Published:Updated:

1091 என்பதுதான் உண்மையான `நிர்பயா' எண்: வாட்ஸ்அப் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!

ஹைதராபாத் மருத்துவர் வன்புணர்வுக் கொலை சம்பவத்துக்குப் பிறகு, ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்களில் இப்படியான செய்தி அதிகம் பகிரப்படுகிறது. இந்தத் தகவலின் உண்மைத் தன்மை என்ன?

வன்புணர்வு செய்யப்பட்டு எரிக்கப்பட்ட பெண் மருத்துவர்
வன்புணர்வு செய்யப்பட்டு எரிக்கப்பட்ட பெண் மருத்துவர்

``இந்த `நிர்பயா' எண்ணை உங்கள் அம்மா, மனைவி, தங்கை, தோழி, மகள் மற்றும் நீங்கள் அறிந்த அத்தனை பெண்களுக்கும் தவறாமல் அனுப்புங்கள். அவர்கள் இந்த எண்ணை அவர்களுடைய மொபைலில் சேமித்துவைத்துக்கொள்ளட்டும். அவசரகாலத்தில் இந்த எண்ணுக்குப் பெண்கள் வெற்றுச் செய்தி (Blank message) ஒன்றை அனுப்பினாலோ மிஸ்டு கால் கொடுத்தாலோ போதும். போலீஸ் உங்கள் இடத்தைக் கண்டுபிடித்து வந்து உங்களுக்கு உதவுவார்கள்.🌹9833312222 "

ஹைதராபாத் மருத்துவர் வன்புணர்வுக் கொலை சம்பவத்துக்குப் பிறகு ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்களில் இப்படியான செய்தி அதிகம் பகிரப்படுகிறது. உங்களுக்கும் கூட இந்தச் செய்தி வந்திருக்கலாம். பயனுள்ள செய்திதானே என்று நீங்களும் பல நண்பர்களுக்கும் குழுக்களும் பகிர்ந்திருக்கலாம். ஆனால், இந்தச் செய்தியிலுள்ள தகவல் உண்மைதானா என்ற கேள்வி எழுந்ததால், உண்மைத் தன்மை அறிய முயற்சி செய்தோம்.

நிர்பயா பெற்றோர்
நிர்பயா பெற்றோர்

டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா 2012-ம் ஆண்டில் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு ஓடும் பேருந்திலிருந்து தூக்கியெறியப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். அவர் பெயரிலேயே அடுத்த ஆண்டில் உத்தரப்பிரதேச அரசு நிர்பயாவின் பெற்றோரைக் கொண்டு ஆப் ஒன்றை வெளியிட்டது. அதுதான் `நிர்பயா ஆப்' என்பது தேடுதலில் தெரியவந்தது. ஆப் தயாரிப்பில் முதல்கட்டப் பணிகள் மட்டுமே நிறைவடைந்திருந்த நிலையில், அதன் பீட்டா வெர்ஷன் மட்டுமே தற்போது உத்தரப்பிரதேசத்தின் நொய்டாவில் பயன்பாட்டில் இருக்கிறது.

தொடர்பு எண் `9833312222' உபயோகத்தில் இல்லை!

அதில் கொடுக்கப்பட்டிருக்கும் எண் மும்பை ரயில்வே போலீஸ்  2015-ல் அறிமுகப்படுத்தியது. மும்பை ரயில்களில் பயணம் செய்யும் பெண்கள் ஏதேனும் பிரச்னைகள் என்றால் அந்த எண்ணுக்குத் தொடர்புகொள்ளவோ ரயில்வே பயண வசதிகளில் ஏதும் குறைபாடு என்றால் அதைப் புகைப்படம் எடுத்து அனுப்பவோ இந்த எண் செயல்பாட்டில் இருந்தது. ஆனால், இந்த எண் தற்போது உபயோகத்தில் இல்லை என்று உறுதி செய்கிறது மும்பை போலீஸ். ஆகவே தற்போது வாட்ஸ் அப்பில் பகிரப்பட்டுவரும் `நிர்பயா எண்' மும்பை ரயில்வே போலீஸ் உபயோகித்த எண் என்றும் அது தற்போது செயல்பாட்டில் இல்லை என்பதும் தெரியவருகிறது. இதுபோலவே கடந்த வருடம் பிரதமர் மோடி அறிமுகப்படுத்திய திட்டம் என்று வேறோர் எண் பகிரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மும்பை காவல்துறையின் பதிவில்...
மும்பை காவல்துறையின் பதிவில்...
`2 வருடமா நோ லைசென்ஸ்; போலீஸ் கோட்டைவிட்ட அந்த நிமிடம்!' -பெண் மருத்துவர் கொலையில் அதிர்ச்சி பின்னணி

டெல்லி நிர்பயாவுக்கு நடந்த கொடூரத்தை அடுத்து இந்தியா முழுவதும் 181 என்கிற பெண்களுக்கான அவசர உதவி எண் மத்திய அரசால் செயற்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது. அந்த எண்ணில் தொடர்புகிடைப்பதில் இன்றளவும் சிக்கல் தொடர்ந்து வருகிறது. இவை தவிர, ஒவ்வொரு மாநிலத்திலும் 1091 என்கிற பெண்களுக்கான அவசர உதவி எண் ஒன்றை மத்திய அரசு கொண்டுவந்தது. இந்த எண் தற்போதும் செயல்பாட்டில் இருக்கிறது.

பெண்கள் ஏதேனும் ஆபத்து அல்லது இக்கட்டில் சிக்கிக்கொண்டால் 1091 என்கிற இந்த அவசர உதவி எண்ணை அழைத்தால் போதும்.

எதிர்முனையில் உடனடியாகத் தொலைபேசி அழைப்பு ஏற்கப்படுகிறது. பெண் காவலர்கள்தான் அழைப்பை எடுக்கிறார்கள். அவர்களிடம் பெண்கள் தங்களது புகாரைத் தெரிவிக்கலாம். உடனடியாக அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் இருக்கும் காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து அனுப்பி வைக்கப்படுவார்கள்.

இனி பெண்கள் தங்களுடைய மொபைலில் சேமித்துவைத்துக்கொள்ள வேண்டிய எண் `1091'.

நீங்கள் இனி வாட்ஸ் அப், ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் பகிரவேண்டிய சரியான தகவல்:

``1091 என்கிற இந்த `நிர்பயா' எண்ணை உங்கள் அம்மா, மனைவி, தங்கை, தோழி, மகள் மற்றும் நீங்கள் அறிந்த அத்தனை பெண்களுக்கும் தவறாமல் அனுப்புங்கள். அந்த எண்ணை அவர்களது மொபைலில் சேமித்து வைத்துக் கொள்ளச் சொல்லுங்கள். ஆபத்து காலத்தில் இந்த எண்ணுக்கு அழைத்தால் உடனடியாகக் காவல்துறை உதவுவார்கள்."