Published:Updated:

தலைநிமிரும் எங்கள் தலைமுறை!

திவ்யா
பிரீமியம் ஸ்டோரி
திவ்யா

இந்தக் குடியிருப்பில் மொத்தம் 60 குடும்பங்கள் இருக்கோம். நிலையான தொழில்னு எதுவும் கிடையாது.

தலைநிமிரும் எங்கள் தலைமுறை!

இந்தக் குடியிருப்பில் மொத்தம் 60 குடும்பங்கள் இருக்கோம். நிலையான தொழில்னு எதுவும் கிடையாது.

Published:Updated:
திவ்யா
பிரீமியம் ஸ்டோரி
திவ்யா

``புத்தக வாசனை எப்படி இருக்கும்னு தெரிஞ்சிக்கவே எங்களுக்கு மூணு தலைமுறை ஆகியிருக்கு. இங்க இருக்கும் மக்களைப் பாருங்க. வறுமையையும் பசியையும் தவிர எந்த உணர்ச்சியையும் அவங்க முகத்துல பார்க்க முடியாது. மூணு வேளையும் சோறு கிடைக்கிற நாளுதான் எங்களுக்கு நிறைவான நாளு. ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, சாதிச்சான்றிதழ்னு சக மனுஷங்களுக்கு இருக்குற அடையாளமே இங்க இருக்கும் நிறைய பேருக்கு இல்ல. அதுக்காகப் போராடி ஓஞ்சுபோயிட்டாங்க. கிடைக்குற அடையாளத்துக்காகப் போராடுறதுக்கு பதிலா, புது அடையாளத்தை உருவாக்கலாம்னுதான் படிப்பைக் கையில் எடுத்து, மாற்றத்தைத் தேடி ஓட ஆரம்பிச்சிருக்கோம்” ஏமாற்றங்களின் வலிகளையும் அதேநேரம் மாற்றத்தின் தொடக்கத்தையும் வெளிப்படுத்துகின்றன திவ்யாவின் சொற்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

விழுப்புரத்திலிருந்து 50 கிலோ மீட்டர், அம்மா குளம் பழங்குடி இருளர் குடியிருப்பைச் சேர்ந்தவர் திவ்யா. எழுதப்படிக்கத் தெரியாத மக்கள் கூட்டத்தில் சிறுவயதில் இருந்தே படிக்கும் கனவோடு வளர்ந்தவர். பல்வேறு போராட்டங்களுப் பிறகு அவர் வசிக்கும் இருளர் குடியிருப்பில் இருந்து முதல் ஆளாகக் கல்லூரியில் கால்பதித்துள்ள பெண். செல்லூரில் முதலாமாண்டு வேதியியில் படித்துவருகிறார். சாதியப் புறக்கணிப்புகளைக் களைய தன் பகுதியில் உள்ள மக்கள் எல்லோருக்கும் எழுதப் படிக்கக் கற்றுத்தருபவர். அந்தி சாய்ந்த இரவு நேரத்தில் ஜன்னல்கள், கதவுகள் அற்ற குடியிருப்பில் மெழுகுவத்திகளை ஏந்தி, வறுமை தோய்ந்த முகங்களுடன் இருக்கும் மக்களுக்குப் பாடம் சொல்லிக்கொண்டிருந்த திவ்யாவுடன் உரையாடல் தொடங்கியது.

தலைநிமிரும் எங்கள் தலைமுறை!
தலைநிமிரும் எங்கள் தலைமுறை!

“எத்தனையோ அவமானங்களைப் பார்த்தாச்சு. எங்க போனாலும் புறக்கணிப்புகள் நிழலாய்த் தொடருது. இங்க இருக்க யாரும் படிப்பு வரலைன்னு பள்ளிக்கூடத்துக்குப் போகாம இல்ல. அவமானங்களுக்கு பயந்துதான் படிப்பை நிறுத்துறாங்க. சாதியைத் தலையில் தூக்கிவெச்சுக் கொண்டாடுற நிறைய பேருக்கு சாதியால எங்க வாழ்க்கையே அழிஞ்சுட்டு இருக்குன்னு தெரியுறது இல்ல. சாதி சார்ந்த புறக்கணிப்புகளுக்கும் அவமானங்களுக்கும் பயந்து எல்லாரும் ஒதுங்கிப்போனால் எங்க வாழ்க்கை மாறவே மாறாதுன்னு புரிஞ்சுது. எங்க கூட்டத்திலிருந்து ஒரு ஆள் படிச்சு ஜெயிச்சுட்டா போதும், அந்த வெற்றி எல்லோருடைய வாழ்க்கையின் ஆரம்பமாக இருக்குங்கிறதால், படிப்புக்காக நான் போராட ஆரம்பிச்சேன். சாதியைக் காரணம் காட்டி வகுப்புல சில பேர் ஒதுங்கிப்போவாங்க. `படிப்பு ஒழுங்கா வரல, உங்களுக்கெல்லாம் படிப்பு அவசியமா’ன்னு ஆரம்பக்காலத்துல அவமானப்படுத்துவாங்க. எங்க ஏரியால பஸ்ஸை நிப்பாட்டாமப் போவாங்க. இப்படி அவமானப்படும் நிமிஷத்தில் எல்லாம் நான் படிக்கணுங்கிறது மட்டும்தான் என் மனசுக்குள் ஓடும்” என்ற திவ்யாவின் குரல், படிப்புக்காகப் போராடும் ஒட்டுமொத்த இருளர் பழங்குடி மக்களின் குரலாய் ஓங்கி ஒலித்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“இந்தக் குடியிருப்பில் மொத்தம் 60 குடும்பங்கள் இருக்கோம். நிலையான தொழில்னு எதுவும் கிடையாது. மரம் அறுக்குறது, கல் அறுக்குறதுன்னு கூலி வேலைகளுக்குப் போவாங்க. ஒரு நாள் கூலி 150 ரூபாய். அதை வெச்சு குடும்பத்துல இருக்க எல்லாரும் நிறைவா சாப்பிடுறதே பெரிய விஷயம். இதுல படிப்புக்குச் செலவழிங்கன்னு பெத்தவங்களைத் தொல்லை பண்ண முடியாது. இங்க இருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் இருக்க அரசாங்கப் பள்ளிக்கூடத்தில் தான் இங்க இருக்க எல்லாரும் நடந்து போயி படிச்சுட்டு வருவோம்.

