மணமான மகளுக்கும் பெற்றோரின் அரசுப் பணியில் உரிமை உண்டு... கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

''இந்த உலகத்தில் பாதியளவு வியாபித்திருக்கும் பெண்களுக்கு பாதியளவுக்குக்கூட உரிமைகள் கிடைக்காமல் இருப்பது வேதனையானது.''
அரசுப் பணியில் இருக்கும் தாய் அல்லது தந்தை இறந்தால் கருணையின் அடிப்படையில் அவர்களின் மகன் அல்லது மகளுக்கு அந்த அரசுப்பணி வழங்கப்படுவது வழக்கம். அதுவே அந்த மகள் திருமணமாகிச் சென்றுவிட்டால், அவருக்குப் பெற்றோரின் அரசுப்பணியைக் கோரும் உரிமை கிடையாது என்கிற வழக்கம் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், திருமணமாகிச் சென்றாலும்கூட பெண்ணுக்குத் தன் பெற்றோரின் வேலையைப் பெற உரிமையிருக்கிறது என்கிற மிக முக்கியத் தீர்ப்பை கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கியிருக்கிறது.
வழக்கு இதுதான். பெங்களூருவைச் சேர்ந்த புவனேஸ்வரியின் தந்தை அஷோக் அதிவேப்பா, கர்நாடகாவின் பெல்காவி மாவட்டத்தில் உள்ள குடுச்சி என்கிற ஊரில் விவசாய மார்க்கெட்டிங் சார்ந்த அரசு அலுவலகத்தில் செயலராகப் பணிபுரிந்துவந்தார். 2016-ம் ஆண்டு பணியில் இருக்கும்போதே அவர் இறந்துவிட, தனியார்துறையில் பணிபுரியும் அவரின் மகன், தன் தந்தையின் வேலையைப் பெற விரும்பவில்லை.

இந்த நிலையில்தான் 2017-ம் ஆண்டு கருணையின் அடிப்படையில் தன் தந்தையின் அரசு வேலையைத் தனக்கு அளிக்கக்கோரி மகள் புவனேஸ்வரி விண்ணப்பித்தார். ஆனால், இவரது இந்த விண்ணப்பத்தை விவசாய மார்க்கெட்டிங் துறையின் இணை இயக்குநர் நிராகரித்துவிட்டார். `திருமணமாகாமல் இருந்தால் மட்டுமே மகள் தன் பெற்றோரின் அரசுப்பணியை கருணை அடிப்படையில் பெற முடியும். விண்ணப்பதாரருக்குத் திருமணமாகிவிட்டதால் இவர் இந்த உரிமையைக் கோர முடியாது' என்று காரணம் சொல்லப்பட்டது.
ஆனால், இந்த முடிவை எதிர்த்து புவனேஸ்வரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
``இந்த உலகத்தில் பாதியளவு வியாபித்திருக்கும் பெண்களுக்குப் பாதியளவுக்குக்கூட உரிமைகள் கிடைக்காமல் இருப்பது வேதனையானது “ என்று இந்த வழக்கு குறித்து உயர் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.
``மதம், இனம், பாலினம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மனிதர்கள் மீது காட்டப்படும் பாகுபாடுகள் இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஆர்டிகிள் 14 மற்றும் ஆர்ட்டிகிள் 15 ஆகியவற்றுக்கு எதிரானது.

மகனுக்குத் திருமணமாகியிருந்தாலும், பணியில் இருக்கும்போதே இறந்த தன் பெற்றோரின் அரசுப்பணியைப் பெறுவதற்கு உரிமை உண்டு என்றால், இதே உரிமை திருமணமான மகளுக்கும் உண்டு. திருமணமாகிப் புகுந்த வீடு சென்றுவிட்டதாலேயே பெண்ணுக்கும் அவரது பிறந்தவீட்டுக்கும் தொடர்பே இல்லை என்று அர்த்தமாகாது. எனவே, மனுதாரர் புவனேஸ்வரியின் கருணை மனுவைப் பரிசீலித்து அவருக்கு அரசுப்பணி வழங்க வேண்டும்” என்று அரசுக்கு அறிவுறுத்தி முக்கியமான தீர்ப்பை வழங்கியிருக்கிறார் இந்த வழக்கின் நீதிபதியான நாகபிரசன்னா.
ஆண், பெண் பாகுபாட்டுக்கு எதிராக வந்திருக்கும் இந்தத் தீர்ப்பானது கர்நாடகா மட்டுமல்லாமல் இந்தியா முழுக்கப் பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.