POSH சட்டத்தின்படி எந்த ஒரு நிறுவனமும் பெண்களின் பாலியல் துன்புறுத்தல் குறித்த புகார்களை உடனுக்குடன் அறிந்து அவற்றை நிவர்த்திசெய்ய நம்பத்தன்மையுடன் கூடிய Internal Complaints Committee (ICC) யை கட்டாயமாக அமைக்க வேண்டும். இந்த அடிப்படையில், மலையாளத் திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களும் இத்தகைய இன்டெர்னல் குழுவை அமைக்குமாறு கேரள உயர் நீதிமன்றம் கடந்த மாத தொடக்கத்தில் உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில், வைக்கம் முஹமது பஷீரின் சிறுகதையை அடிப்படையாகக் கொண்ட, ஆஷிக் அபுவின் அடுத்த படமான `நீலவெளிச்சம்' படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 26-ம் தேதி அன்று கண்ணூரில் தொடங்கியது. இந்தப் படத்தில் டோவினோ தாமஸ், ரீமா கல்லிங்கல், ரோஷன் மேத்யூ, ஷைன் டாம் சாக்கோ உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்புடன், பணியிடத்தில் நடக்கும் பாலியல் அத்துமீறல் குறித்த சம்பவங்கள் பற்றி புகாரளிக்க internal committee அமைக்கப்பட்ட விவரமும் பகிரப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
நீலவெளிச்சம் படக்குழுவினரால் உருவாக்கப்பட்ட இந்த இன்டெர்னல் கமிட்டியின் தலைமை அதிகாரியாக காஸ்ட்யூம் டிசைனர் சமீரா சனீஷும், உறுப்பினர்களாக நடிகை தேவகி பாகி, காயத்ரி பாபு மற்றும் ஹிருஷிகேஷ் பாஸ்கரன் ஆகியோரும் இருப்பார்கள். மாயா கிருஷ்ணனும் இதில் அங்கம் வகிப்பார். ``உங்கள் பணியிடத்தில் ஏதேனும் பாலியல் அத்துமீறல் நடந்தால் புகாரளிக்க POSH சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஐசிசியின் எந்த உறுப்பினரையும் தொடர்பு கொள்ளவும்" என்று நீலவெளிச்சம் படக்குழு, அதன் சமூக ஊடக பக்கத்தில் தெரிவித்துள்ளது.