Published:Updated:

``வறுமையைக் கொடுத்த ஆண்டவன் கை காலை நல்லா படைச்சுட்டான்!'' - 70 வயதிலும் உழைக்கும் பாட்டி

வறுமையிலும் உழைத்து வாழும் தஞ்சாவூரைச் சேர்ந்த பாட்டி.

ஜெயா பாட்டி
ஜெயா பாட்டி

`வறுமையைக் கொடுத்த இறைவன், உடம்பில் எந்த வியாதியையும் கொடுக்கவில்லை. அதனால்தான் என்னால் இன்றைக்கும் உழைக்க முடிகிறது. வறுமை ஓயும் வரை எனக்கு ஓய்வில்லை' என தன்னம்பிக்கையோடு பேசுகிறார், ஜெயா பாட்டி.குடும்பத்தின் வறுமையைப் போக்கவும் தன் மகன் படும் கஷ்டத்தில் பங்கெடுத்துக்கொள்ளவும்... உடல் வில்லாக வளைந்த தள்ளாத நிலையிலும் 70 வயதான தஞ்சையைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர், தினமும் 2 கிலோ மீட்டர் நடந்துசென்று வீட்டு வேலைகள் செய்து சம்பாதித்துவருகிறார்.

"வறுமையைக் கொடுத்த இறைவன், உடம்பில் எந்த வியாதியையும் கொடுக்கவில்லை. அதனால்தான் என்னால் இன்றைக்கும் உழைக்க முடிகிறது. வறுமை ஓயும் வரை எனக்கு ஓய்வில்லை!"
தன்னம்பிக்கையோடு பேசுகிறார், ஜெயா பாட்டி.
ஜெயா பாட்டி
ஜெயா பாட்டி

"நான் தஞ்சாவூர் பாத்திமா நகர்லதான் குடியிருக்கேன் தம்பி. எனக்கு 70 வயது ஆகுது. என்னோட வீட்டுக்காரர் நாலு வருஷத்துக்கு முன்னாடி காலமாகிட்டார். எனக்கு ஒரு பொண்ணு, ஒரு பையன் இருக்காங்க. மகளுக்கு எப்படியோ கஷ்டபாடுபட்டு கல்யாணத்தை முடிச்சு வச்சிட்டேன். மகனுக்கு இன்னும் கல்யாணம் ஆகலை. பையன் ஜவுளி வியாபாரம் செய்துட்டு வர்றான். அதுல போதுமான வருமானம் கிடைக்கலை தம்பி. அதனால வீடு ரொம்ப வறுமையில இருக்கு. இப்ப நாங்க குடியிருக்கிற வீடு வாடகை வீடு. அதுக்கே மாசம் பொறந்தா எப்படி வாடகை கொடுக்கிறதுனு ரொம்ப சங்கடமா இருக்கு.

எங்க ரெண்டு பேர் வருமானமும் நிலையில்லாததுங்கிறதுனால ஒருவாய் ருசியான சோத்துக்கே கஷ்டப்படுறோம். ரொம்ப நாள் ஆச்சு தம்பி ருசியா சாப்பிட்டு. எனக்கு முதுகுல கூன் விழுந்து போச்சு. நான் நடந்துபோனாலே எல்லாரும் என் மேல பரிதாபப்பட்டு 'ஏன் பாட்டி இந்த வயசுல வேலை செய்யுறனு' ஏதாவது கொடுத்துட்டுப் போவாங்க. அவங்ககிட்ட எல்லாம் என் கஷ்டத்தைச் சொல்லிக்கிட்டு இருக்க முடியுமா சொல்லுங்க. அதனால, கொடுக்கிறதை வாங்கிப்பேன்'' என்ற ஜெயா பாட்டி, தான் வேலைக்குச் செல்வதற்கான காரணத்தை விவரித்தார்.