தலைநிமிரும் எங்கள் தலைமுறை!
தலைநிமிரும் எங்கள் தலைமுறை!

எங்க வீட்டுல நாங்க அஞ்சு புள்ளைங்க. பல போராட்டங்களுக்குப் பிறகுதான் சாதிச்சான்றிதழ் கிடைச்சு எங்க அப்பா எங்கள பள்ளிக்கூடத்தில் சேர்த்தாங்க. எங்க அக்கா நல்லாப் படிக்கும். அப்பா வாங்குற கூலியில் காலேஜுக்கு ஃபீஸ் கட்ட முடியலைன்னு அதைக் கண்ணாலம் பண்ணிக்கொடுத்துட்டாங்க. எனக்கு அந்த நிலைதான் வந்துச்சு. அழுது அடம் பண்ணி, ஒரு தனியார் அமைப்பின் உதவியோடு காலேஜ் சேர்ந்தேன். அதுக்கு அப்புறம்தான் எனக்கு இதயப் பிரச்னையும், கல்லீரல்பிரச்னையும் வந்துச்சு. அடிக்கடி மயக்கம் வந்துரும், மூச்சு வாங்கும். அரசு ஆஸ்பத்திரிக்குப் போனால் ஒரு நாள் முழுக்க காக்க வெச்சு பதிலே சொல்லாமல் திருப்பி அனுப்புவாங்க. பெத்தவங்களுக்குக் கிடைக்குற அன்றாடக் கூலியும் இல்லாமல் போகும். அதனால் நாங்க ஏழு பேரும் பட்டினியாகப் படுத்த நாள்கள்கூட இருக்கு” என்ற திவ்யாவின் குரல் தழுதழுக்க அவரின் வார்த்தைகளைக் கேட்டு, ஒட்டுமொத்த மக்களின் கண்களும் கண்ணீரில் நனையத்தொடங்கின.

“உடம்பு சரியில்ல, படிப்பை நிறுத்திடலாம்னு வீட்டில் சொன்னாங்க. நான் பின்வாங்குனா, எங்க மக்கள் அடுத்த திவ்யா உருவாகுற வரை காத்திட்டிருக்கணும். என் உசுரைவிட எங்க மக்களின் எதிர்காலம் முக்கியம். அதனால் நோயைப் பத்தியெல்லாம் யோசிக்கிறதில்ல. மருந்து மாத்திரை மட்டும் எடுத்துட்டிருக்கேன். இவங்க எல்லாருக்கும் எழுதப்படிக்கத் தெரியுங்கறதில் முழுக் கவனத்தைச் செலுத்த ஆரம்பிச்சிருக்கேன். ஆரம்பத்தில் எல்லாரிடமும் தயக்கம் இருந்துச்சு. `இந்த வயசுல படிச்சு என்ன பண்ணப்போறோம்’னு கேட்பாங்க. ‘நம்மள நாலு பேரு மதிக்கணும்னா படிங்க’ன்னு சொன்னேன். இப்போ நான் யாரையும் கட்டாயப் படுத்துறது இல்ல. வேலை விட்டு வந்த உடன் சிலேட்டு குச்சியை எடுத்துட்டு வீட்டுக்கு வந்துருவாங்க. 10 வயசு பையனில் இருந்து 80வயசு தாத்தா பாட்டி வரை ஒண்ணா உட்கார்ந்து படிக்க ஆரம்பிச்சிருக்காங்க. அரசாங்கத்தை நம்பி ஏமாறுவதுக்கு பதிலா நாமளே மாற்றத்தை உருவாக்கிட முடியுங்கிற நம்பிக்கை எல்லார்கிட்டையும் நம்பிக்கை விதையாக விழுந்திருக்கு.

ஆரம்பத்தில் மணலில்தான் எழுதச் சொல்லிக்கொடுத்துட்டிருந்தேன். அப்புறம் ஒரு தொண்டு நிறுவனம் எல்லாருக்கும் சிலேட்டு வாங்கிக்கொடுத்தாங்க. இப்போ எங்க ஏரியால இருக்க எல்லாத்துக்கும் அவங்க பெயரை எழுதக் கத்துக்கொடுத்துட்டிருக்கேன். எங்க ஊரு பெயரைப் படிக்கத் தெரியும். நான் காலேஜ் போறதுனால எனக்கு அடுத்த வயசில் இருக்கும் பசங்களும் காலேஜ் போகும் தயக்கத்தை உடைச்சிருக்காங்க. இதெல்லாம் ஆரம்பம்தான் அடுத்த பத்து வருஷத்தில் நான் இருந்தாலும் இல்லைன்னாலும் இங்க நூறு திவ்யாக்கள் இருப்பாங்க. மாற்றம் ஒன்றுதான் மாறாதது” இரவிலும் நம்பிக்கை வெளிச்சமாய் விடைபெறுகிறார் திவ்யா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism