வழி?

பெண் டைரி
பிரீமியம் ஸ்டோரி
News
பெண் டைரி

பெண் டைரி I ஒரு வாசகியின் கடிதம்

என் கணவருக்கு நான் இரண்டாவது மனைவி. அவரின் முதல் மனைவியும் அவரும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு ஒரு பையன். திருமணமாகி எட்டு ஆண்டுகளில் இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டு, விவாகரத்து பெற்று இருவரும் சட்டபூர்வமாகப் பிரிந்துவிட்டனர். அப்போது, அவர் பையனுக்கு ஆறு வயது. அவரின் முதல் மனைவி விவாகரத்துக்குப் பிறகு, மகனையும் தன்னுடனேயே அழைத்துச் சென்றுவிட்டார்.

பின்னர் எனக்கும் என் கணவருக்கும் திருமணம் நிச்சயமானது. திருமணத்துக்கு முன்னதாக என் கணவர் என்னிடம் பேசியபோது, ‘முதல் திருமணம், குழந்தை எல்லாம் முற்றிலும் முடிந்துவிட்ட உறவு’ என்று உறுதி கொடுத்தார்.

எங்கள் திருமணம் முடிந்தது. எங்களுக்குக் குழந்தை இல்லை. ஆனாலும், இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொண்டு, என்னை அவரும் அவரை நானும், எங்கும் யாரிடமும் விட்டுக்கொடுக்காமல் வாழ்ந்தோம். அவர் முதல் மனைவியும், பையனும் ஒரு தொலைதூர ஊரில் வாழ்ந்துவந்தனர். முதல் மனைவியின் பெற்றோர், சகோதரர்கள் அனைவரும் மிகவும் வசதியானவர்கள் என்பதால், அவர்களது அரவணைப்பில் சொந்த வீடு, கார் என சகல வசதிகளுடன் இருந்தனர். இதை மற்றவர்கள் பார்த்து வந்து எங்களிடம் சொல்லும்போது, ‘எப்படியோ நல்லா இருந்தா சரி’ என்று இருவருமே பெருமூச்சு விட்டுக்கொள்வோம்.

திரும்பிவந்த கணவரின் மகன், கைவிடப்படும் நான் மனஉளைச்சலில் இருந்து மீள என்ன வழி?

இன்னொரு பக்கம், அதற்கு நேர் எதிராக இருந்தது எங்கள் வீட்டுப் பொருளாதாரச் சூழல். தொழில் செய்துகொண்டிருந்த அவருக்கு ஒரு கட்டத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட, பின்னர் தொட்டது எதுவுமே துலங்காமல் போக, நான் அருகில் ஒரு தனியார் அலுவலகத்தில் சாதாரண ஒரு வேலைக்குச் செல்ல ஆரம்பித்தேன். 10 வருடங்களாக என் சம்பாத்தியத்தில்தான் குடும்பத்தைப் பார்த்துக்கொள்கிறேன். அவர் எந்த ஈகோவும் இல்லாமல், வீட்டைப் பார்த்துக்கொண்டார். எங்கள் வாழ்க்கையைக் குறிப்பிட்டுப் பேசும் அனைவரும், ‘அத்தனையையும் தாண்டி எவ்வளவு அன்போட, புரிந்துணர்வோட இருக்கீங்க ரெண்டு பேரும்’ என்று வாஞ்சையாகக் குறிப்பிடும் அளவுக்கு சந்தோஷமாக வாழ்ந்தோம்.

உருண்டோடிவிட்டன 21 வருடங்கள். ஆறு மாதங்களுக்கு முன், அவரின் முதல் மனைவிக்கு மிகவும் உடல்நிலை சரியில்லாமல்போனது.அந்த நேரத்தில் அவரின் மகன் வந்தான். தன் அம்மா, கணவரைப் பார்க்க விரும்புவதாகக் கூறி அழைத்துச் சென்றான். முதல் மனைவிக்கு நல்லபடியாக உடல்நிலை தேறிவிட்டது. ஆனால், கடந்த ஆறு மாதங்களாக இவர் அந்த வீட்டுக்கு வாடிக்கையாகச் சென்றுவருகிறார் என்பதைவிட, எப்போதாவதுதான் எங்கள் வீட்டுக்கு வருகிறார் என்கிற அளவுக்குக் காட்சிகள் அனைத்தும் மாறியிருக்கின்றன.

திரும்பிவந்த கணவரின் மகன், கைவிடப்படும் நான் மனஉளைச்சலில் இருந்து மீள என்ன வழி?

என் கணவருக்கு, 21 வருடங்கள் கழித்து வந்திருக்கும் தன் மகன்மீது, பேரன், பேத்திமீது ஏற்பட்டிருக்கும் பாசத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. அவர் முதல் மனைவிக்கும் அவருக்கும் இடையிலிருந்த வெறுப்பு, கோபங்கள் எல்லாம் வயோதிக வடிகட்டியில் வடிந்துபோய், இப்போது இருவரும் ஒருவருடன் ஒருவர் அனுசரணையாக இருப்பது புரிகிறது. ஆனால், என்னைப் பற்றி, என் நிலை பற்றி அவர் புரிந்துகொண்டாரா? இத்தனை வருடங்களாக, அவரே உலகம் என்று நினைத்து வாழ்ந்த என்னை விட்டு இப்படி கொஞ்சம் கொஞ்சமாக அவர் விலகிச் செல்வது என்னை எந்த அளவுக்குத் தனிமையில், ஆற்றாமையில், அழுகையில் தள்ளும் என்பதை அவர் நினைத்துப் பார்த்தாரா? உறவுகள் சூழ அவர் இருக்க, தனிமரமாக நிற்கும் என்னை எண்ணிப் பார்த்தாரா? இதற்காக நான் அவரிடம் கோபப்பட்டால், சண்டைபோட்டால், அது அவரை இன்னும் தீவிரமாக அவர்களிடம் கொண்டு சேர்த்துவிடுமோ என்று அஞ்சுகிறேன். என் மன உளைச்சலையும் கையாள முடியாமல் மூழ்குகிறேன்.

மீள என்ன வழி?

(வாசகிக்கான உங்கள் ஆலோசனைகளை கமென்ட்டில் தெரிவிக்கலாம்.)