Published:Updated:

`100 பேரில் ஒரேயொரு பெண்தானா?' - அமெரிக்காவைத் திரும்பிப் பார்க்க வைத்த ட்விட்டர் பதிவு

சு.சூர்யா கோமதி

உலகின் மிகச்சிறந்த மற்றும் புதுமையானவற்றைச் தொழிலாகச் செய்யும் நூறுபேரின் பட்டியலை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியிருக்கிறது ஃபோர்ப்ஸ்.

பெண்கள்
பெண்கள் ( pixabay )

இந்தியாவைவிட, அமெரிக்காவில் ஆண்- பெண் பாலின சமத்துவம் சிறப்பானது என்பது பலரின் எண்ணம். ஆனால், உண்மையில் அப்படியொரு நிலை இல்லை என்பதற்கு அமெரிக்காவில் நடத்தப்படும் அதிபர்களின் பட்டியலே சாட்சி. இந்தியாவில் ஆண்கள் கல்வியறிவு, பொருளாதாரம் போன்றவற்றில் பெண்களைவிட உயர்ந்த நிலையில் இருந்தபோதே இந்திராகாந்தி பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், 229 ஆண்டுகள் வரலாறுகொண்ட அமெரிக்க அதிபர் தேர்தலில் இதுவரை ஒரு பெண்கூட, அதிபராக வெற்றிபெற்றது இல்லை என்பது மறைக்க முடியாத உண்மை.

Vikatan
Representational Image
Representational Image

இதற்கு மற்றோர் உதாரணமாய் ஃபோர்ப்ஸ் வெளியிட்ட பட்டியலைச் சொல்லலாம். அமெரிக்காவின் தலைசிறந்த பத்திரிகையான `ஃபோர்ப்ஸ்' ஒவ்வோர் ஆண்டும் உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிடும். இந்த வருடமும் உலகின் மிகச்சிறந்த மற்றும் புதுமையான தொழில் செய்யும் நூறுபேரின் பட்டியலை அவர்களின் புகைப்படத்துடன் கடந்தவாரம் வெளியிட்டது.

நூறு தொழிலதிபர்கள் கொண்ட இந்தப் பட்டியலில் `ரோஸ் ஸ்டோர்ஸ்' நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரியான `பார்பரா ரெண்ட்லர்' மட்டுமே பெண். 75-வது இடத்தை பார்பராவுக்கு கொடுத்த ஃபோர்ப்ஸ் பத்திரிகை அவரின் புகைப்படம் இல்லாமல், அவரின் வெற்றியை வெறும் தகவலாக மட்டும் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளது.

Representational Image
Representational Image

அமெரிக்காவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் ஆண்களைவிட அதிகளவில் பெண்கள் தொழில் முனைவோர்களாகக் கடந்த பத்து ஆண்டுகளில் உருவாகியுள்ளனர். ஆனால், ` ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்படும் நூறு பேரில் ஒருவர் மட்டுமே பெண் என்பது ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை. இந்த அறிக்கை உண்மையில்லை. ஆண் தொழிலதிபர்களின் புகைப்படத்தை வெளியிட்ட `ஃபோர்ப்ஸ்' பெண்ணின் படத்தை ஏன் வெளியிடவில்லை?' என்று அமெரிக்காவின் முக்கியப் பதவியில் இருக்கும் பெண்கள் பலரும் சமூக வலைதளத்தில் கருத்து பகிர்ந்துள்ளனர்.

அவர்களில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவின் மூத்த ஆலோசகர் வேலரி ஜாரெட்டின் பதிவு இன்னும் பரபரப்பை ஏற்படுத்திள்ளது. ``தலைசிறந்த நூறு புதுமையான தொழிலதிபர்களைத் தேர்வு செய்ததில் ஓர் இடத்தை மட்டுமே பெண்களுக்காகக் கொடுத்திருக்கிறீர்கள். உங்களுடைய இந்த அறிக்கை 99 ஆண்களுக்கான வெற்றியில்லை. பல லட்சம் பெண்களுக்கான சவால். இந்தப் பொய்யான அறிக்கையை வெளியிட்டதற்குப் பதிலாக, நேரடியாகப் பெண்களிடம் நீங்கள் சவால் விட்டிருக்கலாம்'' எனப் பதிவிட்டுள்ளார்.

ஃபோர்ப்ஸின் மறுஅறிக்கை

இதுதொடர்பாக, திங்கள்கிழமை வரை அமைதிகாத்து வந்த ஃபோர்ப்ஸ் பத்திரிகை ``நாங்கள் ஒரு திட்டமிடல் முறை அமைத்து ஒரு குழு மூலம்தான் பட்டியலைத் தயார்செய்தோம். எங்களுடைய திட்டமிடல் முறை அப்டேட் இல்லாமல் இருந்திருக்கலாம். அதனால், பெண்களின் பெயர் அதிகளவில் இடம் பெறாமல் இருந்திருக்கலாம். நிச்சயம் மீண்டும் புதிய அறிக்கையை வெளியிடுகிறோம்" என்று தகவலை வெளியிட்டுள்ளது.