ஜெயா பாட்டி
ஜெயா பாட்டி

"தெனமும் கால் வயித்து கஞ்சிக்கு இத்தனை தூரம் மகன் சிரமப்படுறானேனு நினைச்சு நானும் அவனோட கஷ்டத்துல பங்கெடுக்க நினைச்சேன். எனக்குத் தெரிஞ்சது வீட்டு வேலைதான். நிறைய வீட்டுல வேலை கேட்டு, ஒருவழியா சில வீட்டுல பாத்திரம் கழுவுற வேலை கொடுக்கிறதா சொன்னாங்க. அதெல்லாம் என் வீட்டுல இருந்து ரெண்டு கிலோ மீட்டர் தூரத்துல இருக்குது. தெனமும் அவ்வளவு தூரம் நடந்து போகணும், அதுதான் எனக்கிருக்கிற ஒரே பிரச்னை.

வயசாகிருச்சு இல்லையா... அதனால நடந்து போறப்ப காரு, பஸ்ஸு என் மேல இடிச்சிருமோனு நினைச்சு பயமா இருக்கும். ஏன்னா நான் ரொம்ப குள்ளமா இருக்கேன்ல... நான் நடந்து வர்றது யாருக்கும் தெரியாம போயிடுச்சுனா என்ன பண்றது. அந்தக் கவலை எனக்குள்ள இருக்குது. ஆனா, அதெல்லாம் பார்த்தா என் பொழப்பு நடக்குமா சொல்லுங்க. அதனால தரையை குனிஞ்சு பார்த்தபடி நடந்துட்டே இருப்பேன். நடந்து வந்த களைப்போட கொஞ்ச நேரம் உட்கார முடியாது. ஏன்னா எனக்கான வேலை ரெடியா இருக்கும். கொஞ்சம் ஓய்வு எடுத்தாலும் அடுத்த வீட்டுக்கு போறதுக்கு தாமதமாகி, என் வேலை பாதிப்படைஞ்சிரும். ஒரு வீட்டுல பாத்திரம் கழுவுறது, ஒரு வீட்டுல இட்லி மாவு அரைச்சு வைச்சு பாத்திரத்தைக் கழுவி வீட்டு வேலை எல்லாம் பார்க்கிறதுனு வேலை அடுக்கடுக்கா இருந்துட்டே இருக்கும். ஒரு வீட்டுல வேலை முடிஞ்சதும் ஒரு நிமிஷம்கூட ஓய்வெடுக்காம அடுத்த வீட்டு வேலைக்கு போயாகணும்.

இதுவரைக்கும் மருத்துவர் கிட்ட போனதே கிடையாது. மருந்து மாத்திரையும் சாப்பிட்டது கிடையாது. தலைவலி வந்தா தைலம் தடவிப்பேன் அவ்வளவுதான்.
ஜெயா பாட்டி

காலையில எந்திரிச்ச உடனே என் மகனுக்கு செய்ய வேண்டியதைச் செய்துகொடுத்துட்டு, மதிய சாப்பாடு ஆக்கி வச்சிருவேன். ஏன்னா வேலைக்குப் போயிட்டு வந்த பின்னாடி உடம்பெல்லாம் ரணமா வலிக்கும். அப்போ சமைக்க முடியாது. அதனால சமையலை முன்கூட்டியே செய்து வச்சுட்டு போயிடுவேன். என்ன செய்றது... வறுமையை அள்ளிக்கொடுத்த ஆண்டவன், கை காலை நல்லா படைச்சுட்டானே'' என்கிற பாட்டி இதுவரை மருத்துவரிடம் சென்றதே இல்லையாம்.

ஒருதடவ கீழ விழுந்துட்டேன். அதுனாலதான் என் முதுகு வளைஞ்சுபோச்சு. மத்தபடி என் உடம்புக்கு எந்தப் பிரச்னையும் வந்தது இல்லை. எல்லாரும் என்னை பார்க்கிறப்ப எல்லாம், 'பேசாம நீ முதியோர் உதவித்தொகைக்கு அப்ளை பண்ணே'னு சொல்லுவாங்க. எனக்குத்தான் மகன் இருக்கானே. உழைக்காத காசு எனக்கு வேண்டாம்னு சொல்லிடுவேன்.

Vikatan

ஆமா தம்பி நமக்கு மத்தவங்க காசு எதுக்கு சொல்லுங்க. என்னை மாதிரி கஷ்டப்படுற ஏதாவது ஒரு ஏழைக்கு அந்த உதவித்தொகை போய் சேரட்டுமே'' என்கிறார் உழைக்கச் சலிக்காத ஜெயா பாட்டி.