Published:Updated:

`கல்வியும் வேலையும்தான் அங்கீகாரத்தைக் கொடுக்கும்!' - குரூப் 1 தேர்வில் சாதித்த திருநங்கை ஸ்வப்னா

டி.என்.பி.எஸ்.சி தேர்வில் திருநங்கைகளை அனுமதிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட இவருடைய வழக்கே காரணமானது.

ஸ்வப்னா
ஸ்வப்னா

டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்ற முதல் திருநங்கை என்ற பெருமையைப் பெற்றுள்ளார் மதுரையைச் சேர்ந்த ஸ்வப்னா. ஏற்கெனவே குரூப்-2 வில் வெற்றிபெற்று வணிக வரித்துறையில் அலுவலராகப் பணியாற்றி வரும் நிலையில், தற்போது இவ்வெற்றி அவரை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தியுள்ளது.

ஸ்வப்னா
ஸ்வப்னா

``உங்கள் அனுதாபமோ, கருணையோ எனக்குத் தேவையில்லை. உங்களுடன் போட்டிபோடக்கூடிய சம உரிமையை வழங்கினாலே போதும்; வெற்றிபெற்றுக் காட்டுவேன்'' என்ற லட்சியத்துடன் கடந்த சிலகாலமாகத் திருநங்கைகளின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உரிமைக்காகப் போராடி வருபவர் மதுரையைச் சேர்ந்த 28 வயதான ஸ்வப்னா.

அலங்காநல்லூரில் பிறந்த ஸ்வப்னா, பள்ளியில் படிக்கிற காலத்திலிருந்தே ஊர்க்கார்களின் ஏளனத்துக்கும் இழிவுக்கும் ஆளான நிலையிலும் அதைப்பற்றி கவலைப்படாமல் கல்வி ஒன்றே மாற்றத்தைக் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து கல்வியில் கவனம் செலுத்திவந்தார். பி.ஏ பட்டம் பெற்ற பின் அரசின் போட்டித்தேர்வில் பங்கு பெற பயிற்சி எடுக்கத் தொடங்கினார்.

ஸ்வப்னா
ஸ்வப்னா

2013-ல் முதல் முறையாக டி.என்.பி.சி. குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பித்தபோது அவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். டி.என்.பி.எஸ்.சி தேர்வில் திருநங்கைகளை அனுமதிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட இவருடைய வழக்கே காரணமானது.

2018-ல் நடந்த குரூப்-2 தேர்வை எழுதி வெற்றி பெற்றவர், வணிகவரித்துறை அலுவலராகப் பணியில் சேர்ந்தார். இருந்தாலும் அவருடைய போட்டித்தேர்வு ஆர்வம் குறையவில்லை. குரூப்-1க்கு தயாரானவர் தற்போது தரவரிசைப் பட்டியலில் 228-வது ரேங் எடுத்து வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அல்லது அதற்கு இணையான பதவியில் அமர உள்ளார்.

ஸ்வப்னா
ஸ்வப்னா

வாழ்த்து சொல்லி அவரிடம் பேசினோம். ``எனக்கு என் பெற்றோர்கள் ஒத்துழைப்பு கொடுத்ததால் இந்தளவுக்கு சாதிக்க முடிந்தது. தற்போது மதுரை வணிக வரித்துறை அலுவலகத்தில் பணியாற்றி வருகிறேன். குரூப் 1-ல் வெற்றி பெற்றுள்ளதால் அடுத்து எங்கு பொறுப்பு அளிப்பார்கள் என்ற தகவல் வரவில்லை. இதோடு என் தேர்வு ஆர்வம் நிற்காது. என்னுடைய இலக்கான ஐ.ஏ.எஸ் ஆவதற்கு படிக்க ஆரம்பிப்பேன்'' என்றார். கல்வி ஒன்றுதான் சமூகத்தில் அங்கீகாரத்தையும் அதிகாரத்தையும் கொடுக்கும் என்பதில் திடமான நம்பிக்கையில் நடைபோட்டு வருகிறார் ஸ்வப்னா. வாழ்த்துகள்!