Published:Updated:

`பெண் கமாண்டோக்கள் சொல்வதை ஆண்கள் கேட்கமாட்டார்கள்!' - உச்ச நீதிமன்ற வழக்கில் அரசு கொடுத்த விளக்கம்

பெண் ராணுவ வீரர்கள்
பெண் ராணுவ வீரர்கள்

மாறிவரும் காலச் சூழலுக்கு ஏற்ப அரசின் சிந்தனையிலும் மாற்றம் தேவை. பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும்.

இந்தியா அண்மையில் தனது 70வது குடியரசு தினத்தை அணுசரித்தது. 70 ஆண்டுகளில் முதன்முறையாக ஒரு பெண் ராணுவ வீரர் குடியரசு தினவிழா அணிவகுப்பை முன்னடத்திச் சென்றார். முழுவதும், ஆண் ராணுவ வீரர்கள் நிரம்பியிருந்த அந்தப் படை அணிவகுப்பை நடத்திச் சென்ற 26 வயதான கேப்டன் தான்யா ஷெர்கில், 'ராணுவத்தில் அத்தனையும் மெரிட் அடிப்படையிலேயே நடக்கிறது அங்கே பாலினப் பாகுபாடுகள் கிடையாது' எனக் கருத்து தெரிவித்திருந்தார். தான்யா வழிநடத்திச் சென்றது பலதரப்பாலும் பாராட்டப்பட்ட சில தினங்களிலேயே ராணுவத்தில் பெண் கமாண்டோக்கள் குறைப்பு தொடர்பான சர்ச்சையில் மத்திய அரசு சிக்கிக் கொண்டிருக்கிறது.

தான்யா ஷெர்கில்
தான்யா ஷெர்கில்
ராணுவ அணிவகுப்பைத் தலைமை தாங்கிய முதல் பெண் ராணுவ அதிகாரி... ராணுவ தினக் கொண்டாட்ட ஸ்பெஷல்!

பெண் ராணுவ அதிகாரிகள் சிலர் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் பதிலளித்துள்ள மத்திய அரசு, "கமாண்டோக்களாகப் பெண்கள் இருக்கும் நிலையில் அவர்கள் சொல்வதைக் கேட்டு அணிவகுத்துச் செல்லும் அளவுக்கு படையில் உள்ள ஆண்கள் பக்குவமடையவில்லை” என்று தனது விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலசுப்ரமணியம் நீதிமன்ற சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதிமன்ற இருவர் அமர்வுக்கு விளக்கம் அளிக்கையில், "இனிவரும் காலங்களில் நடக்கும் போர்கள் அத்தனையும் குறுகியகாலங்களில் அதிவேகத்தில் நிகழும் அபாயத்துடன் கூடிய போராகவே இருக்கும்.

மேலும், பயங்கரவாதத்துக்கு எதிரான தாக்குதல்கூட பயிற்சிகளில் முன்கூட்டியே திட்டமிடுவது போல அமைவதில்லை. அந்தச் சமயங்களில் ஆண்களைத் தலைமையேற்றுச் செல்லும் பெண் அதிகாரிகள் அதற்கேற்ற உடல்வாகோடு இருக்க வேண்டும். இதுபோன்ற மாறிவரும் போர்ச்சூழலுக்குப் பெண் அதிகாரிகளை நியமிப்பதைவிட ஆண் ராணுவப்படைகள் பொருத்தமாக இருக்கும். மேலும் பிரசவம் மற்றும் மகப்பேறுகாலங்களில் நீண்டநாள் விடுப்பு எடுத்துக் கொள்வது உள்ளிட்டவையும் ராணுவத்துக்குச் சிக்கலாக இருக்கும். மற்றொரு பக்கம் ஒரு பெண், அதிகாரியாக நியமிக்கப்படும் நிலையில் அவர் அடிக்கடிப் பணியிடமாற்றம் செய்யப்படலாம்.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்
`மன அழுத்தம்; அறுவை சிகிச்சை; ராணுவ விதிமீறல்!' -திருநங்கையாக மாறிய ராணுவ வீரருக்கு நேர்ந்த சோகம்

அந்தச் சமயங்களில் அவர்கள் பிள்ளைகளின் கல்வி, அவரது இணையின் வேலை உள்ளிட்டவையும் அடிக்கடி மாற்ற வேண்டிய சூழல் ஏற்படும். அதிகாரியாக ஒரு பெண் நியமிக்கப்படும்போது அவர் மட்டுமல்லாமல் அவரது குடும்பமும் சேர்த்து பல தியாகங்களைச் செய்ய வேண்டியிருக்கும். அது இந்தியக் குடும்பச் சூழல்களுக்குப் பொருந்தாது" என விளக்கமளித்துள்ளார்.

இதற்கு எதிர்வாதம் செய்த மூத்த வழக்கறிஞர் மீனாட்சி லேகி, "உங்களது பார்வை முற்றிலும் தவறானது. கேப்டன் அபிநந்தன் பாகிஸ்தான் வரைச் சென்று தாக்குதல் நடத்திவிட்டுத் திரும்ப அவருக்கு வழிகாட்டியது மிண்டி அகர்வால் என்கிற விமானக் கட்டுப்பாட்டாளர்தான். காபுலில் உள்ள இந்தியத் தூதரகத்தை பயங்கரவாதிகள் தாக்கியபோது அவர்களுக்கு எதிராக மிதாலி மதுமிதா என்கிற பெண் ராணுவ அதிகாரிதான் துணிந்து நின்றார். வீரதீர சாகசத்துக்கான இந்த ஆண்டுக்கான அரசின் விருது அவருக்குதான் வழங்கப்பட்டிருக்கிறது. இப்படியிருக்க எந்த அடிப்படையில் பெண் ராணுவ அதிகாரிகளுக்குத் தகுதியில்லை எனக் குறிப்பிடுகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.

மித்தாலி மதுமிதா
மித்தாலி மதுமிதா

வாதப் பிரதிவாதங்களுக்குப் பிறகு, பதிலளித்துப் பேசிய நீதிபதிகள் அமர்வு, "கமாண்டோ பொறுப்புகளில் பெண் அதிகாரிகள் இருப்பதை முற்றிலும் தடை செய்வது ஏற்றுக்கொள்ளதக்கதல்ல. ராணுவப்படைகளில் தேவைகளுக்கு ஏற்ப தகுதியான பெண் அதிகாரிகளை நியமனம் செய்ய வேண்டும். மாறிவரும் காலச் சூழலுக்கு ஏற்ப அரசின் சிந்தனையிலும் மாற்றம் தேவை. பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும். நிச்சயம் அவர்கள் தங்களால் இயன்ற அளவுக்குச் சிறப்பாகப் பணியாற்றுவார்கள்” என்று குறிப்பிட்டது.

அடுத்த கட்டுரைக்கு