Published:Updated:

சிறார் வதையிலிருந்து மீட்கப்பட்ட 16 வயது சிறுமி... இன்னும் வெளிச்சத்துக்கு வராத கொடூரங்கள் எத்தனை?

Sexual Abuse (Representational Image)
Sexual Abuse (Representational Image)

மீட்கப்பட்ட சிறுமிக்கு தற்போது 16 வயதாகிறது. குடும்பத்தின் வறுமைச் சூழலால் உறவுக்காரப் பெண்ணை நம்பிச்சென்ற நிலையில், அவரின் வற்புறுத்தலால் தற்போது இந்த நிலைக்கு ஆளாகியிருக்கிறார்.

மதுரையைச் சேர்ந்த சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 5 பெண் தரகர்களை நேற்று காலை கைது செய்துள்ளது காவல்துறை. பெரும் நரகத்திலிருந்து அச்சிறுமி மீட்கப்பட்டிருக்கிறாள். வறுமை, குடும்பச் சூழல் உள்ளிட்டவை ஆதரவற்ற சிறுமிகளை எந்தளவுக்கு துன்பத்தில் தள்ளுகிறது என்பதற்கு இச்சிறுமிக்கு நேர்ந்த கொடுமை மற்றோர் உதாரணம். தற்போது மருத்துவ சிகிச்சை மற்றும் மனநல சிகிச்சையில் இருக்கும் அந்தச் சிறுமிக்கு வயது 16. தன் 11 வயதிலிருந்து இந்தக் கொடுமையை அனுபவித்து வந்திருக்கிறார். தினந்தோறும் நடந்த சித்ரவதையால் அந்தச் சிறுமியின் உடல் ரணமாக்கப்பட்டிருக்கிறது.

Woman Abuse (Representational Image)
Woman Abuse (Representational Image)

சமீபத்தில் மதுரை எஸ்.எஸ். காலனி பகுதியில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஹேமா மாலா ஒரு பெண்ணை விசாரித்தபோது, ``வறுமையாலதான் இதுபோன்ற நிலைக்குத் தள்ளப்பட்டோம். சிலர் சின்னப் பிள்ளைங்கள வெச்சு பாலியல் தொழில் செய்து சம்பாதிக்கிறாங்க. அவங்க மேல நடவடிக்கை எடுக்கமாட்டீங்களா?" என்று கேட்டிருக்கிறார்.

அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ஆள் கடத்தல் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் ஹேமா மாலா, சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் கும்பலைப் பிடிக்க தனிப்பிரிவு அமைத்து திட்டமிட்டு சமீப நாள்களாக கண்காணித்து வந்தார். மதுரை உத்தங்குடி அருகே வி.ஐ.பி நகரில் ஒரு வீட்டில் ஒரு சிறுமியை பாலியல் தொழிலுக்கு அழைத்துச் சென்று சிலர் துன்புறுத்துவதாகத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, காவல்துறையினர் சென்று அச்சிறுமியை மீட்டு சிறார் வதை செய்த சரவணபிரபு என்பவரைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பாலியல் தரகர்கள்
கைது செய்யப்பட்ட பாலியல் தரகர்கள்

இதைத் தொடர்ந்து சிறுமியிடம் நடத்திய விசாரணையில், அவரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய ஜெயலட்சுமி, சுமதி, ஐஸ் சந்திரா உள்ளிட்ட 5 பெண் தரகர்களை கைது செய்தனர். இதில் ஜெயலட்சுமி அச்சிறுமிக்கு உறவினர் என்பது அதிர்ச்சி.

இதுபற்றி நம்மிடம் பேசிய காவல்துறையினர், ``இந்தச் சிறுமியின் பெற்றோர் மதுரையில் கூலி வேலைசெய்து வந்தனர். அவர்களுக்கு 5 பெண் பிள்ளைகள். பிள்ளைகளை வளர்க்க மிகவும் சிரமப்பட்டு வந்த நிலையில் கணவர் இறந்துவிட, மிகவும் மோசமான நிலைக்குச் குடும்பம் சென்றது. மனைவிக்கும் உடல் நலமில்லாமல் போக, திக்கற்று நின்றது அக்குடும்பம்.

அப்போது அவர்களின் உறவுக்கார பெண்ணான ஜெயலட்சுமி, ``ஒரு பிள்ளையை நான் வளர்க்கிறேன்" என்று கூறி, அப்போது 11 வயதில் இருந்த இச்சிறுமியை தன்னுடன் அழைத்துச் சென்றிருக்கிறார். சிறுது நாள்கள் சிறுமியை தன் வீட்டில் வைத்துப் பார்த்துக்கொண்டவர், பின்னர் பாலியல் தொழில் செய்ய சிறுமியை கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றிருக்கிறார்

சிறார் வன்கொடுமை
சிறார் வன்கொடுமை

தான் அந்தச் அச்சிறுமியை துன்புறுத்தியதோடு மட்டுமல்லாமல், பல தரகர்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு பல மாவட்டங்களுக்கும் அழைத்துச் சென்று அச்சிறுமியின் வாழ்வை பாழாக்கியுள்ளார். ஒருவழியாக இப்போது அச்சிறுமி மீட்கப்பட்டிருக்கிறார். சிறுமியை சிறார் வதை செய்த குற்றவாளிகளையும் தேடிவருகிறோம்'' என்றனர்.

மீட்கப்பட்ட சிறுமிக்கு தற்போது 16 வயதாகிறது. குடும்பத்தின் வறுமைச் சூழலால் உறவுக்காரப் பெண்ணை நம்பிச்சென்ற நிலையில், அவரின் வற்புறுத்தலால் தற்போது இந்த நிலைக்கு ஆளாகியிருக்கிறார்.

கடந்த சில வருடங்களாக தன்னை எந்தெந்த ஊருக்கு, எங்கெங்கு அழைத்துச் சென்றார்கள், அங்கு தனக்கு நடந்த கொடுமைகள் என்ன என்பது பற்றியெல்லாம் காவல்துறையினரிடம் சிறுமி தெரிவித்து வருகிறார். அவர்களை எல்லாம் சட்டத்தின் முன் நிறுத்த தொடர் விசாரணையில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

சிறார் வதை
சிறார் வதை

பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை, குழந்தைகளுக்கு எதிரான சிறார் வதை போன்றவற்றை தடுக்கும் சட்டங்கள் எத்தனை இருந்தாலும், அந்தக் குற்றங்கள் அதிகரித்துக்கொண்டேதான் வருகின்றன. மதுரை சிறுமி செய்திக்கு வந்துவிட்டார். இன்னும் எத்தனையோ குழந்தைகளும் பெண்களும் கையறு நிலையில் இதுபோன்ற கொடுமைகளுக்கு ஆளாகிவருகின்றனர் என்பதை நினைக்கும்போது நெஞ்சம் பதறுகிறது.

பெண்களையும் குழந்தைகளையும் இந்நிலைக்கு ஆளாக்கும் குற்றவாளிகள் ஏதோ வேற்றுகிரகவாசிகள் அல்லர். நம்முடன் மிக இயல்பாக வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதர்கள்தான் என்று நினைக்கும்போது இந்தச் சமூகத்தின் மீதான நம்பிக்கை அற்றுப்போகிறது. மதுரை சிறுமிபோல வெளிப்படும் சில குற்றங்களிலாவது சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை உறுதிசெய்யப்படுவதுதான், சட்டம் தரும் குறைந்தபட்ச நம்பிக்கையாக இருக்கும்.

அடுத்த கட்டுரைக்கு